*மூன்று தலைமுறை-61*
விசாலி, சாஸ்திரிகள் வீட்டுக்கும் கனபாடிகள் வீட்டுக்கும் வியாழனன்றே போய் மஞ்சள்,நல்லெண்ணை, சிகைக்காய் பொடி கொடுத்துவிட்டு வந்தாள்.அன்றிரவே மூன்று பொண்டுகளும் வீட்டில் தலைக்கு மேலுள்ள கொடியில் புடவை,ரவிக்கை, துண்டு மூன்றையும் நீரில் நனைத்து பிழிந்து உலர்த்திவிட்டார்கள்.வெள்ளி காலை எழுந்து,மஞ்ச தேய்ச்சு எண்ணை ஸ்னானம் செய்து மடித்துண்டால் துடைத்துக்கொண்டு மடி புடவையை மடிசார் கட்டிக்கொண்டு, ஏழு மணிக்கு விசாலி வீட்டில் ஆஜராகி விட்டார்கள். குளித்து முடித்து ரெடியாயிருந்த விசாலி அவர்களை வரவேற்று கிழக்கு பக்கமாக உட்கார வைத்து அவர்கள் கால்களை தாம்பாளத்தில் வைத்து ஜலத்தால் அலம்பி நலங்கு இட்டாள்.பாதத்தில் சந்தனம், குங்குமம் இட்டாள்.
தலைக்கு மல்லிப்பூ தரப்பட்டது. வீட்டு வாசலில் பஞ்சு,விசு உதவியுடன் மாவிலை தோரணம் கட்டியிருந்தார்.விசாலி வீட்டு வாசலிலும், துளசி மாடம் முன்பும் செம்மண் இட்டு மாக்கோலம் போட்டிருந்தாள்.
சுமங்கலி இலைகளும்,கன்யா பொண்டுகள் இலைகளும் கூட ஸ்வாமி இலையும் போடப்பட்டது.
மங்களம் தான் இந்த சுமங்கலி பிரார்த்தனைக்கு கர்த்தா.
அலம்பி துடைத்த மணைமேல் மாக்கோலம் போட்டனர்.அது உலர்ந்தவுடன் அதன் மேல் சுமங்கலிக்கு வைத்துக்கொடுக்க ஒன்பது கஜம் புடவை,ரவிக்கை துண்டு,கன்யா பொண்டுகள் டிரஸ் வைக்கப்பட்டது. எல்லாவற்றின் மீது கண்ணாடி ,சீப்பு,சின்ன குங்கும டப்பா,விரலி மஞ்சள்,வளையல்கள், புஷ்பம் வைக்கப்பட்டது.
கன்யா பொண்டுகள் வனஜாவையும், கிரிஜாவையையும் அவர்கள் தாயார் எட்டு மணிக்கு கொண்டு வந்து விட்டிருந்தாள்.
ஸ்வாமி படத்துக்கு நைவேத்தியம் செய்து பின்பு கற்பூரம் காட்டினாள் மங்களம். எல்லா இலைகளும் ஹாலில் (அதாவது ஒரே இடத்தில்) போடப்பட்டன. இலைகளின் நுனி உட்காருபவர்களின் இடது பக்கம் இருக்குமாறு பார்த்து கொள்ளப்பட்டது. பதார்த்தங்கள் பிரதக்ஷிணமாக பறிமாறப்பட்டன.
விசாலியும்,வனஜா,கிரிஜாவின் தாயும் எல்லோருக்கும் பரிமாறினார்கள்.
கைகளில் தீர்த்தம் வாங்கிக்கொண்டு ஆபோசனம் செய்த பொண்டுகள் சாப்பிட ஆரம்பித்தனர்.
பருப்பு பாயசம், ஸ்வீட் பச்சடி, தயிர் பச்சடி, கோசுமல்லி, வாழைக்காய் கறி, அவரைக்காய் கறி, தேங்கா துகையல், பருப்பு வடை, போளி, தேங்கா சாதம், எலுமிச்சை சாதம்,சாதம், பூசனிக்காய் சாம்பார்,வெண்டைக்காய் போட்ட மோர் குழம்பு, தக்காளி ரசம், தயிர் முதலியன பறிமாறப்பட்டன.
சாப்பிட்டவுடன் உத்ராபோசனம் செய்ய பொண்டுகள் கையில் ஜலம் விட்டாள் விசாலி. பின்னர் பட்டுப்பாய் போட்டு பொண்டுகளை அமரச்செய்த விசாலி அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்த பின்னர் வஸ்த்ரம் மற்ற மங்கல பொருட்களை தட்சிணையுடன் சேர்த்து கொடுத்தாள்.
பொண்டுகள் ஒவ்வொருவரையும் நமஸ்காரம் செய்தாள் விசாலி.ராமனாத சாஸ்திரிகள் மனைவி விசாலியைப்பார்த்து
"இன்னிக்கு சமையல் கன ஜோர்.சமையல் செய்த கைக்கு தங்க காப்பு போடணம். உம்மாட்டுபொண் உன்னைப்போல மாமியார் கிடைக்க அதிர்ஷ்டம் பண்ணியிருக்கணம்" என்றாள். வெளியிலிருந்து வந்த மாமிகள் மூவரும் விடைப்பெற்றுக்கொண்டதும் ராஜகோபல அய்யர்,பஞ்சு,விசாலி, விசு,வனஜா, கிரிஜாவின் அம்மா ஆகியோர் சாப்பிட உட்கார மங்களமும்,ஜானகியும் பறிமாறினார்கள்.
கிரிஜா, வனஜாவை அவர்கள் தாயார் அழைத்துச்சென்றாள்.அவளுக்கு வாங்கிய புடவை,ரவிக்கை துண்டையும் அவளுக்கு விசாலி வைத்துக்கொடுத்தாள்.
மேற்கூறிய தகவல்களை கவனமாக திரட்டி பதிவிட்டுள்ளேன்.ஏதேனும் தவறிருந்தாலோ, விட்டுப்போயிருந்தாலோ அதை நம் நக்கீர நண்பர்கள் பெருந்தன்மையாக மன்னிக்கட்டும்.
