Saturday, April 11, 2020

தாளகிரீஸ்வரர்_திருக்கோயில் பனமலைப்பேட்டை

இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் #தாளகிரீஸ்வரர்_திருக்கோயில்  பனமலைப்பேட்டை

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்துள்ள  பனைமலையில் 1400 ஆண்டுகள் பழமையான பல்லவ மன்னன் இராஜசிம்மனால் கட்டபட்ட சிவன் கோவில் உள்ளது.

#தாளகிரீஸ்வரர் #அஸ்த_தாளாம்பிகை உடன் இங்கு அருள் பாலிக்கிறார் 

இவரை வணங்கினால் திருமணம், குழந்தைபாக்கியம், கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  நிறம் மாறும் தாளகிரீஸ்வரர் கோவில் காலையில் பச்சை நிறம் மாகவும் மாலை பொன் நிறம் மாக மாறும் அதிசயம் பனைமரங்கள் நிரம்பிய மலையாக இருந்த இத்தலம் பனைமலை என்று வழங்கப்படுகின்றது. 

#துர்க்கை, #மகிஷாசுரமர்த்தினி

  அக்குகைக் குன்றில் பல்லவ மன்னன் ராஜசிம்மனைப் பற்றிய வாழ்த்துரை ஒன்று, பல்லவர் காலக் கல்வெட்டாய்க் காட்சியளிக்கின்றது. இது துர்க்கைக் கோயில் என வழங்கப்பட்டு, மக்களால் நாளும் வழிபாடு செய்யப்படுகின்றது. அடிவாரத்தில், வலதுபுறமுள்ள குன்றில் விநாயகரின் உருவம் புடைப்புச் சிற்பமாக விளங்குகிறது. இவர் மகுடம், அங்குசம், பாசம் யாவும் சாய்வான மலையில் செதுக்கப்பட்டுள்ளதால் சற்று வித்தியாசமாகத் தோற்றமளிக்கின்றன. இந்த விநாயகர் தம் இரண்டு கால்களையும் குத்திட்டு அமர்ந்துள்ள பாவனையில் திகழ்கிறார். இடதுபக்கம் சிலபடிகள் ஏறிச் சென்றால் குகை போன்ற அமைப்பை அடையலாம். நுழைவிலேயே பலிபீடம், யானை, சூலம் ஆகியவை காணப்படுகின்றன. இக்குகைக் கோயிலிலுள்ள இறைவியை துர்க்கை, கொற்றவை, மகிஷாசுரமர்த்தினி என்று போற்றி மக்கள் வழிபடுகிறார்கள்.

 அன்னை, தலையில் ராஜகிரீடம் புனைந்து எட்டுத் திக்குகளையும் எட்டுக் கரங்களாகக் கொண்டு, இடது மேல் கரத்தில் தண்டம் (வில்) பிடிக்க, மற்ற கைகள் சங்கம், கேடயம் ஏந்தியும், நான்காவது கை தண்டத்தை அணைத்தவாறு அன்னையின் இடது தொடைமீது படிந்துள்ளது. சிம்மத்தின் மீது தன் இடதுகாலைத் தூக்கி வைத்தும், வலது காலைத் தரையில் ஊன்றியும், வெற்றிக்களிப்புடன் காட்சியளிக்கிறாள். அம்மனின் வலது மேற்கைகள் சக்கரம், பெருவாள் பிடித்தும், ஒரு கை கடக முத்திரையோடும், மற்றொரு கையைத் தன் இடைமீது கடிகஸ்தமாகவும் வைத்திருக்கிறாள். காதுகளில் தடித்த குழைகளும், கழுத்தில் மங்கல அணியும், மேற்கையில் தோள்வளையும், மார்பில் மேலிருந்து கீழாக நூலாடையும், முன்கையில் கைவளையும், இடையில் கச்சையும், இடையின் முன் இடைவாரும், பக்கங்களில் ஆடையும், காலில் பாதசரமும் கொண்டிருக்கிறாள். அம்மனைத் தாங்கும் சிம்மம், முன்பக்க இடது காலைத் தரையில் ஊன்றி, முன் வலது காலை மேலே தூக்கிச் சற்றே சாய்ந்த நிலையில், கம்பீரமாகச் சிலிர்த்தெழுவதுபோலக் காட்சியளிக்கின்றது.

