Thursday, June 22, 2023

மூன்றுதலை முறை 68 - 69

 மூன்று தலை முறை-68

By N Krishnamurthy 

 திங்கட்கிழமை காலை பொழுது புலர்ந்தது. 5:30 மணிக்கே வில்லியம்ஸ் குடும்பத்தினர் வந்துவிட்டனர். வந்த போது அவர்கள் அவர்களது உடையிலிருந்தார்கள். கையிலுள்ள பையில் வேஷ்டி, சட்டை, மேகிக்கு புடவை,லிண்டாவுக்கு புடவை ஆகியவை கொண்டு வந்திருந்தார்கள். ஜான் லீவு இல்லாததால் வர முடியவில்லை.

இருப்பினும் சாயங்காலம் பர்மிஷன் போட்டுவிட்டு வருவதாக வாக்களித்திருந்தான்.

தன்னுடைய காரில் டிரைவரை விட்டு இவர்களை கொண்டுவிட சொல்லியிருந்தான்.

கணேசன் வில்லியம்ஸுக்கு வேஷ்டி கட்டுவது எப்படி என்று டெமோ செய்தான்.வில்லியம்ஸின் வேஷ்டி அவிழ்ந்து விழு(டு)வேன் என்று அடம் பிடிக்க,அவர் அதை பெல்ட் உதவியுடன் அடக்கினார்.மேகிக்கும்,லிண்டாவுக்கும் விசாலி புடவை கட்டி விட்டாள்.பின்பு நெற்றியில் குங்குமம் இட்டாள்.அவர்கள் கொண்டையில் ஜாதி(இப்போதெல்லாம் ஜாதி என்று சொல்லக்கூடாதாம்) மல்லிப்பூவை சூட்டிக்கொண்டார்கள்.மேகி போட்டோ எடுக்க தயாரானாள்.

காலை பெண் வீட்டார்கள் விசுவின்  தலையில் எண்ணெய் வைக்க விசு மங்கள ஸ்நானம் செய்தான்.பழைய காலங்களில் இதற்கு முன்பு கல்யாணப்பையனுக்கு நாவிதரால் வபனம் செய்யப்படும். இப்போதெல்லாம் அது இல்லை.

மற்ற குலதெய்வ பூஜைகள் ஆரம்பமாயின.

விசுவுக்கு ராமனாத சாஸ்திரிகள் பஞ்சகச்சம் கட்டி விட்டார்.திருஷ்டி பொட்டு இடப்பட்டது. காசி யாத்திரை / பரதேசிக்கோலம். ஆரம்பமானது.ஒர் கையில் வாக்கிங் ஸ்டிக்,மறு கையில் பனை ஓலை விசிறி,காலில் பேட்டா ஷூ கம்பனியில் 49 ருபாய் தொண்ணுத்து ஒன்பது  நயாபைசாவுக்கு வாங்கிய செருப்பு இத்யாதிகளுடன் விசு காசி யாத்திரைக்கு புறப்பட்டான்.(நியாயமாக மைத்துனன், இப்ராகிம் செய்ட் கடையில் வாங்கின மான் மார்க் குடையை பிடிக்க வேண்டும்.ஆனால் பள்ளி செல்லும் குட்டி மைத்துனனுக்கு உயரம் போதாததால் ராகினியின் மாமா ராம சேஷுவே குடை பிடிக்க வேண்டியதாயிற்று) பரதேசி கோலத்தைப்பற்றி கணேசன் மேகியிடம் விளக்கினான்.

"வட இந்தியாவில் இருக்கும் கங்கை நதி பாயும் காசி இந்துக்களுக்கு புனிதமான இடம் .

கல்யாணப்பையன் காசிக்கு சென்றுமேலும் படித்து பின்னர் சன்யாசி ஆவதற்காக காசி யாத்ரை போவதாக ஐதிகம். பெண்ணைப் பெற்றவர்  இரண்டு தேங்காய்களை மாப்பிள்ளை ஆகப்போகிறவரிடம்   கொடுத்து, அவர் மனதை கலைத்து, தனது மகளை அவருக்கு மணம் செய்து வைப்பதாக ஆசை காட்டி அவரை மண்டபத்தின் உள்ளே அழைத்து வருவார்" என்று விளக்கினான்.

