ஸ்ரீரங்கத்திலே பெருமாளுக்கு அர்ச்சனை பண்ணும் பிள்ளைப் பெருமாள் ஐயங்காருக்கு இந்தப் பானை மோக்ஷமடைந்த சரித்திரம் நடையாடுகிறது.
அர்ச்சனைத் தட்டை கீழே வைத்து விட்டு, "ரங்கநாதா! எனக்கு மோக்ஷம் கொடேன்" என்று கேட்கிறார்!
அந்த ரங்கநாதனும் அவரோடு பேசுகிறான். "பிள்ளைப் பெருமாள் ஐயங்காரே.. உனக்கு என்ன இன்றைய தினம் மோக்ஷத்திலே அதிக ருசி.."?
"இன்றைக்கே போக வேண்டும் போலிருக்கிறதே சுவாமி" என்கிறார் அவர்.
"அப்படியானால், நீர் என்ன கர்மயோகம் பண்ணியிருக்கிறீரா"?
"தெரியாது"
"ஞானயோகம் பண்ணியிருக்கிறீரோ"?
"அறவே ஞான சூன்யம் நான்"
"பக்தி யோகம் பண்ணியிருக்கிறீரா"?
"அந்தப் பக்கமே போனதில்லை"
"சரணாகதி பண்ணியிருக்கிறீரா"?
"தெரியாதே"
"இதெல்லாம் எப்படியாவது போகட்டும். என் பக்தனுக்கு ஒரு நாளாவது அன்னமிட்டிருக்கிறீரா"?
"இல்லையே"
"என் பக்தன் தங்க இடம் கொடுத்திருக்கிறீரா"?
"இல்லை"
"எதற்கெடுத்தாலும் இல்லையே, இல்லையே என்கிறீரே"? என்று ரங்கநாதனுக்கு கோபம் வந்ததாம். படுத்துக் கொண்டிருந்த பெருமாள் எழுந்து உட்கார்ந்தார்.
அப்படி ரங்கநாதர் உட்கார்ந்த கோலத்தில் சேவித்தவர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் மட்டும்தான். நாமெல்லாம் சயனத் திருக்கோலம்தானே பார்த்திருக்கிறோம்!
"என்ன அக்கிரமம்! மோக்ஷத்தை நீர் இவ்வளவு சுலபமாக விரும்புகிறீரே! மோக்ஷம் என்றால் ஏதோ கிள்ளுக்கீரை என நினைத்தீரோ? எதையாவது கேட்டால் "இல்லையே, தெரியாது" என்கிறீர். எதற்காவது "ஆமாம், பண்ணியுள்ளேன்" என்று பதில் சொன்னால்தானே மோக்ஷம் தரலாம். ஒன்றுமே பண்ணாத உமக்கு மோக்ஷத்தை எப்படிக் கொடுப்பது?"
இதைக் கேட்ட பிள்ளைப் பெருமாள் ஐயங்காருக்குக் கோபம் வந்து விட்டது! இடுப்பில் வஸ்திரத்தை இழுத்துக் கட்டிக் கொண்டார். ரங்கநாதரிடம் அச்சமயம் அவர் கேட்ட கேள்வி இருக்கிறதே..?
அந்தக் கேள்வியைக் கேட்டு மீண்டும் படுத்த ரங்கநாதன் படுத்தவன்தான்! இன்று வரைக்கும் அவன் எழுந்திருக்கவேயில்லை!
ரங்கநாதரைப் பார்த்து அப்படி என்ன கேட்டார் என்று நினைக்கிறீர்கள்...?
"என்னைப் பார்த்து இதைப் பண்ணினியா, அதைப் பண்ணினியா? என்று கேட்கிறாயே.. அன்றைய தினம் ததிபாண்டன் வீட்டுப் பானைக்கு எப்படி மோக்ஷம் கொடுத்தாய்? அந்தப் பானை என்ன கர்மயோகம் பண்ணியதா, ஞான, பக்தி யோகம் பண்ணியதா? அதற்கு உன்னை வந்திக்க மனமுண்டா, இல்லை வணங்கத்தான் கைகள் உண்டா..? அந்த கடத்துக்கு மோக்ஷம் கொடுத்தாயே, அந்த விலை நான் பெற மாட்டேனா"? என்று கேட்டார்.
அந்தக் கேள்வி தான் ரங்கநாதனை அப்படி அசத்தியது!.........(நாளை ததி பாண்டன் வீட்டு பானைக்கு சொர்கம் கிடைத்த விவரம்)
No comments:
Post a Comment