Thursday, April 15, 2021

மண்டைக்குள் குரல் - சுஜாதா

 மண்டைக்குள் குரல் - சுஜாதா

(கற்றதும் பெற்றதும்) - Shared by Aravinda Kumar

ஆனந்த விகடன் பத்திரிகையில் 1992-ல் 'ஆ' என்று ஒரு தொடர்கதை  எழுதினேன். அதில் ஒருவனுக்கு மண்டைக்குள் குரல்கள் கேட்கின்றன. ஆடிட்டரி ஹாலுஸினேஷன்'(Auditory hallucination) என்கிற உபாதை அவனுக்கு. இது பற்றி ஒரு சைக்கியாட்ரி புத்தகத்தில் படித்ததிலிருந்து என் மண்டைக்குள் அந்தக் கதைக் கரு உறுத்திக்கொண்டே இருந்தது. ஆராய்ச்சி பண்ணி புத்தகங்கள் படித்து எழுத ஆரம்பித்தேன். கதை சொல்லும் பாணியில் ஒருவிதமான மனக் கலக்கம் கொண்ட ஐ.ஐ.டி. படித்த புத்த கணிப்பொறி இன்ஜினீயரின் மன அலைச்சல்களை பிரதிபலிக்கும் வகையில் நடையை அமைத்திருந்தேன். உதாரணமாக :

"வாழ்க்கையில் சில விஷயங்கள் ஓசைப்படாமல் அறிமுகமாகின்றன. சில திருப்பங்கள் அறிவிப்பில்லாமல் நுழைகின்றன. சில மாறுதல்கள்  அனுமதியில்லாமல் தம்மை நுழைத்துக் கொண்டுவிடுகின்றன. சில ரத்தங்கள் சத்தமில்லாமல் சிந்துகின்றன. பருவங்கள் மாறுவது பே உருவங்கள் மாறுகின்றன. நம்பிக்கைகள் நாளைய குர்யோதயத்துடன்  விழுந்துவிடுகின்றன. பக்தி நாஸ்திகமாகிறது தன்னம்பிக்கை பயமாகின்றன.'

இவ்வாறான ஒரு மாதிரியான சிதறிய நடையில் கதாநாயகன் மனச் சித்திரங்களை விவரிக்கிறான். அந்தத் தொடர்கதைய ஒவ்வொரு அத்தியாயமும் 'ஆ' என்ற ஓர் ஒற்றை எழுத்தில் முடிக்க யோசனையை ஆசிரியர் பாலசுப்ரமணியன் கூறியபோது, அது என் எழுத்துத் திறமைக்கு ஒரு சவாலாக இருந்ததால் ஏற்றுக் கொண்டேன்.  கதை என்னை எழுதிக் கொண்டு போனது. சென்னையிலு டெல்லியிலும் திருச்சியிலும் அலைந்தது. முற்பிறவியும் இப்பிறவயும்  இடம் மாறின. மனைவி காதலியானாள். துரோகங்கள் மறுபிறவிக்கு தொடர்ந்தன.

இந்த கதை வெளிவந்து கொண்டிருந்த போது பெங்களூரில் வாசம் செய்து வந்தேன். ஒரு நாள் இரவு ஓர் இளைஞன் என்ன வந்திருந்தான். இரவு பதினொன்றிருக்கும். நெல்லையில் பஸ் பிடித்து நேராக வீட்டை விசாரித்து வந்திருக்கிறான் (இம்மாதிரி ஆட்களுக்கு எல்லாம் விலாசம் கண்டுபிடிப்பதில் சிரமமே இருப்பதில்லை). 

அவன் சொன்ன கதை என்னை திகைக்க வைத்தது.   பிரமிப்பாக இருந்தது 

தான்தான். 'ஆ' கதையின் நாயகன் என்றும் என் மகளை மணம் முடிப்பதற்காக தான் வந்திருப்பதாகவும் சொன்னான் மண்டைக்குள்  அதே குரல்கள் அவனுக்கும் கேட்பதாகச் சொன்னான் பணிந்துதான் வந்திருப்பதாகவும் சொன்னான்.