பிறகு ஊஞ்சல். மாப்பிள்ளை விசு ஊஞ்சலில் உட்கார்ந்து இருக்க ராகினியை அலங்கரித்து, லல்லியும், பெண்ணின் மாமா ராமசேஷுவும்  அழைத்து வந்து ஊஞ்சலில் உட்கார வைத்தார்கள்.

சில குடும்ப வழக்கப்படி பெண் 9 கெஜ புடவை மடிசார் கட்டிக்கொண்டு வருவாள்.

சில இடங்களில் ஆறு கஜ புடவை ( மாம்பழகொடுக்கு) உடுத்தி வருவாள்.

தொடர்ந்தது மாலை மாற்றுதல். பெண் கழுத்தில் 3 ( மாற்று மாலைகள்) மாலைகளும் பிள்ளை கழுத்தில் 2 மாலைகளும் இருக்க வேண்டும்.

முதலில் ராகினி விசுவுக்கு மாலையிட்டாள். மாமா  ராமசேஷு மாலை எடுத்துக் கொடுத்தார்.விசுவை அவன் மாமா சுப்புடு தோளில் தூக்கியிருந்ததால் ராகினையை தோளில் தூக்கியிருந்த ராமசேஷூவுக்கு உயரம் எட்டாததால் ராமசேஷூ காலை அந்நியாயத்துக்கு உயர்த்த வேண்டி இருந்தது.இதை கூடியிருந்த கும்பல் ரசித்து கை கொட்டியது.இது போன்றே விசுவைத்தூக்கிய சுப்புடுவும் விசு ராகினி கழுத்தில் மாலையை போட்டபோது சிரமபட்டது கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

நாதஸ்வரக்காரார் "மாலை மாற்றினார்" பாடலை இசைக்கத்தொடங்கினார். அடுத்து  அடுத்து இருவரும் ஊஞ்சலில் அமர்ந்து ஆட ஆரம்பித்தார்கள்.

இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் ஊஞ்சல் ஆடும்போது மணப்பையன் கால்கள் மட்டும்தான் பூமியுடன் கான்டேக்ட்டில் இருக்க வேண்டுமாம். ஏனென்றால் அவன்தான் குடும்பத்தின் கண்ட்ரோலிங் அத்தாரிட்டியாம்! சுந்தரி பக்கத்திலிருந்த மாமி"கன்னூஞ்சல்  ஆடி  இருந்தார் காஞ்சன   மாலை  மன மகிழ்ந்தாள் .பொன்னூஞ்சலில்  பூரித்து  பூஷணங்கள் தரித்து

ஈஸ்வரனார் இடத்தில்   ஆசைகள்  ரொம்ப  வைத்து,அசைந்து  சங்கிலி   ஆட, ஊர்வசி  பாட,

இசைந்து  தாளங்கள்  போட

ஈஸ்வரனார்  கொண்டாட,

உத்தமி  பெற்ற குமாரி, நித்ய ஸர்வாலங்காரி

பக்தர்கள்  பாப  ஸம்ஹாரி  பத்ம  முக ஒய்யாரி " என்று பாடினாள்.

மாப்பிள்ளை, பெண்ணுக்கு சுமங்கலிகள் பால் பழம்  கொடுத்தார்கள்.

காலிலும் இருவருக்கும் பால் இட்ட போது விசாலி  "பாலாலே காலலம்பி

பட்டால துடைத்து மணி தேங்காய் கையில் கொடுத்து மஞ்சள் நீர் சுழற்றி" என்ற லாலி பாடலை பாடலானாள்.

அடுத்து பிடி சுற்றி போடுவது. திருஷ்டி சுற்றி போடுவது போல நான்கு திசைகளிலும் ஒரு உருண்டை மாப்பிள்ளை, பெண்ணை இடமிருந்து வலமாக  இரண்டு வீட்டு சுமங்கலிகளும் சுற்றிப்போட ஆரம்பித்தார்கள்.