#கோயில்_அமைப்பு:

 கோயிலின் தெற்கு மண்டபம் கம்பீரமாக வரவேற்கின்றது. கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், முன்மண்டபம், மகாமண்டபம், திருச்சுற்று மண்டபம், சிற்றாலயங்கள் என்று இக்கோயில் அமைந்திருக்கிறது. தூண்கள் கீழ்ப்புறம் செவ்வக வடிவிலும், மேற்பகுதி சதுர வடிவிலும் இடைப்பகுதி சதுரம், பட்டைகள் கொண்டு நிற்கின்றன.  வடக்கே 18 தூண்களும் கிழக்கே 10 தூண்களும் மண்டபத்தைத் தாங்குகின்றன. பிற்காலச் சோழர்கள் உருவாக்கிய மண்டபங்கள் இவை. தூண்களில் விநாயகர், ரிஷபாருடர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சுற்று மண்டபத்தின் ஈசான்ய மூலையில் தெற்கு நோக்கிப் பைரவர் சிலையும், மேற்கு நோக்கிச் சூரியன் சிலையும், நடுவில் நவகிரகங்கள் அமைந்த மேடையும் காணப்படுகின்றன. கிழக்குச் சுற்று மண்டபத்தில் இறைவனைப் பார்த்த நிலையில் பலிபீடம், நந்தி உள்ளன. கொடி மரத்திற்குரிய துவாரம் மேல்தளத்தில் காணப்படுகின்றது.  இறைவனைக் காண அர்த்தமண்டபம் நுழைவதற்கு ஏதுவாக, முன் மண்டபத்திலிருந்து இணைப்பாக நான்கு கருங்கல் பலகைகள் பாவப்பட்டிருக்கின்றன.

#அஸ்த_தாளாம்பிகை:

 இறைவனார் கோயில் தனித்தும் அதனைச் சுற்றி நீராழி மண்டப அமைப்பும் தென்படுகின்றன. நீராழி, முன்மண்டபத்தைப் பிரித்துக் காட்டுகிறது. அர்த்த மண்டபத்தின் உள்ளே நுழைந்ததும், நேராக கர்ப்பக்கிரகத்தில் மிகப் பெரிய, பதினாறு பட்டை வடிவச் சிவலிங்கத்தையும், ஆவுடையாரையும் தரிசிக்கலாம். மிக அழகிய, பளபளப்பான கரியநிறக் கருங்கல்லில், செதுக்கப்பட்டு ஒளிவீசிக் கொண்டிருக்கிறது சிவலிங்கம். அர்த்த மண்டப பக்கச் சுவர்களில், வலது பக்கம் திருமால்-மகாலட்சுமி, இடது பக்கம் நான்முகன்-கலைமகளும் இரு தம்பதியரும் அமர்ந்த கோலத்தில் இறைவனின் பார்வையில் படுமாறு மிக நேர்த்தியாக சுவரில் செதுக்கப்பட்டு பொலிகின்றனர். 

இம்மலை    #பனைமலை என்றானது எவ்வாறு?

 பனை என்றால், மிக உயரமான, ஓங்கிய என்ற பொருளில் பாமர மக்களிடையே புழங்கும் சொல். பனைமலையை வடமொழியில் தாளகிரி என்கின்றனர். ஆகவே, இறைவன், தாளகிரீஸ்வரர்! பனைமலைக் கோயிலின் வடகிழக்குத் திசையில் தென்திசை நோக்கியவாறு அம்மன் சந்நதி அமைந்துள்ளது. அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் அம்மன் திருவுரு காட்சியளிக்கின்றது. அம்மனை அஸ்த தாளாம்பிகை என்று போற்றுகிறார்கள். அம்மனின் மேற்கைகள் அங்குசத்தையும், பாசத்தையும் தாங்கியுள்ளன; கீழ் வலக்கை அபய முத்திரை, கீழ் இடதுகை வரத முத்திரை காட்டுகின்றன.

#தரிசனநேரம்:
காலை 06:00 - 09:00
மாலை 04:00 - 06:00

#அமைவிடம்:

கோயிலை அடைய செஞ்சி சென்று அங்கிருந்து அனந்தபுரம் வழியாகவும் விழுப்புரத்திலிருந்து கணடாச்சிபுரம் சூரப்பட்டு, அன்னியூர் வழியாகவும் பேருந்து வசதிகள் உள்ளன.


No comments:

Post a Comment