மூன்று தலை முறை -66
By N Krishnamurthy
இன்றைய பதிவை தொடங்குமுன் நேற்றைய பதிவில்
நேர்ந்த ஒரு சிறு(பெரும்?) தவ(ற்)றை சுட்டிக்காட்ட கடமை பட்டுள்ளேன்.விசு பஞ்சகச்சம் கட்டிக்கொள்ள சென்றாதாக எழுதியிருந்தேன்.
பஞ்சகச்சம் கட்டக்கொள்ளும் தகுதி பிரம்மச்சாரிக்கு கிரஹஸ்தன்(திருமணம் ஆனவன்)ஆனதும்தான் கிடைக்கிறது. வழக்கம் போல என்னுடைய மிகச்சிறந்த நண்பர் ஒருவர் இந்த தவறை சுட்டிக்காட்டி என் தலையில் குட்டியிருந்தார்.
அவருக்கு என் நன்றி.மீண்டும் ஒருமுறை எண்ணத்தோன்றுவது
"இது போல தவறுகளை எழுதும் போது தான் விஷயம் நன்கு அறிந்தவர்கள் திருத்த முயலுகிறார்கள்.
அப்போதுதான் அவர்கள் நான் எழுதும் கதையையும் படிக்கிறார்கள்" என்று.இது எனக்கு பெருமகிழ்ச்சி தருகிறது.நான் ஒன்றும் பிராமண சடங்கு சம்பிரதாயங்களை முற்றிலும் அறிந்த அத்தாரிட்டி அல்ல.எதோ தெரிந்ததை எழுதுகிறேன்.என் தாய் வழியில் அனேக பந்துக்கள் வைதீக பரம்பரையில் வந்தவர்கள் ஆதலால் அவர்களது கைடன்ஸும் கிடைக்கிறது.இருந்தும் சில சமயம் சறுக்கி விடுகிறது.
சடங்கு சம்பிரதாயங்களை அங்கங்கே சொல்ல வேண்டி இருப்பதால் தவறுகள் நேர்வதும் இயற்கை.நெல்லுக்கு இறைத்த நீர்(களை எடுக்கப்படும்) புல்லுக்குமாங்கே பொசியுமாப்போல் .
எனிவே நவீன நக்கீரர்கள் வாழ்க!
இனி இன்றைய கதை.
------------------------------------
காலையில் எட்டரை மணிக்கு டிபன் ரெடி ஆகி விட்டிருந்தது. முதலில் இலைக்கு ஸ்வீட் ரவா கேசரி . பின்பு இட்லி,மெதுவடை, தேங்காய் சட்னி, தக்காளி கார சட்னி, எள்ளுமிளகாய் பொடி ஆகியவை பரிமாறப்பட்டன.
பின்பு அசத்தலான வெண்பொங்கல், தொட்டுக்கொள்ள கத்திரிக்காய் கொத்சு.ஏற்கனவே சொன்னபடி கும்பகோணம் ராஜாவய்யருடைய சமையல் கைப்பக்குவம் அருமையாக இருந்தது.எல்லோரையும் கேட்டு கேட்டு பரிமாறினார்கள்
எல்லோரும் ரெடியான உடன் சம்பரதாய சடங்குககள் ஆரம்பிக்கப்பட்டன.பஞ்சு குடும்பம் தனியாகவும், ஆத்மநாதன் குடும்பம் தனியாகவும் ஹாலில் வேறு வேறு பக்கத்தில் அமர்ந்து முதல் நாள் சடங்குகளை செய்ய அமர்ந்தார்கள்.
பிள்ளையார் பூஜையுடன் சடங்குகள் ஆரம்பமானது.
நாந்தி சிராத்தம் அடுத்தது.9 பிராமணர்களை உட்கார வைத்து இலையில் ஒரு படி அரிசி,துவரம் பருப்பு,தேங்காய், அங்கவஸ்தரத்துடன் வேஷ்டி(9/5),தட்சிணை சேர்த்து தரப்பட்டது.ஆத்து வாத்யார் மூன்று பரம்பரை சர்மா(பூணலின் போது இடப்படும் பெயர்) பெயரையும் சொல்லி மந்திரம் கூறினார்.
பஞ்சுவும் விசாலியியும் விசுவுடன் பிராமணர்களை மூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தார்கள்.மேகி இதையெல்லாம் படமாக்க,கணேசன் அவளுக்கு நாந்தியின் முக்கியத்துவத்தை கூறினான். மேகி அவனிடம் "இது முன்னோர்களுக்கு Thanks giving & seeking their blessing எனக்கூறலாமா" என்றாள்.கணேசன்
"எக்ஸாட்லி"என்றான்.
