Tuesday, February 4, 2020

ஆதிசேஷனின் அவதாரம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம

"ஆதிசேஷனின் அவதாரம்...."

தொண்டனூர் ஆலயத்தில்.... ஸ்ரீ நரசிம்மர் சன்னதியில் அவர்கள் கூடியிருந்தார்கள்..... பன்னிரண்டாயிரம் சமணர்கள் ஒருபுறம்..... ராமாநுஜரும் அவரது சீடர்களும் ஒரு புறம்....வேடிக்கை பார்க்க வந்த மக்கள் ஒருபுறம்..... மன்னன் விஷ்ணுவர்த்தனும் அவரது பரிவாரங்களும் ஒரு புறம்....

"பன்னிரண்டாயிரம் பேரும் கேள்வி கேட்கப் போகிறீர்களா? சந்தேகத்துடன் கேட்டான் விஷ்ணுவர்த்தன்.

"கண்டிப்பாக... எங்கள் அத்தனை பேர் வினாக்களுக்கும் இவர் விடை சொல்லியாக வேண்டும்" என்றார்கள் சமணர்கள்.

" சொல்கிறேன்.... நமக்கிடையே ஒரு திரை மட்டும் போட அனுமதியுங்கள்" என்றார் ராமாநுஜர் .

திரையின் ஒருபுறம் ராமாநுஜர் இருக்க.... மறுபுறம் அத்தனை பேரும் கேள்விகளுடன் தயாராக இருந்தார்கள்....

"யார் முதல் வினாவை கேட்கப் போவது.... அடுத்தது யார் என்று வரிசை ஏதும் வைத்திருக்கிறீர்களா...?

"அதெல்லாம் கிடையாது.... அனைவரும் கேட்போம்.... ஒரே சமயத்தில் கேட்போம்.... ஆனால் அனைத்தும் வேறு வேறு வினா.... அத்தனை பேருக்கும் இவர் பதில் சொல்லியாக வேண்டும்.... அது எங்களுக்கு திருப்தியாக இருக்க வேண்டும்.... "

பன்னிரண்டாயிரம் கேள்விகளை நினைவில் பதில் சொல்லுவது எப்படி சாத்தியம்....? என்றார் மன்னர்

"அவருக்கு சரஸ்வதி தேவியே அருள் புரிந்து ஹயக்ரீவர் விக்ரகம் பரிசளித்திருக்கிறாளாமே.....? அதெல்லாம் அவரால் முடியும்.... வாதத்தைத் தொடங்கலாமா...?

சரி என்றார் உடையவர்

திரையிட்ட மறைப்பில் பத்மாசனமிட்டு அமர்ந்தார்....கண்களை மூடினார்...."ஓம் நமோ நாராயணாய.... "

காற்றும்.... கனலும் கலந்தாற்போல் ஒரு பேரொளி அங்கு தோன்றியது.... பஞ்ச பூதங்களும் அதனுள் ஒடுங்கின.... தேவர்களும், சப்தரிஷிகளும் ஒடுங்கினார்கள் .... அதுவரை யாரும் கேட்டறியாத ஒரு பிரம்மாண்டச் சீற்றத்தின் ஒலி.... சுருதியைப் போல் வெளியெங்கும் பரவி நிறையத் தொடங்கியது.... ஆபூர்வமாக.... அந்த ஒலிக்கு மணம் இருந்தது... அதைச் செவிகள் உணர்ந்தன.... அது துளசியின் மணத்தை ஒத்திருந்தது.... அது அசைந்தது.... அசையாமலும் இருந்தது....தோன்றிய பேரோளியின் நடு நெற்றியிலிருந்து... அந்த ஒலி வந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது.... சட்டென்று அந்த ஒளிப் பிரளயம் ஒரு பெரும் நாகமாக உருக்கொண்டது.... பிரம்மாண்டமான அதன் சிரம் சரசரவென இருபுறமும் பெருகி சஹஸ்ரமானது..... அந்த ஆயிரம் தலைகளுக்குள் இருந்தும் ஒரே சமயத்தில் நாக்குகள் வெளியே நீண்டன....

"ம்..... ஆரம்பியுங்கள்" சீற்றத்தின் ஒலிசொற்களாக உருக்கொண்டன.