------------------------
இன்று ஒரு கொசுறு தகவலாக மேற்கு மாம்பலத்தை பற்றி கூற ஆசை.மேற்கு மாம்பலத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு இது தெரிஞ்ச சப்ஜெக்ட்டாக இருக்கலாம்.இதைப்பற்றி அறியாதவர்கள் சில விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.ஒரு காலத்தில் மேற்கு மாம்பலத்தில் சுமார் 99 சதவீதம் பிராமணர்கள் இருந்தனர்
(இப்போது 60 சதவீதம் இருப்பார்களோ என்னவோ).இதற்கு 'பிராம்மண புரி' என்றே பெயரிட்டிருக்கலாம்.
மேற்கு மாம்பலத்தின் முக்கிய அடையாளம் 1964 ல் கட்டப்பட்ட அயோத்தியா மண்டபம்.இதன் முழுப்பெயர் ஸ்ரீ ராம சமாஜ் அயோத்யா அஸ்வமேத மகா மண்டபம் என்று எவ்வளவு பேருக்குத்தெரியும்?
பெரும்பாலான சென்னைவாசிகள் சாயங்காலம் ரம்யமாக பொழுதை கழிக்க மெரினா பீச் செல்வது போல மாம்பல பிராமண வாசிகள் அயோத்யா மண்டபத்தில் நடக்கும் கதா காலட்சேபம், பாட்டு கச்சேரிகளை கேட்டு சாயங்கால பொழுதை கழித்தனர்.சில வம்பு பேசும் மாமிகள் தங்கள் மாட்டுப்பெண்களைப் பற்றி விஷயங்களை பரஸ்பரம் பறிமாறிக்கொள்வதற்கும் அயோத்யா மண்டபத்தை பயன் படுத்தினார்கள்
பிராமணர்களின் பழக்க வழக்கங்கள், தேவைக்கேற்ப கடை கண்ணிகள் உருவாயின.பிராமணர்களின் மேலுள்ள வேண்டாத வன்மத்தால் அப்போது ஆட்சியில் இருந்த அரசு பாதாள சாக்கடை,
டவுன் பஸ் போன்ற அடிப்படை வசதிகளை மாம்பல வாசிகளுக்கு கிடைக்காத மாதிரி ஜாக்கிரதையாக பார்த்துக்கொண்டது.
நான் 1967ல் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி(C.E.G)யில் படிக்கும் போது பழைய மாம்பலத்தின் ஒரு கோடியிலிருந்து டீ.நகர் பஸ் ஸ்டாண்டிலிருந்து கிளம்பும் 5B பஸ்ஸை பிடிக்க காலையில் சுமார் 3 கி.மீ நடந்தே சென்று,திரும்பி மாலையில் 3 கி.மீ நடக்க வேண்டி இருந்தது. அசோக் நகர்,கே.கே.நகர்கள் உருவான பின் வேறு வழியில்லாமல் முதல் பஸ் (49A என்று நினைக்கிறேன்) விடப்பட்டது.முதல் முதலில் 49A வை அஞ்சுகம் ஸ்கூல் ஸ்டாப்பில் பிடித்து டீ.நகர் பஸ் ஸ்டாண்ட் சென்றது, சென்னையிலிருந்து டில்லிக்கு விமானப்பயணம் மேற்கொண்டது போன்ற சந்தோஷம் கிடைத்தது.
ஸ்டேஷன் ரோட்டிலும், ரயில்வே லைனைத்தாண்டி புது மாம்பலத்திலும் வேண்டிய அளவிற்கு மேல் கறிகாய் கடைகள்.இங்கு கிடைக்காத வஸ்துக்களே கிடையாது.
கோயம்பேடு கறிகாய் மார்கெட்டில் வாங்கிய பின்னனர் தான் மாம்பலம் கறிகாய் கடையில் எடையில் நம்மை எவ்வளவு ஏமாற்றியிருக்கிறார்கள என அறிய முடிந்தது.மேற்கு மாம்பலத்தில் காப்பி பொடி கடைகள்,நாட்டு மருந்து கடைகள்,பூஜை திரவியம் விற்கும் கடைகள்,வெண்ணை,அப்பளாம் இத்யாதி விற்கும் கடைகள் ஏராளம். துணிமணிகள், நகைகள் வாங்க மேற்கு மாம்பல பிராமணவாசிகள் புது மாம்பலத்தில் உள்ள நல்லி,குமரன் சில்க்ஸ்,G.R.T தங் மாளிகையே அணுகினர்.இந்த கடைகளில் வேலை செய்பவர்கள் தெரிந்திருந்தால் 2 லிருந்து 5 % டிஸ்கவுண்ட் கிடைக்க வாய்ப்புண்டு.
இப்படி தள்ளுபடி கிடைத்ததும் இமய மலையையே ஏறிவிட்டதாக நினைத்து அல்ப சந்தோஷப்பட்டவர்(நான் உட்பட) அனேகம் பேர்.உண்மையில் கடைக்காரர் அடிக்கும் லாபம் குன்றளவு என்றால் நாம் பெறும் தள்ளுபடி குந்துமணி அளவுதான். என் அவிப்ராயப்படி இந்த கடைகளில் வாங்க மாட்டோம் என பிராமண சமுதாயம் பிரதிக்னை எடுத்துக்கொண்டால் இவர்களது வருமானம் 50 சதவீதத்திற்கு மேல் குறைந்து விடும்.பலர் G.R.T மாதந்திர சீட்டு ஸ்கீமில் சேர்ந்து சேமித்து முடிவில் தங்க நகைகள் வாங்குவர்.இதில் அதி வேடிக்கை என்னவென்றால் தாலிக்கு தங்கம் எடுக்கும் பல பிராமண குடும்பங்கள், G.R.T.ஓனர்(ராஜேந்திரன் என நினைக்கிறேன்)
ராசியான கையால் அதை பெற வேண்டும் என்று அடம் பிடிப்பதுதான்.G.R.T க்கு சொந்தமான ஹோட்டல்களிலும்,கல்வி நிறுவனங்களிலும் அவர்களிடம் வியாபாரம் செய்ததின் மூலம் நடுத்தர வர்க்க பிராமண சமுதாயத்திற்கு 50 சதவீதத்திற்கு மேல் பங்கு உண்டு என்று நான் வேடிக்கையாக நினைத்துக் கொள்வேன்.
*மூன்று தலைமுறை-62*
புடவைகள் எடுக்க காஞ்சிபுரம் செல்ல வாடகை கார் ஏற்பாடு பண்ணி இருந்தார் ஆத்மநாதன். அதில் ஆத்மநாதன்,சுந்தரி பஞ்சு, விசாலி ஆகியோர்கள் காஞ்சிபுரத்துக்கு பயணம் செய்தார்கள்.
