மூன்றுதலை முறை-74
By N Krishnamurthy
கல்யாணத்தன்று சாயங்காலம் ராமனாத சாஸ்திரிகள் பஞ்சுவையையும், ஆத்மனாதனையும் கூப்பிட்டு, சாந்தி முகூர்த்தம் அன்றிரவே பண்ணுவது உசிதம் இல்லையென்றும்,அடுத்த வாரத்தில் நல்ல நாள் பார்த்து செய்யலாம் என்றார். பஞ்சுவும் "எங்காத்து வழக்கமும் அப்படித்தான்" என்றார்.அடுத்த நாள் காலை எழுந்தவுடன் எல்லோருக்கும் காபி வழங்கப்பட்டது. பின்பு ஒன்பது மணிக்கு சுவையான சாப்பாடு போடப்பட்டது.
சேமியா பால் பாயசம், தயிர் வடை, கதம்ப கறி, தக்காளி கூட்டு, சாதம், நெய், மிளகு குழம்பு, ஜீரக ரசம், பருப்பு துகையல், தயிர், தக்காளி ஊறுகாய் இத்யாதி,இத்யாதி.
கட்டு சாத கூடையில் எண்ணை மிளகாய் பொடி தோச்ச இட்லி,புளியோதரை , தயிர் சாதம், முருங்கைக்காய் போட்டு மிளகுக் குழம்பு,ஓமப்பொடி வடாம், ஜவ்வரிசி வடாம்,வேண்டிய அளவு வாழை இலை(ஏடு) ஆகியவை உட்பட பல தினுசான சாப்பாட்டு ஐட்டங்கள் இருந்தன.
பஞ்சு வீட்டை சேர்ந்தவர்கள் ஆத்மனாபன் குடும்பத்தினரிடம் விடை பெற்றுக்கொள்ள ஆரம்பித்தனர்.
எல்லோருக்கும் முகூர்த்த தாம்பூலம் தரப்பட்டது.விசாலி உறவுக்காரர்களுக்கு பக்ஷண பேக்கட்டை தந்தாள். வேண்டியவர்களுக்கு கட்டுசாதமும் வழங்கப்பட்டது.
வெளியூரிலிருந்து வந்த நெருங்கிய பந்தங்களில் கல்யாணத்தன்று திரும்பி சென்றவர்களைத் தவிர மீதி உள்ளோர்களும் தத்தம் ஊருக்கு புறப்பட ஆயுத்தமானார்கள்.மகாலிங்கம் சுதா(கரை) வை தேடி கண்டு பிடித்து
" நான் போய்ட்டு வரேன்.ஞாபகம் வெச்சுகோங்கே" என்றார்.பதிலுக்கு சுதாகர்"உங்களை மறக்க முடியுமா"என்று மனதுக்குள் நினைத்தாலும் அவரிடம்"கட்டாயமா ஞாபகம் வெச்சுக்கறேன்.
பாத்து போய்ட்டு வாங்கோ"என்று கூறி முகூர்த்த தாம்பூலத்தை கொடுத்தான். பெண்ணாத்துகாரா கூட்டத்தில் கல்யாணியும், அவள் பெற்றோர்களும் இருப்பதைப் பார்த்த விசு கணேசனின் அம்மாவை அழைத்துக்கொண்டு வந்து கல்யாணியின் அம்மாவை காட்டி "இதுதான் கல்யாணியின் அம்மா" என்று அறிமுகப்படுத்தினான்.
கணேசனின் அம்மா கல்யாணியின் அம்மாவைப் பார்த்து"ரொம்ப சந்தோஷம். நீங்களெல்லாம் எந்த பக்கம்?"என்றாள். "நாங்களெல்லாம் நார்த்தார்காட், விரிஞ்சீபுரம் பூர்வீகம்" என்ற கல்யாணியின் அம்மாவிடம் கணேசனின் அம்மா "எங்களுக்கெல்லாம் சௌத் ஆர்க்காட், திருக்கோவிலூர் பக்கத்தல இருக்கிற சித்தலிங்கமடம் தான் பூர்வீகம்" என்று கூறினாள். பின்பு கணேசனின் அம்மா "நீங்கள் என்ன கோத்திரம்னு தெரிஞ்சுக்கலாமா"என்று கேட்டாள். "நாங்க கௌசிக கோத்திரம்" என்று சொன்னாள் கல்யாணியின் அம்மா.மனதுக்குள் "அப்பா. சகோத்ரம் இல்லாமல் போய்விட்டது" என நினைத்து சந்தோஷபட்ட கணேசனின் அம்மா, "உங்க பொண்ணுக்கு பையன் பாக்க ஆரம்பிச்சிட்டீங்களாக்கம்" என்றாள். "ஆமாம்.இப்போ பைனல் இயர் முடிக்கிறாள்.இன்னும் ஆறு மாதத்திக்குள்ள கல்யாணம் பண்ணலாம்னு பாக்கறோம். நல்ல பையனா இருந்தா பரவா இல்லை" என்றாள் கல்யாணியின் தாயார்.
