மூன்றுதலை முறை- 70
பின்பு மதுவர்கம் மற்றும் அக்னி பிரஸ்தாபிதம் ஆயிற்று.
விசுவின் பாதங்களை அலம்பிய ஆத்மனாதன் தேன்,தயிர் கலந்த மதுவர்க்கத்தை விசுவுக்கு சாப்பிட கொடுத்தார்.
பின் கிரஹ ப்ரீதி,நவக்ரஹ ஹோமங்கள் செய்யப்பட்டன.
ராகினி ஆத்மனாதன் மடியில் அமர்ந்திருக்க, விசு கூரைப்புடவையையும், ரவிக்கையையும் சாஸ்திரிகள் சொன்ன மந்திரத்தை சொல்லி தட்டில் வைத்து கொடுத்தான். லல்லி ராகினியுடன் சென்று அவள் புடவை கட்ட உதவினாள்.(மடிசார் புடவை கட்டுவதிலுள்ள நெளிவு சுளிவுகளை தேவைப்படுபவர்களுக்கு அவர்கள் கேட்டுக்கொண்டால் தனியே அனுப்பிவைக்கிறேன்.
Thanks to google)
புடைவையை கட்டிக்கொண்ட ராகினிக்கு முன்பு அணிந்திருந்த மாலைகளை மீண்டும் அணிவித்த லல்லி அவளை மேடைக்கு அழைத்து வந்தாள். (ஏன் கூரைப்புடவை என்று சொல்கிறோம் என்பதற்கு இரண்டு விதமான விளக்கங்கள் கொடுக்கிறார்கள்.நமது தலையின் மேல் உள்ள கூரை நம்மை முழுவதும் கவர் செய்வது போல இந்தப் பெண்ணின் அணிந்து கொண்டிருக்கிற புடவை அவளை முழுவதுமாக மறைக்கிறது என்கிறார்கள். மற்றொரு விளக்கப்படி, 'க்ரூர' என்றால் கொடுமையான என்று அர்த்தம். தமிழில் இதை குரூரம் அல்லது கொடூரம் என்று சொல்கிறார்கள். கொடூரமான கண்கள் படைத்த மற்ற ஆண்களிட மிருந்து காப்பதற்காக கூரைப்புடவை அணிந்து கொள்வது என்கிறார்கள்). கூரைப்புடவை அணிந்த வந்த ராகினியின் வலக்கையை விசு பிடித்தான்.
*நுகத்தடி வைத்தலும், மாங்கல்ய தாரணமும்.* விசு ஒரு தாம்பாளத்தில் திருமாங்கல்யம் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு, அக்ஷதை புஷ்பங்கள் போட்டு பூஜித்தான்.
இதன் பின்னர் ஆத்மனாதன் முன்பு கன்னிகா தானத்தின் போது , அமர்ந்தது போல வீற்றிருக்க , அவரது மடியில் ராகினி அமர்ந்திருக்க, விசு
"இதமஹ யா த்வயீபதிக்னீ அலக்ஷ்மீ:
தாம் நிர் நிஷாமி"
என்ற மந்திரத்தை உச்சரித்த படி தனது வலது கட்டை விரலாலும் மோதிர விரலாலும் தர்பையை பிடித்து கொண்டு , ராகினியின் இரு புருவங்களிடையே துடைத்து தர்பையை மேற்கு பக்கமாக எறிந்து விட்டு கை அலம்பினான்.
(அதாவது கன்னி பருவமாய், தனது வீட்டில் செல்ல மகளாய் , வளர்ந்து வந்த அந்த பெண்ணிடம் ஏதேனும் தீய குணங்கள், தீய சக்திகள் அவளையே அழிக்க கூடிய வகையில் இருந்தால் அவை யாவும் தூக்கி எறிய படட்டும் என கருத்து)
இதன் பின்னர் விசு ராகினியின் தலைமீது தர்பையால் ஆன சிறிய பிரிமணை போல் வடமாக செய்து,அதை வைத்து, அதன் மேல் சிறிய நுகத்தடி , அதன் வலது துவாரத்தில் திருமாங்கல்யத்தை வைத்து ஜலத்தால் மந்திர ஸ்நானம் செய்தான். ஸ்வர்ணத்தில் பட்ட இந்த நீர் துவாரத்தின் வழியாக ராகினியின் தலையில் பட்டது.
