கங்கா ஸ்நானம் ஆச்சா ?
1970
“அப்பா.. தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு.. எனக்கு இன்னும் புது டிரஸ் வாங்கித் தரவேயில்லையே..”
“கொஞ்சம் பொறுமையா இருடா ராமா.. முதலாளி செட்டியார் கிட்ட சம்பள அட்வான்ஸ் நுாத்தம்பது ரூபா கேட்டிருக்கேன்.. நாளைக்கு கிடைச்சுடும்னு நினைக்கறேன்.. வாங்கித் தரேன்..”
“போப்பா… பத்து நாளா நீயும் இதையே தான் சொல்லிண்டிருக்கே. புதுத் துணி வாங்கி தைக்க குடுக்கணும்.. நம்ம ராவ் டெய்லர் வேற ரொம்ப லேட் பண்ணுவான்.. “
“பார்க்கலாம்டா.. அப்படி இல்லேன்னா ரெடிமேட் இருக்கவே இருக்கு..”
“ஆமா… கடைசியில ஸ்கூல் யூனிஃபாரம் டிரஸ்ஸை வாங்கிக் குடுத்துடுவே.. தீபாவளிக்கு அடுத்த நாள் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் கலர் கலரா போட்டுண்டு வருவா.. நான் மட்டும் காக்கி டிராயர் வெள்ளை சட்டையில போகணுமா.. போன வருஷம் கூட நீ அப்படி தான் பண்ணே…”
“கையில சல்லிக் காசு இல்லடா.. ஆபீஸ்ல பணம் கிடைச்சவுடனே ஒனக்கு மட்டும் தான் புதுசு வாங்கப் போறேன்.. எனக்கும் அம்மாக்கும் கூட எடுக்கப் போறதில்லை..”
“நாளைக்கும் உன் முதலாளி ரூபா கொடுக்கலேன்னா என்ன பண்றதுப்பா…”
“வழக்கம் போல நம்ம ஹவுஸ் ஓனர் மாமிகிட்ட அம்பதோ நுாறோ கைமாத்தா கேட்கறேன்.. அவா இல்லேன்னு சொல்ல மாட்டா..”
“அப்பறம்.. பட்டாசு வேற வாங்கணும்…”
“அம்மா ஏற்கெனவே கத்திண்டிருக்கா.. அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.. காசை கரியாக்காதீங்கோன்னு…”
2020
“அப்பா.. உன் மொபைல்ல ஒரு OTP வந்திருக்கும்.. சட்டுன்னு சொல்லு…”
“ஏன் காயத்ரி இப்டி பண்றே.. ஒனக்கு எத்தனை தடவை சொல்றது.. என் கிரெடிட் கார்டை யூஸ் பண்ணி ஆன்லைன்ல கண்ட கண்டதையும் வாங்காதேன்னு சொல்லியிருக்கேனா இல்லியா…”
“அய்யோ அப்பா… நான் தீபாவளிக்கு டிரஸ் ஆர்டர் பண்ணியிருக்கேன்.. சீக்கிரம் அந்த நம்பரை சொல்லு…”
“போன வாரம் தானே ஒரு அனார்கலி செட் வாங்கினே…”
“எப்பவும் எனக்கு ரெண்டு டிரஸ் எடுக்கறது வழக்கம் தானேப்பா.. அதான்.. இப்ப ஜீன்ஸும் டாப்ஸும் ஆர்டர் பண்ணியிருக்கேன்… ப்ளீஸ் ஓடிபியை சொல்லேன்…”
“அந்த சுடிதாரே ரொம்ப காஸ்ட்லி.. நாலாயிரம் ரூபா ஆச்சு.. இப்ப இன்னொண்ணு எதுக்கு.. ”
“அமேஸான்ல 50% ஆஃபர் இருக்குப்பா.. நான் அதைப் பார்த்துட்டு சீப்பா இருக்கேன்னு தான் வாங்கறேன்.. “
“அது சரி.. என் கிட்ட ஒரு வார்த்தை கேக்கணுமா வேண்டாமா.. நீயா என்ன பெருதனம்..”
