🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 85 🌹🌹🌹
வைத்தமாநிதி என்ற திருநாமமுடைய பெருமாளை நாம் இன்று தரிசனம் செய்ய இருக்கிறோம். பெயரே வித்தியாசமாக இருக்கிறதே!! நாம் அறிந்திடலாமா?
நவதிருப்பதிகளில் அங்காரகனுக்குரிய தலமாக வழிபடும் சிறப்பு வாய்ந்த திருத்தலம்.
திருக்கோளூர்
மூலவர்: வைத்தமாநிதி பெருமாள், நிசேயவித்தன்
தாயார்: குமுதவல்லி, கோளூர்வல்லி
உற்சவர்: நச்சியப்ப பவித்திரர்
கோலம்: சயனத் திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: ஸ்ரீகர விமானம்
தீர்த்தம்: குபேர தீர்த்தம், தாமிரபரணி ஆறு
மங்களாசாசனம்: நம்மாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ கோளூர்வல்லீ ஸமேத ஸ்ரீ வைத்தமாநிதி ஸ்வாமிநே நமஹ
ஊர்: திருக்கோளூர்
🌺🌺 தலவரலாறு:-
வையம் காக்கும் இறைவன் நாராயணர், வைத்தமாநிதி என்ற திருநாமத்தில் காட்சி தந்து அருளும் திருத்தலம். இத்தலத்திற்கு திருக்கோளூர் என்று பெயர் வந்ததற்கான காரணத்தை அறிய முடியவில்லை.
நம்மாழ்வார் இத்தலத்தையும், இத்தலத்தில் உறையும் வைத்தமாநிதி பெருமாள் திருநாமத்தையும் சேர்த்து மங்களாசாசனம் செய்துள்ளார்.
புராணங்கள் சிலவற்றில் ஆராய்ந்து பார்க்கையில் இத்தலம் "அதர்ம பிசுனம்" என்று பெயர் பெற்று விளங்கியதாக தெரிகிறது.
🌺🌺 செவ்வாய்க்குரிய தலம் :-
நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் திவ்யதேசங்களில் இந்த வைத்தமாநிதி பெருமாள் அருள்புரியும் தலம் அங்காரகனுக்குரிய அதாவது செவ்வாய்க்குரிய தலமாக வழிபடப்படுகிறது.
🌺🌺 வைத்தமாநிதி:-
அது என்ன வைத்தமாநிதி? பெயரே வித்தியாசமாக இருக்கின்றதல்லவா?? அது என்ன என்று நாம் அறிந்திடலாமா?
ஒருமுறை பார்வதி தேவியால் செல்வத்திற்கு அதிபதியான குபேரனுக்குச் சாபம் ஏற்படுகிறது. இதனால் அவனிடமிருந்து நவநிதிகள் விலகுகின்றன. குபேரனிடமிருந்து விலகிய நவநிதிகள் நாராயணரிடம் போய் சேருகின்றன.
நாராயணன் இந்த நவநிதிகளை பாதுகாத்து வைத்திருந்ததால் இத்தல இறைவனுக்கு "வைத்தமாநிதி" என்ற திருநாமம் ஏற்பட்டது. பெருமாளே இத்தலத்தில் தனது வலது தோளுக்கு கீழ் நவநிதிகளை பாதுகாத்து வருவதை இன்றும் நாம் தரிசிக்கலாம்.
குபேரன் இத்தல இறைவனை வழிபட்டு நவநிதிகளை பெற்றான் என்று புராணங்கள் கூறுகின்றன. இத்தல பெருமாளுக்கு "அதர்மபிசுனம்" என்ற பெயரும் உண்டு.
🌺🌺 மதுரகவியாழ்வார்:-
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராகவும், திருமாலைப் பாடாமல் நம்மாழ்வாரைத் தெய்வமாகப் போற்றி பாடியவருமான மதுரகழியாழ்வார் திருஅவதாரம் செய்த திருத்தலம் இதுவாகும்.
அது என்ன மதுரகவியாழ்வார்? பெயருக்கு விளக்கத்தை பார்ப்போமா!!!
கவி பாடுவதில் நான்கு வகை உண்டு. அவை ஆசு கவி, மதுர கவி, சித்திர கவி, வித்தார கவி ஆகியன. இதில் இனிமையான சொற்கள் விரவி வரும்படி கவி புனைபவர்களை "மதுரகவி" என்று அழைப்பர்.
அத்தகைய ஆற்றல் பெற்றிருந்ததால் இவ்வாழ்வாருக்கு மதுரகவியாழ்வார் என்பது திருநாமம். நம்மாழ்வாரைப் போற்றி "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்ற பிரபந்தங்களைப் பாடி இறைவன் திருவடியை அடைந்தார்.
🌺🌺 மங்களாசாசனம்:-
இத்தல இறைவனை நம்மாழ்வார் 12 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
கொத்தவர் பொழில் சூழ்
குருகூர் சடகோபன் சொன்ன பத்து நூற்றுளிப்
பத்து அவன் சேர்
திருக்கோளூர்க்கே சித்தம் வைத்துரைப்பார்
திகழ் பொன்னுலகாள்வாரே!!!"
- நம்மாழ்வார்.
🌺🌺 சிறப்புகள்:-
நம்மாழ்வாரையே வழிபட்டு இறைவனை அடைந்த மதுரகவி ஆழ்வார் திருஅவதாரத் திருத்தலம்.
நவதிருப்பதிகளில் மூன்றாவது தலம், அங்காரகன் என்றழைக்கப்படும் செவ்வாய்க்குரிய தலம்.
திருமகள் பிராட்டி குமுதவல்லி என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.
நம்மாழ்வார் 12 பாசுரங்கள் பாடியருளிய திவ்யதேசம்.
🌺🌺 வழித்தடம்:-
திருநெல்வேலியிலிருந்து 37 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
அருள்மிகு குமுதவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில்:-
கருடாழ்வார் சற்று விலகிய நிலையில் அமைந்துள்ள அருள்மிகு மகர நெடுங்குழைக்காதர் திருக்கோவில் - தென்திருப்பேரை திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:!!!"
No comments:
Post a Comment