Tuesday, February 4, 2020

ஶ்ரீ மணவாள மாமுனிகள் அவதார வைபவம்: 11

 ஶ்ரீ மணவாள மாமுனிகள் அவதார வைபவம்: 11

• மாயவாதிகள் சிலர் இவரை வாதத்திற்கு அழைக்க, வாதம் செய்வதில்லை என்ற தனது கோட்பாட்டில் இருந்து கொண்டு அந்த அழைப்பை மறுத்து தனது சீடரான வேடலைப்பையை வாதத்திற்கு அனுப்பி வெற்றி பெறச் செயதார் . ஆயினும் அதனைத் தொடர்ந்து வேடலைப்பை தனது ஊருக்கு விடைபெற்றுக் கொண்டார்.

• இதனிடையே காஞ்சிபுரத்திலிருந்து பெரும் வித்வானான பிரதிவாதி பயங்கரம் அண்ணா திருவேங்கடமுடையான் மீது தான் கொண்ட பெரும் அன்பினால் தனது தேவிகளோடே அப்பன் பொன் மலையை வந்து அடைந்து திருமலையிலே தீர்த்தம் சுமந்து கைங்கர்யம் செய்து வந்தார். 

• இவ்வாறிருக்க திருவரங்கத்திலிருந்து ஒரு அடியார் திருவேங்கடம் வந்தடைந்து பிரதிவாதி பயங்கரம் அண்ணாவைச் சந்தித்து, இவர் அப்பனுக்கு தீர்த்தம் எழுந்தருளப்பண்ணும் வேளையிலே திருவரங்கத்தில் நடக்கும் விசேஷங்களைக் கேட்க , மணவாள மாமுனிகள் எழுந்தருளியிருந்து காலக்ஷேபம் சாதிக்கும் வைபவத்தை விரிவாகக் கூறுகிறார். 

• மணவாள மாமுனிகளின் வைபவத்தைக் கேட்டு மெய்மறந்து தீர்த்தம் கொண்டு வரும் வேளையிலே காலதாமதம் ஆக தீர்த்தப் பரிமளம் சேர்ப்பதற்கு முன்னராகவே தீர்த்தம் சமர்ப்பிக்கப்பட்டு விடுகிறது. 

• பரிமளமின்றி தீர்த்தம் கொண்டு செல்லப்பட்டதை உணர்ந்து பரிமளங்களை எடுத்துக் கொண்டு சந்நிதிக்கு விரைந்த வேளையிலே அப்பன் தானும் என்றைக்கும் இல்லாது இன்று தீர்த்தம் நன்றாகவே மணந்தது என்று திருவாய்மலர்ந்தருள, இதனால் பெரிய ஜீயர் வைபவத்தை உணர்ந்த அண்ணா தானும் அப்பனிடம் விடைபெற்றுக்கொண்டு பெரிய ஜீயரை அடைய பெரிய கோயில் சென்றார். 

• பெரிய ஜீயர் மடத்தில் பிரதிவாதி பயங்கரம் அண்ணா நுழையும் வேளையிலே, பெரிய ஜீயர் திருவாய்மொழியில் “ஒன்றும் தேவும்” பதிக்கத்திற்குக் காலக்ஷேபம் அருளிக் கொண்டிருக்க , பெரிய ஜீயர் அனைத்து சாஸ்த்ரார்த்தங்களைக் கொண்டு விளக்குவதைக் கண்டு அண்ணா ப்ரமிக்கலானார் . 

• இதனைத் தொடர்ந்து 3 வது பாசுரத்தின் அர்த்தம் பெற வேண்டுமானால் அதற்கு ஓராண் வழி ஆசார்ய சம்பந்தம் மூலமாக ஆழ்வார் சம்பந்தம் வேண்டும் என்று காலக்ஷேபத்தை நிறுத்தி விடுகிறார் மணவாள மாமுனிகள். இதனைத் தொடர்ந்து அண்ணா பெரிய பெருமாளை மங்களாசாஸனம் செய்யச் சென்ற வேளையிலே அர்ச்சக முகமாய் பெரிய பெருமாள் அண்ணாவை மணவாள மாமுனிகளை ஆச்ரயிக்கும் படி நியமிக்க அவ்வாறே பொன்னடிக்கால் ஜீயர் புருஷகாரத்தோடே ஆச்ரயித்து மணவாள மாமுனிகளோடே சில காலம் திருவரங்கம் திருப்பதியில் அண்ணா எழுந்தருளியிருந்தார்.
+91 99629 83634 left

No comments:

Post a Comment