"என் பையன் கணேசன் விசுவுக்கு ரொம்ப பிரென்ட்.அவன் காலேஜ் கிளாஸ் மேட். பிரைவேட் கம்பனில டிசைன் என்ஜினியரா இருக்கான்.இவன் ஒரு பையன், இவனுக்கு அப்புறம் உமான்னு நேக்கு ஒரு பொண்ணு .நாங்களும் என் பையனுக்கு மும்மரமாக பொண்ணு தேடிண்டிருக்கோம்" என்றாள்.
"ரொம்ப சந்தோஷம்.நீங்க உங்க அட்ரஸ் கொடுங்கோ. நான் அவர்கிட்ட சொல்லி இவ ஜாதகத்தை அனுப்பி வெக்கசொல்றேன்.
நீங்க உங்க பையன் ஜாதகத்தை எங்களுக்கு அனுப்பி வைச்சூடுங்கோ. ஜாதகம் பொருந்தினால் மேக்கொண்டு பார்க்கலாம்" என்றாள் கல்யாணியின் அம்மா. கணேசனின் அம்மா அவள் அட்ரசை ஒரு பேப்பரில் எழுதி அதை கொடுக்க, அந்த மாமியும் அவளது அட்ரஸை கணேசனின் அம்மாவிடம் தந்தாள். விசுவிற்கு கணேசனும் கூடிய விரைவில் மாட்டப் போகிறான் என்பதில் பரம திருப்தி.
ராஜகோபால் அய்யர் ஆத்மநாதனைப் பார்த்து "கல்யாணம் ரொம்ப கிராண்டா பண்ணீட்டேள். எங்களுக்கெல்லாம் பரம திருப்தி" என்றார். அதை கேட்ட ஆத்மநாதன் "இல்ல மாமா.இது உங்கள போல பெரியவா ஆசீர்வாதத்தால் தான் பண்ண முடிஞ்சது" என்று பவ்யமாக கூறினார்.
ஆத்மானாதன் தம்பதிகள் பஞ்சு வீட்டார் அனைவருக்கும் சந்தனம் காட்டி வெற்றிலை,பாக்கு தாம்பூலம் தந்தார்கள்.
அரை மணி கழித்து மாப்பிள்ளை வீட்டிற்கு செல்வதற்கு அழைத்திருந்த வேன் வந்து விட்டது. கணேசன்,பஞ்சு, ரங்கு,சுதாகர் சேர்ந்து சாமான்களை வேனில் ஏற்றினார்கள். எல்லோரும் வேனுக்குள் ஏறிக்கொண்டார்கள்.
ராகினிக்கு அப்பா,அம்மா, தங்கை தம்பியை விட்டு பிரிவதற்கு மனமே இல்லை.எல்லோரையும் கட்டிக்கொண்டு கண் கலங்கினாள். சுந்தரி புடவை தலைப்பால் கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். ஆத்மனாதனுக்கும் கண்கலங்கியது 'ராகினி,ராகினி' என்ற ஆசையோடு கூப்பிட்டால் வீட்டில் இனிமேல் யார் திரும்பி பார்ப்பார்கள் என்ற வேதனை ஏற்பட்டது.
கல்யாணம் நல்லபடியாக முடிந்த சந்தோஷம் ஒரு புறம் இருந்தாலும், கிட்டத்தட்ட இருபது வருடம் பாலூட்டி,சீராட்டி வளர்த்த மகள் தங்களை விட்டு பிரியப்போகிறாள் எனும் போது ஏற்படும் வருத்தத்தை பெண்ணை பெற்ற எவரும் அனுபவிக்காமல் இருக்கமுடியாது.
