Monday, June 26, 2023

மூன்று தலைமுறை 80 - 81

 மூன்று தலைமுறை -80

By N Krishnamurthy 

வெள்ளியன்று காலை கல்யாணி ராகினிக்கு போன் செய்தாள்.தன்னை கணேசன் அன்று பெண் பார்க்க வருவதால் ராகினி காலையிலே அவள் வீட்டிற்கு வந்து விட முடியுமா என்று கேட்டாள்.ராகினி "நான் இவரிடமும்,மாமியாரிடமும் கேட்டு சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டு விசாலியிடம்  விஷயத்தை கூற அவள் "தாராளமா போயிட்டு வாம்மா" என்று கூறினாள்.விசுவும் சரி என்று சொன்னதால்

ராகினி கல்யாணிக்கு போன் செய்து வருவதாக கூறி அரை மணியில் தன்னை  ரெடி செய்துகொண்டாள்.விசு அவளுடன்  திநகர் பஸ் ஸ்டாண்ட் சென்று,  12 ஆம் நம்பர் பஸ்ஸில் அவளை அமர்த்தி விட்டு வீடு திரும்பினான்.ஐஸ் ஹவுஸ் ஸ்டாப்பில் இறங்கிய ராகினி துளசிங்க பெருமாள்  கோவில் தெருவிலுள்ள  கல்யாணியின் வீட்டை அடைந்தாள். (துளசிங்க பெருமாள்  கோவில் தெரு பெயரைக் கேட்டதும் உங்களுக்கு ஏதாவது ஞாபகம் வருகிறதா?)

கல்யாணிக்கு ராகினியைப் பார்த்ததும் மகிழ்ச்சி பொங்கியது. உள்ளே இழுத்துக் கொண்டு போய்  அவளிடம் நெடுநேரம்  பேசிக் கொண்டிருந்தாள்.

ராகினி,கல்யாணி அன்று என்ன புடவை உடுத்த வேண்டும் அதற்கு மேட்சிங் ப்ளவுஸ் என்ன என்றெல்லாம் செலக்ட் செய்து அவளுக்கு அணிவித்தாள். கிட்டத்தட்ட அரைமணி நேரம் கல்யாணியை அலங்கரித்தாள்.

கூந்தலை பின்னி அதில் மல்லிப்பூவை சூட்டினாள்.

தஞ்சாவூர் அய்யங்கடைத் தெருவில் வாசனைத் திரவியங்கள் விற்கும்

அப்துல் ரஹீம் அத்தர் கடையில் வாங்கி வைத்திருந்த  அத்தரை புடவையில்  தெளித்தாள்.அத்தரின் வாசனை ஊரையே கூட்டியது. 

மாலை மூன்று மணிக்கு கணேசன், அவனது அப்பா, அம்மா ஆகியோர் டாக்சியில் வந்து விசுவை பிக்கப் செய்து கொண்டு சென்றார்கள். கல்யாணியின் வீட்டுக்கு  சென்றபோது தான் விசுவுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. வில்லியம் தம்பதிகளும் மேகியும்  அங்கு அமர்ந்து கொண்டிருந்தார்கள். கணேசன்"நான்தான் மேகிக்கு போன் செய்து வருமாறு கூறியிருந்தேன். அட்ரஸையும்  அவர்களுக்கு கொடுத்து இருந்தேன்" என்று கூறினான். பிறகு பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்தது. வேற என்ன? வழக்கமான பஜ்ஜி, சொஜ்ஜி, பெண்ணைப் பாடச் சொல்வது போன்றவை நடந்தேறின.

இம்முறை  "பெண் பார்க்கும் படலம்" பற்றி விசு மேகிக்கு விளக்கி கூறினான்.அவளும் கவனமாக கேட்டாள்.நிறையவே போட்டோ எடுத்தாள்.