மேகிக்கு உற்சாகம் கரை புரண்டது."கணேசன்.

Why do these ladies rotate these colour rice balls around the heads of visu & Ragini & throwing them away" என்றாள்.கணேசனுக்கு இதற்கு சரியான விளக்கம் தன்னிடம்  இல்லாததால்  "இதுவும் கல்யாணத்தில் ஒரு முக்கிய சடங்கு" என்று கூறி சமாளித்தான் கணேசன்.

இந்த சமயத்தில் தான் அந்த நிகழ்ச்சி நடந்தது. ஆத்மநாதன் மேடையில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவருடைய ஆபீஸ் அட்டெண்டர்  ரங்கு கவலையை முகத்தில் தேக்கிக்கொண்டு வந்து  அவர் காதில் எதையோ கிசுகிசுத்தான். அதைத் கேட்ட ஆத்மநாதன் முகம் முதலில் சிறிதளவு கவலை காட்டினாலும் பின்பு ரங்குவைப் பார்த்து 

"நீ போய் சுதாகரை அழைத்துக்கொண்டு வா" என்று கூறினார். ரங்கு தான் பந்தி விஜாரணை செய்து கொண்டிருந்தான்.

சுதாகர் வந்ததும் ஆத்மநாதன் அவனுடைய காதில் விஷயத்தை கூறினார்.சுதாகர் "நீங்க கவலையை விடுங்க. நான் பாத்துகிறேன்" என்றான். சுதாகர் விஷயத்தை சரி செய்து விடுவான் என்ற திருப்தி ஆத்மநாதன் முகத்தில் தெரிந்தது.சுதாகர் ஆத்மநாதன் கீழ் பணிபுரியும் அக்கவுண்டன்ட். அதி புத்திசாலி.அவன் தான் அவருடைய Solution Provider.எப்படிப்பட்ட ப்ராப்ளம் வந்தாலும் அவன் சரி செய்து விடுவான். அக்காலத்தில் கம்ப்யூடரைஸ்டு பேங்கிங் சிஸ்டம் கிடையாது.  தினந்தோறும் கிரெடிட் டெபிட்டுகளை பேலன்ஸ் செய்ய வேண்டும்.சில சமயம் 10. பைசா  வித்தியாசத்தில் அக்கவூண்ட் பேலன்ஸ் ஆகாது.உதைக்கும். அது எதனால் வருகிறது என்று கண்டுபிடிப்பதற்கு நிறைய நேரம் செலவிட வேண்டி வரும்.ஆனால் சுதாகர் அதை ஐந்து நிமிடத்தில் கண்டு பிடித்து விடுவான் அதோடு மட்டுமில்லாமல் வங்கி  ஊழியர்களிடையே ஏற்படும் சச்சரவுகளை மிகச் சரியாக தீர்த்து விடுவான். சுதாகர் நேரே டைனிங் ஹாலுக்கு சென்றான். பிரேக்பாஸ்ட் பந்தி  நடந்துகொண்டிருந்தது. விசாலியின் சித்தப்பா மகாலிங்கம் உரத்த குரலில்  கத்திக் கொண்டிருந்தார். ஆகாயத்திற்கும் பூமிக்குமாக எகிறினார். "என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இதுதான் நீங்க பந்தி விஜாரிக்கும் லக்ஷணமா? நான் யார் தெரியுமா?நான் நினைத்தால் கல்யாணத்தை நிறுத்த முடியும் தெரியுமா"என்று வாய்க்கு வந்தபடி எல்லாம் கத்தி கொண்டிருந்தார். அல்ப விஷயம். அவருடைய பேரன் பிரேக்பாஸ்ட் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது மீதமுள்ள ஒரு பூரிக்கு மசாலா கேட்டிருக்கிறான்.(ஏற்கனவே குழந்தை மூன்று பூரியை சாப்பிட்டாய்விட்டது) பரிமாறுபவர் மசாலா தீர்ந்துவிட்டதால், திருப்பிக் கொண்டு வருவதாகக் கூறிச் சென்றிருக்கிறார். அப்புறம் அதை அவர் மறந்து விட்டார்.ஐந்து நிமிடம் வெயிட் செய்து பார்த்த மகாலிங்கத்துக்கு  மசாலா வராததால் கோவம் வந்துவிட்டது. ரங்கு வால் சமாளிக்க முடியவில்லை.சுதாகர் அவரிடம் "சார் .குழந்தையை உட்கார சொல்லுங்கோ. நான் மசாலா போட சொல்கிறேன்" என்றான். இதைக்கேட்டவர் "இதை விட பெரிய அவமானம் ஒன்றும் வேண்டாம்.நான் மசாலாவுக்கு வக்கில்லாதவன் என்று நினைத்துவிட்டீர்களா .

