“வாசலுக்கு வந்த நிலவு.“
(பூவனூர் சுந்தர ஜானகிராமன்.)
வாசலுக்கு வந்து வழக்கம்போல் வழியனுப்பி வைத்த அம்மாவுக்கு கையசைத்து என் TVS 5௦ வண்டியை ஸ்டார்ட் செய்தேன். என்னுடைய குட்டையான உருவத்துக்கு TVS 50 வண்டிதான் பொருத்தமாயிருக்கும் என்று நான் வேலை பார்க்கும் கம்பெனியில் எனக்கு அந்த வண்டியைக் கொடுத்திருந்தார்கள்.. பிராட்வேயில் இருக்கும் அந்த ஏற்றுமதிக் கம்பெனியில் நான் அக்கவுண்ட்ஸ் பிரிவு மேனேஜர். காலம், நேரம் பார்க்காமல் கம்பெனிக்கு உழைத்ததால் எனக்குமேல் எத்தனையோ சீனியர்கள் இருந்தும் மேனேஜர் பதவி என்னைத் தேடி வந்தது.
பொதுவாக நான் ரிசர்வ்டு டைப். சிறுவயது முதலே நான்பட்ட கஷ்டங்கள் கணக்கில்லாதவை. உதவ உறவினர்களோ நெருங்கிய நண்பர்களோ யாருமின்றி சிறு வயதிலேயே என் தந்தையை இழந்திருந்தேன். கிராமத்திலிருந்த சொந்தமான ஒரு வீட்டையும் விற்றுவிட்டு நகரத்தில் நானும் என் தாயும் குறைந்த வாடகையில் குடியேறினோம். வீட்டை விற்றுவந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து அதில் மாதா மாதம் வரும் வட்டியில் எங்கள் வாழ்க்கை சக்கரம் ஓடிக்கொண்டிருந்தது.
வத்தல், அப்பளம் இவற்றைத் தயாரித்து விற்று வியாபாரத்தில் வரும் கணிசமான தொகையை வைத்து என் அம்மா என்னை ஒரு பட்டதாரியாக ஆக்கினார்கள். உழைத்து, உழைத்து ஓடாய்த் தேய்ந்த என் அன்னையைத் தவிர எனக்கு உறவென்று யாரும் இல்லாததை உணர்ந்தேன். ஆதலால் . எனக்கென்னவோ யாரைக் கண்டாலும் இனம் தெரியாத ஒரு வெறுப்பு. என் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரின் மூலம் இந்த கம்பெனியில் வேலை கிடைத்தது கடும் உழைப்பினால் பதவி உயர்வும் பெற்றேன். குறைந்த விலையில் நிலம் வாங்கி அத்தியாவசிய வசதிகளுடன் கம்பெனி உதவியில் ஒரு வீட்டையும் கட்டி முடித்தேன்.
வயது ஏறிக்கொண்டே இருந்தது. திருமணம் செய்துகொள்ளும் ஆசையே இல்லை. அம்மாதான் அடிக்கடி நான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று வற்புறுத்துவார். திருமணம் என்பது எனன விளையாட்டா? தகுந்த துணை கிடைக்கவேன்டாமா? ஏதேதோ சிந்தனைகளில் அலுவலகம் வந்தததே தெரியவில்லை. பயணக் களைப்பு தீர அலுவலக வாஷ் பேசினில் முகம் கழுவினேன்.
காதோரமும் தலை முடியிலும் வெள்ளிக்கம்பிகள் போன்ற ஓரிரு நரை முடிகள் எனக்கு வயதாகிக்கொண்டே வருவதைப் பறைசாற்றின. இந்த நிலையில் என்னை மணக்க யார் சம்மதிப்பார்கள் ?..
அன்று புதியதாக ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தி என்னுடைய பிரிவுக்கு மாற்றியிருந்தார்கள். பெயர் ஹேமலதாவாம். அழகென்றால் அப்படி ஒரு அழகு. கூர்மையான நாசி, வில்லையொத்த புருவங்கள், கடல் அலைபோன்ற நெளி நெளியான தலைமுடி, எதிராளியை கிறங்க வைக்கும் தீர்கமான கருவண்டுக் கண்கள். எடுப்பான உடல் வாகு. பெண்களும் பொறாமைப்படும் அளவுக்கு அப்படி ஒரு அழகு. அவள் அழகு என்னையும் ஈர்த்தது என்று சொல்லத் தேவையில்லை.. அழகு எங்கிருந்தாலும் ரசிப்பது தவறா என்ன ?
அவளை எங்கேயோ பார்த்த நினைவு மனதில் நிழலாடியது..... ம்ம்... இப்போது நினைவுக்கு வந்துவிட்டது. கொளத்தூரிலிருந்து நான் அலுவலகம் வரும் வழியில் அண்ணாசிலை பஸ் நிறுத்தத்தில் அவளைப் பார்த்திருக்கிறேன். புன்முறுவலோடு என் அறையில் நுழைந்து வணக்கம் கூறிய அவளை நோக்கி “உட்காருங்கள். நீங்கள் ஒரு B.com பட்டதாரி என்று அறிந்தேன், ஆதலால் இந்தப் பிரிவில் வேலை செய்ய உங்களுக்கு கடினமாக இருக்காது“ என்றேன்.
“ உங்களிடம் ஒரு சிறிய கோரிக்கை, வைக்கலாமா ? என்றாள் “
ஆஹா, குரலும் இவ்வளவு இனிமையா என்று நினைத்தவாறே “சொல்லுங்கள்”” என்றேன்
தயவுசெய்து என்னை நீங்கள், வாங்கள் ,போங்கள் என்றெல்லாம் சொல்லாதீர்கள். உங்களைவிட நான் வயது குறைந்தவள். மேலும் நீங்கள் எனக்கு மேலதிகாரி.”
