Sunday, June 25, 2023

மூன்று தலை முறை 78 - 79

 மூன்று தலைமுறை-78

By N Krishnamurthy 

காஞ்சிபுரம் போய்விட்டு வந்த அடுத்த நாள் சனிக்கிழமை காலை, வழக்கம்போல காபி சாப்பிட வந்த ராமநாத சாஸ்திரிகள் பஞ்சுவையும்,விசாலியையும்  பார்த்து "வர புதன்கிழமை சாந்தி முகூர்த்தத்திற்கு நாள் நன்னா இருக்கு. பண்ணிடலாமா?" என்று கேட்டார்.

"நான் ஒரு வார்த்தை  சம்மந்திக்கு போன் பண்ணி அவா சௌகர்யத்தையும் கேக்கட்டுமா" என்றார் பஞ்சு. "பேஷா"என்று ராமனாத சாஸ்திரிகள் சொல்ல,பஞ்சு உடனே போனை எடுத்து ஆத்ம நாதனை போனில் கூப்பிட்டு விஷயத்தை கூற ஆத்மநாதன் "ஒரு நிமிஷம் இருக்கேளா. ஆத்துல கேட்டு சொல்றேன்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்த சுந்தரியிடம் பேசிவிட்டு "பிறகு தாராளமாக வைச்சுக்கலாம்" என்று கூறினார்.பிறகு சாந்தி முகூர்த்தத்திற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்,என்னென்ன பொருட்கள் எல்லாம் வாங்கி வேண்டும் என்ற லிஸ்டை ராமநாத சாஸ்திரிகள் பஞ்சுவிடம் கொடுத்தார். இந்த விஷயம் விசுவுக்கும் ராகினிக்கும் தெரியவந்தது.

ராகினியின் முகம் வெட்கத்தால்  சிவந்தது.மறுநாள் காலை பிரக்பாஸ்ட் முடிந்தபிறகு ராமநாதன் சாஸ்திரிகள் விசாலி,பஞ்சு,விசு, ராகினி ஆகியோர்கள் சுப்பா ரெட்டி தெருவில் இருந்த வீட்டைப் பார்க்கச் சென்றார்கள். வீட்டு சொந்தக்காரர் அதே தெருவில் வேறொரு வீட்டில் இருந்தார்.இவர்கள்  வருவது தெரிந்ததும் அவர் வீட்டை திறந்து வைத்திருந்தார். வீட்டில் கீழே இரண்டு அறையும், மாடியில் ஒரு அறையும் இருந்தது. மாடிப்படி வீட்டினுள்ளே இருந்தது. மாடி அறை மிகவும் காற்றோட்டமாக இருந்தது. பார்த்தவுடனேயே விசாலி இதை விசுவுக்கும் ராகனிக்கும் கொடுத்துவிடலாம் என்று தீர்மானம் செய்து கொண்டு அதை அவர்களிடமும் கூறினாள்.ஹாலும் கொஞ்சம்  பெரியதாக இருந்தது.கிழக்கு பார்த்த பூஜை ரூம் கிச்சனுக்கு செல்வதற்கு முன்னால் இருந்தது.மொத்தத்தில் வீடு அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. கிணற்றங்கரைலிருந்த துளசிமாடம் விசாலிக்கு  ரொம்ப பிடித்துப்போனது. வீட்டுக்காரரிடம் வாடகை மற்றும் அட்வான்ஸ் பற்றி பஞ்சுவும் சாஸ்திரிகளும் பேசினார்கள்.  "வாடகை கொஞ்சம் குறைச்சுக்க முடியுமா" என்று பஞ்சு கேட்டதற்கு வீட்டுக்காரர் "வாடகையில் குறைப்பதற்கில்லை.  நீங்கள் அட்வான்ஸ் தொகையில் ஒரு பாதியை இப்பொழுதும் மீதியை இரண்டு மூன்று மாதங்களிலும் கொடுக்கலாம்.நீங்கள் வீடு காலி செய்து போகும் போது அட்வான்ஸ் பணம் முழுதும் திருப்பி தந்து விடுகிறேன்" என்று கூறினார்.

பாதிஅட்வான்சை ஓரிரு தினங்கள் கொடுத்து விடுவதாக கூறினார் பஞ்சு.வீட்டிற்கு வந்ததும்  சாஸ்திரிகளைப்பார்த்து "ஒரு நல்ல நாளா பாத்து சொல்றேளா.