ஏற்கனவே அச்சடிக்கப்பட்டிருந்த பையன், பெண் வீட்டு கல்யாண பத்திரிக்கைளை கூட எடுத்துச் சென்றார்கள். காஞ்சிபுரம் சென்றவுடன் நேராக காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு அர்ச்சனை செய்தார்கள். மிகவும் அருமையான தரிசனம் கிடைத்தது.
பின்னர் சங்கர மடத்துக்கு சென்றார்கள்.பஞ்சுவும்,ஆத்மநாதனும் பஞ்சகச்சத்துக்கு மாறினார்கள்.
விசாலியும்,சுந்தரியும் மெட்ராஸிலிருந்தே மடிசாரில்தான் இருந்தார்கள். அவர்கள் அதிர்ஷ்டம் அன்று மகா பெரியவா காஞ்சிபுரத்தில் இருந்தார். இவர்கள் போகும் போது கிட்டத்தட்ட மணி 11 இருக்கும்.
மகாபெரியவா சந்திரமௌலீஸ்வரர் பூஜையை முடித்துவிட்டு பன்னிரண்டரை மணிக்கு வெளியில் வந்தார்கள். அவர்களை தரிசிக்க இந்த இரு குடும்பமும் க்யூவில் நின்றது.அன்று இவர்களுக்கு மற்றொரு அதிர்ஷ்டம் அவ்வளவு கூட்டமில்லை. நெற்றியில் பால் வெண்ணீரும், கண்களில் பரம கிருபையும்,ஞான ஸ்வருபமாக இருந்த அவரைப்பார்த்து கூட்டத்திலிருந்த ஒருவர்
"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம்போல் மேனியில் பால் வெண்ணீரும் இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்தமாநிலத்தே’
என்று உரத்த குரலில் மகா பெரியவரை சிவஸ்ரூபமாகவே பார்த்து உணர்ச்சி வசப்பட்டுபாட "ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர"ஒலிக்கும் ஆரம்பித்தது. அமைதி திரும்பியதும் இவர்கள் நால்வரும் நமஸ்கரித்தார்கள்.
இவர்கள் முறை கடைசியாக இருந்ததால் மகா பெரியவருடன் கொஞ்ச நேரம் கூட இருக்க முடியும் என நினைத்தனர்.
மகாபெரியவா பக்கத்தில் இருந்த ஒரு தொண்டர் மகாபெரியவரிடம்
" கல்யாண பத்ரிக்கை கொடுத்துட்டு ஆசீர்வாதம் வாங்கிக்க மெட்ராஸிலிருந்து வந்திருக்கா சம்பந்தியாக போறவா" என்றார். மகாபெரியவா நால்வரையும் ஏற இறங்க தன் தீக்ஷண்யமான பார்வையால் பார்த்தார். பஞ்சாபகேசனைப்பார்த்து சொந்த ஊர் எது என்று கேட்டார்.பதில் கிடைத்தவுடன் "நோக்கு பஞ்சாபகேசன்னு பேர் போட்டுருக்கு.அது எந்த க்ஷேத்ரத்து ஸ்வாமி? உன் பேருக்கு அர்த்தம் தெரியுமா" என்றார் மகா பெரியவா .
பஞ்சு உடனே "திருவய்யாறு க்ஷேத்ர ஐயாரப்பன் சுவாமி பேர்ன்னு நினைக்றேன். அர்த்தம் தெரியலை.பெரியவா அர்த்தம் சொல்லணும்"னு வேண்டிக் கொண்டார்.
"உம்பேரை பஞ்ச,அப்பக, ஈசன் ன்னு மூணா பிரிக்கணும்.பஞ்ச என்றால் ஐஞ்சுன்னு எல்லாருக்கும் தெரியும்.அப்பக என்பது அப்பு விலிருந்து வந்தது. அப்புன்னா ஜலம். அப்பகன்னா ஜலம் நிறைந்த இடம். இங்லீஷ்ல Water body ன்னு சொல்லலாம்.ஈசன்னா ஈஸ்வரன். திருவையறில் வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவேரின்னு ஐஞ்சு ஆறுகள் பாய்றது. ஐஞ்சு ஆத்து ஜலமும் பாயற இடத்திலிருந்துண்டு நம்மளையெல்லாம் ரக்ஷிக்கும் பரம தயாளுவை ஞாபகப்படுத்ற விதமா உங்கப்பா நோக்கு இந்த பேரை வைச்சிருக்கா" என்றார் அந்த ஞானமேரு. பின்பு விசாலிலையைப் பார்த்து "நோக்கு எந்த ஊர் அம்மா" என்றார். நல்லூர் என்ற உடன் "ஆகா திவ்யமான க்ஷேத்ரம் ஆயிற்றே. கல்யாண சுந்தரேஸ்வரரையும், கிரி சுந்தரியையும் எத்தனை முறை வேண்டுமானாலும் பாத்துண்டே இருக்கலாம்"என்றார்.
"கல்யாண சுந்தரேஸ்வரர் ஒரு நாளைக்கு ஐந்து முறை நிறங்கள் மாத்திக்றார் தெரியுமா" என்று தமாஷாக சொன்னார் மகாபெரியவர். "திருவாசகம் யார் படித்திருக்கிறீர்கள்" என்று அவர் பொதுப்படையாக கேட்டபோது அங்கு அதிகம் பேர் படித்ததில்லை என்று தலையாட்டினார்கள். "மாணிக்கவாசகர் எழுதிய சிவபுராணத்தில் "நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் என்று வருகிறது.இதற்கு பலர் அர்த்தம் புரியாமல் இருக்கிறார்கள். நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரை பார்த்துதான் மாணிக்கவாசகர் பாடியிருப்பாரோ என்னவோ "என்றார் .