"இவள், தனது உடலிளுள்ள நோய்கள் நீங்கி ஒளிவீசுபவளாக ஆக வேண்டும்" என்ற மந்திரத்தை விசு கூறினான்.
நுகத்தடி வைபவம் ஆன பின்னர்,முன்பு போல ராகினி கிழக்கு பக்கமாக உட்கார்ந்திருக்க , விசு மேற்கு பக்கமாக நின்று கொண்டான்.
"மாங்கல்ய தந்துனானேன மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாபி சுபகே த்வம் ஜீவ சரதஸ்சதம்"
(நான் சிரஞ்சீவி யாக இருப்பதற்கு காரணமான இந்த மங்கள ஸூத்திரத்தை உன் கழுத்தில் கட்டுகிறேன்.ஹே ஸெளபாக்கியவதியே,நீ நூறு வருடங்கள் சுகமாக வாழ்ந்திருப்பாயாக) என்ற மந்திரத்தை விசு உச்சரித்த போது 'கெட்டி மேளம்' 'கெட்டி மேளம்' என்று சாஸ்திரிகள் கூற, கூட்டத்தில் இருந்த பலர் வாய் மூலமாகவும், சைகை மூலமாகவும் நாதஸ்வர கோஷ்டிக்குக்கு கெட்டி மேளம் வாசிக்க கம்யூனிகேட் செய்ய,கெட்டி மேளம் அதிர,விசு ராகினியின் கழுத்தில் தாலிக் கயிற்றைக் கட்டி முதல் முடிச்சு போட்டான். பின்பு அருகில் இருந்த லல்லி இரண்டாவது முடிச்சை போட்டாள். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. பட்டுப்புடவை கட்டி நடந்துவந்த மேகி மூன்றாவது முடிச்சை போட்டாள்.இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் முன் கூட்டியே விசு,பஞ்சு,விசாலி,மேகி,ராமனாத சாஸ்திரிகள் இதை Plan செய்திருந்தார்கள். தாலி முடிந்ததிற்கு லல்லி மேகி ஆகிய இருவருக்கும் 'நாத்தனார் தாலி முடிய பணம்' தரவேண்டியதாயிறு.
இரண்டு மாங்கல்யம் உண்டு.ஒரு மாங்கல்யம் அப்பா கொடுப்பது, இன்னொரு மாங்கல்யம் புகுந்த வீட்டுக்காரர்கள்
கொடுப்பது .இந்த இரண்டு மாங்கல்யம் பக்கத்தில் இருபுறமும் இரண்டு குண்டுகள் இருக்கும்.மாங்கல்ய சரட்டில் உள்ள தங்க தகட்டில் பதிய வேண்டிய டிசைன் அந்தந்த குடும்பத்திற்கு ஏற்றமாதிரி செய்யப்படும். சபையிலிருந்தவர்கள் பூக்களையும், அக்ஷதையையும் தம்பதிகள் மேல் போட்டார்கள்.சுந்தரி செல்ல மகளுக்கு கல்யாணமான சந்தோஷத்தில் ஆனந்தக்கண்ணீர் சிந்தினாள். ஆத்மனாதனும் உணர்ச்சிவசப்பட்டார். ராகினி என்ன நினைத்தாள் என எனக்கு தெரியவில்லை.(இப்பதிவை படிக்கும் சகோதரிகள்,தாலி கட்டிக்கொண்ட போது தனுக்கிருந்த மனநிலையை விவரித்தால் தேவலை)
தாலி கட்டி முடிந்தவுடன் மேடையில் கூட்டம் அலை மோதியது. பஞ்சுவையும் விசாலியையும் பார்த்து "என்ன மாட்டுப்பெண் வந்தாளா?"என்று கேட்பதும், ஆத்மநாதன்,சுந்தரியையும் பார்த்து "என்ன மாப்பிள்ளை வந்தாரா" என்று கேட்பதுமாக எல்லோரும் இருந்தார்கள்.ராஜ கோபாலய்யர், மங்களம், சுந்தரேச ஐயர் மற்றும் ஜானகியையும் பலர் சந்தித்து "என்ன பேரன் ஆம்பண்டையாள் வந்தாளா?" என்று கேட்டார்கள். முகூர்த்தம் முடிந்ததும் எல்லோருக்கும் பைனாப்பிள் ஜூஸ் கொடுக்கப்பட்டது. மாங்கல்ய தாரணத்தின் போது கெட்டி மேளம் கொட்டுவதற்கு காரணம் ஒன்று உண்டு. மாங்கல்யதாரணம் என்ற சுப நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது கூட்டத்தில் இருக்கும் சிலர் வேறு மாதிரி(அசுப வார்த்தைகள்) ஏதாவது பேசிக் கொண்டிருந்தால் அது மேடையில் இருப்பவர்களுக்கு கேட்கக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக கெட்டுமேளம் கொட்டப்படுகிறது.
