Thursday, April 1, 2021

மதுசூதன பெருமாள் கோவில் பறக்கை

 #ஆலயதரிசனம்...

மதுசூதனபெருமாள்கோவில்  பறக்கை..

விஸ்வப்ராமணர்கள் அனைவருக்கும் இனிய வணக்கத்துடன் ப்ரம்மஸ்ரீ மகேஷ் ஆச்சாரியா.

பறக்கை என்ற ஊர் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் , இராஜக்கமங்கலம் பேருராட்சி அடங்கியது. இது நாகர்கோவிலில் இருந்து மணக்குடி செல்லும் சாலையில் 7கிலோமீட்டர் தொலைவில் இடதுபுறம் அமைந்துள்ளது.

இவ்வூரின் மூன்று பக்கங்களிலும் பரந்து கிடக்கின்ற நீர்நிலைகளும் , வயல்களும் இவ்வூருக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியதன் விளைவே இது சதுர்வேதி மங்கலம் கிராமமாக ஆகியிருக்கிறது…

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள குகநாதீஸ்வரர் கோவில் கல்வெட்டு முதலாம் ராஜராஜனின் (995-1014) மணக்குடி ஊரில் இருந்து உப்பை சுசீந்திரம் கோவிலுக்கு நீர் வழியாக கொண்டு செல்லப்பட்டிருக்கிறது என்பதை 11 ம் நூற்றாண்டு கல்வெட்டு கூறும்.

சுசீந்திரம் ஊருக்கும் பறக்கைக்கும் நீர்வழித்தொடர்பும் , போக்குவரத்தும் இருந்ததை மன்னர் மார்த்தாண்டவர்மா (1729-1758) கால சுசீந்திரம் ஊர் வரைபடம் உணர்த்தும்..

பறக்கை ஊரின் பழமை 1200 ஆண்டுகள் வரை செல்கிறது. இவ்வூர் முற்காலத்தில் பாண்டியர் , பிற்காலச்சோழர் , வேணாடு அரசர்கள் , திருவிதாங்கூர் சமஸ்தான அரசர்கள் ஆகியோர் ஆட்சியின் கீழ் அடங்கியிருந்திருக்கிறது..

பறக்கை கோவிலின் சிற்பங்களை வடித்த ” கோட்டாறு கொம்மண்டை நயினான் முதலி” என்ற சிற்பிக்கு இந்த ஊர் பெருமக்கள் நிலம் விட்டுகொடுத்தனர் என்றும் ஊர் கூட்டம் போட்டு அச்சிற்பியின் கோவில் உரிமையை பறை சாற்றியதும் ஆகிய செய்திகளை 1544 ம் ஆண்டு கல்வெட்டு கூறுகிறது..

ஊர்பெயர் குறித்த பொதுவான கருத்தாக்கத்தின் படி மூன்று நிலைகளில் மாற்றமடையும் தன்மை ஆகிறது..

1) ஊர் வாய்மொழிக்கதைகள்

2) தலபுராணச்செய்திகள் தொடர்பாக இருத்தல்

3) ஆட்சியாளர்களின் செல்வாக்கால் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு நிரந்தரமாக வழங்கப்படுதல்

இதை பறக்கை ஊருக்கும் பொருந்திகாட்டமுடியும்..

வாய் மொழி வழக்காறுகளிலும் , சுசீந்திரம் கன்னியாகுமரி தலபுராணச்செய்திகளிலும் பட்சிராஜபுரம், வேதவனம் , வில்வவனம் என்றும் கல்வெட்டுக்களில் ப்ரம்மதேய கிழார் மங்கலம் , கிழார்மங்கலம் அபிதானமேரு சதுர்வேதி மங்கலம் என்றும் அரசு அங்கிகாரம் பெற்ற ஆவணங்களில் பறக்கை என்றும் பெயர் பெற்றுள்ளது..

பட்சிராஜன் என்ற வடமொழிபெயர் கருடனை குறிப்பது . பட்ஷிராஜனை தமிழில் பறவைக்கு அரசன் என்று கூறலாம்.கன்னியாகுமரி மாவட்ட கல்வெட்டுக்களில் , கரியமாணிக்கபுரம் கோவில் கல்வெட்டு மட்டும் பறவைக்கு அரசு என்ற சொல்லை குறிக்கிறது. எனவே மிகப்பழைய பெயரான பட்ஷிராஜபுரம் , தமிழில் பறவைக்கரசன் என்று ஆகி பறவைக்கரசூர் என்று மாறி பறக்கை என ஆகியிருக்கலாம்..

