Thursday, April 15, 2021

லாக்கரில் வங்கிக்கு பொறுப்பில்லை

 லாக்கரில் வங்கிக்கு பொறுப்பில்லை!                                                                                   வங்கி லாக்கர்கள் குறித்து கூறும், வங்கி முன்னாள் அதிகாரி எஸ்.கோபாலகிருஷ்ணன்: வங்கி லாக்கர்களை உடைத்து, அதில் உள்ள பணம், நகைகள், ஆவணங்களை கொள்ளை அடித்தால், அதற்கு வங்கி பொறுப்பேற்க முடியாது. இது, மக்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய அம்சமாக இருந்தாலும், இது தான் உலகம் முழுதும் பின்பற்றப்படும் நிலைப்பாடு. வங்கி லாக்கர்களில் என்னென்ன பொருட்கள் வைக்கப்படுகின்றன என்பது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே தெரியும்.

வங்கிக்கு தெரிவிக்க வேண்டிய தேவைஇல்லை என்பதும் விதிமுறை. வங்கியும், லாக்கரில் என்ன வைத்துள்ளீர்கள் என, வாடிக்கையாளர்களை கேட்க முடியாது. வங்கி லாக்கர்களின் சிறப்பம்சமே, பாதுகாப்பு மட்டுமல்ல; ரகசியம் காக்கப்படுவதும் தான். எனவே, லாக்கரில் இருக்கும் பொருள் என்னவென்று தெரியாத நிலையில், அவை திருட்டு போனால், அதற்கு வங்கி நிர்வாகம் பொறுப்பேற்க முடியாது என்பது ரிசர்வ் வங்கியின் விதிமுறையும் கூட.மேலும், வங்கி லாக்கரை, வாடிக்கையாளர் மட்டுமே திறக்க முடியும். அதற்கு இரண்டு சாவிகள் இருக்கும். ஒரு சாவி வாடிக்கையாளரிடமும், இன்னொரு சாவி, வங்கி நிர்வாகத்திடமும் இருக்கும். வங்கி அதிகாரி திறந்து கொடுத்த பின், இன்னொரு சாவியை போட்டு, லாக்கரை வாடிக்கையாளரால் திறக்க முடியும். ஆனால், பூட்டுவதற்கு வங்கி அதிகாரியின் சாவி தேவைஇல்லை. அதனாலும், அதனுள் இருக்கும் பொருள் குறித்து, வங்கிகள் பொறுப்பேற்க முடியாது என்கிறது ரிசர்வ் வங்கி.அதே நேரத்தில், வங்கிக்குள் புகுந்து, கொள்ளையர்கள் லாக்கரை உடைத்து அதனுள் இருக்கும் பொருட்களை திருடிச் சென்றால், அதற்கு வங்கி நிர்வாகம் பொறுப்பேற்காது என கூறுவதை, ரிசர்வ் வங்கி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது வாடிக்கையாளரின் கோரிக்கையாக உள்ளது.

வங்கிகளின், 'ஸ்ட்ராங் ரூம்' எப்படி இருக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி வழிமுறை வகுத்துள்ளது. அதை மீறி, கொள்ளையர்கள் புகுந்தால், அது வங்கி பாதுகாப்பு ஏற்பாடுகள் மீதான குறைபாடாகத் தானே இருக்க முடியும்... எனவே, வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், நியாயமான அணுகுமுறை அவசியம் என்ற குரல் வலுக்கிறது. அதே நேரம், வங்கியிடம் உள்ள பணத்திற்கு, காப்பீடு செய்யப்படுகிறது; லாக்கரில் உள்ள பொருட்களுக்கு காப்பீடு செய்யப்படுவதில்லை.

காரணம், வங்கி வசம் உள்ள பணத்திற்கு கணக்கு உள்ளது. ஆனால், லாக்கரில் உள்ள பொருட்களுக்கு, வங்கியிடம் கணக்கு இருப்பதில்லை.எனவே, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, வங்கிகள் தங்கள் கட்டட பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும். ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளும் மாற்றப்பட வேண்டும். இவையே அனைவரின் எதிர்பார்ப்பு..! 💵 💷

No comments:

Post a Comment