நீங்க சமாதானம் பேச வந்திருக்கிறார்களாக்கும்?" என்று காட்டுக்கத்தல் கத்தினார். சுதாகர் "சார். நான் சமாதானம் பேச வரவில்லை. இரண்டு பக்கமும் சரியாக இருந்தால்தான் சமாதானம் பேச வேண்டும்.எங்க பக்கத்தில் தவறு நடந்திருக்கிறது. தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்.

அத்துடன் பரிமாறியவரையும் உங்களிடம் மன்னிப்பு கேட்கச் சொல்கிறேன்.நீங்க பெரியவா.நீங்க எங்க தப்பை மன்னிச்சேன்னு சொல்லணம்" என்றான்.இதை மகாலிங்கம் எதிர்பார்க்கவில்லை.

மன்னிப்பு கேட்பது  சண்டையில் போடும் பிரம்மாஸ்திரம் போன்றது. இதற்குமேல் வேறு அஸ்திரம் கிடையாது.எப்படிப்பட்ட எதிரியையும் இது வீழ்த்தி விடும். பரிமாறினவரை கூப்பிட்டு" சாரிடம் மன்னிப்பு கேள்.

சார் யாரென்று தெரியுமா உனக்கு.நீ பண்ண தப்புக்கு வேறு யாராவது இருந்தால் நடப்பதே வேற.ஏதோ இவரா இருந்தவாசி நம்பளையெல்லாம் மன்னிச்சூட்டார்" என்று கத்தினான் சுதாகர். இது ஒருநாடகம்.

ஏற்கனவே பறிமாறியவருடன் ஒத்திகை பார்க்கப்பட்டது.  பறிமாறியவர்

"சார். மன்னிச்சுக்கோங்கோ.ஞாபக மறதியால் மறுபடியும் மசாலா போட மறந்துவிட்டு விட்டேன்"என்றார்.இதையெல்லாம் கேட்டதும் மகாலிங்கத்தின் கோபம் பொங்கின பால் மேல் ஜலம் தெளித்த மாதிரி 'புஸ்' என்று அடங்கியது. ஒன்றுமில்லாத விஷயத்தை பெரிது படுத்த விட்டோமோ என்று மனதில் ஒரு உறுத்தலும் எழுந்தது.  "சரி.சரி.விடுங்கோ கல்யாணத்திலெல்லாம் இது போல நடப்பது சகஜம்தான்.ஆமாம் உங்க பேர் என்ன" என்றார்.

