Friday, June 23, 2023

மூன்று தலை முறை 72 - 73

 மூன்று தலைமுறை-72

By N Krishnamurthy 

இனி விசுவின் முகூர்த்த சாப்பாட்டு மெனுவைப் பார்க்கலாம். 

அரிசி, தேங்காய் சேர்த்து அரைத்த வெல்லப்பாயசம், தயிர்ப் பச்சடி,

ஸ்வீட் பச்சடி, வாழைக்காய் கறி(பாரம்பரிய முறையில் பண்ணினது),

பீன்ஸ் பருப்பு உசிலி, அவியல், சேனை வறுவல், அப்பளம், பதிர்பேணி(

சுண்டக் காய்ச்சிய குங்குமப் பூப் போட்ட பாலோடு) முட்டைக்கோஸ் வடை, லட்டு, வாழைப்பழம், மாங்காய் ஊறுகாய், சாதம், பருப்பு, நெய்

கத்திரிக்காய், பறங்கிக்காய்,  குடை மிளகாய் தான் போட்ட சாம்பார்,

வெண்டைக்காய் போட்ட மோர்க்குழம்பு, பைன் ஆப்பிள்  ரசம்,

தயிர் மற்றும் மோர். சமைப்பதில் கும்போணம்  ராஜாவய்யர் தான் ஒரு நளச்சக்ரவர்த்தி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்தார்.ஒரு கல்யாணத்தை பலர் சாப்பட்டை வைத்துதான் ஞாபகம் வைத்துக்கொள்கிறார்கள் (என் மகள் கல்யாணத்தை 20 வருடம் கழித்து நினைவு கூறும் சில உறவினர்கள் இன்றும் ஞானாம்பிகா கேட்டரர்ஸை பற்றியே பேசுகிறார்கள்)

சாப்பிட்டு பசி தீர்ந்த பின், சீர் வரிசை வைத்திருக்கிற ரூமுக்குள் நுழைந்தால் அங்கு கீழ்கண்ட சீர் வரிசை கண்ணில் படுகிறது.

வீட்டு உபயோகத்திற்கு வேண்டிய எவர் சில்வர்,பித்தளை  பாத்திரம்,  பண்டங்கள் வெள்ளி சாப்பட்டு தட்டுகள்,வெள்ளி சந்தன பேலா,வெள்ளி பஞ்ச பாத்ரம், உத்திர்ணி அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அரிசி, பருப்பு, வெல்லம்,நெய், அப்பளம், வடாம், சீர் பக்ஷண வகைகள், தீபாவளி லேஹியம், அங்குமணி சாமான்கள் வைத்திருந்தனர்.

 *சீரில் வைத்திருந்த   பக்ஷணங்கள்:-* 

திரட்டி பால் 1000 கிராம்,
7 சுற்று கை முறுக்கு 31,
5 சுற்று  கை முறுக்கு 51, 
முள்ளு தேங்குழல் 40,
பெரிய(ஒன்பது அங்குல)
அதிரசம் 31,
சிறிய(ஆறு அங்குல அதிரசம்) 51,
விரத அப்பம் 11, பெரிய சைஸ் லட்டு 31,
சிறிய சைஸ் லட்டு 51,
மைசூர் பாகு பெரியது 31,
சிறியது 51

இருந்தன.இது இல்லாமல் கூம்புடன் பருப்பு தேங்காய் வேறு இருந்தது.

மேல கூறியவற்றில் இல்லாமல் சிலது விட்டு போயிரிக்கலாம்.

கண் குத்தி பாம்பாக நான் எழுதி வருவதை படிக்கும் சில விவரம் அறிந்தவர்கள் சாப்பட்டில் இது இல்லை,சீர் வரிசையில் இது இல்லை என புலம்ப வேண்டாம். இருந்ததை கொண்டு சந்தோஷப்படுங்கள்.

மூன்று தலை முறை -73

மதியம் மூன்று மணிக்கு மேல் ராகு காலம், யமகண்டம் இல்லாத நேரமாக பார்த்து நலங்கு நடை பெற்றது.

திருமண சடங்குகள் முடிந்த நிலையில் எல்லோரும் ரிலாக்ஸ்ட் ஆக இருப்பதால் நலங்கை மிகவும் ரசிப்பார்கள்.கல்யாண பையனும்,பெண்ணும் சாப்பிடும் போது ஒருவொருக்கொருவர் சில ஐட்டங்களை ஊட்டி விட்டுக் கொண்டதால் இன்னும் கொஞ்சம் அன்னோன்யம் அதிகமாகி அது நலங்கில் முழுமையாக வெளிப்படும். மஞ்சளும், சுண்ணாம்பும் கலந்த கலவையில் சிறிது நீர் பிசைந்து கால்களில் இடுவதே நலங்கு எனப்படும்.

ராகினிக்கு லல்லி தலை பின்னி பூ வைத்து, விளையாடல் புடவையை உடுத்த செய்தாள்.சுந்தரி  விசு வீட்டினரை  நலங்கிற்கு வரும்படி அழைத்தாள். 

