ரஹஸ்யத்ரயம்.....!!!
ரஹஸ்யத்ரயம் என்பது மூன்று ரஹஸ்ய அர்த்தங்களைக் கொண்டது.
"ஓம் நாராயணாய நம:" என்கிற அஷ்டாக்ஷரம்,
"ஸ்ரீமன் நாராயணாய சரணௌ சரணம்" என்று ஆரம்பிக்கும் த்வய மந்திரம்,மற்றும் "ஸர்வ தர்மான் பரித்யஜ்ஜ.".. என்று ஆரம்பிக்கும் சரமஸ்லோகம் ஆகும்.
1. திருமந்திரம் - இதற்கு மந்திர ராஜம் என்ற பெயருண்டு. இந்த மந்திரத்தை அனுஷ்டிக்க வேண்டிய க்ரமத்தோடு ஸ்ரீயபதி பதரிகாச்ரமத்தில் தானே ஆசார்யனாகவும் சிஷ்யனாகவும் இருந்து கொண்டு உபதேசித்து அருளினான். இதன் பொருள் ஸர்வ சேஷியான எம்பெருமானுக்கே எல்லா அடிமைகளையும் செய்யக்கடவேன் என்பதே ஆகும். எம்பெருமானின் உடைமையான ஜீவாத்மா எம்பெருமானின் உகப்புக்காகவே இருத்தல் வேண்டும். எல்லார்க்கும் தலைவனான நாராயணனுக்கே கைங்கர்யம் செய்தல் வேண்டும் என்பது இதன் எளிய பொருள்.
2. த்வயம் - மந்திரங்களில் மிகச்சிறந்தது த்வய மந்திரம் எனப்படும்.
"ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம்"....... என்பது. இதன் அர்த்தம் பிராட்டியுடன் கூடிய எம்பெருமானின் இரு திருவடிகளே உபாயம் மற்றும் உபேயம் ஆகும். அதாவது, அடையவேண்டிய பொருள் மற்றும் அடையவேண்டிய வழி இரண்டுமே எம்பெருமானின் திருவடிகளே ஆகும்.
இரண்டாவது வரியில் ஆரம்பிக்கும் "ஸ்ரீ மதே நாராயணாய" என்பது பிராட்டி, எம்பெருமான் இருவரும் சேர்ந்த சேர்த்தியில், ஸர்வ தேச, ஸர்வ காலத்திலும், ஸகலவிதமான நித்ய கைங்கர்யங்களும் செய்ய ப்ரார்த்திப்பது. த்வய மந்திர சப்த்ததை தவிர, மற்ற சப்தங்கள் எல்லாம் சமுத்ர ஓசையே என்று பிள்ளை லோகாச்சாரியார் கூறுகிரார்.
இந்த த்வய மந்திரத்தை எப்போது வேண்டுமானாலும், எந்த காலத்திலேயும், யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.
3. சரமஸ்லோகம் - பகவத் கீதையின் ஒரு பகுதியான
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய
மாம் ஏகம் சரணம் வ்ரஜ |
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச ||
எனும் இந்த ச்லோகம்
அர்ஜுனனுக்கு க்ருஷ்ணனால் மஹா பாரதப்போர்க்களத்தில்
அவன் மனம் கலங்கியபோது உபதேசிக்கப்பட்டது.
எல்லா உபாயங்களையும் கைவிட்டு என் ஒருவனையே சரணமாகப் பற்று, உன் பாபங்களினின்றும் உன்னை விடுவித்து உன்னை ரட்சிப்பேன். கவலையற்று இருப்பாயாக என்பது இதன் சுருக்கமான பொருள்.
ஓம் நமோ நாராயணாய !
No comments:
Post a Comment