Monday, April 20, 2020

அக்காள் மடம், தங்கச்சி மடம்.

அக்காள் மடம், தங்கச்சி மடம்...

முத்து விஜயரகுநாத சேதுபதிக்கு, சீனி நாச்சியார், இலட்சுமி நாச்சியார் என இரு புதல்விகள் இருந்தனர். 

இருவரையுமே தண்டத்தேவர் என்பவருக்கு மணம் செய்து வைத்தார். அத்துடன் மருமகனுக்கு இராமேஸ்வரம் புனிதத் தீவின் ஆட்சிப் பொறுப்பையும் ஒப்படைத்தார். 

ஆளுநர் என்கிற பொறுப்பையும் அளித்த சேதுபதி மன்னர், தண்டத்தேவர், இராமநாதர் ஆலய நிர்வாகத்தைக் கவனிக்க வேண்டும். அறப்பணிகளிலும் ஒரு சிறு குறையும் நேர்ந்துவிடக்கூடாது. 

பாரத தேசம் முழுவதிலிருந்தும் அங்கு வந்து குவிகிற பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தர  வேண்டும். இதுதான் சேதுபதி தன் மருமகனுக்கு இட்ட கட்டளை.

தண்டத்தேவரும் அனைத்து அறப்பணிகளையும் சிறப்பாகவே நிர்வகித்து வந்தார். இராமேஸ்வரம் ஆலய விஷயங்களை மாப்பிள்ளை ஒழுங்காகப் பார்த்துக் கொள்கிறார் என்கிற மகிழ்வும், மனநிறைவும் கொண்ட சேதுபதி, இராமநாதபுரம் சீமையின் வறட்சியைப் போக்கி, நாட்டை வளப்படுத்தும் சமூகப் பணிகளில் அக்கறை காட்டலானார்.

அந்தக்காலத்தில் வட தேசங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் இன்று போலவே இராமேஸ்வரம் வந்து, இராமநாதரை தரிசிப்பதைத் தங்கள் ஆன்மிகக் கடமைகளில் ஒன்றாகக் கொண்டிருந்தனர். வண்டி, வாகன வசதிகள் அதிகம் இல்லாத அந்த நாட்களில் பெரும்பாலான பக்தர்கள் பாதயாத்திரையாகவே இராமேஸ்வரம் வருவது வழக்கம். 

அதிலும் சேதுநாட்டில் இவற்றின் எண்ணிக்கை மிக அதிகம். பக்தர்கள் தோணித்துறையில் வந்து குழுமியதும் அவர்களைப் பாம்பன் கரைக்குப் படகுகளில் அழைத்துச் செல்வதும் சத்திரங்களில் தங்க வைத்து உபசரிப்பதும் எல்லாமே இலவசம்தான். இதற்கென்று யாரிடமும் பணம் எதுவும் பெறுகிற வழக்கம் இல்லை.

சேதுபதியின் மாப்பிள்ளை தண்டத்தேவர், பாம்பனிலிருந்து இராமேஸ்வரம் ஆலயம் வரை செல்லும் சாலையை நன்கு செப்பனிட வேண்டும் என்று எண்ணினார். அதற்குக் கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. அதற்காக யாத்ரிகர்களிடமிருந்து கால் பணம், அரைப் பணம் என்று கொஞ்ச காலத்திற்கு வசூல் செய்யலாம் என்று திட்டமிட்டார். இதை நடைமுறைப்படுத்த சேதுபதியிடம் அவர் அனுமதி எதுவும் பெறவில்லை. பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று எண்ணி விட்டார்.

பக்தர்கள் சொற்ப கட்டணம் செலுத்த ஆரம்பித்தனர்.

இச்செய்தி உடனே சேதுபதியின் செவிகளை எட்டி விட்டது. வடதேச யாத்ரிகர்கள் இதை ஒரு பெரிய குறையாக மன்னரிடம் சென்று தெரிவித்து, முறையிட்டனர்.