கல்யாணியை உற்றுப் பார்த்த  கணேசன் விசுவிடம் காதில் ஏதோ கூறினான்.விசு கல்யாணியை பார்த்து "கல்யாணி. உன் அழகு பல மடங்காக கூடி விட்டது என்கிறான் உன் வருங்கால கணவன்" என்று கூறினான். "அப்படியா" என்ற கல்யாணி "அப்படின்னா அது உங்க மனைவியின் கைவண்ணம் தான்" என்று கூறினாள்.

 கல்யாணியின் பெற்றோர்களிடம் கணேசனின்  பெற்றோர்கள் "எங்களுக்கு பரிபூரண சம்மதம்.எவ்வளவு  சீக்கிரம் முகூர்த்தம் வைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வைத்துக் கொள்ளுங்கள்"என்று கூறினார்கள்."சரி. எங்காத்து  வாத்தியாரை கேட்டு நாள் பார்த்து உங்களுக்கு தெரிவிக்கிறேன்" என்றார் கல்யாணியின் அப்பா."மற்றபடி மீதி விஷயங்களை நான் இன்னனொரு நாள் உங்க வீட்டுக்கு வந்து பேசிக் கொள்கிறேன்" என்று கூறிவிட்டு கணேசன் வீட்டு போன் நம்பரை வாங்கிக் கொண்டார்.பிறகு எல்லோரும் கிளம்ப ஆரம்பித்தார்கள். அப்பொழுது கல்யாணி ராகினியைப் பார்த்து

" நீ இன்று இருந்துவிட்டு நாளை போகக்கூடாதா" என்று கேட்டாள். "எனக்கு வீட்டில் நிறைய வேலை இருக்கிறது.இன்னொரு நாள் வருகிறேன்" என்று கூறிய ராகினி அவளிடம் விடைபெற்று   விசுவின்  கூடவே   வந்து டாக்சியில்

அமர்ந்தாள். அவள் புடவையில் தடவியிருந்த அத்தர் மணம் டாக்சி முழுவதும் வியாபித்தது.அவள் கையில் உள்ள பையில், எவர்சில்வர் பாத்திரங்களில்,  கல்யாணியின் அம்மா கொடுத்த கேசரியும், பஜ்ஜியும் இருந்தது.வீட்டிற்கு சென்றதும் அவைகளை  எடுத்து விசாலியிடம் அவள் கொடுத்து பெண் பார்த்த விவரங்களை கூறினாள். விசாலி பஜ்ஜி,கேசரியை  வீட்டில் உள்ளோருக்கு பகிர்ந்து கொடுத்தாள். வில்லியம்ஸ் குடும்பத்தினர்  வேறு ஒரு டாக்ஸி பிடித்து ஜானின் அபார்ட்மெண்டுக்கு சென்றார்கள்.