பறவைக்கரசு என்ற பெயர்.

” இராஜநாராயண சதுர்வேதி மங்கலம்” என அழைக்கப்படும் கரியமாணிக்கபுரம் ( கோட்டாறு) விண்ணகர ஆழ்வாரின் கோவிலில் உள்ள கி.பி 1411 ம் ஆண்டு கல்வெட்டு பறவைக்கரசு என்ற பெயரை குறிப்பிடுகிறது.

பறக்கை மதுசூதனர் கோவில் கல்வெட்டுகளிலும் , ஓலை ஆவணங்களிலும் , வாய்மொழி மரபிலும் கோவில் எழுத்து சான்றுகளிலும் மதுசூதனப்பெருமாள் கோவில் என்று வழங்கப்பெறுகிறது..

மது என்ற அரக்கனை விஷ்ணு வதம் செய்ததால் அவர் மதுசூதனன் என்ற பெயரும் பெற்றார் என்று பாகவதம் கூறுகிறது

எது எப்படி பெயர் பெற்றாலும் ஒரு கோவில் என்ற ஒன்று உருவானால் அங்கே விஸ்வப்ராமணர்கள் இல்லாமல் இல்லை..

ஆம்!!

நேரடியாக கேட்டறிந்த சில விஷயங்களில் இவ்வூர் உருவானதற்கு சில வாய்மொழி கதைகள் இன்றளவிலும் இங்கே பேசப்பட்டு வருகிறது.. இதே கதை தான் எனக்கு கிடைத்த புத்தகத்திலும் உள்ளது..

இதோ அந்த வாய்மொழி கதை ::-

காஞ்சிபுரம் எனும் ஊரில் வாழ்ந்த சிற்பி ஒருவன் கருடனின் உருவத்தை செய்து கொண்டிருந்தார். தத்ருபமாக அமைந்த அச்சிலையை பார்த்த பிறகு அதை உருவாக்க பணித்த அரசனிடம் தர விருப்பமில்லை. அந்த சிலை தர முடியாது என சொல்லவும் முடியாது . சிற்பி அதை தன்னிடம் வைத்து கொள்ள விரும்பினார். அதனால் அக்கருடன் சிலையின் சிறகில் உளியால் தட்டி குறைபடுத்தினான். குறைபாடுடைய சிற்பத்தை அரசன் விரும்பமாட்டான் என்பது அச்சிற்பியின் திண்ணம்.

ஆனால் சிற்பி நினைத்தது நடக்கவில்லை. குறைபாடுடைய கருடன் உருவம் வானில் பறந்தது. காஞ்சிபுரம் விட்டு தெற்கு நோக்கி வந்தது. மதுசூதனன் கோவில் கொண்டிருந்த ஊருக்கு வந்தது. பலநாள் களைப்பால் சோர்ந்து போன கருடன் ஒரு புன்னை மரத்தில் அமர்ந்தது. தண்ணீர் அருந்த வேண்டும் என ஆவலாய் பார்த்தது . அருகே ஒரு குளம் இருந்தது. “கண்டேன் குளம்” எனக் கூவியது .

மதுசூதனன் கோவில் கொண்ட இடத்தை அடையாளம் கண்டு அங்கே அமர்ந்து கருடன் வணங்கியது. பறவைக்கு அரசன் குடியேறிய இடம் பறக்கை ஆனது .

இப்படி ஒரு கதை பறக்கையில் வழங்குகிறது..

இது எனது நேரடி களஆய்வில் கிடைக்கப்பெற்ற தகவலும் கூட. இது வாய்மொழி கதையாக இருப்பினும் 1200 வருடங்களாக இன்றளவிலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு தகவலும் கூட..