எனக்கு மகள் இல்லை என்று அந்த ராத்திரி வேளையில் சொல்லிப்  பார்த்தும் அவன் என்னைக் கவனிக்கவே இல்லை. 'உங்களுக்குப்  பணிவிடையாவது செய்கிறேன். வேலை கொடுங்கள்' என்றான். 

'ஆ' கதாநாயகனின் மனக்குரல் அவனைக் கொலை தூண்டும். The author makes his readers just as he makes his characters  என்று  Henry James  சொன்னது சட்டென்று நினைவுக்கு வந்தது. 'இது  என்னடா வம்பாகப் போச்சு! அவனை எங்கே அனுப்புவது சமாளிப்பது? என்று யோசித்த வேளையில் என் மனைவி அவனுடன்  தெளிவாகப் பேசி எந்த ஊர், அப்பா அம்மா யாரு என்பதெல்லாம்  விசாரித்தாள் (அவளுக்கு என் எழுத்தால் வரும் விளைவுகள் பழகிவிட்டன). 

அவனை என்ன செய்வது என்று தெரியவில்லை. அவனது எளிய பையில் மெடிக்கல் ரெக்கார்டுகள் இருந்தன. காசில்லை. அவன் ஒரு 'ஸ்கிட்ஸோ' என்று தெரிந்து கொண்டேன்.  கண்டமேனிக்கு அவனுக்கு இஸிடி ஷாக்  கொடுத்திருப்பதும் தெரிந்தது.

எப்படியோ சமாதானம் சொல்லி அவன் தந்தைக்கு தெரிவித்து ('ஐயோ... அங்க வந்துட்டானுங்களா..?') திரும்பிப் போக பஸ் கட்டணம் கொடுத்து அவனை வீட்டுக்கு அனுப்புவதற்குள்  பெரும்பாடாகி விட்டது. .

அடுத்த முறை நான் திருநெல்வேலி சென்றிருந்த போது அந்தத் தந்தை என்னை  வந்து சந்தித்து, பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். 'பையனுக்கு எப்படி இருக்கிறது? என்று கேட்டதில் 'பரவாயில்லை ' என்றார்.

எழுத்து என்பது எந்த மனதை எப்படிப் பாதிக்கிறது என்பது எழுதும் போது தெரிவதில்லை. என் அனுபவத்தில் பெரிய பத்திரிகைகளில்  ஓரளவுக்கு நம்பும்படியாக எழுதினால் விதிவிலக்கில்லாமல் அது  வாசகர்களிடம் சில எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தியே தீரும்.  உதாரணமாக 'ஆ'  தொடர்கதையில் குறிப்பிட்டிருந்த தோரஸின் மருந்து எங்கு கிடைக்கும்....அதை சாப்பிட்டதில் உங்கள் மண்டைக்குால்கள் நின்றுவிட்டதா என்று ஒருவர்  கேட்டிருந்தார். இந்த மருந்துகளை யாரும் டாக்டர் சம்மதமின்றி  உட்கொள்ளக்கூடாது என்று கதையின் இடையில் ஒரு எச்சரிக்கை  விடவேண்டியிருந்தது.

கணேஷ் வசந்த் உண்மையாகவே இருக்கிறார்கள் என்று பலர் நம்புகிறார்கள், 'வசந்தை ஏன் கூட்டி வரவில்லை' என்று  பொதுக்கூட்டத்தில் கேட்கிறார்கள் 

கணேஷ் - வசந்தின் 'எதையும் ஒருமுறை' கதையை தொலைக்காட்சித் தொடராகத் தருகிறார்  சுஹாசினி.  அண்மையில் அவரை ஒரு ரசிகர் நெருங்கி 'நிருபமா.... உங்களுக்கு வசந்த் ரொம்ப தொந்தரவு கொடுக்கிறானா....?' என்று  கேட்டதாகச் சொன்னார். 