பின்பு ஆத்மாநாதனின் சொந்த ஊர் கோமல் என்று அறிந்ததும் "ஸ்வாமி பெயர் கிருபாகூபாரேஸ்வரர் என்றும்" ஒரு நாள் பார்வதி சிவனிடம் அவர் உலகை எப்படி இயக்கிறார் என்று கேட்க சிவனும் விளையாட்டாக பார்வதியை தன் கண்ணைப்பொத்த சொன்னர்.அப்படி செய்ததும் உலகமே இருண்டு அசைவில்லாமல் ஆனது.பார்வதி தன்னால்தானே இப்படி ஆனது என வருந்த,சிவன் "என் கையிலிருந்து வரும் ஹஸ்தா வர்ண ஜோதியில் மறையப்போகிறேன்.நீ பசுவாக வந்து என்னைத்தேடி அடைவாய்" என்றார்.பார்வதி தேவியும் பசுவாகி அலைந்து,கோமல் என்ற ஊரில் ஹஸ்த நக்ஷத்ரத்தன்று ஈசனை அடைந்தாள்" என்றார்."ஹஸ்த நக்ஷத்ரக்காராள் கோமல் சென்று கிருபாகூபாரேஸ்வரரை அவசியம் தர்சனம் செய்யணம்" என்று முடித்தார் மகாபெரியவா.
(அடியேனும் ஹஸ்த நக்ஷத்ரம்தான்.இன்னும் கோமல் செல்லும் பாக்யம் கிட்டின பாடில்லை) பின்பு அவர்களை பார்த்து "கல்யாணம் நண்ணா பண்ணுங்கோ. லவ்கீகத்தை குறச்சுண்டு, வைதீகத்துக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுங்கோ" என்றவர் பஞ்சுவை பார்த்து "பத்திரிகையில் பார்த்தேன். கார்த்திகேயன் டி.எஸ்சின்னு போட்டிருக்கு. உசந்த படிப்பா இருக்கும் போலிருக்கே. எங்கு படிச்சான் உன் உன் பிள்ளையாண்டான்" என்று கேட்டார் . "அமெரிக்காவில் படிச்சான்" என பஞ்சு கூறியதும் உடனே மகா பெரியவா "நல்லது. அமெரிக்காவில் படித்தாலும் அங்கேயே தங்கிவிடாமல் தாய்நாட்டுக்கு திரும்பி வந்திருக்கிறானே.
அதை சொல்ல வேண்டும்"என்றார். "ஆமாம்.காஞ்சி சங்கராச்சாரியார் அனுகிரகத்துடன்னு பத்ரிக்கையில் போட்டிருக்கிறீர்களே, நான் எப்படி கல்யாணம் பண்ணவேண்டும் என்று கூறியிருக்கிறேனே,
அதில் ஐந்தில் ஒரு பங்காவது செய்கிறீர்களா" என்று கேட்டார்.உடனே பஞ்சு "பெரியவா.முடிந்தவரை அப்படித்தான் நடந்து கொள்கிறோம்" என்று கூறினார்."ரொம்ப சந்தோஷம்.இந்த காலத்தில் வேத சம்ரக்ஷணம் குறஞ்சுபோச்சு. பிராமணனாக பிறந்த, ஏன் மனுஷனா பிறந்த எல்லோருடைய கடமையும் வேத சம்ரக்ஷணம் பண்றதே"என்றார். பின்பு நால்வரையும் பார்த்து "சாப்ட்டாச்சா "என்று கேட்டார் ."இல்லை" என்று அவர்கள் சொல்ல "மடத்திலேயே சாப்டூட்டு போகலாம்" என்று கூறி
பின்பு குங்குமப் பிரசாதம் கொடுத்தார. அந்த பரமேஸ்வர அவதார புருஷர்.மீண்டும் ஒர் முறை தம்பதி சமேதர்களாக அவ்விரு தம்பதிகளும் மகா பெரியவாளை நமஸ்காரம் செய்தனர்.மேற்கொண்டு தர்சனத்துக்கு யாரும் இல்லை என்று உறுதி செய்து கொண்ட கருணாமூர்த்தி
"நாராயண.நாராயண" என்று கூறிக்கொண்டே உள்ளே சென்றார்.
பஞ்சு,ஆத்மநாதன் தம்பதிகள் மகாபெரியவர் அதிக நேரம் தங்களிடம் செலவிட்டு அருள் புரிந்ததில் பரம சந்தோஷம் அடைந்தனர்.
அப்போதெல்லாம் மடத்தினுள்ளே சாப்பாடு இடம் கிடையாது.(இப்போது மடத்தின் உள்ளே ஒரே சமயம் குறைந்தது 150 பேர் உட்கார்ந்து சாப்பிடும் ஹால் இருக்கிறது). மடத்தை விட்டு வெளியில் வந்தவுடன் எதிர்த்த சாரியில் ஒரு வீட்டில் சாப்பாடு போடுவார்கள். வைதீகர்களுக்கு உண்டான பந்தி நடந்து முடிந்ததும் அடுத்த பந்தியில் பஞ்சு, ஆத்மநாதன் குடும்பமும் சாப்பிட்டார்கள்.சாப்பிட்டு வெளியில் வந்து கொஞ்ச நேரம் சிரம பரிகாரம் பண்ணிக்கொண்டு புடவைகள் வாங்க கடைக்குச் சென்றார்கள். கிட்டத்தட்ட இரண்டிலிருந்து மூன்று மணிநேரம் கடையில் செலவிட்டனர். பின்பு வெளியில் வந்து ராஜாஸ் கேப் ஹோட்டலில் காபி அருந்தியதும் ஏகாம்பரேஸ்வரர் கோயில் சென்று ஸ்வாமி தரிசனம் செய்தார்கள். காஞ்சிபுரத்தை விட்டு மெட்ராஸுக்கு திரும்பும் போது மணி ஆறை தாண்டி விட்டது.பஞ்சுவையையும்,விசாலியையும் ட்ராப் செய்யும்போது மணி எட்டே முக்கால். பின்பு ஆத்மநாதனும், சுந்தரியும் 10 மணிக்கு வீடு போய் சேர்ந்தார்கள்.
மூன்று தலைமுறை-63
விசுவின் திருமணம் களைகட்டத் தொடங்கியது. ஏற்கனவே பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டிருந்தது.பஞ்சு ஊருக்ச் சென்று அக்ரஹாரத்தில் அப்போதுள்ள ஏழு குடும்பங்களுக்கு பத்ரிக்கை கொடுத்து, கல்யாணத்திற்கு வருமாறு அழைத்தார். வயலில் வேலை செய்தவர்களுக்கும் பத்திரிக்கை கொடுத்தார். அதன்பின் நல்லூர் சென்று அங்குள்ள விசாலி சொந்தக்காரர்கள் 4 குடும்பத்திற்கு பத்ரிக்கை கொடுத்து கல்யாணத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.மயிலாப்பூர் மற்றும் கும்பகோணம் ஜோசியர்களுக்கும், மற்ற சொந்தங்களுக்கும் போஸ்டில் பத்திரிக்கை அனுப்பப்பட்டது .
