Saturday, April 11, 2020

ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டம்

நம்மாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் திருநெல்வேலியிலிருந்து, திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள “நவதிருப்பதிகளை” இதனை முதல் இருப்பிடமாகக் கொண்டு சேவிக்கலாம்.

வரலாறு.
பிரம்மாண்ட புராணத்தில் இத்தலத்தைப் பற்றிச் சொல்லப்படுகிறது. ஒரு சமயம் பிரளயம் ஏற்பட்டு எங்கும் நீர் சூழ்ந்து கொண்டிருந்த காலத்தில் சோமுகாசுரன் என்ற அரக்கன் பிரம்மதேவன் வைத்திருந்த (ச்ருஷ்டி ரகஸ்யக் கிரந்தம்) படைப்புத்தொழில் ரகசியம் பற்றிய புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஒளிந்து கொண்டான். தம் நிலை உணர்ந்து வருந்திய பிரம்மா அதனை அவனிடமிருந்து மீட்கும் பொருட்டு விஷ்ணுவைக் குறித்து தவமியற்ற ,விஷ்ணுவோ தவமியற்ற ஒரு சிறந்த இடத்தை தெரிவு செய்து வருமாறு பூவுலகிற்கு அனுப்பினார். தாமிரபரணி நதிக்கரையிலிருக்கும் ஜயந்தீரபுரத்திற்கு வந்து, தாமிரபரணியாற்றங்கரையில் சோலைகள் நிறைந்த ஓரிடத்தை தெரிவு செய்து பிரம்மனிடம் கூற, பிரம்மன் அங்கு வந்து திருமாலைக் குறித்து கடுந்தவம் இருக்கலானார். பிரம்மனின் தவத்தை மெச்சிய திருமால் வைகுண்டத்திலிருந்து படைப்பின் ரகசியத்தை மீளவும் பிரம்மனிடமே சேர்ப்பித்தார்.

வைகுண்டத்திலிருந்து எழுந்த கோலத்தில் இவ்விடம் காட்சி தந்தமையாலும், இதே திருக்கோலத்தில் பக்தர்களுக்கு இவ்விடத்தே நின்று அருள வேண்டுமென்று பிரம்மன் வேண்டியதால் இத்திருத்தலத்திற்கு ஸ்ரீவைகுண்டம் என்ற பெயருண்டாயிற்று.

ஸ்ரீவைகுண்டத்தில் காலதூஷகன் என்னும் திருடன் ஒருவன், இப்பெருமானை வழிபட்டே திருடச் செல்வதும், அவ்வாறு திருடிய பொருட்களில் பாதியை இப்பெருமானுக்கே சமர்ப்பணம் செய்து, இடையறாது பக்தி செலுத்திவந்தான். ஒரு நாள் தன் கூட்டத்தினருடன் அரசனின் அரண்மனையில் திருடிக்கொண்டிருக்கும்போது இவன் கூட்டத்தைச் சார்ந்த சிலரை காவலாளிகள் பிடித்து விசாரணை செய்ய, அவர்கள் தாங்கள் காலதூஷகனின் கையாட்களே என்றும் எங்களோடு வந்தால் காலதூஷகனைக் காண்பிக்கிறோம் என்று சொல்ல அவ்விதமே காவலாளிகளும் தேடிவந்தனர்.

மூலவர் - ஸ்ரீவைகுந்த நாதன், கள்ளப்பிரான்.
தாயார்- வைகுந்தவல்லி, பூதேவி.
தீர்த்தம்- பிருகு தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம், கலச தீர்த்தம்.
விமானம்- சந்தர விமானம்

சிறப்புக்கள்

1. பிரம்மா தமது கமண்டலத்தில் தாமிரபரணி நீரையெடுத்து திருமாலுக்குத் திருமஞ்சனம் செய்து, நதிக்கரையிலேயே கலசத்தை ஸ்தாபிதம் செய்ததால் இன்றும் கலச தீர்த்தம் என்றே வழங்கப் படுகிறது. பிரம்மனாலேயே இங்கு வைகுண்டநாதனுக்கு சித்திரை உற்சவம் நடத்தப்பட்டது.

