இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம் :
வழிவிடுமுருகன்கோவில்
பழமை – 500 வருடங்களுக்கு முன்
ஊர் – இராமநாதபுரம்
மாவட்டம் – இராமநாதபுரம்
மாநிலம் – தமிழ்நாடு
தற்போது கோவில் உள்ள இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன் அரசமரம் இருந்தது. மரத்தின் கீழ் ஒரு சிறிய வேல் நடப்பட்டு அதற்கு பூஜை செய்யப்பட்டு வந்தது. அருகிலேயே கோர்ட் இருந்ததால் விசாரணைக்காக வருபவர்கள், வழக்குகளில் வெற்றி பெற வேண்டும் என வேண்டிச் செல்வார்கள். சொத்து வழக்குகளில் சிக்கி, வாழ வழியற்று நிற்பவர்கள், கிரிமினல் வழக்குகளில் சிக்கிய நிரபராதிகள் எல்லாம் இந்த முருகனை வணங்கி வாழ வழிபெற்றனர். எனவே வழிவிடும் முருகன் என்ற பெயர் இவருக்கு ஏற்பட்டது. இவரை வந்து வழிபட்டு செல்லும் பக்தர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் வாழ்க்கை முழுவதும் துணை வருவதாகவும் நம்பிக்கை உள்ளது.
பொதுவாக கோவில்களில் நுழைந்தவுடன் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகனும் இருப்பார்கள். விநாயகரை முதலில் வணங்கி விட்டு கோவிலுக்குள் சென்று திரும்பி வரும் போது முருகனை வணங்குவது போன்ற அமைப்பு இருக்கும். ஆனால், இங்கே கர்ப்பகிரகத்தில் முருகனும் விநாயகரும் சேர்ந்து அருள்பாலிப்பது மிக மிக சிறப்பு. இத்தகைய படைப்பை மிக அரிதாகவே காண இயலும்.
கோவிலின் உள்ளே “சாயா” என அழைக்கப்படும் மரம் ஒன்று உள்ளது. சனிபகவானின் தாயார் பெயர் சாயா. இந்த மரத்தை சாயாதேவியின் அம்சமாக இப்பகுதி மக்கள் பூஜை செய்கிறார்கள். எனவே இத்தலத்திற்கு வந்து வழிபடுவோரை, தனது தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, சனி பகவான் துன்பங்களை குறைப்பதாக ஐதீகம். இந்த மரம் இலங்கையில் உள்ள கதிர்காமம் முருகன் கோவிலிலும் உள்ளது. இத்தலத்திற்கு அருகில் அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
#திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை
#வேண்டுகோள்:
சொத்துக்காக சண்டையிட்டு, கோர்ட் படியேறும் சகோதரர்கள் இங்குவந்து வழிபட்டால் சமாதானமாக போகவும், இருவரும் வாழவும் வழி பிறக்கிறது.
#நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் திருமுழுக்காட்டு செய்து, சந்தனக்காப்பு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அருள்மிகு வழிவிடும் முருகன் திருக்கோவில்,
இராமநாதபுரம்,
இராமநாதபுரம் மாவட்டம்.
No comments:
Post a Comment