விசுவும், விசாலியும் கணேசன் வீட்டிற்கு சென்று கணேசன் அப்பா,அம்மா, மற்றும் கணேசனை கல்யாணத்துக்கு வருமாறு அழைத்தார்கள். பஞ்சுவும், விசாலியும் ராமநாத சாஸ்திரிகள் வீட்டிற்கும், கனபாடிகள் வீட்டிற்கும் சென்று பத்ரிக்கைமேல் அட்சதை வைத்து அவர்களிடம் கொடுத்து,நமஸ்கரித்து அவர்களை கல்யாணத்திற்கு வந்து நடத்திக் கொடுக்குமாறு வேண்டிக் கொண்டார்கள். பஞ்சு ராமனாத சாஸ்திரிகளை இந்த கல்யாணம் தொடங்கி எல்லா விசேஷங்களுக்கும் அவரே ஆத்து சாஸ்திரிகளாக இருக்கும்படி வேண்டிக் கொண்டார். விசு தன் நண்பர்களுக்கு கொடுப்பதற்கும், ஐ.ஐ.டி யில் உள்ளவர்களுக்கு கொடுப்பதற்காகவும் ஆங்கிலத்தில் பத்திரிக்கை பிரிண்ட் செய்து இருந்தான். அதில் சிலவற்றை தனது சக ஆசிரியர்களுக்கு கொடுத்தான். மறக்காமல் மீர் ஷபீர் ஹுசைனைப்பார்த்து பத்திரிக்கை கொடுத்து கல்யாணத்திற்கு வருமாறு வற்புறுத்தி அழைத்தான்.
பின்பு 3 பத்திரிக்கைகளை தனித்தனியாக ப்ரொபசர் டெர்மனுக்கும், சுப்பிரமணியத்திற்கும்,வில்லியம்ஸ் குடும்பத்திற்கும் ஏர் மெயிலில் அனுப்பினான். பத்திரிக்கை அனுப்பிய 15 நாட்களுக்குப் பிறகு அவன் அமெரிக்காவுக்கு டிரங்கால் போட்டு முதலில் ப்ரொபசர் டெர்மனிடம் பேசினான். பத்திரிக்கை வந்து சேர்ந்தது என்றும் அதை பார்த்து மிகவும் சந்தோஷப்பட்ட தாகவும் கூறினார். "நீங்கள் அவசியம் திருமணத்திற்கு வர வேண்டும்" என்று விசு கேட்டுக் கொண்டபோது அவர் "எனக்கும் கலந்து கொள்ள ஆசைதான்.ஆனால் இப்போதுள்ள வேலை நிர்பந்தத்தால் என்னால் அங்கு வர இயலவில்லை. உனக்கும் உன்னுடைய உட்பீக்கும் எனது வாழ்த்துக்கள். உன்னையும் உன்னுடைய உட்பீயையும் ஒரு நாள் அமெரிக்காவில் சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்று கூறினார். சுப்பிரமணியம் பேசும்போது தன்னாலும் இந்த சமயத்தில் திருமணத்திற்கு வர முடியவில்லை என்றும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.ராமும், பூரணியும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள். வில்லியம்ஸ் வர முயற்சிப்பதாகவும் ஆனால் வருவது சந்தேகம்தான் என்றும் கூறினார். மேகியும், லிண்டாவும் வெளியில் சென்று இருப்பதால் அவர்கள் வந்தவுடன் விஷயத்தை கூறி விடுகிறேன் என்று கூறி தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.நடுவில் ஒரு நாள் கல்யாணப் பையன் விசுவுக்கு பொங்கிப்போட்டார்கள். கல்யாணம் ஜார்ஜ் டவுனில் நாராயண முதலித்தெருவில் உள்ள பெரிய சத்திரமான ராமானுஜ கூடத்தில் ஏற்பாடாகியிருந்தது. திங்கட்கிழமை முகூர்த்தம் என்று இருந்ததால் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே கல்யாண மண்டபத்திற்கு சென்று விடுவதாக பஞ்சு குடும்பம் தீர்மானித்து இருந்தார்கள்.
ஞாயிறு காலை 6 மணிக்கு ராமநாத சாட்சிகள் சாஸ்திரிகள் வந்திருந்து யாத்ரா தானம் செய்து வைத்தார்.பின்பு ஆத்மநாதன் அனுப்பியிருந்த மூன்று கார்களில் பஞ்சு குடும்பத்தார்களும் அவர்கள் சொந்தக்காரர்கள் ஏறிக்கொண்டு கல்யாண சாஸ்திரத்தை 7 மணிக்கு அடைந்தார்கள். வாசலிலேயே ஆத்மநாதன்,சுந்தரி சுந்தரியினுடைய அப்பா குத்தாலம் மணி ஐயர், அவருடைய மனைவி கோமளா, ராகினியின் தங்கை ரோஷ்ணி, ராகினியின் தம்பி சதீஷ் மற்றும் பலர் பையன் வீட்டு ஆட்களை வரவேற்று ஆரத்தி எடுத்தார்கள்.(ஆத்மனாதனின் தந்தை இல்லாத காரணத்தால் அவர் தாயார் வரவேற்பில் கலந்து கொள்ள முடியாத நிலைமை) காஞ்சிபுரம் நடராஜ பிள்ளையுடைய நாதஸ்வரம் ஏற்பாடாகி இருந்தது.பிள்ளை வீட்டார் வந்ததும் நாதஸ்வர கோஷ்டி ஆனந்த பைரவி வாசிக்க தொடங்கினார்கள். ஆரத்தி எடுக்கப்பட்டு விசுவுக்கு ஆரத்தி பொட்டு வைக்கப்பட்டது.