அன்னிக்கு  பால் காச்சி சாப்பிடலாம்"என்று விசு கேட்டார்.ராமநாத சாஸ்திரிகள் பாம்பு பஞ்சாங்கத்தைப் பார்த்து "அடுத்த ஞாயித்துக்கிழமை காலை காலையில் பத்திலிருந்து பத்தரைக்கு பால் காச்சலாம்" என்றார்.  

புது வீட்டில் பாத்திரம் பண்டங்கள் எப்படி வைக்கலாம், எங்கு வைக்கலாம் என்ற யோஜனையில் விசாலி மூழ்கியிருக்க, ராகினியோ  மாடி ரூமை நாம் எப்படி அலங்கரிக்கலாம் என்று யோசனையில் மூழ்கினாள்.

 அன்று மாலை 7 மணியிருக்கும்.விசுவை போனில் கூப்பிட்டான் கணேசன்."விசு என்ன.ஏதாவது விசேஷம் உண்டா" என்று கேட்டான் . திங்கட்கிழமை  சாந்தி முகூர்த்தம் என்று எப்படி சொல்வது என்று விசு மிகவும் சங்கோஜப்பட்டன். அதற்குள் கணேசனே "சாந்தி முகூர்த்தம் எப்ப வெச்சிரிக்கா" என்று கேட்டான். "திங்கட்கிழமை அன்னிக்கு வைச்சிருக்கா" என்று கூறினான் விசு."உனக்கு நான் ஒரு விஷயம் சொல்லணம் விசு. என் ஜாதகத்தையும், கல்யாணி ஜாதகத்தையும் ஜோசியரிடம்  கொண்டுபோய் காட்டியதில் இரண்டும் பொருந்தியிருப்பதாக ஜோசியர் சொல்கிறார். கல்யாணியை பெண் பார்க்க போகணம்னு  அம்மா சொல்றா. ஏற்கனவே பார்த்ததுதானே என்றாலும் அம்மா கேக்க மாட்டேங்றா. வர வெள்ளிக்கிழமை கல்யாணியின் வீட்டிற்கு பெண் பார்க்க போகலாம் என்று இருக்கோம். அவர்கள் வீடு திருவல்லிக்கேணியில் இருக்கு. நீயும் ராகினியும் கூட வந்தால் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கும்"என்றான் கணேசன்.

" நானும் ராகினியும் நிச்சயம் வந்து விடுகிறோம்.அதற்கடுத்த திங்கட்கிழைமையில் தான்  நான் வேலையில்  சேர வேண்டும் " என்று கூறினான் விசு.ராகினியிடமும்,

விசாலியிடமும் விசு விஷயத்தை கூறினான். ராகினி உடனே கல்யாணிக்கு போனடித்து அரை  மணி நேரம் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தாள்.

மூன்று தலை முறை-79

திங்கட்கிழமை  எட்டாம் நாள் விருந்துக்கு ஏற்பாடாகியிருந்தது.

சில குடும்ப வழக்கப்படி கல்யாணமான எட்டாம் நாள் பிள்ளை ஆத்துக்காரர்கள் பெண் ஆத்துக்காரர்கள் அழைத்து எதிர் விருந்து கொடுத்து மரியாதை செய்வது வழக்கம்.ஆத்மானதன் தம்பதிகள், ராகினியின் தங்கை,தம்பி திங்கட்கிழமை காலை எட்டு மணிக்கு பஞ்சுவின் வீட்டுக்கு வந்து விட்டனர்.பழ வகைகள்,பூ ஆகியவையை வாங்கிக்கொண்டு வந்திருந்தார்கள். வந்தவர்களுக்கு வழக்கம்போல் காப்பி தரப்பட்டது. 11 மணிக்கு இலை போட்டாகிவிட்டது.

ரவா கேசரி,தயிர் பச்சடி, சாதம்,நெய், வெண்டைக்காய்போட்டு (தேங்காய்) அரைச்சு விட்ட சாம்பார், உருளைக்கிழங்கு பொடிமாஸ்,பருப்பு ரசம்,மெதுவடை, அப்பளாம்,பால் பாயசம் பறிமாறப்பட்டன.

விசாலியும்,ராகினியும் பரிமாற மீதமுள்ளோர் சாப்பிட்டார்கள்.ஆத்மனாதன் சாப்பிட்டு முடிந்ததும் சமயல் மிக பிரமாதமாக இருந்ததாக பாராட்டினார். சாப்பிட்டது ஜெரிக்க வெற்றிலை,ரசிக்லால் பாக்கு ,சுண்ணாம்பு கொண்ட தாம்பூலம் கொடுக்கப்பட்டது.