விசுவுக்கும்,ராகினிக்கும் கைலாகு(Shake hand) கொடுக்க வந்த சிலரை ராமனாத சாஸ்திரிகள் "இப்போது Shake hand செய்யாதீங்கோ.எப்ப செய்யலாமோ அப்போ நானே சொல்றேன்" என்றார்.
சிலர் தாலி கட்டுவது நமது வேதங்களில் குறிப்பிடவில்லை எனவும்,பிற்காலத்தில் நடைமுறைக்கு வந்ததாகவும் சொல்கிறார்கள்.
"தாலி"என்ற சமஸ்க்ருத வார்த்தைக்கு தமிழில்
'பனை ஓலை' என அர்த்தம். பழங்காலங்களில் பெண் திருமணமானவள் என்று பிறருக்கு தெரிவிக்க அவள்" இன்னாருடைய மனைவி' என பனை ஓலையில் எழுதி அவள் கழுத்தில் கட்டினார்கள் என்கிறார்கள்.வசதிக்கேற்ப
பிற்காலங்களில் பனை ஓலைக்கு பதில் தங்கம் பயன்படுத்த தொடங்கினார்கள் என்று சிலர் கருதுகிறார்கள்.
ஆனால் அம்பிகையின் மகிமையை போற்றும் லலிதா சகஸ்ர நாமத்தில், "காமேச பத்த மாங்கல்ய சுத்ர சோபித கந்தரா" என அம்பிகை போற்றப் படுகிறாள்.இதன் பொருள்: அம்பிகை, சிவபெருமானால் கட்டப்பட்ட திருமாங்கல்ய சரடு அலங்கரிக்கும் அழகான கழுத்தை உடையவள் என பொருள். எத்தனையோ ஆயிரம், ஆயிரம் ஆபரணங்களை அணிந்து இருந்தாலும் அம்பிகைக்கு அழகு சேர்ப்பது மாங்கல்யம் சூடியிருக்கும் மஞ்சள் கயிறுதான்.
நான் எழுதிய ஸ்லோகமும் அதன் விளக்கமும் சரியா என லலிதா சகஸ்ரநாமத்தை அறிந்த பண்டிதர்கள் கூறவேண்டும்.தவறு ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும்.
இந்த காலங்களில் சில திருமணமான பெண்கள் தாலியை கழற்றி ஆணியில் மாட்டி விடுகிறார்கள். தாலி வேதத்தில் குறிப்பிடவில்லை என அவர்களுக்குத் தெரியுமோ என்னமோ!
சில பெண்கள் தாலியிலுள்ள மஞ்சள் சரடு கழுத்தில் அலர்ஜி எற்படுத்துவதாக கூறுகிறார்கள்.தற்காலத்தில் எல்லாவற்றிலும் கலப்படம் இருப்பது போல தாலி சரடில் தடவப்படும் மஞ்சளிலும் கலப்படம் உள்ளதோ?
இப்போது 70 வயதுக்கு மேல் இருக்கும் சில சுமங்கலி மாமிகளின் நெற்றியில் கலப்பட குங்குமம் தொடர்ந்து வைத்துக் கொண்டதின் விளைவாக தோல் நிறம் மாறி இருக்கும்.நவீன சுமங்கலிகள் ஸ்டிக்கர் பொட்டு வைத்துக்கொள்வதால் இந்த கவலை இல்லை!
மூன்று தலை முறை- 71
தாலி கட்டி முடிந்தவுடன் விசுவும்,ராகினியும் சேர்ந்து முதலில் ராஜகோபலய்யர், மங்களத்தை நமஸ்காரம் செய்தனர். அவர்கள் மேல் அக்ஷதையை தூவிய தாத்தா,பாட்டி இருவரும் அவர்களை பதினாரும் பெற்று பெருவாழ்வு வாழ ஆசீர்வதித்தனர்.