“அம்மாகிட்ட கேட்டேன்.. ஓக்கே சொல்லிட்டா… “
“பொய்..பொய்.. ராம்.. அவ என்கிட்ட கேட்கவேயில்லை.. இதுல என்னை இழுக்காதீங்கோ… நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு…”
1970
“ஏன்னா.. இந்த தீபாவளிக்கு ரெண்டு சிவாஜி படம் ரிலீஸாயிருக்கு.. ‘எங்கிருந்தோ வந்தாள்’ ‘சொர்க்கம்’.. “
“அதுக்கு என்னை என்னடி பண்ண சொல்றே…”
“உங்களுக்கு தான் சிவாஜின்னா ரொம்ப பிடிக்குமே.. நாம்பளும் படத்துக்கு போய் ரொம்ப நாளாறது..”
“நன்னா சினிமா பைத்தியம் பிடிச்சு அலையறேடி… ரேஷன்ல அரிசி வாங்கறதுக்கே காசில்லை.. என்ன பண்றது யார்கிட்ட கடன் கேட்கலாம்னு யோசிச்சிண்டிருக்கேன்.. “
“ஒரு வாட்டியாவது பால்கணியில உக்காந்து படம் பார்க்கணும்னு எனக்கு ஆசைன்னா…”
“சரிதான்.. பால்கணி டிக்கெட் எவ்ளோ தெரியுமோ.. ரெண்டு ரூபா தொண்ணுாறு பைசா.. நம்ம மூணு பேருக்கு என்னாச்சு கணக்கு போட்டு பாரு.. அப்பறம்.. இங்கேயிருந்து கிரெளன் டாக்கீஸுக்கு நடக்க முடியாதுன்னுவே.. ரிக்ஷாக்கு வேற அழணும்.. “
“சரி விடுங்கோ.. எப்போ வசதிப் படறதோ அப்ப பார்த்துக்கலாம்.. ராமனுக்கு ஸ்கூல் புஸ்தகங்கள் எல்லாம் எடுத்துண்டு போறதுக்கு ஒரு அலுமினிய பொட்டியாவது வாங்கி குடுங்கோ.. கிழிஞ்ச ஜோல்னா பையை மாட்டிண்டு போறது அது.. பாவம்…”
2020
“காயத்ரி.. இப்ப எதுக்கு அமேஸான் ப்ரைம்க்கு பணம் கட்டியிருக்கே.. “
“அதான் சொன்னேனேப்பா.. ‘சூரரைப் போற்று’ ஓடிடியில தான் பார்க்க முடியும்.. தீபாவளி ரிலீஸ்.. சூர்யா படம்.. வேற லெவல்ல இருக்கும்..”
“இந்த ஒரு படத்துக்காக 129 ரூபா தண்டம் தானே..”
“இது மட்டுமில்லப்பா.. ஒரு மாசத்துக்கு நாம எத்தனை சினிமா… எத்தனை தடவை வேணும்னாலும் அதுல பார்த்துக்கலாம்.. “
“எல்லா செலவுக்கும் அழகா ஒரு வியாக்யானம் சொல்லிடுவே..”
“அப்பா.. நீ கொரோனாவுக்குதான் தேங்க்ஸ் சொல்லணும்…”
“என்னடி சொல்றே…”
“இப்ப லாக்டவுன்னால இந்தப் படம் அமேஸான் ப்ரைம்ல ரிலீஸ் ஆயிருக்கு.. இல்லேன்னா நான் சத்யம் தியேட்டருக்கு தான் போயிருப்பேன்.. சினிமா டிக்கெட்.. அப்பறம் இன்டர்வெல்ல பாப்கார்ன், ஐஸ்க்ரீம்.. போயிட்டு வர்றதுக்கு ஊபர் டாக்ஸி சார்ஜ்.. எல்லாம் சேர்த்து அறுநுாறு ரூபா ஆயிருக்கும்.. இப்ப நான் உனக்கு மிச்சம் பிடிச்சிருக்கேன்னு நெனைச்சுக்கோ…
“அட ராமா…”
“ஏம்ப்பா உம் பேரை நீயே கூப்ட்டுக்கறே…”
======================================
No comments:
Post a Comment