முத்து விஜய ரகுநாத சேதுபதி இதைக் கேட்டு மிகுந்த சினம் கொண்டார். ‘இமயம் தொடங்கி நீண்டு, பரந்து கிடக்கும் பாரத யாத்ரிகர்கள் எவ்வளவு பக்தியுடன், எத்தனையோ இன்னல்களைத் தாங்கிக்கொண்டு, சேதுக்கடலாட வருகின்றனர். அவர்களிடம் போய் என் பெயரால் காசு கேட்பதா? இது என்ன கொடுமை! இதைச் செய்ய தண்டத் தேவனுக்கு எப்படி மனம் வந்தது? இந்தக் கணமே நான் அவனுக்கு மரண தண்டனை விதிக்கிறேன். இனி அவன் தலை கொய்யப்பட்டது என்கிற செய்தி மட்டுமே என் செவிகளில் வந்துவிழ வேண்டும். உத்தரவை உடனே நிறைவேற்றுக’ என்று ஆணையிட்டு விட்டார் அவர்.

சேதுபதியின் கட்டளை உடனடியாக நிறைவேற்றப்பட்டது. தண்டத் தேவன் தன் இரு மகள்களை மணந்த மணாளன் ஆயிற்றே; அவன் தலை கொய்யப்பட்டால், புதல்விகளின் வாழ்வு என்ன ஆவது என்பது பற்றியெல்லாம் சேதுபதி, சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லை. 

மருமகன் செய்தது மிகப் பெரிய "சிவத்துரோகம்"என்று மட்டுமே அவர் எண்ணினார். 

விசாரணை, அது இதுவென்று வழக்கை நீட்டிக்க அவர் விரும்பவில்லை. ‘பக்தர்களுக்கு நன்மை புரியத்தானே அந்த வரி வசூலிக்கப்பட்டது’ என அமைச்சர் எவரும் எடுத்துக்கூறி, தன் மனத்தை மாற்றிவிடக் கூடாது என்பதற்காகவே அப்படி உடனடி மரண தண்டனையை அறிவித்துவிட்டார்.

தண்டத்தேவரின் தலை வெட்டப்பட்டது என்கிற செய்தி சேதுபதியின் செவிகளை வந்தடைந்தபோது, வேறு ஒரு இடிச் செய்தியும் வந்து அவர் மார்பில் அறைந்தது; மனத்தைக் கலக்கமுறச் செய்தது.

அது என்ன செய்தி தெரியுமா?

மரண தண்டனைக்குள்ளான தண்டத் தேவரின் சிதை நெருப்பில் விழுந்து, சேதுபதியின் இரு புதல்விகளும் உடன்கட்டை ஏறி, தீக்கிரையாகினர் என்கிற செய்திதான்.

‘எல்லாம் ஈசன் திருவுள்ளம்’ என்று, மனத்தைக் கல்லாக்கிக் கொண்டார் சேதுபதி.  

பின்னால் வந்த சேதுபதிகள், உயிர்தியாகம் தியாகம் செய்த சீனு நாச்சியார் மற்றும் லட்சுமி நாச்சியார் பெயரில் இரண்டு ஊர்களை நிறுவி, அங்கு இரு மடங்களை யாத்ரிகர்கள் நன்மைக்காக அமைத்தனர். அவைதான் இன்றளவும் புகழுடன் திகழ்கின்ற "அக்கா மடம், தங்கச்சி மடம்".

சுவாமி தரிசனத்திற்கே ஏராள கட்டணங்கள் செலவிட,மற்றும் வசூல் செய்ய நேரும் இன்றைய காலகட்டத்தில், 

கால் காசு, அரைக்காசுக்காக உயிர்விட்ட இந்த மூன்று ஜீவன்களின் பெருமை இப்போதைய மக்களுக்குத் தெரியத்தான் வேண்டும்....

No comments:

Post a Comment