பின்னர் சுந்தரேசய்யர்,ஜானகி,பஞ்சு, விசாலி, ஆத்மனாதன், சுந்தரி, ராமனாத சாஸ்திரிகள் ,அவர் மனைவி,கனபாடிகள், அவர் மனைவி ஆகிய தம்பதிகளையும், ஆத்மனாதனின் தாயாரையும் மற்ற பெரியவர்களையும் விசுவும், மனைவி ராகினியும் நமஸ்கரித்து ஆசீர்வாதம் வாங்கினார்கள்.
ஒவ்வொரு நமஸ்காரத்தின் போதும் குனிந்து, கீழே விழுந்து, எழுந்து,நிமிர்ந்து பின்னர் மீண்டும் குனிந்து கீழே விழுந்து..........செய்யும் எக்ஸர்சைஸ் முதுகு வலி உள்ளவர்களை பாடாய் படுத்தும்.
முதுகு வலி இல்லாதவர்களுக்கு முதுகு வலியை உண்டுபண்ணி விடும்.
ராகினியின் கால் கட்டை விரலுக்கு அடுத்த விரல்களில் ராகினியின் ஒண்ணு விட்ட மாமி மெட்டி அணிவித்தாள்.
ஒவ்வொரு விரல்களிலும் மூன்று மெட்டிகள் இருக்க வேண்டும் என்பது கணக்கு.பின்பு விசுவும் ராகினியும் கைகளை கோர்த்துக் கொண்டு அக்னியை வலம் வந்தார்கள்.அதன்பின் விசு மணைப்பலகையில் உட்கார ராகினி அவனது வலப்புறம் அமர்ந்தாள்.இதன் பிறகு சப்தபதி ஆரம்பிக்கப்பட்டது. கல்யாணத்தின் முக்கியப் பகுதியான சப்தபதி தொடங்குமுன் ராமனாத சாஸ்திரிகள் உரக்க ”திருமாங்கல்யம் அணிவிக்கிறதை விடவும் இந்த சப்தபதிதான், மணமக்கள் தாம்பத்திய வாழ்க்கையில அடியெடுத்து வைக்கிறதுக்கான முக்கிய சடங்கு. அதனால, அது முடியற வரைக்கும் யாரும் மேடை ஏறி வந்து, தம்பதிக்குக் கைலாகு கொடுக்க வேண்டாம். அப்புறம் கல்யாணம் நடக்கிற இந்த மேடைங்கிறது ஒரு புனிதமான இடம். அதனால, மேடை ஏறி வறவா தயவு பண்ணி காலணிகளை கீழேயே கழட்டிப் போட்டுட்டு வாங்கோ" கூறினார்.
இந்திய இந்து சட்டம் இந்த சப்தபதிக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்த 'சப்தபதி' முடிந்தால்தான் முழுமையாகத் திருமணம் நிறைவேறியதாக அது ஏற்றுக்கொள்கிறது. மணமகன் தன்
இடதுகையால் மணமகளின் வலது கால் கட்டைவிரலை பிடித்து வடக்கு அல்லது மேற்கு நோக்கி , அவளை ஏழு அடிகள் எடுத்து வைக்கச் செய்கிறான். இந்த ஏழு அடிகளையும் யோக பூமியாகப் பாவித்து அவற்றின் மூலம், அவளுடைய உயிரைத் தன் உயிரோடு சேர்த்து, ஓருயிராக இணைத்துக் கொள்கிறான். அப்போது சொல்லப்படும் மந்திரத்தின் பொருள்:
ஏழு அடிகளைத் தாண்டிய நீ எனக்கு வாழ்க்கையில் தோழியாக வேண்டும். இதன்மூலம் நான் உன் நட்பை அடைகிறேன். நண்பர்களாகிய நாம் ஒருவிதமாகச் சங்கற்பம் செய்து கொள்வோம். நல்ல அன்புள்ளவர்களாகவும், ஒருவரை ஒருவர் விரும்பி நேசிக்கிறவர்களாகவும், உணவையும் - பலத்தையும் சேர்ந்து அனுபவிப்பவர்களாகவும், பரஸ்பரம் நல்ல ருசி உள்ளவர்களாகவும் வாழ்வோம். நமக்குள் எல்லா விதத்திலும் கருத்து ஒற்றுமை நிலவட்டும். இல்லற தர்மத்தை இணைந்து கடைப்பிடிப்போம். விரதங்களை சேர்ந்து அனுபவிப்போம். நான் ஸாமாவாக இருக்கிறேன்; நீ ருக்காக இருக்கிறாய். நான் மேலுலகமாக இருக்கிறேன்; நீ பூமியாக இருக்கிறாய். நான் சுக்கிலமாக இருக்கிறேன்; நீ சுக்கிலத்தை தரிப்பவளாக இருக்கிறாய். இவ்விதம் ஒற்றுமையாக வாழ்ந்து குழந்தைகளையும் - பிற செல்வங்களையும் அடைவதற்காகவும், இன்சொல் உள்ளவளே நீ வருவாயாக!".
