ஶ்ரீ மணவாள மாமுனிகள் அவதார வைபவம்: 14
• இறுதியிலே சாற்றுமறைக்கான தினம் ஆனி திருமூலத்தன்று அமைகிறது. இதனைத் தொடர்ந்து நம்பெருமாள் அரங்கநாயகம் என்ற சிறு பிள்ளையின் வடிவில், மண்டபத்தில் உள்ளோர் தடுத்தும், பெரிய ஜீயர் திருமுன்பே வந்து தோன்றி “ஸ்ரீசைலேச தயாபாத்ரம் ” என்று சாதித்து மேலும் சாதிக்குமாறு கேட்க “தீபக்த்யாதி குணார்ணவம்” என்றும் மேலும் சாதிக்கப் பணிக்கும் பொழுது “யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முனிம் ” என்று முடித்து ஓடி சென்றுவிட்டார்.
• இந்த தனியன் ச்லோகத்தை ஓலைப்படுத்தி அச்சிறுவனை மீண்டும் வாசிக்கக் கூறுகையில், அச்சிறுவனால் அதைப் படிக்க இயலாமையைக் கண்டு அனைவரும் முன்னர் வந்த சிறுவன் நம்பெருமாளே அன்றி சாதாரண பாலகன் அல்லன் என்று உணர்ந்தனர்.
• நம்பெருமாள் இவ்வாறாக ஆசார்யனுக்குத் தனியன் சமர்பித்ததனைத் தொடர்ந்து அந்தத் தனியனை பட்டோலைப் படுத்தி பெரிய பெருமாள் திருமுன்பே சமர்ப்பிக்கையிலே, எம்பெருமான் அனைத்து திவ்யதேச விலக்ஷணர்களினாலும் அருளிச்செயல் துவங்குவதற்கு முன்னரும் அருளிச்செயல் சாதித்த பின்னரும் இந்தத் தனியன் அனுசந்திக்க படவேண்டியது என்று நியமிக்க சேனை முதல்வரிடமிருந்து அனைத்து திவ்ய தேச விலக்ஷணர்களுக்கும் ஸ்ரீமுகம் அனுப்பப்பட்டது .
• இந்த வேளையிலே , ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஆணைக்கிணங்க மணவாள மாமுனிகளைக் கொண்டாடும் ஒரு வாழி திருநாமத்தை அப்பிள்ளை சாதித்தார். மணவாள மாமுனிகளின் ஒப்பற்ற இந்த வைபவம் காட்டு தீ போல் அனைத்து திக்குகளிலும் பரந்தது .
No comments:
Post a Comment