(ஓரே ஒரு exception, வீட்டோடு மாப்ப்பிள்ளை கிடைக்கப்பெற்ற மகானுபாவர்கள்) கடைசியாக விசுவும்,ராகினியும் வேனில் ஏற,வேன் பஞ்சு வீட்டிற்கு பறக்கத் தொடங்கியது.
வீட்டுக்கு வந்து இறங்கியதும் விசாலி ஏற்பாடு செய்திருந்த சுமங்கலிகள் இரண்டு பேர் விசுவையும்,ராகினியையும் நிற்க வைத்து ஆரத்தி எடுத்தி,நெற்றியில் பொட்டு வைத்தார்கள். ஆரத்தி எடுத்த ஓரு மாமிக்கு விசு தாம்பூலம்,ஐந்து ரூபாய் தர, ராகினி இன்னொரு மாமிக்கு அதே மாதிரி தந்தாள்.
ராகினி வலதுகாலை வைத்து எடுத்து வீட்டின் உள்ளே நுழைந்தாள். விசுவும் மற்றவர்களும் வீட்டிற்குள் சென்றார்கள்.
.ஸ்வாமி படத்தின் முன் குத்துவிளக்கு வைக்கும் இடத்தை ஈரத்துணியால் துடைத்த விசாலி, ராகினியை ஸ்வாமிக்கு குத்து விளக்கை ஏற்ற சொல்லி இருவரையும் நமஸ்காரம் செய்யச் சொன்னாள்.
விசாலி வீட்டுக்குள் அப்படியே போட்டுகிடந்த சில சிலவற்றை சரி செய்தாள்.பஞ்சு வேண்டிக்கொண்டபடி கல்யாணம் விக்னம் இல்லாமல் நிறைவேறியதால் ஆரியகவுடா தெருவிலிருந்த பிள்ளையார் கோவிலுக்கு சதுர் தேங்காய் விடச் சென்றார். ராகினிக்கு விசு வீட்டை சுற்றி காண்பித்தான். 'வீடு சின்னதாக இருக்கும் போலிருக்கிறதே' என்றாள் ராகினி. "ஆமாம்.தெரியும். அதனால் தான் இன்னும் ஒண்ணு, ரெண்டு ரூம் கூட இருக்கற மாறி வீடு பாத்திண்டிருக்கோம்" என்று சொன்னான். அப்பொழுது அங்கு வந்த ராமநாத சாஸ்திரிகள் விசுவை பார்த்து "அப்பா இல்லையா விசு"என்றார்.
"கோவிலுக்குபோயிருக்கா மாமா.செத்த வெய்ட் பண்ணுங்கோ.தோ வந்துடுவா" என்றான் விசு.
"இல்லைடா விசு .நான் அர்ஜன்ட்டா ஒரு இடம் போக வேண்டிருக்கு.
சுப்பா ரெட்டி தெரு(தற்சமயம் சுப்பா தெரு) வில் மூணு ரூம்,ஹால் கிச்சன்,கொண்ட ஒரு தனி வீடு வாடகைக்கு இருக்கு. சாயங்காலம் மூணு மணிக்கு மேல் வறேன். போய் பாக்கலாம்னு அப்பா கிட்ட சொல்லீடு" என்றார் அவர். எல்லோரும் உக்காந்து கொண்டு கொஞ்ச நேரம் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு மணி ஆனதும் கட்டுசாத கூடையை பிரித்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.
சாப்பிட்டு எழுந்தவுடன் சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்யும் பணியில் விசாலிக்கு ராகினி உதவினாள்.
மூன்று மணி இருக்கும், டெலிபோன் ஒலிக்க ஆரம்பித்தது.பஞ்சு டெலிபோனை எடுத்து "ஹலோ" என்றார்.பின்பு "சரி இருங்க.நான் கொடுக்கிறேன்" என்று கூறி,ராகினியை பார்த்து "ராகினி உனக்குத்தான் போன் வந்திருக்கு" என்று கூறினார். ஓடிச்சென்று போனை எடுத்த ராகினி "ஹலோ.சொல்லுமா" என்றாள் (இனி ராகினி,விசுவின் வீட்டில் இருக்கும் போதெல்லாம் வரக்கூடிய மிக அதிகமான போன் கால்களுக்கு இந்த போன் கால் தான் முன்னோடியாகும்) கிட்டத்தட்ட அரை மணி நேரம் போன் பேசினாள் ராகினி. இஷ்டமில்லாமலேயே "வெச்சுடவா" என்று கூறி போனை வைத்து விட்டாள். சாயங்காலம் விசுவையும், ராகினியையும் அருகிலிருந்த காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து கொண்டு வரச் சொன்னாள் விசாலி. அவர்களும் கோவிலுக்கு சென்றார்கள். அர்ச்சனை,ஸ்வாமி தர்சனம் முடிந்து கோவிலை விட்டு கிளம்புவதற்கு முன்னால் இருவரும் மனம் விட்டு பேசத் தொடங்கினார்கள். ராகினிக்கு ஓரளவுக்கு கூச்சம் தெளிந்திருந்தது
"என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா" என்று கேட்டாள் ராகினி. "பிடிக்காமலா கல்யாணம் செய்து கொண்டிருப்பேன்" என்று கூறினான் விசு."இல்லை.உங்க படிப்புக்கு இன்னும் உசந்த இடமும்,என்னை விட அழகான பொண்ணும் கிடைச்சிருப்பாளே" என்றாள் ராகினி.