இந்த மந்திரத்திற்கு 'ஸகா' என்று பெயர்.
விசுவும் ராகினியும் சப்தபதி முடித்தவுடன் பாயில் அமர்ந்தார்கள். ராகினி வலக்கையால் விசுவை தொட்டுக்கொள்ள விசு பத்து ஹோம மந்திரங்கள் சொல்லி, 16 ஆகுதிகள் நெய்யை ஹோம குண்டத்ததில் வார்த்து ஹோமம் செய்தான்.பின்னர் அம்மி மிதிக்கும் சடங்கை செய்யத்தொடங்கினர். இது முடிந்தால்தான் சப்தபதி முடிந்ததாக கருதப்படும்.விசு ராகினியின் வலக்கால் கட்டைவிரலைப் பிடித்து, அக்னிக்கு வலதுபுறம்,ஏற்கனவே கோலம் போட்டு வைக்கப்பட்டிருந்த அம்மி மீது ஏற்றி வைத்தான்.அப்போது கூறப்படும் மந்திரத்தின் பொருள்.
"இந்தக் கல்லின் மீது ஏறி நிற்பாயாக. இந்தக் கல்லைப்போல நீ மனம்கலங்காமல் உறுதியாக இருக்க வேண்டும். இல்லற வாழ்வில் உனக்கு ஏற்படும் இடர்களைப் பொறுத்துச் சகித்துக் கொள்ள வேண்டும். எது வந்தாலும் அசையாமல் ஏற்றுக்கொள்" என்று கூறி, மனோதத்துவ அடிப்படையில் அவளுக்கு மனோபலம் அளிக்கிறான். எந்த உலோகத்தையும்விடக் கல் உறுதியானது. வளைக்கவோ, உருக்கவோ முடியாதது. அதனால்தான் இந்த பாவனைக்கு மிக உறுதியான கல்லான அம்மியை வைத்து உபயோகிக்கிறார்கள்.
பின்பு லஜா ஹோமம். லஜா என்றால் பொரி ஆகும்.
இன்னொரு முக்கியமான சடங்கு பொரியிடுதல் .திருமணத்திற்கு முன்பு தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகள் அக்னியில் இடும் பொரி போல பொசுங்கி விட வேண்டும் என்பதற்காக இந்த ஹோமம்.ராகினி உள்ளங்கையை விரித்து மேல் பக்கம் குழித்து காட்ட,அதன் மேல் சிறிது நெய் தடவி,அவள் தம்பி பொரியை அவள் குவித்த உள்ளங்கையில் போட,விசு அதன் மேல் நெய்யை விட, பொரி அக்னியில் இடப்பட்டது.
ராகினியின் தம்பிக்கு தாம்பூலமும் 100 ரூபாய் பணமும் தரப்பட்டது. விசு ராகினி இடுப்பை சுற்றி கட்டி இருந்த தர்ப்பை கயிற்றை அவிழ்த்து மேற்கே வைத்து பின் கை அலம்பினான்.