"சுதாகர் சார்.ஆனா நீங்க சுருக்கி சுதான்னு கூப்படலாம்"என்றான் 

மகாலிங்கத்தை அடக்கிய களிப்பில்.சுதாகர் அவரிடம் "சார்,உங்களுக்கு எப்போ என்ன வேணும்னாலும் என்னை கேளுங்கோ நான் உங்களுக்கு ஏற்பாடு பண்றேன்"என்றார்.மகாங்கம் "சரி சுதா.உனக்கு ஆயிரம் வேலை இருக்கும்.நீ வேலையை பாரு"  என்று சொல்லிவிட்டு அவர் சென்றார்.சுதாகர் ஆத்மனாதனிடம் சென்று "சார்.விஷயம் சுமுகமாக  முடிந்துவிட்டது"என்று கூற ஆத்மநாதன் முகம் பெரும் மழை அடித்து விட்டு விட்ட பின் இருக்கும் சூரியனைப் போன்ற பிரகாசம் அடைந்தது.என்னுடைய பதிவை படிக்கும் சில நண்பர்கள் கல்யாணத்தில் சம்பந்தி சண்டை அவசியம் இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.பஞ்சுவும் ஆத்மநாதனும்  மிக மிக  அஹிம்சாவாதிகள் அவர்ளுக்கு  சண்டை போட வாய்ப்பில்லை என்பதால் இப்படி ஒரு சண்டை நான் எழுத வேண்டி இருந்தது.அந்த காலத்தில் நிறைய கல்யாணங்களில் இதுபோன்ற  சண்டைகள் மிக சகஜமாக நடக்கும்.இதில் வேடிக்கை  என்னவென்றால் இது போன்று சண்டை போடுபவர்கள் சம்மந்திகளுக்கு மிக நெருக்கமான உறவினர்களாக இருக்க மாட்டார்கள்.

அதோடு இந்த மாதிரி சண்டையை எப்படி  ஆரம்பிக்கலாம் என்று காரணத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

 மூன்றுதலை முறை-69

இன்றைய பதிவுக்கு போவதற்கு முன் நான் ஒரு (ராஜாவைய்யர் சமயலை விட) சுவையான விஷயத்தை உங்களிடம் பகிர நினைக்கிறேன். அதுதான் ஜானவாசத்தின் பெயர்க்காரணம்.வெட்கத்தை விட்டு சொல்லவேண்டுமானால் என்னுடைய இப்போது நடக்கும் எழுபத்தி நான்கு வயசு வரை ஜானவாசத்தின் பெயர்க்காரணம் தெரியாமல் இருந்தேன்.இப்போதுதான் விளக்கம் பெற்றேன். சரியாக கூற வேண்டுமென்றால் அது ஜானவாசம் அல்ல. சரியாகச்சொன்னால் ஜானுவாசம் ஆகும். 'ஜானு' என்றால் Knee அதாவது முழங்கால்.'வாசம்' என்றால் ' உடுப்பு(Dress).

பெண் வீட்டிற்கு பிள்ளை பிரம்மச்சாரியாக வருவதால் Knee வரை தான் துணி உடுத்தி இருப்பதாக ஐதீகம்.ஆனால் இப்போதுள்ள ஜானவாச டிரஸ் உடலின் எல்லா பாகத்தையும் மூடி முகத்தை மட்டும் விட்டு வைக்கிறது!

இனி இன்றைய பதிவு.

மேடைக்கு விசுவும்,ராகினியும் சென்றனர். வர பூஜை ஆரம்பிக்கப்பட்டது.

கல்யாணத்தின் வைதீக கார்யங்கள் எல்லாம் இதிலிருந்துதான் தொடங்கின்றன. இதுவரை நடந்ததெல்லாம் ஜன ரஞ்சனமான லௌகீக கார்யங்கள். ஆத்மநாதன் விசுவை வரவேற்று ஜலத்தால் காலலம்பி விட்டார்.

மாப்பிள்ளை விசு இதற்குப்பின் வைதீகர்களை வணங்கி மேற்கொண்டு தான் ஈடுபடப்போகும் வைதீக கர்மாக்கள் நடத்த அனுமதியும்,கைடன்ஸும் கேட்டான். பின் வாத்தியார் உதவியுடன் விக்னேஸ்வர பூஜை செய்தான்.

இதன் பின்னர் பிரவரம் சொல்லப்பட்டது. சபையில் இருப்போர்க்கு பையன் யாரை கல்யாணம் செய்யப்போகிறான், அதே போல் பெண் யாரை கல்யாணம் செய்யப்போகிறாள் என்பதை உரைப்பதே பிரவரம். பெண்ணாத்து  கோத்ரம்,அவளது தந்தை வழி கொள்ளு தாத்தா,

தாத்தா,தந்தை பெயர்களை உரத்த குரலில் கனபாடிகள் அறிவித்தார்.

