Tuesday, February 4, 2020

ஆன்மீக கேள்வி பதில்கள்

ஆன்மீக கேள்வி பதில்கள்


விரதநாட்களில் உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்கக்கூடாது என்று சொல்கிறார்களே உண்மையா?

"விரதம்' என்ற சொல்லுக்கு "கஷ்டப்பட்டு இருத்தல்' என்று பொருள். விரதமிருப்பவர், அன்று முழுவதும் சுவாமியின் அருகிலேயே இருப்பதாக எண்ண வேண்டும். சாப்பிட்டால் மலஜலம் கழிக்க நேரிடுமே என்பதால் தண்ணீர் கூட குடிக்காமல் பசித்திருந்து, சிந்தனை மாறாமல் இருப்பதையே உபவாசம் என்ற நிலையில் முதன்மையாகக் கூறியுள்ளனர். "உபவாசம்' என்றால் "இறைவனுக்கு அருகில் இருத்தல்' என்று பொருள். முறையாக இருக்க இயலாதவர்கள் கூட அரிசி சாதத்தையும், வெங்காயம், பூண்டு இவற்றையும் தவிர்த்து விட வேண்டும். அரிசி, வெங்காயம், பூண்டு இவற்றைச் சாப்பிட்டால் தூக்கம் வரும். சிந்தனை மாறும். இதனால் தான் இவற்றை வேண்டாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவத்தைக் கூறுங்கள்.

காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை "சிருஷ்டி' (படைத்தல்)என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை "பிரம்ம முகூர்த்தம்' என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்.

ஹோமம் நடத்தும் போது குண்டத்தில் போட்ட நாணயங்களை வீட்டில் வைத்திருந்தால் நல்லது என்று சொல்கிறார்களே? விளக்கம் அளிக்கவும்.

ஹோமம் முடிந்து அதில் போட்ட எல்லா திரவியங்களும் சாம்பலாகும் வரை குண்டத்திலிருந்து எதையும் எடுக்கக்கூடாது. சில இடங்களில் ஹோமம் முடிந்து, யாகசாலைகளில் இருந்து கடம் புறப்பட்டவுடனேயே மக்கள் உள்ளே புகுந்து குண்டங்களை அணைத்தும், கலைத்தும் நாணயங்களையும் சாம்பல் பிரசாதமும் எடுக்கிறார்கள். இது மிகவும் பாவம். எல்லாம் சாம்பல் ஆன பிறகு நாணயங்களையும், சாம்பல் விபூதி பிரசாதத்தையும் பெற்றுக் கொள்ளலாம். இதை வீட்டில் வைத்துக் கொண்டால் லட்சுமி கடாட்சம் பெறுவதுடன், நோய் நொடியும் வராது.

No comments:

Post a Comment