அருந்ததி தரிசனம்:
அதன்பின் மணமக்கள் அருந்ததி தரிசனம் செய்தார்கள். இதன் பொருள் என்ன? சப்தரிஷிகளின் ஒருவரான வசிஷ்டரின் மனைவி அருந்ததி. வானில் உள்ள நட்சத்திர மண்டலங்களில் சப்த ரிஷி மண்டலம் ஒன்று. வசிஷ்டர் முதலான சப்தரிஷிகளே நட்சத்திரங்களாகத் திகழ்கின்றனர். இந்த நட்சத்திரத் தொகுப்பில் வசிஷ்டர் நட்சத்திரத்துடன் இணைந்தாற்போல் இருக்கும் நட்சத்திரமே அருந்ததி. வாழ்க்கையில் எந்த நிலையிலும் ஒருவரை ஒருவர் பிரியாமல், இணைந்தே இருக்கவேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதே அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சி. நிறைவாக, மணமக்களுக்குப் பெரியவர்கள் அட்சதை போட்டு ஆசி கூறுகிறார்கள். ஆசீர்வாதம் செய்ய வருபவர்களுக்கு பன்னீரும் - சந்தனமும் தருகிறார்கள், ஏன் தெரியுமா? இந்த மணமக்களைப் பற்றி சிலர் பல்வேறு காரணமாக பகை கொண்டிருந்தாலும், அந்த வினாடியில் கசப்பு மாறி, குளுமையாகவும் - இனிமையாகவும் ஆசி வழங்கத்தான் பன்னீர், சந்தனம், கற்கண்டு விநியோகம்.
பின்னர் பிரவேச ஹோமம், ஔபாசனம், கந்தர்வ பூஜை, சேஷ ஹோமம் போன்ற சடங்குகள் செய்யப்பட்டன.
மேலே கூறிய எல்லாவற்றையும் பற்றி விவரமாக எழுதத்தான் நினைத்தேன். ஆனால் கதை வளர்ந்து கொண்டே போகிறது.இந்த கல்யாணத்துக்கு பிறகு விசாலி,பஞ்சு, விசு,ராகினியின் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை சொல்ல வேண்டியதாகிறது. எனவே சில சடங்குகள் முக்கியமாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் அவற்றை சுருக்கமாக சொல்லி,கடந்து போக வேண்டி இருக்கிறது.
அங்குள்ள அனைவருக்கும் தாம்பூலத்தில் ஐந்து ரூபாய் நாணயம் வைத்து 'பலதானம்' செய்யப்பட்டது. பின்னர் ஆசீர்வாதம் தொடர்ந்தது.
நெருங்கிய உறவினர்கள் ஆசீர்வாதம் முடிந்தவுடன், மற்றவர்கள் ஆசீர்வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மணமகளுக்கும் மணமகனுக்கும் ஆசீர்வாத கிப்டையோ, பணத்தையோ சாஸ்திரிகள் மந்திரம் சொல்லிக் ஓதியிட்டார்.
விசுவுக்கு பக்கத்தில் அமர்ந்த மகாலிங்கமும் ராகினிக்கு பக்கத்தில் அமர்ந்து அவளது சொந்தக்காரர் ஒருவரும் ஆசீர்வாதத்திற்கு வந்திருந்த பணம் மற்றும் கிப்ட் விஷயங்களை அவரவர்கள் நோட்புக்கில் மும்முரமாக ஒன்றுவிடாமல் எழுதிக் கொண்டிருந்தார்கள். ஏதாவது விட்டுப் போயிருந்தால் அவர்களது சாஸ்திரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்கள்
வில்லியம்ஸ் தன்னுடைய ஆசீர்வாதமாக ஒரு கிப்ட் பேக்கை கொடுத்து,மீண்டும் இரண்டு கிப்ட் பேக்குகளை (ஒன்று ப்ரொபசர் டெர்மன் கொடுத்தது, அடுத்தது சுப்பிரமணியன் கொடுத்தது) கொடுத்தார். கிட்டத்தட்ட இந்த நிகழ்ச்சியுடன் கல்யாண சடங்குககள் எல்லாம் முடிந்தது என்று நாம் வைத்துக் கொள்ளலாம்.இனி முக்கியமான கல்யாண சாப்பாடு தான். மெனுவைப் பார்த்தவுடன் எனக்கு நாக்கில் ஜலம் ஊற ஆரம்பித்துவிட்டது.
இதைப் போன்ற கல்யாண சாப்பாடு சாப்பிட்டு எத்தனை நாள் ஆகிவிட்டது.
கோவிட் கண்றாவி காரணமாக கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடமாக பல கல்யாணங்களுக்கு செல்லாமல் விட்டுக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. கடவுள் கிருபையால் கோவிடிலிருந்து
மீண்டு ஏதாவது ஒரு கல்யாணத்தில் கல்யாண சாப்பாடு சாப்பிட வேண்டும் என்ற ஆசை நிறைவேறும் நாள் எதுவோ.அந்த ஈஸ்வரனுக்கே வெளிச்சம்
No comments:
Post a Comment