பின் ராமனாத சாஸ்திரிகள் விசுவின்  கோத்ரம்,அவனது தந்தை வழி கொள்ளு தாத்தா, தாத்தா,தந்தை பெயர்களை உரத்த குரலில் அறிவித்தார்.

இரு குடும்பங்களும்  விவரங்களை அறிந்து திருமண பந்தத்தை ஒத்துக்கொண்டு இதர சடங்குகளை மேலேடுத்து செல்ல முனையவே பிரவரம் உதவுகிறது. இதை ஏன் உரத்த குரலில் சொல்ல வேண்டும்.காதும்

காதும் வைத்த மாதிரி இரு குடும்பத்தார்க்கு மட்டும் கேட்குமாறு மெல்ல சொல்லலாமே. நம் முன்னோர்கள் அதி புத்திசாலிகள். பிரவரத்தை உரக்க கூற சபையிலுள்ளோர் கேட்கும் போது ஏதாவது முரணான அல்லது  தவறான விஷயங்கள் இருக்குமானால் அதை சுட்டி காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் உரக்க சொல்வது.அடுத்தது கன்னிகாதனம்.

தானத்திலேயே மிக சிலாக்யமான (உயர்ந்த) தானம் தான் அருமை பெருமையாக வளர்த்த பெண்ணை, தகுந்த வரனுக்கு தானமாகத் தருவதே கன்னிகாதானம். கன்னிகாதானம் செய்பவரின் 21 தலைமுறைகள் நற்கதி அடைவார்கள் என்பது சாஸ்திரம். ராகினி  மேடைக்கு வந்து,

சேர் மேல் வடக்கு நோக்கி  அமர்ந்திருந்த ஆத்மநாதன் மடியில்  அமர்ந்தாள்.சுந்தரி ஆத்மநாதனின் வலப்பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள்.

ஆத்மநாதனின் உள்ளங்கையில் தாம்பூலம்,தேங்காய்  மேல் ராகினி உள்ளங்கையை வைக்க அதன் மேல் விசு தன் இரு உள்ளங்கைகளை வைத்த போது ,சுந்தரி தொடர்ந்து  கைமேல் ஜலத்தை ஊற்றி கொண்டிருந்தாள்.

நீர் கீழே பூமியில் வழிந்து கொண்டிருந்தது. இந்த நீர் வழிதல் தான் 'தாரை' ஆகும் .எனவேதான் 'தாரை வார்த்து' கொடுப்பதாக கூறுகிறோம்.

இதுவே பெண்ணை, பெற்றவர்களின் ஓனர்ஷிப்பிலிருந்து விடுவித்து பையனின் ஓனர்ஷிப்புக்கு மாற்றுவதின் முதல் படி ஆகும்.

இதை செய்யும்போது பெண்ணை பெற்றவர் கூறும் மந்திரத்தின் சாரம்.

"என்னுடைய விளையாட்டுத்தனமான, சொக்கத்தங்கமான புத்திரியை நான் உனக்கு தானமாக அளிக்கிறேன்.

பொன்நகைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டுள்ள என் கன்னிகையை திருமாலின் சொரூபியான உனக்குத் தானமாக அளிக்கிறேன். ஏற்றுக்கொள்.

என் மூதாதையர்களும், வருங்கால சந்ததிகளும் பிரும்மலோகத்தில் நித்யானந்த பதவியைப் பெறவே இந்த உத்தமமான மகாதானத்தைச் நான்  செய்கிறேன். இந்த தானத்தால் என் பித்ருக்கள் கடைத்தேறுகிறார்கள். இந்த மங்களயோகத்திற்கு இவ்வுலகைக் காக்கும் பஞ்சபூதங்களும் (நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம்) சாட்சிகள். எல்லா தேவதைகளும் சாட்சிகள். என் பெண்ணே! நீ என் எதிரில் என்றும் காட்சியளிப்பாயாக! உன் இரு பக்கங்களிலும் பரமேசுவரியே காட்சி தருகிறாள். நீ தேவி அருள் பெற்ற உத்தமி. நீ எனக்கு எல்லாப் பக்கங்களிலும் பெருமை அளிப்பாயாக. உன்னை இந்த நல்ல மணமகனுக்குத் தானம் அளிப்பதால், நான் நற்கதி அடைவேன். மோட்ச சாம்ராஜ்யத்தை உன் மூலமாகப் பெறும் பாக்கியசாலி நான்!