பின்பு பஞ்சுவும்,விசாலியும் ஆத்மநாதன் சுந்தரியை உட்காரவைத்து ஆத்மநாதனுக்கு உயர்ந்த ரக மில் வேஷ்டி,ஷர்ட் மற்றும்  துண்டு ஆகியவைகளையும் சுந்தரிக்கு பட்டு புடவை,ரவிக்கை பிட் ஆகியவைகளை வைத்து கொடுத்தார்கள். ராகினியின் தங்கை, தம்பிக்கும் ராகினி செலக்ட் செய்து வாங்கிய துணிமணிகளை வைத்துக் கொடுத்தார்கள்.

*சாந்தி முஹூர்த்தம்.* 

இந்த பதிவு வேண்டுமா வேண்டாமா என்று என் மனதுக்குள் டிபேட் ஓடிக் கொண்டிருந்தது.

கல்யாணத்தின் முக்கிய லக்ஷியமே பிரமச்சாரியை கிரஹஸ்தனாக்கி அவனை மனைவியுடன் கூடச்செய்து சத் புத்ரர்களைப்பெற வைத்து இல்லற தர்மத்தை நிலை நிறுத்த  வேண்டும் என்பதுதான்.இதில்

முக்கிய பங்காற்றும் சாந்தி முஹூர்த்தத்தை பெற்றி எழுத வேண்டும் என சிலர் வற்புறுத்தி கேட்டுக் கொண்டதாலும்,அவர்கள் கோரிக்கையில் ஞாயமிருப்பதாலும் இதை எழுதத் துணிந்தேன்.

இந்த கால கல்யாணங்களில்  சாந்தி முகூர்த்தம் அநேகமாக கல்யாணத்தன்று  இரவே வைத்துக் கொள்ளப்படுகிறது. சத்திரத்திலேயே அது நடத்தப்படுகிறது.

வசதி படைத்தவர்கள் ஹோட்டலில் ரூம் புக் செய்துவிடுகிறார்கள்.அந்த காலத்தில் திருமணம் முடிந்த சில தினங்களுக்கு பிறகு நல்ல  நாளாக பார்த்து பிள்ளை வீட்டுக்காரர்கள், பிள்ளை வீட்டில்

நெருங்கிய சில உறவு காரர்களை வைத்து க்கொண்டு, காலையில் உதக சாந்தி செய்ய துவங்குவது வழக்கம்.

இதை நல்ல முஹுர்த்தத்தில் செய்வதால்,நல்ல அறிவும், நல்ல செயல்பாடு உள்ளதும் நல்ல எண்ணங்களை கொண்டதுமான குழந்தை பிறக்கும் என நம்ப படுகிறது.சாந்தி முகூர்த்தன்று காலை விசுவும்,ராகினியும்   ஸ்நானம் செய்து, நெற்றிக்கு இட்டு கொண்டு, மடிசார், பஞ்ச கச்சம் கட்டி கொண்டு,ஸ்வாமிக்கு விளக்கு ஏற்றிய பின்,இருவரும் ஸ்வாமிக்கும், வீட்டில் உள்ள பெரியோர்களுக்கும் நமஸ்காரம் செய்து விட்டு, மணையில் அமர்ந்தார்கள்.

வழக்கம் போல ராமனாத சாஸ்திரிகள் தான் வாத்யார்.மேலும் சில வைதீகாளை அவர் ஏற்பாடு பண்ணியிருந்தார். ப்ராஹ்மணர்களை வணங்கி, தக்ஷிணை, தாம்பூலம் கையில் வைத்து கொண்டு, அனுக்ஞை வாங்கி,விக்னேஸ்வர பூஜை செய்து, ஸங்கல்பம்

செய்து கொண்டான் விசு. கீழே தரையில், கோலம் போட்டு, அதன் மேல், கோதுமை பரப்பி, அதன் மேல் அரிசி பரப்பி, அதன் மேல் தர்பத்தால் தாமரை பூ போட்டு, அதன் மேல் பித்தளை குடம்  ( கலசம் ) வைத்திருந்தார்கள்.

கலசத்தில் வருணனை ஆவாஹனம் செய்து,மகா விஷ்ணுவையும் ஆவாஹனம் செய்தார்கள்.

108 முறை விஷ்ணு காயத்ரீ,ப்ருஹ்ம, துர்கா, ஸ்ரீ ஸூக்தம் புருஷ ஸூக்தம், போன்றவைகளை சொல்லி, பஞ்ச சாந்தி, மற்றும் சில மந்திரங்களையும் வைதீகர்கள் ஜபித்தார்கள்.