அடுத்தது விரதம்.விசுவின் கண்களை வேஷ்டியால் கட்டி பின்பு அதை அவிழ்த்த உடன் அவனை அவனது உள்ளங்கை மற்றும் சூரியனை பார்க்கச்சொன்னார் ராமனாத சாஸ்திரிகள்.தொடர்ந்தது விரத ஹோமம்.இது நடந்தது கொண்டிருந்த போது பக்கத்தில் பாலிகை தெளித்தல் ஆரம்பமானது.
முதல் நாளே ஆத்மநாதன் வீட்டில் ஐந்து மண்பாண்டகளில் நவ தானியங்களை நீர் தெளித்து ஊற வைத்திருந்தார்கள்.
நடுவில் ஒரு பாலிகை பாண்டமும் அதை சுற்றி நாற்புறமும் நாலு பாலிகை பாண்டங்களும் வைக்கப்பட்டிருந்தன.
சுமங்கலி பெண்கள் அந்த பாலிகைகளில் ஜலத்தை தெளித்தார்கள்.
மேகி இதைப்பார்த்து வியந்து போனாள். இது எதற்கு என கணேசனிடம் கேட்க கணேசன்(ஏற்கனவே சாஸ்திரிகள் சொல்லியிருந்தபடி) "பாலிகை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேவர்களையும் திருப்தி படுத்தி அவர்களுடைய ஆசிகளை வாங்குவதற்கானது. மத்தியில் படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கும், கிழக்கில் தேவர்களின் அரசனான இந்திரனுக்கும், மேற்கு பாலிகை மழைக்கு அதிபதியான வருணனுக்கும், தெற்கிலுள்ள பாலிகை காலதேவன் எமனுக்கும், வடக்கில் உள்ள பாலிகை சோமன் என்ற சந்திரனுக்கும் உண்டானது என்றும்,இந்த பாலிகைகளில் இருக்கும் தானியங்கள் முளைவிட்டு பல்கிப் பெறுவது போல திருமணம் செய்து கொள்ளும் இருவரும் சந்ததிகளை உற்பத்தி செய்து வளமான ஒரு வாழ்க்கையை மேற்படி தேவர்களின் நல்லாசியுடன் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம்" என்று கூறினான். இதைக் கேட்டு மேகி அசந்து போனாள்.இப்படிக்கூட ஒரு கலாசாரம் இருக்க முடியுமா என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
பின்பு விசுவுக்கு வலது கையில் மஞ்சள் சரடில் விபூதியை தடவி ரக்ஷை(காப்பு) கட்டப்பட்டது.இதைகட்டியது முதல் விசு வெளியேசெல்லக்கூடாது என்பது விதி.
எல்லாம் முடிய பகல் பன்னிரண்டரை மணி ஆகிவிட்டிருந்தது.மதியம் ஒரு மணிக்கு லன்ச் பரிமாறப்பட்டது.
வில்லியம்ஸ் லிண்டா மேகி மற்றும் ஜான் மதிய சாப்பாட்டை மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள். பந்தி விசாரிப்பு செய்து கொண்டிருந்த கணேசனிடம் ஒவ்வொரு ஐட்டமும் என்ன என்று கேட்டு தெரிந்து கொண்டார்கள்.ஒவ்வொரு ஐட்டமும் ஒரு ஃபார்முலா படி இலையில் குறிப்பிட்ட இடத்தில் பரிமாறப்படுவதை பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.
ஞாயிறு மாலை நாலரை ஆறு ராகு காலமாக இருப்பதால் மூன்று மணிக்கே நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆத்மநாதன் குடும்பமும் பஞ்ச குடும்பமும் அவா அவா ஆத்து சாஸ்திரிகளால் அறிவுறுத்த பட்டார்கள்.இடையில் சுமார் ஒன்றரை மணி இருந்ததால் பலர் ஹாலில் கிடைத்த இடத்தில் உண்ட மயக்கம் தீர தூங்க ஆரம்பித்தார்கள்.
விசுவும்,கணேசனும் மேகி குடும்பத்தினருடன் அளவளாவிக் கொண்டிருந்தபோது கல்யாணி எதேச்சையாக வருவது போல அங்கு வந்தாள்.விசு கல்யாணியை மேகிக்கு அறிமுகப்படுத்தினான்.தானும் கணேசனும் பேசிக்கொண்டிருந்த போதெல்லாம் கல்யாணி பார்த்துக்கொண்டிருந்ததை மேகி பார்த்துக்கொண்டிருந்தாள்.எனவே மேகிக்கு மேல்கொண்டு விஷயம் தெளிவாக புரிய ஆரம்பித்தது.
கணேசன், கல்யாணி திருமணம் நடந்தால் கல்யாணி தனக்கு இன்னுமொரு மன்னி என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டாள்.
மூன்று தலை முறை-67
சரியாக மணி 3 மணி ஐந்து நிமிடத்திற்கு நிச்சயதார்த்தம் ஆரம்பிக்கப்பட்டது.