“அந்த அரசாங்க நடைமுறையெல்லாம் இந்தக் கம்பெனியில் கிடையாது. அவரவர்க்குப் பிடித்தவாறு பேசலாம், இங்கு வேலையில் அற்பணிப்புதான் முக்கியம்”/ என்றேன்.
“தயவுசெய்து என் வேண்டுகோளைப் புறக்கணிக்காதீர்கள், நீ, வா, போ என்றே கூப்பிடுங்கள். உங்களிடம் வேலை கற்றுக்கொண்டு இந்தக்கம்பெனிக்காக உழைத்து நான் நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.. நீங்கள் என் குரு”. அவ்வாறு அவள் கூறியது எனக்கு அவள்மீது மதிப்பு வைக்கத் தூண்டியது.
“அப்படியா, இனிமேல் நீ விரும்பியவாறே உன்னைக் கூப்பிடுகிறேன். சரி. உன்னை ஹேமா என்று கூப்பிடுகிறேன். உன்னுடன் உன் அப்பா அம்மா இருக்கிறார்களா?”
இவ்வாறு நான் கேட்டதும் அவள் கண்களில் பொல பொலவென்று கண்ணீர் பெருகியது. கைகுட்டையால் அதைத் துடைத்தவாறே “அம்மா மட்டும் இருக்கிறார், 6 மாதக் குழந்தையாய் இருந்தபோதே என் தந்தையை இழந்து விட்ட நான் ஒரு அபாக்கியசாலி. எனக்கு அண்ணன் ஒருவர் உண்டு. அவருக்கு சென்ற ஆண்டு திருமணம் ஆனது. அண்ணி எங்களோடு இருக்க விருப்பம் இல்லாததால் அண்ணா தனிக் குடுத்தனம் சென்று விட்டார். மாதம் 3000 ரூபாய் அம்மாவுக்குக் கொடுப்பார். எப்போதாவது வந்து பார்ப்பார்.
இப்பொழுது இந்த கம்பெனியில் எனக்கு வேலை கிடைத்து விட்டதால் இனி அண்ணா பணம் கொடுப்பதை நிறுத்தி விடுவார். அம்மா மட்டும் அவன் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்று கூறுவார்.” எவ்வித சலனமுமின்றி அவள் இவ்வாறு கூறியதில் என் மனம் சங்கடப்பட்டது. எனக்கு அவளது குடும்பத்தைப்பற்றி ஏன் கேட்டோம் என்றாகிவிட்டது.
நான் வேலை பார்க்கும் கம்பெனியின் நியதிகளின்படி ஒருவருக்கொருவர் வீடு விலாசத்தைப் பகிர்ந்து கொண்டோம். வாழ்க்கையில் நான் சந்தித்த இன்னல்களையும் அவமானங்களையும் என் மனம் அசை போட்டது. என் உள்ளுணர்வுகளை அடக்கிக்கொண்டென். சரி அலுவலகப்பணியில் கவனம் செலுத்தலாம் என்று அவளிடம் சில பிரபல நிறுவனங்களின் கடந்த மாத வரவு செலவுக் கணக்குகளை லெட்ஜரில் போஸ்ட் செய்யச்சொன்னேன்.
என்ன ஆச்சரியம். அன்று கொடுக்கப்பட்ட வேலைகளை அவள் விரைவாக செய்து முடித்தது எனக்கு திருப்தி அளித்தது. சின்னஞ்சிறு தவறுகளை சுட்டிக்காட்டித் திருத்தினேன். அவள் கண்கள் நன்றி தெரிவித்தன
மாலை பணி முடிந்ததும் அவளை நோக்கி “ நான் போகிற வழியில்தானே நீயும் போகிறாய், என்னுடன் என் வண்டியிலே வந்துவிடேன்” என்றேன்.
“Sorry, மன்னித்துக் கொள்ளுங்கள், நான் மயிலாப்பூர் வரை போகவேண்டி இருக்கிறது. மேலும் எதற்கு உங்களுக்கு வீண் சிரமம்” என்றாள்”. அவள் மன உணர்வுகளை என்னால் ஊகிக்க முடியவில்லை.
எனக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. பரிச்சியமான முதல் நாளிலேயே அவளை நான் என் வண்டியில் ஏற்றிக்கொண்டு வர அழைத்திருக்கக்கூடாதோ ? தேவை இல்லாமல் அவள்மீது அன்பு பாராட்டுகிறேனோ என்றெல்லாம் என் மனம் குழம்பியது. ஆணோ, பெண்ணோ எவரிடமும் காரணமின்றி பேசக்கூட விரும்பாத என் குணாதிசயம் என்னைவிட்டு இவளிடம் மட்டும் ஏன் விலகி ஓடியது என்று தெரியவில்லை. அலைபாயும் மனது அமைதிபெற என் வண்டியை கடற்கரையை நோக்கிச் செலுத்தினேன். கூட்டமில்லாத இடத்தில் தனியாக அமர்ந்து கரையைமுத்தமிட்டுத் திரும்பும் அலைகளை ரசித்தேன். இருள் சூழ ஆரம்பித்தது. வீடு திரும்பினேன். வண்டியை வைத்துவிட்டு வீட்டில் நுழைந்தென். வீட்டில் நான் கண்ட காட்சி என்னைத் திடுக்கிட வைத்தது. அங்கே........
( தொடரும்....)
No comments:
Post a Comment