( இது பொதுவாகவே எல்லாப் பெண்களும் கூறுவது தான்.தன்னை பிடித்திருக்கிறது, தான் மகா அழகி என்று தன் கணவன் வாயால் வரவழைக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற சிலவற்றை அவர்கள் வழக்கமாக கூறுவார்கள்.எந்த பேக்கு கணவனாவது வேறு மாதிரி பதில் சொல்வானா?)
விசு " உனக்கு அழகில் என்ன கொறச்சல்.மேலும் நீ என் அம்மா செலக்ஷன் அல்லவா.அம்மா செலக்ஷன் எல்லாமே நேக்கு பிடிக்கும்"என்றான்.அவன் பதிலில் முதல் பாதி ராகினியை பூரிப்படைய வைத்திருந்தாலும், இரண்டாவது பாதியை அவள் ரசிக்கவில்லை.
"சரியான அம்மா கோண்டாயிருப்பார் போலிருக்கு.கொஞ்சம் கொஞ்சமாத்தான் மாத்தணம் " என்று மனதில் நினைத்தாள் ராகினி. "வில்லியம்ஸ் குடும்பம் எங்கே காணோம்"என்று டாபிக்கை மாற்றினாள் ராகினி. "அவர்கள் ஜானுடன் தங்கி இருக்கிறார்கள். அநேகமாக நாளைக்கு போன் செய்வார்கள் என நினைக்கிறேன்" என்றான் விசு.பின்னர் இருவரும் வீடு திரும்பினார்கள். சாப்பாடு முடிந்தவுடன் சுமார் எட்டரை மணிக்கு ராகினி விசாலியிடம் "அம்மா,நான் ஒரு போன் பண்ணிகிட்டமா" என்றாள்.விசாலி
" ராகினி, இதுக்கெல்லாம் என்னை கேக்காதே. இது உன் வீடு.உன் வீட்டில் எப்படி இருப்பாயோ. அப்படியே இங்கும் இருக்கலாம்"என்று கூறினாள் விசாலி. "தேங்க்ஸ் மா" என்று கூறி ராகினி போனை எடுத்து சுந்தரியிடம் சுமார் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தாள். பின் தங்கையிடமும், தம்பியிடமும் பேச ஆரம்பித்தாள்.பத்து நிமிஷம் கழித்து போனை வைத்தாள்.
சாயரக்ஷை கோயிலுக்கு போய் இருந்த பஞ்சு அப்போதுதான் உள்ளே வந்தார். விசாலியை பார்த்து "வீடு மிகவும் நண்ணா இருக்கு. வாடகை கொஞ்சம் கூடத்தான். பரவாயில்லை வேறு வழி இல்லை. நீயும் நாளைக்கு வந்து பார்த்தால்,அட்வான்ஸ் கொடுத்துட்டு நல்ல நாள் பார்த்து பால் காச்சி சாப்பிடலாம்" என்று கூறினார் பஞ்சு.
சுந்தரேச ஐயர் விசாலியிடம் "நாங்களும் நாலஞ்சு நாள்ல ஊருக்கு கிளம்பறோம்மா. போட்டது போட்டபடி வந்திருக்கோம்" என்றார்.