"நாராயணா....நாராயணா.... என்று உடையவரின் சீடர்கள் சடாரென எழுந்து நின்று கரம் கூப்பினார்கள்....கணப்பொழுதில் அவர்களுக்குப் புரிந்து விட்டது....சப்த ரிதிகளுள் ஒருவரான காஸ்யபர்..அதிதியுடன் சேர்ந்து இந்திரனையும், அக்னியையும் பெற்றார்...திதியுடன் சேர்ந்து அசுரர்களில் ஒரு பிரிவினரான தைத்தியர்களைப் பெற்றார்.... வினதாவுக்கு கருடனைப் பெற்றார்... முனியுடன் இணைந்து அரம்பையரைப் பெற்றார்.... கத்ருவுடன் சேர்ந்து சேஷனைப் பெற்றார்.

ஆயிரம் தலைகளும் அகண்டு திரண்ட பெரும்தேகமும், கூர் விழிகளும்... த்வய சித்தமுமாகப் பாற்கடலில் பரமனின் பீடமாகக் கிடக்கிற ஆதிசேஷன் ... ராமாவதாரத்தில் அவர் லட்சுமணனாக வந்து நின்றார்.... கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகப் பிறப்பெடுத்தார்....கலியின் தொடக்கத்தில் நம்மாழ்வராகப் பெருமான் பிறப்பெடுக்க முடிவு செய்த போது.... புளிய மரமாக முன்தோன்றி... அவர் தங்க நிழல் அமைத்தார்...." பொலிக...பொலிக...." என்று நம்மாழ்வார் வாயால் அடுத்த அவதாரத்துக்கான சூசகம் வெளிப்பட்ட போது ...."இதோ புறப்பட்டு விட்டேன்" என்று "ராமாநுஜராக வந்துதித்தார்....

"ஆஹா.... எப்பேர்ப்பட்ட தருணம்.... உடையவர் இந்த சமணர் சபையில் தமது அவதார ரகசியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.... அவர்களுக்கு இது புரியாது.... அவர்களால் உணர முடியாது.... திரைக்கு அப்பால் என்ன நிகழ்ந்தது....எனக் கூட அறியாமாட்டார்கள்.... எழுந்து நிறைந்த பேரோளியைக் காண முடியாமல் கணப்பொழுது கண்ணை மூடிக் கொண்டவர்கள்.... ஆதிசேஷனின் மூச்சுக்காற்றின் சீற்றத்தில்..., மணந்த துளசியின் வாசம் உணர்ந்திருப்பார்களா.... சந்தேகம் தான்..." முதலியாண்டான் பரவசத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார்... .

மறுபுறம் சமணர்கள் பன்னீராயிரம் பேரின் வினாக்களுக்கு உடையவர் ஆதிசேஷ அவதார வடிவில் ஆயிரம் நாக்குகளால் தங்கு தடையின்றி பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.... என்ன நடக்கிறதென்று மன்னருக்குப் புரியவில்லை.... ஒரு திரை அதற்கு அப்பால் ராமானுஜர் இருக்கிறார்.... ஒரே ஒருவர் தான் அங்கே இருப்பது.... சந்தேகமில்லை.... வெளிப்பட்டு வருவது ஒரு குரல் தான்.... ஆனால் அதெப்படி ஒரே சமயத்தில் ஆயிரம் பதில்கள் வருகின்றன....? மொத்தம் பன்னிரண்டு முறை ஆதிசேஷன் திருவாய் மலர்ந்தார்..... பன்னிரண்டாயிரம் வினாக்களுக்கு பதில்கள் முடிந்தன.

திகைத்துப் போனார்கள் சமணர்கள்."உடையவரே... நாங்கள் தோற்றோம்....கேட்கும் தகுதி எங்களுக்கு இல்லை.... உம்மைச் சரணடைவது ஒன்றே மிச்சமிருக்கும் பணி... எழுந்து வெளியே வாருங்கள்.... " என்று கரம் கூப்பி நின்றார்கள்..

சில விநாடிகள் பெரும் நிசப்தம்..... திரைக்கு அப்பால் எழுந்தருளியிருந்த ஆதிசேஷன் உடையவராக மாறினார்..... திரை அசைந்தது.... அதை விலக்கி ராமாநுஜர் வெளியே வந்தார்.... தாள் பணிந்த பன்னிரண்டாயிரம் சமணர்களும்  அவரிடம் பஞ்ச சம்ஸ்காரங்களை ஏற்று வைணவராயினார்கள்.


"உய்ய ஒர்வழி உடையவர் திருவடி"

"எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்"

அடியேன்

வகுளாபரணராமாநுஜதாசன்🙏🙏🙏

No comments:

Post a Comment