Thursday, April 2, 2020

அந்தகாசுர வத வீரட்டேசுவரர் திருக்கோயில் :

⚜️🔱    திருக்கோயிலூர் (திருக்கோவலூர்)  அந்தகாசுர வத வீரட்டேசுவரர் திருக்கோயில் : 
  💥 எட்டு வீரட்டத் தலங்களில் ஒன்று.  வீரட்டேஸ்வரர்  சூல பாணி 
உமையவள் ஈசனது  இடப்பாகத்தில் கலந்த தலம்.  துர்கை திரிசூலம் பெற்ற தலம். 
🙏  வழிபட்டவர்கள்:   பராசக்தி  விசுணு ருத்திரர் லட்சுமி  துர்கை காளி விநாயகர் முருகன் காமதேனு அகத்தியர் ஆதிசேஷன்  இந்திரன் யமன் குரு பகவான் சூரியன் குபேரன் சப்த மாதர் பரசுராமர்  இராமன்  வாணாசுரன் கண்ணன் ஐயப்பன் கபில முனிவர் உரோமச முனிவர் மெய்ப் பொருள் நாயனார் மற்றும் பலர்.
       திருக்கோயிலூர் விழுப்புரத்திற்கு அருகே பெண்ணை யாற்றங் கரையில் உள்ளது. திருக்கோயிலூர்ப் பெருவண்டி நிலையத்திலிருந்து நடக்கும் தூரத்தில் கோயில் உள்ளது. அருட்பெருஞ்சோதிப் பெருமான் அந்தகாசுரனை சூலத்தில் அழுத்திக் கோர்த்து முக்தி அருளியதால் திருக் கோர்த்தலூர் என்று பெயர் பெற்றுத் திருக் கோவலூர் என்று ஆயிற்று. தற்காலத்தில் திருக் கோயிலூர் என்று வழங்கப்படுகிறது. 

      🌑  அந்தகனை அயில் சூலத்து அழுத்திக் கொண்டார்  
       🔱 கையில் சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்து       (அப்பர்)   
🔱 அந்தகனை அண்டர் அண்டம் உய்யக் கொதித்து எழுந்த சூலத்தால் கோத்து     (நக்கீரர்)
  🔱 அந்தகன் தனை அயில் மூவிலை அழகு ஆர் கறையார் நெடுவேலின் மிசை ஏற்றான்       (சம்பந்தர்)