"என்னப்பா இது. உங்களுக்கும் அவசரமா. வந்ததுதான் வந்தேள். இன்னும் ஒரு பத்து பதினைந்து நாள் இருந்துட்டு போப்படதா? புது இடத்துக்கு போய் பால் காய்ச்சி சாப்பிட வரைக்குமாவது இருங்கோ" என்றாள் விசாலி. இதைக்கேட்டுக்கொண்டே வந்த விசு "என்னம்மா. என்ன சொல்றா தாத்தா?"என்றான். விசாலி " தாத்தாவுக்கும், பாட்டிக்கு ஊருக்கு போகணமாண்டா" என்றாள் விசாலி. "தாத்தா.என்ன அவசரம்.போலாம். போலாம்.
கொஞ்சம் எங்க கூட இருந்துட்டு போகூடாதா . உங்க பேரன் ஆம்படையா வந்து இருக்கா. அவ கூட கொஞ்ச நாள் நீங்க இருக்கப்படாதா"என்றான் விசு சுந்தரேச ஐயரைப்பார்த்து.
"சரிடா விசு.நீ சொன்னா அதுக்கு மேல அப்பீல் இல்லை.நீ போக சொல்றன்னிக்கி ஊருக்கோ போறோம் " என்றார் சுந்தரேச ஐயர்.
மூன்று தலை முறை-75
மறுநாள் காலை 10 மணி இருக்கும். ஆத்மநாதன் பஞ்சுவிற்கு போன் பண்ணினார். "வர வெள்ளிக்கிழமை காஞ்சிபுரம் போயிட்டு வரலாமா"என்று கேட்டார். பஞ்சு "எனக்கு சம்மதம்தான். ஆத்துலயும் கேட்டுட்டூ நான் உங்களுக்கு திரும்ப போன் பண்றேன்" என்றார். பின்பு விசாலி,பஞ்சு,ராகினியையும் கலந்தாலோசித்து ஆத்மானாதனுக்கு "போன் செய்து. சரி போய்விட்டு வந்து விடலாம்"என்று சொன்னார்.
கொஞ்ச நேரம் கழித்து வந்த ராமநாத சாஸ்திரிகள் விஷயத்தைக் கேள்விப்பட்டு "நானும் என்னுடைய ஆத்துக்காரியும், கனபாடிகளும் ,ஆவாத்துக்காரியும் வரலாமா? மகா பெரியவாளை பாத்து வருஷக்கணக்காச்சு" என்றார். பஞ்சு ஆத்மானாதனிடம் யார் யார் வருவார்கள் என்று கூற,ஆத்மநாதன் நாலு அம்பாசிடர் கார்களுக்கு ஏற்பாடு செய்து விடுவதாக கூறினார். காலை 12 மணிக்கு வில்லியம்ஸ் போன் செய்தார்.விசுவிடம் "என்ன விசு எல்லோரும் வீட்டுக்கு வந்து செட்டிலாகி விட்டீர்களா?
வேறு என்ன விசேஷம்" என்றெல்லாம் கேட்டார்.வெள்ளிக்கிழமை அன்று காஞ்சிபுரம் செல்வதை விசு அவரிடம் கூறினான். வில்லியம்ஸ் "காஞ்சிபுரத்தில் சங்கராச்சாரியார் சுவாமிகள் இருப்பதாக கூறுகிறார்ளே.அவரைப் பார்க்கப் போகிறீர்களா" என்று கேட்டார்.
"ஆமாம் அவர்தான் எங்கள் குரு. அவரைப் பார்க்கத்தான் போகிறோம்" என்றான் விசு. "நாங்களும் குடும்பத்தோடு அவரைப் பார்க்க ஆசைப்படுகிறோம். வரலாமா "என்று கேட்டார் வில்லியம்ஸ். "எக்ஸலண்ட். தாராளமாக வரலாம்" என்றான். "நாங்கள் ஜானுடைய காரில் உங்க வீட்டுக்கு வந்து விடுகிறோம். அங்கிருந்து நேராக காஞ்சிபுரம் போய் கொள்ளலாம். வெள்ளிக்கிழமை காலை எத்தனை மணிக்கு உங்கள் வீட்டிற்கு வர வேண்டும்?"
எனக்கேட்ட வில்லியம்ஸுக்கு விசு " டைம் இன்னும் முடிவு பண்ணவில்லை. நான் உங்களுக்கு மாலை சொல்கிறேன்" என்றான்.
