திருப்புளிங்குடி.
ஸ்ரீ மலர்மகள் நாச்சியார் {ஸ்ரீ பூமிப்பிராட்டி} ஸமேத ஸ்ரீ பூமிபாலகப் பெருமாள் {உற்சவர் - ஸ்ரீ காய்சின வேந்தர் (காசினி வேந்தர்)} திருக்கோவில், திருப்புளிங்குடி திவ்யதேசம், தூத்துக்குடி மாவட்டம்.
திருப்புளிங்குடி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தூத்துக்குடி மாவட்டத்தில் வரகுணமங்கையிலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்திலும், தாமிரபரணி தல புராணத்திலும் குறிக்கப்பெற்றுள்ளது. இத்தல இறைவன் காய்சின வேந்தர் (காசினி வேந்தர்), பூமிபாலர் என்ற பெயர்களில் பள்ளி கொண்ட நிலையில் கிழக்கு நோக்கிய கோலத்துடன் காணப்படுகிறார். இறைவியின் பெயர் மலர்மகள் நாச்சியார், பூமிப்பிராட்டி; தீர்த்தம் இந்திர தீர்த்தம், நிர்ருதி தீர்த்தம் ஆகியன. விமானம்: வேதசார விமானம் வகையைச் சேர்ந்தது.நவக்கிரகங்களில் வியாழனொடு சம்பந்தப்பட்ட தலம் இதுவாகும். இத்தலம் நம்மாழ்வாரால் மட்டும் 12 பாசுரங்களால் பாடல் பெற்றுள்ளது
இத்தலத்திலுள்ள இலக்குமி தேவி, பூமிப்பிராட்டி, நாச்சியார்களின் திருவுருவங்கள் வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு மிகமிகப் பெரியவைகள். வேறு கோயில்களில் காணவியலாத காட்சியாக பெருமாளின் திருவயிற்றிலிருந்து செல்லும் தாமரைக் கொடி, சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரையோடு சேர்ந்து கொள்வது போன்ற அரியகாட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. சயன திருக்கோலத்தில் உள்ள திருமாலின் ஒரு பாதத்தை கருவறையைச் சுற்றி வருகையில் வடக்குப்புற சுவற்றின் வெளிப்புறமுள்ள ஒரு சன்னலின் வழியாகச் சேவிப்பதற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ள இக்கட்டிட அமைப்பு பிற தலங்களில் அமையப் பெறாத ஒன்றாகும்.
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து வடகிழக்காக தாமிரபரணி ஆற்றின் வடகரை பகுதியில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு பிரகாரங்களுடன் மூலவர் பூமி பாலகப் பெருமாள் காட்சி தருகிறார். புஜங்க சயனம் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கிறார். உற்சவர் காய்சின வேந்தன். பூமிதேவி திருமகளுடன் காட்சி. தாயார் மலர்மகள் நாச்சியார். பூ மகள் நாச்சியார். தீர்த்தம் வருண தீர்த்தம். விமானம் வேதசார விமானம். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற ஸ்தலம்.
ஸ்ரீமந்நாராயணன் திருமகளோடு மட்டும் உற்சாகமாக உலா வருவதைக் கண்டு வெகு காலம் காத்திருந்து பொறுமை இழந்து பூமாதேவி கோபப்பட்டு பூமிக்குள் பாதாள லோகத்தில் சென்றுவிட்டாள். நிலைமையை உணர்ந்த திருமால், பூமாதேவியை தேடி பாதாள லோகம் சென்று சமாதானப்படுத்தி மேலே அழைத்து வந்தார். இதற்குப் பிறகு பூமாதேவியும் லக்ஷ்மியும் ஒன்றாக இந்த ஊரில் காட்சி அளித்ததாக ஐதீகம்.
வசிஷ்டரின் மகனான சக்தி முனிவரை யக்ஞசர்மா என்பவர் சரியான மரியாதை கொடுக்காமல் போனதால் சக்தி முனிவர் அவரை அரக்கனாக மாற சாபமிட்டார். பிறகு இந்தசாபவிமோசனம் நீங்க ஒரு வழியும் சொன்னார்.' இந்திரன் இந்த இடத்தில் ஒரு யாகம் செய்வதற்கு வருவான். அப்போது அதை நீ கெடுக்க முற்படுவாய். அப்போது திருமால் தன் கதையினால் உனக்கு சாப விமோசனம் தருவார்' என்றார் சக்தி முனிவர்.
சக்தி முனிவர் சொன்னபடியே இன்னொரு சமயம் இந்திரன் இங்கு யாகம் செய்ய முற்படும்போது அரக்கனாக மாறி இருந்த யக்ஞசர்மா அதை கெடுக்க முற்பட அப்போது அங்கு தோன்றிய திருமால் தன் கதையால் அரக்கனை அடிக்க யக்ஞசர்மா, அரக்க சாபத்திலிருந்து விடுதலை பெற்றார். இந்தக் கோயிலில் பெருமாளின் திருவடியில் இருந்து தாமரை கோடி தனியா கிளம்பிச் சென்று சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரை மலரோடு சேர்ந்து கொள்வது போன்ற அரிய காட்சியை இப்போதும் காணலாம்.
பரிகாரம்.
பெரியவர்கள் இட்ட சாபத்திலிருந்து விலகவும், கோபத்தினால் நல்லோரை விட்டு விலகி அவதிப்படுவது விலகவும், குடும்ப பிரச்சனை அதிக அளவுக்கு சென்று விடாமல் தடுக்கவும். உற்றார், உறவினர்கள் தொடர்ந்து அன்பு காட்டவும், குடும்பத்தில் சுப காரியங்கள் தொடர்ந்து நடந்து சந்தோஷத்தை உண்டு பண்ணவும் இந்த ஸ்தலத்திற்கு வந்து பிரார்த்தனை செய்தாலே போதும். அவர்களுடைய அனைத்து கஷ்டங்களும் வெகு சீக்கிரமே விலகிவிடும் என்பது கண்கூடு.
No comments:
Post a Comment