மூன்று தலை முறை-81

மறுநாள் வில்லியம்ஸ் விசுவுக்கு போன் செய்து "ஒரு வாரம் தென்னிந்தியா டூர் செல்ல இருக்கிறோம். முக்கியமான கோவில்களையெல்லாம்  பார்த்து வரவேண்டும்.  செபஸ்டியனை டிரைவராக  வைத்துக்கொண்டு ஒரு காரை ஏற்பாடு செய்து விடுகிறோம். ஆனால் எங்கு எங்கு செல்ல வேண்டும் என்பதை நீதான் எங்களுக்கு சொல்ல வேண்டும். எங்களுடன் தமிழும்  ஆங்கிலம் தெரிந்த ஒருவர் இருந்தால் மிகவும் சௌகரியமாக இருக்கும்" என்று கூறினார்.விசுவுக்கு தர்மசங்கடமாக இருந்தது.அடுத்த திங்கட்கிழமை அவன் திரும்ப வேலைக்கு சேர வேண்டி இருந்தது.எனவே அவன் அவர்களுடன் செல்லமுடியாது. கணேசனும் லீவு போட முடியாது. ஏனென்றால் அவன் கல்யாணத்திற்காக லீவை சேமித்து வைத்திருந்தான்.விசு இது விஷயமாக  யோசித்துக் கொண்டிருந்த போது "எனக்கு ஒரு யோசனை. சொல்லட்டுமா" என்றாள் ராகினி. "அப்பாவைக் கேட்டு பார்க்கட்டுமா?அப்பா அநேகமாக சுதாகரை கேட்டு பார்த்து முடிந்தால் அவரை வில்லியம்ஸ் குடும்பத்துடன் அனுப்ப ஏற்பாடு செய்து விடுவார்" என்றாள். "அப்படியே செய்" என்றான் விசு. ராகினி போனை எடுத்து ஆத்மநாதனிடம்  பேசி விஷயத்தை கூறினாள். "சரிம்மா. இப்போது சுதாகர் வீட்டில்தான் இருப்பான்.நான் அவனிடம் பேசிப்பாக்றேன். ஒரு வாரம் என்றால் பரவாயில்லை. ஒப்புக்குவான்னு நினைக்றேன்" என்று கூறினார்.பத்து நிமிடம் கழித்து ஆத்மநாதன் ராகினிக்கு போன்  செய்து "சுதாகர்  சம்மதித்து விட்டான். ஒரு வாரம் அவர்கள் கூட இருப்பான்.அவன் வயசான  அம்மா தனியாக இருக்க முடியாதகையால் அவளை நம்மாத்தில் ஒரு வாரத்துக்கு வைச்சிக்கணம் " என்று கூறினார்.இந்த விஷயத்தை ராகினி விசுவிடம் சொல்ல விசு வில்லியம்ஸுக்கு  போன் செய்து விஷயத்தை கூறினான்."நீ எங்களுக்காக மிகவும் மெனக்கெடுகிறாய்.நாங்கள் இதற்கு என்ன கைமாறு செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை " என்றார் வில்லியம்ஸ்.

அதற்கு விசு" இப்படியெல்லாம் நீங்கள்  கூற வேண்டாம். நீங்கள் குடும்பத்தோடு  கல்யாணத்துக்கு வந்ததை விடவா நான் செய்தது அதிகம்.இது கூட செய்ய முடியாவிட்டால் அப்புறம் என்ன இருக்கிறது"என்று கூறினான் விசு. அடுத்து விசு ஆத்மநாதனுக்கு போன் செய்து "மாமா. நீங்க பண்ண உபகாரத்துக்கு ரொம்ப தேங்க்ஸ்" என்று கூற ஆத்மனாதன் "இதில் என்ன மாப்பிள்ளை  இருக்கிறது. ஏதோ என்னால் முடிந்தது. செய்தேன்"என்று கூறினார்.

அடுத்த திங்கட்கிழமையிலிருந்து ஒரு வாரத்துக்கு வில்லியம்ஸ் குடும்பம் தென்னிந்தியப் மேற்கொள்ள இருக்கும்  பயணத்தில்  அவர்கள் பார்க்க வேண்டிய இடங்களை/ கோவில்கள்  பற்றி சுதாகரிடம் தான் சொல்லிவிடுவதாக விசு  வில்லியம்ஸிடன் சொன்னான். வில்லியம்ஸ் ஹிக்கின்ஸ்பாதம் சென்று 'தென்னிந்தியாவின் புகழ்பெற்ற கோவில்கள்' என்ற புத்தகத்தை வாங்கினார்.நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதை படித்தார். இதற்கிடையில் சுதாகர் விசுவுக்கு போன் செய்து வில்லியம்ஸின் டெலிபோன் நெம்பரை வாங்கிக்கொண்டு,

அவருக்கு போன் செய்து என்றிலிருந்து கிளம்ப வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொண்டான்.மேகி பயணத்துக்கு வேண்டிய ஐடங்களை சீட்டில் குறித்துக்கொண்டு அவைகளை சேகரிக்க ஆரம்பித்தாள். முக்கியமாக கேமராவுக்கு வேண்டிய அளவுக்கு பிலிம் ரோலை வாங்கிக் கொண்டாள்.

No comments:

Post a Comment