அன்று மாலை ஜானுடைய வீட்டு நம்பருக்கு போன் செய்த விசு வில்லியம்ஸிடம் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கிளம்ப போவதாகவும்,ஐந்தரை, ஐந்தே முக்கால் மணிக்கு அவர்கள் வந்து விட்டால் சௌகரியமாக இருக்கும் என்று கூறினான். அதற்கு வில்லியம்ஸ் "அப்படியே செய்து விடலாம்.நாங்கள் ஐந்து மணிக்கே வந்துவிடுகிறோம்.நான் கல்யாணத்தில் உன் அப்பா உடுத்தியமாதிரி (பஞ்ச கச்சம்) வேஷ்டியும்,லிண்டா மற்றும் மேகி புடவையிலும் வர உத்தேசம்.எங்களை உங்க அப்பா,அம்மா தான் வேஷ்டி,புடவை கட்ட கைடு பண்ணணும்" என்று கூறினார்.விசு'அதற்கென்ன .நிச்சயம் அவர்கள் ஹெல்ப் பண்ணுவார்கள்' என அவருக்கு உறுதி அளித்தான்.
மறுநாள் காலை வில்லியம்ஸ் ஜானிடம் "இங்கு நல்ல புக் ஷாப் எங்கே இருக்கிறது" என்று கேட்க,அவன் "மவுண்ட் ரோடில் ஹிக்கின்பாதம்ஸ் புக் ஸ்டோர் மிகவும் நன்றாக இருக்கும்.அங்கு எல்லாவிதமான புத்தங்களும் கிடைக்கும் " என்று கூறினான். பின்பு வில்லியம்ஸ் ஒரு வாடகை காரை எடுத்துக்கொண்டு 11 மணிக்கு ஹிக்கின்பாதம்ஸ் சென்றார். அங்கிருந்த ஒரு விற்பனையாளர் உதவியுடன் ஆங்கிலத்தில் பரமாச்சாரியார் பற்றி ஏதாவது புத்தகம் இருக்கிறதா என்று பார்த்து இரண்டு புத்தகங்களை வாங்கிக் கொண்டார்.இரண்டுமே பால் பிரண்டன் எழுதியது.முதல் புத்தகம்
*"Search in secret india",*
அடுத்தது *"Message from arunachala".*
வீட்டிற்கு சென்றதும் மதிய உணவிற்கு பிறகு வில்லியம்ஸ் அந்த இரண்டு புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தார். படிக்கப்படிக்க அவருக்கு இந்தியாவில் உள்ள பெரும் யோகிகளைப் பற்றி ஆச்சரியமும்,பெருமதிப்பும் உண்டாயிற்று.
இரவு உணவின் போது அவர் தான் படித்து மகிழ்ந்ததை மேகி, லிண்டா,ஜான் ஆகியோர்களுடன் பகிர்ந்து கொண்டார். இந்தியா வந்து பின்னர் அம்மூவரூம் 'நான் வெஜிடேரியன்' உணவு சாப்பிடுவதை விட்டு விட்டார்கள்.(இந்தியா வருவதற்கு முன் வில்லியம்ஸ், 'ஒருவருடைய குணநலம் அவர் சாப்பிடும் உணவைப்பொறுத்தே அமைகிறது' என்று படித்திருந்தார்) இரவில் ஒரு பெக் மது அருந்துவதையும் வில்லியம்ஸ் நிறுத்தியிருந்தார்.எப்போதாவது ஒரு முறை சிகரட் பிடிப்பதுவும் நின்று போயிற்று. இப்படி தன் பழக்கங்களை மாற்றிய பின் மனதில் சந்தோஷமும், திருப்தியும், எதைப்பற்றியும் நன்றாக சிந்திக்கும் திறனும் தனக்கு கூடி இருப்பதை உணர்ந்தார். ஜான் தன் ஒருவனுக்காக
'நான் வெஜிடேரியன்' உணவு தயாரிப்பதை சமயற்காரரிடம் நிறுத்தச் சொல்லி விட்டான்.இவர்கள் அமெரிக்கா கிளம்பி போனதும் பழையபடி 'நான் வெஜிடேரியன்' உணவிற்கு திரும்பலாம் என்பது அவன் திட்டம்.ஆனால் கடந்த ஒரு வாரமாக அவன் சாப்பிடும் தென்னிந்திய வெஜிடேரியன் உணவு வகைகள் மீது அவனுக்கு காதலே வந்துவிட்டது.இனி அவன் 'நான் வெஜிடேரியன்' உணவிற்கு திரும்பாவானா என்பது அவனுக்கே சந்தேகமாக இருந்தது.
No comments:
Post a Comment