கோலம் போட்டு அதன் மீது பாயை முழுவதுமாக விரித்து விசுவையையும் ராகினியையும்  எதிரும், புதிருமாக கிழக்கு மேற்காக உட்கார வைத்தார்கள்.

சுற்றிலும் ஜமக்காளம் போடப்பட்டு இரு வீட்டை சேர்ந்த பலர் உட்கார்ந்து கொள்ள ஆரம்பித்தனர்.சின்னஞ்சிறுசுகள் நடக்கப்போவதை ஆர்வத்துடன் எதிர் நோக்கினார்கள்.

அருகில் ஒவ்வொரு கிண்ணத்திலும் கொஞ்சம் அரிசியும், பருப்பும்,உப்பு, சந்தனம், குங்குமம். மஞ்சள் பொடி, நலங்கு கலவை, குடுமி எடுத்த மஞ்சள் தடவிய தேங்காய், 12 சுட்ட அப்பளங்கள். வெற்றிலை, பாக்கு, பழம், புஷ்பம், முகம் பார்க்கும் கண்ணாடி,சீப்பு, ஆகியவற்றை தயாராக இருந்தன. மங்களமும்,ஜானகியும் இதை செய், அதை செய் என்று சொல்லி கொடுக்க முன் வந்தார்கள்.

இந்த நேரத்தில் விசாலியும்,ராகினியின் ஒண்ணு விட்ட அத்தையும்  மாறி மாறி நலங்கு பாட்டு பாடினார்கள்.

ராகினி அத்தை 

"நலங்கிட வாரும் ராஜா,நாணயம் உள்ள துரையே,

முத்திழைத்த பந்தலிலே ரத்ன கோபமாட்டிருக்கு,

வந்த ஜனம் காத்திருக்க 

வாரும் அய்யா நலங்கிடவே.

பட்டு ஜாம காளமெத்தை பந்தலிலே விரித்திருக்கு,

நாலு விதவாத்யங்களும் நாகரிகமாய் ஒலிக்க,

வாரும் அய்யா நலங்கிடவே.

எந்த ஊரு எந்த தேசம் எங்கிருந்து இங்கு வந்தீர்" 

என்று பாட பதிலுக்கு விசாலி "மோகனபுரம் தனிலே மோகினியைக் காண வந்தேன்"

என்று எதிர்பாட்டு பாடினாள்.எல்லோரும் பலமாக கைகளை தட்டு நலங்கு சூடு பிடிக்க ஆரம்பித்தது.

(பெண் தனது கணவனுக்கு தாம்பூலம் கொடுக்கும் போது பெண் பாட்டு பாடியே ஆக வேண்டும். இது போல் பிள்ளயும் பாடுவான்)

ராகினி நின்ற படியும், விசு  அமர்ந்த படி இருக்க , முதலில் ராகினி விசுவின்  கழுத்திலும், இரு கைகளிலும், நெற்றி யிலும், சந்தனமிட்டு, நெற்றியில் குங்குமம் இட்டு பின்னர் அவனது வலது காலை நீட்டும் படி சொல்ல, அவன் மறுக்க (அப்போது அவனது பாட்டி மங்களம் காலை நீட்டாதேடா என்று கூற) அவன் காலை  ராகினி பிடித்து இழுத்து நலங்கிட்டாள்.

பெண் வீட்டார் இதற்கு பலத்த கரகோஷம் செய்தார்கள்.

இதன் பின்னர் ராகினி விசுவுக்கு தலையை சீப்பினால் வாரி விட்டு, கண்ணாடியை முதலில் திருப்பி காண்பித்தாள்.

ராகினியின் அத்தை"மாப்பிள்ளை.முகத்தை நன்னா பாத்துகோங்கோ" என்று கூற கூட்டம் சிரித்தது.பிறகு ராகினி போனால் போகிறது என்று கண்ணாடியை சரியாக காண்பித்தாள்.  ராகினியிடம் சிறிது அரிசியும், விசுவிடம் சிறிது பருப்பும் கொடுத்து ராகினி "நான் அரிசி தருகிறேன்.நீங்க பருப்பு தாருங்கள்" என்று விசுவிடம் கேட்க விசு காது கேட்காத மாதிரி நடிக்க,ராகினி மீண்டும் உரக்க கேட்டாள். 

ராகினி தனது கையிலுள்ள அரிசியில் பாதியை இடது கையில் வைத்து கொண்டு, மீதியை அவனிடம் கொடுத்து பருப்பு வாங்கி இரண்டையும் கலந்து கொண்டு, வலது கையிலும், இடது கையிலும் பாதி பாதி வைத்து கொண்டு, கைகளை மூடிய வண்ணமாக வலது கையால் இடது பக்கத்திலிருந்து வலமாகவும், இடது கையால் வலப்பக்கமிருந்து இடமாகவும், மூன்று முறை விசுவின் தலையை சுற்றி, அவனது பின் பக்கத்தில் போட்டாள்.

