பிராப்தம்-2
மங்களம் வெண்ணையை வெச்சுண்டு நெய்க்கு அலயற பொழப்பாயிடுத்ததூன்னு சொன்னது வாஸ்தவம் தான் .சாம்புவை விட ரெண்டு வயசு மூத்தவள் விசாலாக்ஷி.
உறையூர் பாண்டமங்கலம் அக்ராஹாரத்தில் வாழ்க்கை பட்டுருக்கிறாள். அவளது மகன் சுப்ரமணியன் காமாக்ஷியை விட ஒம்பது வயசு மூத்தவன்.சின்ன வயசுலேர்ந்து காமாக்ஷியையும், சுப்ரமணியனையும் சேர்த்து வைத்தே இரண்டு குடும்பமும் பேசிக்கொண்டிருந்தன.இதெல்லாம் விசாலாக்ஷியின் புருஷன் விச்வநாதன் ஒரு முறை சாம்புவிடம் கோபித்துக் கொள்ளும் வரை தான். ஒரு முறை விச்வநாதன் மாதிரிமங்கலத்துக்கு வந்திருந்தார்.பிறவியிலேயே விச்வநாதன் கொஞ்சம் முன் கோபி.அவர் ஏதோ சாம்புவிடம் பண உதவி கேட்க,அந்த வருடம் மகசூல் சரியாக இல்லாததால் அவனால் அவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. இது விச்வநாதனை உசுப்பேற்றி விட்டது.வந்த அடுத்த நாளே ஊருக்கு கிளம்ப வேண்டும் என்று மனைவிக்கு உத்தரவிட்டார். சாம்புவும்,விசாலாக்ஷியும் எவ்வளவு வேண்டியும் அவர் பிடி கொடுக்கவில்லை.
அன்றைக்கு ஆரம்பித்த விரிசல் பெரிதாகிக்கொண்டேபோனது. சுப்ரமணியனின் உபநயனத்துக்கு போன சாம்பு தம்பதிகளை வாவென்று கூட கூப்பிடவில்லை அவர். ஏண்டா போனோம் என்றாகிவிட்டது சாம்புவிற்கு.
இந்த பின்னணியில் மங்களம் இவ்வாறு பேசியது சாம்புவிற்கு பிடிக்கவில்லை.
"தோ பார். மங்களா.நான்பெண்ண பெத்தவந்தான்.ஒத்துக்கறேன்.அதுக்கோசரம் அத்திம்பேர் கிட்ட மண்டி போட்டுண்டு நிக்க முடியாது.அப்படி அவா பண்ணிண்டாலும் நாளைக்கு எம்மேல இருக்கற கோபத்துல காமுவை படித்தினார்ன்னு வெச்சுக்கோ,அதை என்னால தாங்க முடியாது"என்றார்.
மங்களம்"தோ பாருங்கோண்ணா. உங்களுக்கு எடுத்து சொல்ற வயசு நேக்கில்லை.ஆனா கோழி மிதிச்சு குஞ்சு முடமாறது இல்லை.நீங்க ஒரு தரம் தாழ்ந்து போய் அக்கா கிட்ட கேட்டு பாக்கலாம்ன்னு தோண்றது" என்றாள்.
வேறு வழி தோன்றாமல் மறுநாள் திருச்சிக்கு பயணமானார் சாம்பு.அக்கா வீட்டை அடைந்தபோது திண்ணையில் அத்திம்பேர் பேபர் படித்துக் கொண்டிருந்தார். சாம்புவை திரும்பிக்கூட பார்க்கவில்லை.விசாலாக்ஷி மட்டும்"வாடா.இப்போதான் வழி தெரிஞ்சிதாக்கம்.மங்களம்,காமு எல்லாம் சௌக்யமா " என்றாள்.சுப்ரமணியன் மாமாவை பார்த்ததும்"வாங்கோ மாமா"என்றான். அவனை வாஞ்சையுடன் அணைத்துக்கொண்டார் சாம்பு.சாப்பாடு முடிந்தது.வந்த விஷயத்தை விசாலத்திடம் கோடி காட்டினார் சாம்பு. "நேக்கும் அவளை மாட்டுப்பொண்ணா ஆக்கிகறதல ரொம்ப இஷ்டம்தான்.இந்த பிராமணன் முருங்க மரம் ஏறாம இருக்கணம். அந்த பகவாந்தான் காப்பாத்தணம்" என்றாள். சாயங்காலம் காபி குடிச்சதும் வயலூர் முருகன் கோயிலுக்கு கிளம்பினார் சாம்பு.அவர் போனதற்கு அப்புறம் உள்ளே வந்தார் விச்வநாதன்.
" எதுக்கு வந்திருக்கான் ஒன்னோட ஆச தம்பி" என்றார் நிஷ்டூரமாக. மெல்ல விஷயத்தை சொன்னாள் விசாலம்.பதிலே சொல்லவில்லை விச்வநாதன்
"அவனுக்கு நான் என்ன பதில் சொல்றது" என்றாள் விசாலம்.
" துரை வரட்டும்.நானே பதில் சொல்றேன் " என்றார்.சாம்பு வயலூரிலிருந்து திரும்பி வந்தார்.விச்வநாதன் உரத்த குரலில் " அந்த குடும்பத்லேர்ந்து பொண் எடுத்து நான் அவமானப்பட்டதே போறும்.என் பையனும் அவமானப்படவேண்டாம்.இன்னோரு தரம் உன் தம்பி இது போல ஆசையை வெச்சுண்டு இந்த வீட்டு படி ஏற வேண்டாம்" என இரைந்தார்.சாம்பு பட்ட அவமானம் அவர் முகத்தில் தெரிந்தது. பையை தூக்கிக்கொண்டு கிளம்பினார்.விசாலி எவ்வளவோ தடுத்துப்பார்த்தாள். மூர்க்க புருஷர்கள் மத்தியில் பெண்பிள்ளைகள் புலியிடம் சிக்கிய புள்ளிமான் போல அல்லல் படுவது சகஜம்தானே.
No comments:
Post a Comment