இதையெல்லாம் என் எழுத்தின் வெற்றியாகக் கொள்வதைவிட எழுத்தின் பொறுப்பாகத்தான் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன் இந்த மாதிரியான அனுபவங்கள் மற்ற எழுத்தாளர்களுக்கும் ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை. அவர்கள் எப்படிச் சமாளிக்கிறார்களோ... நான் கடைப்பிடிக்கும் கொள்கை இது:  வாசகர்கள் என் எழுத்தைத்தான்  ரசிக்கிறார்கள், திட்டுகிறார்கள், விமர்சிக்கிறார்கள். என்னை அல்ல.  . என்னை அவர்களுக்குத் தெரியாது பாராட்டும் திட்டும் யாருக்கோ நிகழ்வதாகக் கொள்ள வேண்டும். இல்லையெனில், சொந்த வாழ்க்கையைப் பாதித்துவிடும்

எழுத்தாளனிடம் வாழ்க்கையின் பிரச்னைகளுக்கு விடைகள் இல்லை.  அவன் தொழில் சுற்றிலும் நடப்பதைத் தேர்ந்தெடுக்க பார்வையாளனின் நோக்கில் உன்னிப்பாகப் பார்த்து சம்பவங்களை  தொகுத்து யோக்கியமாக, பாசாங்கு இல்லாமல் சொல்வது. முடிவை  வாசகனுக்கே விடுவது.

வாசகர் கடிங்களுக்கும் நான் சாதாரணமாக பதில் எழுதுவதில் 'ஏறக்குறைய சொர்க்கம்' எழுதும்போது ஒரு வாசகர் தன் மனைவி 6ே சந்தேகப்பட்டு பக்கம் பக்கமாக ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  'நாளைக்குள் எனக்குப் பதில் வரவில்லையென்றால் தற்கொலை பண்ணிக் கொள்வேன்' என்றது கடிதம்.

என் மனைவி அதைப் படித்துவிட்டு, 'இவருக்கு ஒரு பதில் எழுதிவிடுங்களேன் என்றாள். நான் எழுத மறுத்துவிட்டேன். அதற்கு இரண்டு காரணங்கள் சொன்னேன். தற்கொலை செய்து கொள்பவன் இந்த மாதிரி அறிவித்து விட்டு செய்து கொள்ள மாட்டான். அது சடுதியில் தாக்கும் ஒரு உடனடி வியாதி. மேலும் அந்த மனைவியின் கதை நமக்குத் தெரியாது. அவளைக் கேட்டால் கதை வேறாக இருக்கும்.

உண்மையான வாசகர்கள் கடிதம் எழுதுபவர்கள் இல்லை அவர்களை நான் அணுகவேண்டும் என்பது என் எழுத்து வாழ்வில் கற்ற மற்றொரு பாடம்.

அண்மையில் ஒரு கல்யாணத்தின் போது ஒரு பெண்மணி என்னை அணுகி தனியாகப் பேசவேண்டும் என்றார்.

"என்ன?" என்றேன் தயக்கத்துடன்.

உங்க 'ஆ' கதையைப் படிச்சேன்."

'அப்படியா.. சந்தோஷம்"

"அதுல வர மாதிரி எனக்கும் மண்டைக்குள்ள குரல்லாம் கேக்கறது"

இஸிட்? டாக்டரைப் பார்த்தீங்களா?"

"தேவையில்லை. உங்க தினேஷ் குமாருக்கு அந்தக் குரல் தற்கொலை செய்யச் சொல்றது. எனக்கு என்ன கேக்கறது தெரியுமோ?"

"என்ன..?" என்றேன் நடுக்கத்துடன்

"பெருமாள் பேரா கேக்கறது".

முகத்தில் படிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு டைனிங் ஹாலுக்குச் சென்றேன்.

No comments:

Post a Comment