இதையெல்லாம் முன்புறத்திலுள்ள ரூமின் ஜன்னல் வழியாக ராகினியும்,அவள் உயிர்த்தோழி கல்யாணியும் யாரும் தங்களை பாரா வண்ணம் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார்கள். பின்பு பையன் வீட்டுக்காரர்கள் சத்திரத்தின் உள்ளே நுழைந்தார்கள். ஆத்மநாதன் அவர்களை அழைத்துக் கொண்டு போய் அவர்களுக்காக ஒதுக்கி இருந்து மூன்று அறைகளைக் காண்பித்தார். அறைகள் விசாலமாக இருந்தன.முதல் அறையில் விசாலம், பஞ்சு மற்றும் விசு தங்குவதாகவும் இரண்டாம் அரையில் விசுவின் தாத்தா பாட்டிகள் ராஜகோபாலய்யர், மங்களம், சுந்தரேசய்யர்,ஜானகி இருப்பார்கள் என்றும் மூன்றாவது அரையில் மற்ற சொந்தக்காரர்கள் தங்கியிருப்பார்கள் என்றும் தீர்மானம் செய்தார்கள். ஆத்மநாதன் தனது பெற்றொர்களை விசு குடும்பத்திற்கு அறிமுகப்படுத்தினார்.விசு அவர்களை நமஸ்கரித்தான்.
இருவரும் அவனை " ஸ்ரேயஸாக இருக்கணம்" என ஆசீர்வதித்தார்கள.பின்பு ஆறு பெரியவர்களும் (ராஜ கோபலய்யர், மங்களம், சுந்தரேசய்யர், ஜானகி, மணி ஐயர்,கோமளா) அந்த காலத்து நிகழ்ச்சிகளை அசைபோட்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.விசாலி பக்கத்திலிருந்து அவளுடைய ஒண்ணுவிட்ட அண்ணா சுப்புடு குடும்பமும்,விசாலியின் சித்தப்பா மகாலிங்கம் குடும்பமும் 7:30 மணிக்கு எக்மோரிலிருந்து நேராக சத்திரத்துக்கு வந்து விட்டார்கள். பத்து நிமிடங்களில் சுடச்சுட கும்பகோணம் காபி கொடுக்கப்பட்டது. காபி சாப்பிடாதவர்களுக்கு சுடச்சுட பால் மற்றும் ஹார்லிக்ஸ் தரப்பட்டது. ராமநாத சாஸ்திரிகள் அவரது மனைவியும் ஏற்கனவே பஞ்சு குடும்பத்துடனே சத்திரத்துக்கு வந்திருந்தார்கள். எட்டரை மணிக்குள் மற்ற எல்லா வைதீகாளும் வந்து விட்டார்கள். வைதீகாளுக்கு காப்பி அல்லது பால் விட்டு கஞ்சி, அவரவர் விருப்பட்டபடி கொடுக்கப்பட்டது.
ராகினியின் தோழி கல்யாணி விசுவை சந்தித்து
"எங்க உங்க பிரண்ட்ஸ் யாரும் காணோம்" என்றாள். விசுவுக்கு முதலில் புரியவில்லை. கணேசனை டிரைவின் வுட்லேண்ட்ஸில் அவளுக்கு அறிமுகப்படுத்தியது ஞாபகம் வர "ஓ.கதை இப்படிப் போகிறதோ"
என்று மனதில் நினைத்து "நீ யாரை கேட்கிறாய்"என்றான்.
கல்யாணி கன்னம் சிவக்க "நான் யாரையும் குறிப்பிட்டு கேட்கவில்லை.
பொதுவாகத்தான் கேட்டேன்" என்றாள்.விசு சிரித்துக்கொண்டே "கணேசன் வர பத்து மணி ஆய்விடும்" என்றான்.
அதை காதில் வாங்கிக்கொள்ளாத மாதிரி கல்யாணி திருப்தியுடன் நகர்ந்தாள்.விசு ஒரு கல்யாணத்தில் இன்னொமொரு கல்யாணைம் நிச்சயமாகும் என்று பெரியவர்கள் சொல்வார்களே அது உண்மைதான் போலிருக்கு என்று நினைத்து புன்னகை சிந்தினான்
மூன்று தலைமுறை - 64
ஆத்தநாதன் தம்பதிகள் பிள்ளையாத்துக்காரர்களை உட்கார வைத்து எல்லோருக்கும் சபா தாம்பூலம் கொடுத்தார்கள்.
கணேசன் அவன் அப்பா அம்மாவுடன் ஒன்பதரை மணிக்கு சத்திரத்திற்கு வந்து விட்டான்.அவர்களை பஞ்சுவும்,விசாலியும் வரவேற்று காபி கொடுத்தார்கள். கணேசன் வருவதை தூரத்தில் இருந்தே பார்த்துவிட்ட கல்யாணி ஐந்து நிமிஷம் கழித்து விசுவின் ரூமிற்கு வந்தாள்."ஏதாவது வேண்டுமா என்று கேட்டு வரச் சொன்னார்கள்" என்று கூறினாள்.
"இப்போதைக்கு ஒன்றும் தேவையில்லை கல்யாணி" என்று கூறிய விசு கணேசனைக்காட்டி "யார் வந்திருக்கிறார்கள் பார்த்தாயா"என்று கேட்க
"பார்த்தேன்.பார்த்தேன். எனக்கு அவரை நன்றாக ஞாபகம் இருக்கிறது. அவருக்கு தான் என்னை ஞாபகம் இல்லை போலிருக்கு" என்றாள் கல்யாணி. இவர்கள் பேசுவது என்னவென்று புரியாததால் கணேசன் திருதிருவென முழித்தான். பின்பு தான் அவனுக்கு அவளை டிரைவின் உட்லண்ட்ஸில் பார்த்து அறிமுகமானது ஞாபகம் வர அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். இதையெல்லாம் கணேசனின் அம்மா பார்த்துக் கொண்டிருந்தாள். "மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்று சொல்கிற மாதிரி, பார்க்க பதவிசாக இருக்கும் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவளை ட்டுப்பெண்ணாக்கி கொள்ளமாட்டோமா என்ற தாபத்தில் அவள் இருந்தாள். விசுவிடம் அவள் "யாரப்பா இந்த பெண்" என்று கேட்டாள்.
விசு "மாமி இது ராகினியின் டியர் ஃப்ரெண்ட் கல்யாணி.நம்பளவா தான் இன்னும் கல்யாணம் ஆகலைன்னு நினைக்கிறேன்.வரன் பாத்துண்டுருக்கான்னு கேள்வி" என்று போட்டுக் கொடுத்தான்.