ஹே.மணமகனே, இவள் மூலம் நீ குழந்தைகளைப்பெற்று செய்ய வேண்டிய கடமைகளை செவ்வனவே செய்வாயாக" இதற்கு பதிலளிக்கும் மணமகன்" சூர்யன், அஸ்வினி தேவதைகள் சாட்சியாக நான் இவளை ஏற்று சம்சார பந்தத்தில் ஈடுபடுவேன்". கன்னிகாதானம் செய்ததால் மகள் தனக்கு சொந்தமாக இருக்க முடியாது என்பதை எண்ணி ஆத்மநாபன் கண் கலங்க,சுந்தரியோ கண்ணில் வழியும் நீரை துடைத்துக்கொண்டாள். ராகினியும் உணர்ச்சிப்பெருக்கால் கண் கலங்கினாள்.

பெண்வீட்டார்கள் கன்னிகாதானம் என்று சொல்வதை பையன் வீட்டார் பாணி கிரஹணைம் என்கிறார்கள். கன்னிகாதானத்தின் பின் ஆத்மாநாதன் குடும்பத்தவருக்கு ஏற்பட்ட மன இறுக்கத்தைப்போக்க சாஸ்திரிகள் "சூர்ய கிரஹணம், சந்திர கிரஹணம் பிடிச்சா கொஞ்ச நேரத்தில விட்டுடும்.பாணி கிரஹணம் அப்படி இல்லை.கடைசி வரை விடாது" என்று ஜோக் அடித்தார்.சிலர் இதை மொக்க ஜோக் என கருதினாலும்,பலர் இதைக்கேட்டு சிரித்தனர். ஆத்மனாதன், சுந்தரி, ராகினி உட்பட.

கன்னிகா தானத்தைப் பற்றி ஒரு மிக முக்கியமான விஷயத்தை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன். மகனை நாம் புத்ரன் என்று சொல்கிறோம். பெற்றோர்கள் இவ்வுலகை விட்டுப் போன பின்னால் அவர்களது புத்திரன் அவர்களுக்கு  வேண்டியதை எல்லாம் பண்ணி அவர்களை 'புத்'என்கிற நரகத்திலிருந்து விடுவிக்கிறான் என்ற காரணத்தால் தான் அவனுக்கு புத்ரன் என்று பெயர் .அப்படி என்றால் புத்ரனே இல்லாத பெண்ணை பெற்றவர்கள் எப்படி 'புத்' என்ற நரகத்தில் இருந்து விடுபடுவார்கள்? இங்குதான் கன்னிகாதானம் முக்கியமான பங்கு வகிக்கிறது.கன்னிகாதானம் செய்து கொடுக்கும் போதே பெண்ணைப்பெற்றோர்கள்  நரகத்தில் இருந்து விடுபடுகிறார்கள் என்பது ஐதீகம்.சில சாஸ்திரங்களின்படி அவர்கள் அஸ்வமேத யாகம் செய்த பலனை கூட அடைகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

எல்லாவற்றையும் கணேசன் தனக்கு தெரிந்த அளவில் சொல்ல சொல்ல அதை மனதில் வாங்கிய மேகி எல்லாவற்றையும் படம் பிடித்தாள்.

மீர் ஷபீர் ஹுசைனும்,மைலாப்பூர் ஜோசியரும்,ஐ.ஐ.டி டைரக்டரும்,விசுவின் ஐ.ஐ.டி சகாக்களும் கல்யாணத்துக்கு வந்திருந்தனர்.

கணேசன் மேகியுடனே இருக்க வேண்டி இருப்பதால் விசு வேறு ஒருவரை இவர்களை கவனிக்க ஏற்பாடு செய்திருந்தான்.

கும்போணம் ஜோசியர் வர முடியாததால்  டெலகிராமில் வாழ்த்தியிருந்தார்

No comments:

Post a Comment