"நமோ ப்ருஹ்மணே" என்பதை மூன்று முறை ஜபித்து, பின் நைவேத்யம் செய்து வருணனையும், மஹா விஷ்ணுவையும் யதாஸ்தானம் செய்த ( நகர்த்திய)ராமனாத சாஸ்திரிகள் மந்திர தீர்த்தத்தால் தம்பதிகளை ப்ரோக்ஷித்தார்.இந்த கலச தீர்த்தத்தால்  விசு ராகினிக்கு அபிஷேகம் செய்தான். அக்னியில் ஹோமம் செய்யப்பட்டது. ஏற்கனவே ஓதியிடப்பட்டிருந்த அவளகத்து புடவையை ராகினி உடுத்தி வர சுந்தரி மற்றும் அவளை சேர்ந்தவர்கள் ஒரு ஜோடி பருப்பு தேங்காய் கொண்டு வந்து வைத்தார்கள்.

'கௌரி கல்யாணம் வைபோகமே' பாடப்பட்டது.

.மாலையில் ஒளபாஸனம் செய்த பிறகு, குறித்த லக்னத்தில் விக்னேஸ்வர பூஜைசெய்து, கர்ப்பா தான மந்திர ஜபம் செய்யப்பட்டது.

சாந்தி முஹூர்த்த அறையை, நன்கு சுத்தம் செய்து மாக்கோலங்கள் போட்டு, கிழக்கு பக்கம் பார்த்த வண்ணம் சுவாமி படங்கள்,நிலை கண்ணாடி, இயற்கை காட்சி படங்கள், குழந்தை படம், வைத்து, பித்தளை குத்து விளக்கு, பூ சுற்றி சந்தனம், குங்குமம் இட்டு,எண்ணெய் திரி போட்டு, சிறிதாக ஏற்றி வைத்தாள் விசாலி. இரண்டு ஜமக்காளங்களை அறையில் விரித்து,  புதிதாக வாங்கி வைக்க பட்டிருக்கும் இரண்டு மெத்தைகள், நான்கு தலை காணிகளை(யாவும் உறை இல்லாது) பிரித்து வைத்தனர். படுக்கையின் அடியில் விசு வீட்டார் 100 ரூபாயை  பணம் வைத்தனர்.

(காலையில் மணபெண்ணின் சகோதரி அந்த அறையில் வந்து மெத்தைகளை சுருட்டி வைக்க வேண்டும்.அங்கே வைக்க பட்டிருக்கும் பணம் அவளையே சேரும்). பக்கத்திலே ஒரு சொம்பில் சக்கரை போட்ட பால்,ஒரு தட்டில் எல்லா விதமான பழங்கள், இன்னொரு தட்டில் இனிப்பு, கார வகை

பக்ஷணங்கள், ஒரு பாத்திரத்தில் திரட்டி பாலும் இருந்தது. சுவாமி இடத்தில் ஒரு ஜோடி பருப்பு தேங்காய் வைத்தார்கள்.

நிறைய புஷ்ப தோரணங்கள், வாசனை திரவியங்கள்,பூக்கள், நல்ல மணம்,கமழும் ஊதுபத்திகள், பன்னீர் முதலியன ஏகத்துக்கு இருந்தன.

அறைக்கு வரும்போது, விசு பட்டு வேட்டி உடுத்தியும் ராகினி நன்கு அலங்கரிக்கப்பட்டு  புத்தாடை உடுத்தி வந்தாள்.

சுவாமிக்கும், பெரியவர்களுக்கும் நமஸ்காரம் செய்த பின் ராகினி சுமங்கலிகள் அனைவருக்கும் தாம்பூலம், பழம், புஷ்பம், சந்தனம், குங்குமம் கொடுத்தாள்.

அறையில் மணமக்கள் இருவருக்கும் மாற்றுடை வைத்திருந்தார்கள்.

குறிப்பிட்ட நல்ல முஹூர்த்த நேரத்தில், தம்பதிகள் உள்ளே அனுப்பப்பட்டார்கள்.

ராகினி விசுவுக்கு நமஸ்காரம் செய்தாள்.வெகு நேரம் பேசிக்கொண்டு ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ள முயற்சித்தார்கள்.

இருவரும் அதன் பின் வாழ்க்கையின் புது அத்யாயத்தை தொடங்கினார்கள்.

No comments:

Post a Comment