உடனே கணேசனின் அம்மா "அவளோட தாயார், தோப்பனார் வந்திருக்காளோ" என்று கேட்டாள். எதற்கு இதை கேட்கிறாள் என புரிந்து கொண்ட விசு "அநேகமாக வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் மாமி நான் கேட்டூட்டு சொல்றேன்' என்றான் . கணேசன் சற்று கோபமாக அம்மாவைப் பார்த்து "இதெல்லாம் இப்போ தேவையா" என்றான்.
அதற்கு அவள் "நேக்கு தெரியும்.எது தேவை.எது இல்லைனு.
நீ என்னை அடக்க வேண்டாம் " என்றாள்.விசு கணேசனைப்பார்த்து "கணேசா.பெரியவாஎன்ன கேட்டாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்" என்றான்."அப்படி சொல்லுடா விசு" என விசுவை அவள் பாராட்டினாள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த விசாலிக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் புலப்பட ஆரம்பித்தது.
அந்த சமயத்தில் ராகினியின் தம்பி சதீஷ் மூச்சிரைக்க வந்து நின்றான். அவனைப்பார்த்த விசாலி" என்னடா குழந்தை.என்ன விஷயம்? என்று கேட்டாள்.நாலு ஐஞ்சு வெள்ளக்கார வந்து இவா(விசுவை சுட்டிக்காட்டி) பேரைச்சொல்லி இருக்காளா என்று கேக்கறா"என்று கூறிவிட்டு ஓட்டம் பிடித்தான்.விசுவுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.
ரூமை விட்டு வெளியே ஹாலுக்கு வந்து பார்த்தபோது அவன் கண்களை அவனால் நம்பவே முடியவில்லை. திகைப்பின் உச்சிக்கே சென்ற விசு
"ஓ!மை காட்" என்று உரக்க வாய்விட்டு கூறினான்.
மூன்று தலை முறை-65
அங்கு வில்லியம்ஸ், மேகி, லிண்டா, இன்னும் ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தார்கள்.
விசு வில்லியம்சை தழுவிக்கொண்டு "வாட் எ சர்ப்ரைஸ். நான் இதை எதிர்பார்க்கவே இல்லை டேட்" என்று கூறினான்.லிண்டாவையையும்,மேகியையும் பார்த்து கைகூப்பி "வாருங்கள்" என்றான் விசு. அதன்பின் அவர்களுடன் இருந்த அமெரிக்க இளைஞனை ஏறிட்டு பார்த்தான் விசு.இதை புரிந்து கொண்ட வில்லியம்ஸ் "இவன் லிண்டாவின் தம்பி மகன்.இவன் பெயர் ஜான் பிட்ஸ்ஜெரால்ட். ஆறு மாதமாக யூ.எஸ்.ஐ.எஸ் மெட்ராஸில் வேலை பார்க்கிறான். இவன் உதவியால்தான் நாங்கள் இங்கு இன்று வருவது மிகவும் சுலபமானது" என்றார். விசு ஜானின் கையை குலுக்கி "வெல்கம் டு மை வெட்டிங்" என்று கூற அதற்கு ஜான் "இட் ஈஸ் மை பிஷர்" என்று பதில் சொன்னான். மேலும் வில்லியம்ஸ் கூறுகையில் "உன் பத்திரிக்கை வந்தவுடனே நாங்கள் உன் திருமணத்திற்கு வர வேண்டும் என்று நிச்சயம் செய்து விட்டோம். மேகி இதை சர்ப்ரைஸாக இருக்க வேண்டும். உன்னிடம் தெரிவிக்கக் கூடாது என்று எனக்கு கட்டளை போட்டு இருந்தாள். அதனால்தான் நீ எனக்கு போன் செய்தபோது உன்னிடம் நான் வருவது சந்தேகம்தான் என்று கூறியிருந்தேன்" என்றார்.இதைக் கேட்ட விசு கலகலவென சிரித்து "இன்னும் மேகி மாறவே இல்லை" என்றான். வில்லியம்ஸ் தொடர்ந்தார் "உன்னுடைய திருமணத்தை முடித்துக்கொண்டு விட்டு நாங்கள் ஒரு வாரம் தென்னிந்தியா டூர் வைத்துக் கொண்டிருக்கிறோம்.
முக்கியமான கோவில்களையெல்லாம் பார்க்கப் போகிறோம்" என்று கூறினார் "எக்ஸலண்ட்" என்றான் விசு.பின்பு தன் தாய், தந்தை, தாத்தா,பாட்டிகளை அவர்கள் குடும்பத்திற்கு அறிமுகப்படுத்தினான் விசு.பின்பு வில்லியம்ஸ் பஞ்சுவை பார்த்து 'நீங்கள் ஒரு நல்ல மகனை பெற்றிருக்கிறீர்கள்" என்று பாராட்டினார்.
விசாலியிடம்"விசுவை நீங்கள் வளர்த்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மிக அருமையான பையன்' என்று கூறினர்.விசு அவர்களைப் பார்த்து "எங்கு தங்கியிருக்கிறீர்கள்ர்.
உங்களுக்கு ஏதாவது ரூம் புக் செய்ய வேண்டுமா" என்று கேட்டான். அதற்கு வில்லியம்ஸ்
"தேவை இல்லை விசு.ஜான் சாந்தோமில் ஒரு அப்பார்ட்மெண்ட் எடுத்துக் கொண்டிருக்கிறான்.