ஆனால் சிவஞானமுனிவராலும் , கச்சியப்ப சிவாச்சாரியாராலும் இயற்றப்பட்ட காஞ்சிபுரம் தலபுராணச்செய்திகளிலும் , பறக்கை தொடர்பான தலபுரானநூல்களிலும் இக்கதை இல்லை. கல்வெட்டுகளிலும் பறக்கை தொடர்பான வேறு கதைகளும் பாடல்களிலும் இல்லை.. பறக்கை மதுசூதன பெருமாள் கோயில் தலபுராணச்செய்திகளிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சிலை என்பது பேசும் தன்மை கொண்டது. அதனால தான் தமது உள் உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமாக கோவில்களை அமைத்தனர்..

1200 ஆண்டுகாலமாக பழமையுடன் போற்றிபுகழப்டும் இக்கோவிலில் இன்றளவிலும் கருடனுக்கு தனிச்சன்னதியும் , இங்கே நடைபெறும் பங்குனி மாத தேரோட்ட திருவிழாவின் ஐந்தாவது நாள் திருவிழாவில் “கருடனுக்கு கண் திறக்கும்” வைபவம் கோவில் கொடிமரத்திற்கு அருகில் வைத்து நமது விஸ்வப்ராமணர்கள் தான் கண்திறப்பார்கள் .பின்பு மதுசூதன பெருமாள் உற்சவர் சிலை இந்த கருடர் மீது ஏற்றி வைத்து கட்டப்பட்டு பிறகு சுவாமி புறப்பாடுநடைபெறும். பிறகு கோவிலின் பின்புற மதில் சுவரில் “கருடர்முக்கு” என்னும் சிற்பத்தின் கீழ் பகுதியில் வந்த பிறகு அக்கருடனையும் , மதுசூதனபெருமாளையும் வணங்கி அவ்விடத்தில் தேங்காய் உடைப்பார்கள்.. இது இன்றளவிலும் நடந்து கொண்டிருக்கும் திருவிழாவும் கூட……

கல்வெட்டுகள் கூறும் இம்மன்னர்கள் அனைவரும் ஒருகாலத்தில் இம்மண்னை ஆண்டவர்கள் ::-

1) பாண்டியன் சடையன் கி.பி 10 நூற்றாண்டு

2) ஸ்ரீவல்லபன் கி.பி 12 ம் நூற்றாண்டு

3) வீர ரவிவர்மா கி.பி 14 ம் நூற்றாண்டு

4) வீரகேரள வர்மன் கி.பி 16 ம் நூற்றாண்டு

5) பூதலவீர ராமவர்மா கிபி 15 ம் நூற்றாண்டு..

இன்னும் சொல்லப்போனால் நாகர்கோவில் வடசேரி கிராமத்தில் அமைந்திருக்கும் சோழராஜா திருக்கோவில் சோழ மன்னனின் மாபெரும் தரைப்படை இருந்த இடம் . அதன் பெயராலேயே இந்த சிவாலயத்துக்கு சோழராஜா திருக்கோவில் என்ற பெயர் அமைந்தது. மேலும் இவ்வூர் கேரள சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த போது வடசேரி , கிருஷ்ணன் கோவில் பகுதியை ஆதித்யவர்ம சதுர்வேதி மங்கலம் என்ற பெயராலேயே அழைக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் ஊரை பற்றிய தகவலுகளும், கோவிலை பற்றிய தகவல்களும் நிறைய உள்ளன. கோவில் குளத்தின் அக்கரையில்( ஊருக்கு ஒதுக்குபுரமான இடத்தில்) வலிகொலிஅம்மன் என்னும் ஒரு அம்மன் கோவிலும் , ஒரு பழைய கால சிவன் கோவிலும் உள்ளது..

வலிகொலிஅம்மன் என்னும் கோவிலின் கதை இன்னும் சுவாரஸ்யமானது . அதனை அடுத்த பதிவினில் காணலாம்..

இந்த தகவல்கள் அனைத்தும் ” பறக்கை மதுசூதன பெருமாள் ” எனும் புத்தகத்தின் வாயிலாக கிடைக்கப்பெற்றது. 

இப்புத்தகத்தை எழுதியவர் முனைவர் அ.கா பெருமாள் அவர்கள்..

அமைவிடம்...

பறக்கை என்ற ஊர் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் , இராஜக்கமங்கலம் பேருராட்சி அடங்கியது. இது நாகர்கோவிலில் இருந்து மணக்குடி செல்லும் சாலையில் 7கிலோமீட்டர் தொலைவில் இடதுபுறம் அமைந்துள்ளது...



No comments:

Post a Comment