ஹாலில் உள்ள மேடையின் மீது எதிரும் புதிரும் ஒரு ஜோடி மணப்பலகை போட்டிருந்தது. நெருங்கிய பந்துக்களும், வயதானவர்களும் மேடைமீது அமர அழைக்கப்பட்டார்கள்.
பஞ்சுவும், விசாலியும் ஒரு ஜோடி மணப்பலகைகளிலும், ஆத்மநாதன் சுந்தரியும் எதிரிலுள்ள ஜோடி மணப்பலகைகளிலும் அமர்ந்தார்கள்.
ஆத்மநாதன் முதலில் கனபாடிகள் சொல்லி வைக்க பிள்ளையார் பூஜை பண்ணினார். பிறகு இராமநாத சாஸ்திரிகள் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டிருந்தலக்ன பத்திரிக்கையை படிக்க ஆரம்பித்தார்
(லக்ன பத்திரிக்கை என்பது கிட்டத்தட்ட ஒரு Pre marriage agreement எனலாம்) இது பையனும் பெண்ணும், தாய் வழி,தந்தை வழியில் இன்னாருடைய பேரன்(பேத்தி),இன்னாருடைய புத்ரன்(புத்ரி),சீமந்த புத்ரனா(புத்ரியா),
கனிஷ்ட புத்ரனா(புத்ரியா) போன்ற விவரங்களுடன், கல்யாண தேதி,கல்யாண மண்டப விலாசம் போன்றவைகளை உள்ளடக்கிய ஒரு அக்ரிமெண்ட் ஆகும்.
இதே போன்று ஒரு லக்ன பத்திரிக்கையை கனபாடிகளும் படித்தார்.விசு தந்தையின் அருகில் உட்கார விசுவின் (ஒண்ணு விட்ட) மாமா சுப்புடு விசுவின் கழுத்தில் ரோஜா மாலையை போட்டு நெற்றியில் சந்தனம்,குங்கும பொட்டு வைத்தார்.பின்பு எழுந்து நின்ற விசுவுக்கு ஆத்மநாதன் ஜானவாச டிரஸ் தாம்பூலத்துடன் கொடுக்க விசு அவரையும் அவர் பக்கத்திலிருந்த சுந்தரியையும் நமஸ்கரித்தான். ஆத்மநாதனின் மகன் விசுவுக்கு தங்க சங்கிலியும்,கையில் மோதிரமும் அணிவித்தான்.
இதன் பின்னர் ராகினி ஆத்மநாதன்,சுந்தரி அருகில் அமர பஞ்சு, விசாலி தம்பதிகள் அவளுக்கு நிச்சயதார்த்த புடவையை தாம்பூலத்துடன் அளிக்க அதை பெற்றுக்கொண்ட அவள்,அவர்களை நமஸ்கரித்தாள்.
பின்பு ராகினி நிச்சயதார்த்த புடவையை அணிந்து வர சென்றாள்.விசுவுக்கு உடன் பிறந்த சகோதரி இல்லாததால் ஜானகியின் பேத்தி லல்லி ராகினியுடன் சென்றாள்.விசு ஜானவாச டிரஸ்ஸில் திரும்பி வந்த அமர்ந்தவுடன் ஐந்து நிமிடத்தில் ராகினியும் வந்து அமர்ந்தாள்.அதன் பின்பு தாம்பூலத்துடன் லக்ன பத்திரிகைககள் மறுநாள் சம்பந்தியாக போகிறவர்கள் மாற்றிக் கொண்டார்கள்.
(சாதாரணமாக கல்யாணத்தில் பிள்ளை ஆத்துக்காரர்களும் பெண் ஆத்துக்காரர்களும்,கல்யாண பெண்ணுக்கு தலா 3 புடவைகள் வாங்குது வழக்கம். இது இடத்துக்கு இடம் மாறுபடலாம். பிள்ளையாத்துகாரர்கள் கூரப் புடவை, கிரகப்பிரவேச புடவை, சாந்தி முகூர்த்த புடவை ஆகிய மூன்றும் பெண் வீட்டுக்காரர்கள் விரத புடவை, நிச்சயதார்த்த புடவை, விளையாடல் புடவை ஆகிய மூன்றும் வாங்கி கொடுப்பார்கள்.
நிச்சயதார்த்தம் முடிந்ததும் சாயங்கால டிபன் சாப்பிட எல்லோரும் அழைக்கப்பட்டார்கள்.
காசி அல்வா, உருளைக்கிழங்கு போண்டா, லெமன் சேவை, தேங்காய் சேவை, தேங்காய் சட்னி, குடமிளகாய் கொஸ்து பறிமாறப்பட்டன.
ஃ பில்ட்டர் காபி கொடுக்கப்பட்டது.