அவனுடைய அப்பார்ட்மெண்டில் தான் நாங்கள் தங்கி இருக்கிறோம்" என்று கூறினார். பின்பு விசு அவர்களைப் பார்த்து "காப்பி சாப்பிடுகிறீர்களா? பிளாக் காப்பியா அல்லது பால் சேர்த்த காப்பியா" என்று கேட்டான் அதற்கு வில்லியம்ஸ் "நீங்கள் என்ன சாப்பிடுவீர்களோ அதையேதான் நாங்கள் சாப்பிட போகிறோம்.அது மட்டும் இல்லை உன்னுடைய இந்த திருமணத்தை அடண்ட் செய்வதுடன்
டிபிகல் சவுத் இந்தியன் பிராமின் திருமணத்தில் என்னவெல்லாம் செய்கிறீர்கள் என்று உன்னிப்பாக கவனிக்க போகிறோம். உங்களுடைய அருமையான உணவு வகைகளை வயிறார உண்ணவும் வந்திருக்கிறோம்" என்று கூறினார். இதைக்கேட்ட விசு "கிரேட்"என்றான். எல்லோருக்கும் சுடசுட காபி வழங்கப்பட்டது. காபியை குடித்த வில்லியம்ஸ் "இது போன்ற காபியை நான் ஆயுளில் குடித்ததே இல்லை" என்று கூறினார். பின்பு விசு அவர்களை பெண் வீட்டார் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று ஆத்மநாதன், சுந்தரியிடம் அறிமுகப்படுத்தினான்.மேகி "விசு எங்கே உன் வுட்பீ அவளை நான் பார்க்க துடித்துக்கொண்டிருக்கிறேன்"என்று கூறினாள்.ராகினி 2 நிமிடம் கழித்து அவள் ரூமிலிருந்து வந்தாள். விசு இதுதான் என் would-be ராகினி" என்று கூறி அவர்களுக்கு அறிமுகப்படுத்தினான்.ராகினையைப்பார்த்து மேகி "யூ லுக் சோ ப்யூட்டிபுல். ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் ஹவ் யூ ஃபெல் பார் ஹர்" என்றாள். இதைக்கேட்ட ராகினி கன்னம் சிவந்தாள்.
பின்பு மேகி விசுவை பார்த்து "நான் இவளை எப்படி கூப்பிட வேண்டும்" என்று கேட்டாள்.அதற்கு விசு "இவளை நீ ராகினி என்றே கூப்பிடலாம்" என்று கூறினான். மேகி அவனைப் பார்த்து செல்லமாக
"நீ அப்பொழுது எப்படி இருந்தாயோ அப்படியேதான் இருக்கிறாய். நான் அதைச் சொல்லவில்லை.
உன்னை அண்ணா என்று கூப்பிட்டால் இவளை நான் எப்படி கூப்பிட வேண்டும்" என்று கேட்டாள்.இதை புரிந்து கொண்ட விசு "அப்படியா. அப்படியென்றால் நீ அவளை மன்னி என்று கூப்பிட வேண்டும்" என்று கூறினான். மேகி இரண்டு முறை மனக்துக்குள் மன்னி என்று சொல்லிக்கொண்டு பின்பு ராகினியைப் பார்த்து "ஹாய் மன்னி" என்றாள். பின்பு அவர்கள் விசுவின் இடத்திற்கு திரும்பினர்.
மேகி விசுவிடம் " உன்னுடைய திருமணத்தில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளையும் போட்டோ எடுக்கப் போகிறேன். இதில் உனக்கு ஏதும் ஆட்சேபணை இருக்கிறதா"என்று கேட்டாள். "ஆட்சேபணை ஏதும் இல்லை. மிகவும் சந்தோஷம் தான்" என்றான் விசு. "ஒவ்வொரு நிகழ்ச்சியும் போட்டோ எடுக்குமுன் அந்த நிகழ்ச்சியை பற்றி விவரங்களை ஓரளவுக்கு நான் தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.
அதற்கு ஆங்கிலம் தெரிந்த யாராவது எனக்கு உதவி செய்வார்களா" என்றாள் மேகி. பின்பு கணேசனை கூப்பிட்டு அனுப்பிய விசு அவளிடம் "கணேசன் என்னுடைய மிகவும் நெருக்கமான நண்பன்.ஆங்கிலம் நன்றாக தெரியும் அவனை உன் துணைக்கு வைத்துக் கொள்" என்றான்.கணேசன் விசுவிடம் "அதெல்லாம் சரி. எனக்கு ஆங்கிலம் தெரியும்.ஆனால் கல்யாணம் நிகழ்ச்சிகளைப் பற்றி விவரம் எனக்கு தெரியாதே" என்றான்.
"நீ கவலைப்படாதே. ராமநாத சாஸ்திரிகளிடம் தமிழில் கேட்டு உன்னால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு மேகியிடம் ஆங்கிலத்தில் சொல்லேன்" என்றான் விசு. ராமநாத சாஸ்திரிகள் அங்கே வந்து "என்னப்பா எல்லோரும் கும்பலாக பேசிக்கொண்டிருக்கிறீர்கள். மீதி காரியங்கள் நடைபெற வேண்டாமா" என்று கேட்டார்.அங்கு நான்கு வெள்ளையர்கள் நிற்பதைப் பார்த்த அவர் விசுவிடம் அவர்கள் யாரென வினவினார். "இவர்கள்தான் நான் அமெரிக்காவில் இருந்தபோது மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள். இவர் கிட்டத்தட்ட என்னை தன் மகனாக பாவித்து கொண்டிருந்தார்" என்று விசு கூறினான். வில்லியம்ஸிடம் "இவர்தான் நாங்கள் சாஸ்திரிகள் என்று கூறுவோம். இவர்தான் என் திருமணத்தை நடத்தி வைக்கப் போகிறார். இவர் வேதங்களை மிகவும் படித்தவர். இந்து முறைப்படி நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளும் இவரைப் போன்றவர்கள் தலைமையில்தான் நடத்துவார்கள். ஓரளவுக்கு சொல்ல போனால் உங்கள் சர்ச்சில் இருக்கும் பாதருக்கு இவரை நீங்கள் ஒப்பிடலாம்" என்று கூறினான். வில்லியம்ஸ் சாஸ்திரிகளைப்
பார்த்து " நமஸ்தே" என்றார். சாஸ்திரிகளும் கைகூப்பி "நமஸ்தே" என்று கூறி, தமிழில் "நீங்கள் இங்கு வந்தது எங்களுக்கெல்லாம் மிகவும் சந்தோஷம்" என்றார். அதை அவர்களுக்கு மொழிபெயர்த்தான் கணேசன். பின்பு விசு அவர்களிடம் "இங்கு வசதிகள் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் .அதை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கு எப்படி வசதியோ அப்படி இருந்து கொள்ளுங்கள்" என்று கூறினான். அதற்கு வில்லியம்ஸ்
"எங்கள் வசதிகளைப் பற்றி நீ கவலைப்படாதே. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். மேல் கொண்டு நீ என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய ஆரம்பிக்கலாம்" என்று கூற விசு ரூமுக்கு விரைந்து சென்று பஞ்சகச்சம் கட்டிக் கொள்ள ஆரம்பித்தான்.
இதற்கிடையில் கணேசன் மேகியுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ஒரு ஜோடி கண்கள் நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன.
No comments:
Post a Comment