இதன் பிறகு ராகினி  உளுந்தினால் செய்யபட்ட இரு சுட்ட அப்பளங்களை இரு கைகளிலும் வைத்து கொண்டு, பிரதக்ஷிணமாக வலது கையாலும், அப்பிரதக்ஷிணமாக இடது கையாலும் சுற்றி இரு அப்பளங்களையும் நொறுக்கி விசு தலைமேல் உடைத்து அவன் பின் பக்கம் போட்டாள்.இது போல அப்பளங்கள் தீரும் வரை செய்தாள்.

ராகினி செய்ததெல்லாம் விசுவும் செய்ய வேண்டியதாயிற்று.

குடுமி எடுத்து மஞ்சள் தடவி வைத்த தேங்காயை மணமக்கள் உருட்டி விட்டு விளையாட வேண்டும்.

பெண் தேங்காயை இரு கைகளாலும் பிடித்து கொள்ளலாம். ஆனால் ஆண் ஒரு கையை மட்டுமே உபயோகபடுத்தலாம்.யார் முதலில்

தேங்காயை பிடிக்கிறார்களோ, அவர் அந்த தேங்காயை இருவருக்கும் நடுவில் பாயில் அழுத்தி பிடித்திருக்க மற்றவர் அதை விடுவித்து எடுக்க வேண்டும். 

இவ்வாறு எடுப்பவர் பெண்ணானால் இரு கைகளால் எடுக்கலாம். ஆண் ஆனால் ஒரு கையை மட்டுமே பயன் படுத்த வேண்டும்.

இவ்வாறாக ஒவ்வொருவரும் ஒரு முறை செய்ய வேண்டும்.இந்த விளையாட்டையும் இருவரும் செய்தனர்.

இதன் பின்னர் இரண்டு வெற்றிலையை நான்காக மடித்து, அதில் ராகினி கையில் கெட்டியாக பிடித்து கொண்டு பாயின் மேல் நடுவில் வைத்திருக்க விசு விள்ளாமல் முழுவதுமாக கை பற்ற முயற்சித்தான். இம்மாதிரி ராகினியும் செய்தாள்.

அடுத்து கூட்டத்திலிருந்த லல்லி ராகினியைப் பார்த்து "மன்னி.நீ இப்போ  ஒரு பாட்டு பாடணம்" என்றாள். ராகினி "என்ன வேணுமானாலும் பாடலாமா" என்றாள். லல்லி"என்ன வேணுமானாலும்,

எந்த பாஷையிலும் பாடலாம்.சினிமா பாட்டு கூட பாடலாம்.எல்லாம் ரசிப்பா" என்று கூற, ராகினி இரண்டு வருடம் முன் வந்திருந்த காதலிக்க நேரமில்லை படத்திலிருந்து "என்ன பார்வை உந்தன் பார்வை.இடை மெலிந்தாள் இந்த பாவை" என்ற பாட்டை பாடினாள்.

பாடும் போதே இரண்டு மூன்று முறை அவள் விசுவை உற்றுப்பார்க்க, விசுவுக்கு வெட்கமாக இருந்தது.

அவள் பாடி முடித்ததும் எல்லோரும் கைதட்டினார்கள் .

பின்பு ராகினியின்  அத்தை "மாப்பிள்ளையும் ஒரு பாட்டு பாட வேண்டும்" என்று கூறினாள். விசு முதலில் இதற்கு சம்மதிக்கவில்லை. பெண் வீட்டார்கள் எல்லாரும் சேர்ந்து கொண்டு அவன் பாடித்தான் ஆக வேண்டும் என்று அடம் பிடிக்க உடனே அவன் அதே படத்தில் வந்த "நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா தா"என்ற பாடலை பாடினான்.

விசு கூட இப்படி பாடுவானா என்று விசாலிக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளால்  சந்தோஷ சிரிப்பை அடக்க முடியவில்லை. பிறகு ஆரத்தி எடுக்கப்பட்டு நலங்கு ஒருவழியாக

முடிந்தது. எல்லா நிகழ்ச்சியையும் ஒன்றுவிடாமல் மேகி போட்டோ எடுத்து தள்ளி கொண்டு இருந்தாள். இதற்கிடையில் அங்கு பெண்கள் பகுதியில்  உட்கார்ந்திருந்த கல்யாணி அடிக்கடி கணேசனை பார்த்துக் கொண்டிருந்தாள். கணேசனும் ஒன்றும் தெரியாத பூனை மாதிரி இருந்து கொண்டு அவளை நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான். நலங்கு மும்மரத்தில் விசுவும்,ராகினியும் இருந்தாலும் அவர்கள் பார்வைக்கு கணேசன் கல்யாணி பார்த்துக்கொண்டது தப்பவில்லை.ஒரு வேளை தனது கல்யாணத்திலும் இதுபோல  நலங்கில் கணேசனிடம் விளையாடலாம் என்று கல்யாணி நினைத்திருந்தாளோ!

No comments:

Post a Comment