     என்று  தெய்வீகத் திருமுறைகள்  திருத் தலப் பெயர்க் காரணத்தைத்  தெரிவிக்கின்றன.  
அம்மன் தாட்சாயிணியாக இருந்த போது ஆகமம் அறிய வேண்டித்  திருருவிடை மருதூரில் பூஜை செய்தாள்  .  ஆகமேஸ்வரன் திருக்காட்சி  அருளி ஆகமம் உபதேசித்து உடன் இருந்தார்.  
  💥 ஆகமம் சொல்லும் தன் பாங்கிக்கே  (அப்பர்) 
என  ஆகமம் உரைத்த  பரபிரும்மத்தின் இரண்டு விழிகளையும்  அம்மன் விளைளையாட்டாகப்  பொத்தினாள். 
  🔴  எவ்வுலகிற்கும் கண் அவன்     (சம்பந்தர்) 
       என பரமேசுவரனின் இரு கண்களே சூரிய சந்திரர்களுக்கு ஒளி வழங்கும் சுடர் விழிகள் ஆதலால் அவை மறைக்கப்பட்ட போது அனைத்து உலகங்களும் இருளில் மூழ்கித் தவித்தன.
☸️ மலை மடந்தை விளையாடி வளையாடு கரத்தால் மகிழ்ந்து அவள் கண் புதைத்தலுமே வல் இருளாய் எல்லா உலகு உடன்தான் மூட இருள் ஓடும் வகை நெற்றி ஒற்றைக் கண் படைத்து உகந்த உத்தமன்      (சுந்தரர்) 
⚜️ பரம்பரன் சிவபிரான் 
🔯 அங்கு உயர் முக்கட்பிரான்       (நம்மாழ்வார்)  
      என படைத்தல் காத்தல் அழித்தல் அறைத்தல் அருளல் என்னும் ஐந்து தொழில் புரியும் ஆதி நாயகன் தன் திரு நெற்றியில் நெருப்புக் கண்ணைத் தோற்றுவித்து முக்கண்ணன் ஆகி அனைத்து உலகங்களுக்கும் ஒளி வழங்கிப் பாதுகாத்து அருளினார்.  காக்கும் கடவுளின் கண்களை அம்மன் மறைத்ததால் அண்ட சராசரங்களும் கொடிய இருளில் முழுகியபோது அந்த இருளிலிருந்து ஒரு அசுரன் உருவானான். அந்தகாரம் என்றால் இருள் என்று பொருள். அதனால் அந்த அசுரன் அந்தகாசுரன் எனப்பட்டான். 
   🌑 இருள் மேவும் அந்தகன்        (சுந்தரர்) 
  என விண்னகம் மண்ணகம் பாதாளம் என்று செல்லும் இடமெல்லாம் கொடிய இருளைப் பரப்பிய அந்தகாசுரன் முன் சூரியனும்  வல்லமை இழந்ததால் அரி அயன் ருத்திரன் ஆகிய மும்மூர்த்தி முதல் அனைத்து உயிரினங்களும் துன்புற்றன. அரி அயன் ருத்திரர் முதலிய விண்ணவர்கள் மண்ணுலகிற்கு வந்து கபிலர் கண்ணுவர் உரோமச முனிவர் சப்த ரிசிகள் முதலிய பலப் பல மண்ணக முனிவர்களோடு  பெண்ணை நதிக் கரையில் வில்வ மரத்தடியில் லிங்கப் பரம்பொருளைப் பூசை செய்து வழிபட்டு அந்தகாசுரனது தொல்லையிருந்து காக்குமாறு காதலாகிக் கசிந்து  கண்ணீர்   மல்கி வேண்டினர்.  அப்போது அந்தகாசுரன் அங்கு வந்தான். 
      🔱 மூன்று மூர்த்தியில் நின்று இயலும் தொழில் மூன்றும் ஆயின மூவிலைச் சூலத்தன்  (அப்பர்)
    என அடியவர்களைக் காக்கும் அகிலாண்டேசுவரன் படைத்தல் காத்தல் அழித்தல்  என்னும்  மூன்று தொழிலைக்  காட்டும் மூவிலை வேல் எனப்படும்  திரிசூலம்  தாங்கி  சூலதாரியாக  சூல பாணியாக   வெளிப் பட்டார். 
      🔥 சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே, செப்புதற்கு அரிய செழுஞ்சுடர் மூர்த்தி  (திருவாசகம்) 
      என எங்கும் ஒளிமயமாக்கும் ஆதியந்தம் இல்லா அரும்பெரும் சோதி ஆண்டவரின்  திருக் கரத்தில் இருந்த திரிசூலம் அந்தகாசுரனை அழுத்திக் கோர்த்தது. 
🔱 அந்தகன் மேல் திரிசூலம் பாய்ச்சி  (சம்பந்தர்)
🔱அதிர்த்து எழுந்த அந்தகனை அண்டர் அண்டம் உய்யக் கொதித்து எழுந்த சூலத்தால் கோத்துத் துதித்து அங்கு அவன் இருக்கும் வண்ணம் அருள் கொடுத்து அங்கு ஏழேழ் பவம் அறுத்த பாவனைகள் போற்றி      (நக்கீரர்)
      என தேவர் அசுரர் ஆகிய எல்லா சீவராசிகளுக்கும் அருள் புரியும் சர்வேசுவரன் அந்தகாசுரனுக்குத் திருக் காட்சி தந்து முக்தி அருளிச் சிவ கணம் ஆக்கினார். திருப் பணி செய்து போற்றித் துதித்து  இருக்குமாறு சிவலோக வாழ்வை அருளிச் செய்தார். 
அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த வாசலையும் சிறு சிறு சிற்பங்களைக் கொண்ட சுவர்களையும் உடைய வீரட்ட லிங்கப் பரம்பொருள் கருவறைக்கு வலது புறம் பிரகாரத்தில் அந்தகாசுர வத மூர்த்தி ருத்திராட்சப் பந்தலின் கீழ் செப்புத் திருமேனியாகத் தனிச் சந்நிதியில் உள்ளார். 
      🔱 வலக் கை ஏந்து ஊனக மா மழுச் சூலம் பாடி       (திருவாசகம்)
      🔴 அழகன் அயில் மூவிலை வேல் வலன் ஏந்தும் குழகன்  (சம்பந்தர்)
    என மழுவாள் (பரசு, கோடரி) போன்று திரிசூலமும் ஈசனது வலது திருக் கரத்தில் இரண்டு விரல்களால் பற்றப்படாமல் மனிதர் போன்று இரண்டு கைகளில் பத்து விரல்களால் தாங்கப்பட்டுள்ளதால் இத் திருமேனி ஆகமமும் தெய்வீகமும் அறியாத பிற்காலத்தவர்களால் வடிக்கப்பட்டது என்பது தெரிகிறது. 
வேதம் அருளிய  ஞான சிவமான தட்சிணா மூர்த்தி  நான்கு தூண் மண்டபத்தில் உள்ளார். 
  ⚜️  வேதம் ஓது நெறியினான் வீரட்டானம்   
     என்று ஞான மழலை வேதம் ஓதிய ஞானேசுவரனைப் போற்றுகிறார்.
      அந்தகாசுர வத வீரட்டேசுவரரைப் பராசக்தி விசுணு ருத்திரர் லட்சுமி துர்கை காளி விநாயகர் முருகன் காமதேனு அகத்தியர் ஆதிசேடன்  இந்திரன் யமன் வியாழ பகவான் சூரியன் குபேரன் சப்த மாதர் பரசுராமர்  இராமன்  வாணாசுரன் கண்ணன் ஐயப்பன் கபில முனிவர் உரோமச முனிவர் மெய்ப் பொருள் நாயனார் மற்றும் பலர் வழிபட்டு நலம் அடைந்துள்ளனர்.   (தொடரும்)  சிவப்பிரியா

No comments:

Post a Comment