6:30 மணிக்கு ஜானவாசம் ஆரம்பிக்கப்பட்டது. ராமானுஜ கூடத்திற்கு அருகில் இருந்த பிள்ளையார் கோவிலுக்கு விசுவுடன் எல்லோரும் கும்பலாக சென்றார்கள்.விசு ஜானவாச டிரஸ்ஸுக்கு மாறினான்.விசாலி அவனுக்கு கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைத்தாள். பிள்ளையாரை வழிபட்ட பின் வெளியில் இருந்த திறந்த காரில் விசு கையில் பூச்செண்டுடன் அமர
அவனுக்கு இருபுறமும் சின்னஞ்சிறு வாண்டுகள் ஏறி அமர்ந்து கொண்டார்கள். பெட்ரமாக்ஸ் விளக்குககளை தலையில் சுமந்து நரிக்குறவர்கள் ஜானவாசம் ஊர்வலத்தின் முன்னால் போக பின் தொடர்ந்த நாதஸ்வர கோஷ்டி தோடி ராகத்தை ஆலாபனை செய்து தியாகராஜ கீர்த்தனையை வாசிக்க ஆரம்பித்தார்கள். கார் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றது. அத்தெருவில் குடியிருந்த பலரும் ஜன்னல் வழியாகவும், வாசலில் நின்று கொண்டும் மாப்பிள்ளை எப்படி இருக்கிறான் என்று ஆவலுடன் பார்க்க ஆரம்பித்தார்கள்.
விசுவுக்கு மிகவும் வெட்கமாக இருந்தது.(கிட்டத்தட்ட என் வயதுடைய அனைவரும் நிச்சயம் ஜானவாச கார் சவாரி நிச்சயம் செய்திருப்பார்கள்) சுமார் அரை மணி நேரம் கழித்து கார் சத்திரம் முன்னே வந்து நின்றது.விசு அதிலிருந்து இறங்கி உள்ளே சென்றான்.
எல்லா நிகழ்ச்சிகளையும் ஒன்றுவிடாமல் மேகி போட்டோ எடுத்துக் கொண்டு இருந்தாள். கணேசன் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் உண்டான விளக்கங்களையும் கூறிக் கொண்டிருந்தான்.அவன் அப்போதைக்கப்போது கல்யாணியை ஓரக்கண்ணால் பார்க்கத் தவறவில்லை. ஜானவாசம் முடிந்தவுடன் அருமையான இரவு சாப்பாடு பரிமாறப்பட்டது. ராஜாவைய்யர் ஜானவாச இரவு சாப்பாட்டை ஜமாய்த்து விட்டார். யாராவது ஒருவர் இவ்வளவு ஐட்டங்களையும் மீதி வைக்காமல் சாப்பிடமுடியுமா என்று ஆச்சர்யப்படுவீர்கள். கீழே மெனுவை கொடுத்துள்ளேன்.
சேமியா பேணி மற்றும் பாதாம் பால், தேங்காய் போளி, ஆமவடை, தக்காளி ஸ்வீட் பச்சடி, பூந்தி தயிர் பச்சடி, கத்தரிக்காய் பொடிக்கரி, வெஜிடபுள் கூட்டு, உருளைக்கிழங்கு சிப்ஸ், சாதம்,நெய், சின்ன வெங்காய சாம்பார், மைசூர் ரசம், கெட்டி மோர் பின்னர் கும்போணம் தளிர் வெற்றிலை, ரசிக்லால் பாக்கு, சுண்ணாம்பு தடவிய தாம்பூலம்.
சாப்பாடு முடிந்தவுடன் வில்லியம்ஸ் விசுவிடம் வந்து "நாங்கள் விடைபெற்று செல்கிறோம். காலை எத்தனை மணிக்கு வர வேண்டும்" என்று கேட்டார். "சாதாரணமாக நிகழ்ச்சிகள் 6 மணிக்கு ஆரம்பித்து விடும் ஆனால் நீங்கள் கொஞ்சம் முன்ன பின்ன வரலாம்" என்றான் விசு. ஆனால் மேகி "ஆரம்பத்திலிருந்து ஒன்றையும் விட்டுவிடாமல் போட்டோ எடுக்க வேண்டும்.நாங்கள் சரியாக ஐந்தரை மணிக்கே வந்து விடுகிறோம்" என்று கூறி அவர்கள் விடை பெற்றார்கள்.
கொஞ்ச நேரம் கழித்து சிலர் சீட்டு கச்சேரி ஆரம்பித்தார்கள். இவர்களுக்கு இரவில் சுட சுட டீ வழங்கப்பட்டது. இரவு சுமார் ஒரு மணிக்கு கல்யாண சத்திரத்தில் சந்தடிஅடங்கியது.
No comments:
Post a Comment