2. மற்றெல்லா தலங்களிலும் ஆதிசேடனில் தான் பெருமாள் பள்ளிகொண்டிருப்பார். ஆனால் இங்கு நின்ற திருக்கோலத்தில் உள்ள பெருமானுக்கு ஆதிசேடன் குடைபிடிக்கும் வண்ணத்தில் அமைந்துள்ள காட்சி வேறெங்கும் காண்டற்கரியதாகும்.

3. சோரநாதன் என்று பெயர்கொண்ட இப்பெருமானின் மீது வடமொழியில் இயற்றப்பட்டுள்ள “ஸ்ரீசோரநாத சுப்ரபாதம்” மிகவும் பிரசித்திபெற்றதாகும்.

4. காலதூஷகனுக்கு அருள் பாலித்து ஸ்ரீவைகுண்ட நாதனாக எழுந்தருளியிருந்த பெருமானும், அச்சிறு சன்னதியும் வெகு காலத்திற்குப்பின் பூமியில் புதையுண்டு போனது. ஒரு சமயம் பாண்டிய மன்னர்கள் நெல்லையில் தமது அரசாட்சியை செலுத்தும் போது மணப்படை, கொற்கை போன்றன, பாண்டியர்களின் முக்கிய பிரதேசமாக விளங்கின. அவ்வமயம் பாண்டியனின் பசுக்களை மேய்ப்பவன் சந்நிதி மூடிய இவ்விடத்திற்குப் பசுக்களை ஓட்டி வந்ததும் ஒரு பசுமட்டும் தனித்துச் சென்று வைகுண்ட பெருமாள் பூமியில் மறைந்துள்ள இடத்தில் பால் சொரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. இதைக்கண்ட பசுமேய்ப்பவன் இதனை மன்னனுக்குத் தெரிவிக்க மன்னன் தன் பரிவாரங்களுடன் சூழ இவ்விடம் வந்து தோண்டிப் பார்க்கையில், அங்கே வைகுண்டப் பெருமான் சன்னதி இருப்பதைக்கண்டு மிகவும் மகிழ்ந்து தற்போதுள்ள கோவிலை அமைத்தான் என்பர்.

5. இங்குள்ள கள்ளப்பிரானின் திருமேனியை உருவாக்கிய சிற்பி அவது பேரழகில் பெரிதும் மயங்கி தன் உள்ளத்தைப் பறிகொடுத்து ஆசைமிக்குப் போனதால் செல்லமாகக் கன்னத்தில் கிள்ளி விட்டார். ஆத்மார்த்தமான பக்தியில் கிள்ளிய வடுவை எம்பெருமான் கன்னத்தில் ஏற்றுக் கொண்டார். இன்றும் இப்பெருமானின் கன்னத்தில் கிள்ளப்பட்ட வடுவைக்காணலாம்.

6. இத்தலத்து எம்பெருமானை ஆண்டுக்கு இருமுறை சூரியதேவன் வந்து வழிபாடு செய்கிறான். அதாவது சித்திரை 6ம்தேதி, ஐப்பசி 6ந்தேதி. இவ்விரு தினங்களிலும் இளஞ்சூரியனது பொற் கிரணங்கள் கோபுர வாயில் வழியாக வைகுந்த நாதனின் திருமேனிக்கு அபிஷேகம் செய்கிறது. இத்தகைய அமைப்பில் இக்கோவிலின் கோபுர வாசல் அமைக்கப்பட்டது.

7. கி.பி. 1801இல் கட்டப்பொம்மனுக்கும், ஆங்கிலேயர்கட்கும் நடைபெற்ற போரில் இந்தக் கோவிலையும் சுற்றியுள்ள பகுதிகளையும் மையமாக வைத்து ஒரு கோட்டையாகப் பயன்படுத்தப்பட்டது.

அன்பர்கள் இத்தலத்திற்கு வருகைபுரிந்து வைகுண்டநாதனின் அருளாசியினைப் பெறவேண்டுமென்று வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment