Thursday, June 29, 2023

பிராப்தம் -4

 பிராப்தம் -4

தவறுக்கு வருந்துகிறேன்.காமாக்ஷிக்கு குழந்தை பிறந்த வருடம் 1950. தவறுதலாக 1959 என்று பதிவாகி இருந்தது.

இனி பிராப்தம் தொடர்கிறது.

வருடம் 2000. 

நங்கநல்லூரில் வோல்டாஸ் காலனி இரண்டாவது தெருவில்,சர்வ மங்களா அப்பார்ட்மெண்ட்டில் மொத்தம் 12 குடியிருப்புக்கள்  இருக்கின்றன. இதில் முதல் ப்ளோரில்,1 B யில்  வெங்கட்ராமன், சாரதா குடும்பம் வசிக்கிறது. மறுநாள் அவர்களது மகன் சுரேஷ்  P.hD க்காக அமெரிக்கா செல்ல இருக்கிறான். வீடு அல்லோலகல்லோல பட்டுக் கொண்டிருக்கிறது.

 "ஏண்டா எல்லாத்தையும் எடுத்து வெச்சுண்டூட்டயா" என்றார் வெங்கட்ராமன் மூன்றாவது முறையாக. "அப்பா. எல்லாத்தையும் எடுத்து வெச்சுண்டு மூணு தடவ செக் பண்ணிட்டேன் உன்னையும் அம்மாவையையும்,  தாத்தாவையும் தான் எடுத்து வெச்சுக்கணம்" என்றான் சுரேஷ் நக்கலாக.சுரேஷ் வெங்கட்ராமன் சாரதா தம்பதியின் ஒரே மகன். சென்னை,               வி ஐ டி யில் இன்ஜினியரிங் போஸ்ட் க்ராஜுவேஷன்  முடித்துவிட்டு அமெரிக்காவில் குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் பி.எச்டி தொடர இருக்கிறான். வெங்கட்ராமன் "இப்போ தாமாஷாதான் இருக்கும்.பின்னாடிதான் நான் சொல்றதின் அருமை புரியும்.நான் மூணாவது முறையா சீனா போறச்சே........ " என்று ஆரம்பித்த அவரை இடைமறித்த சுரேஷ்"வேண்டாம்ப்பா.இத்தோட நானே நாலு முறை உன்னோட மூணாவது சீனா ட்ரிப்பை பத்தி

கேட்டிருக்கேன்" என்றான்.பொங்கி வரும் சிரிப்பை புடவைத்தலைப்பால்மறைத்துக் கொண்டாள் சாரதா.

இதையெல்லாம் பார்த்த வெங்கட்ராமன் "எக்கேடாவது கெட்டு போங்கோ.நல்லது என்னிக்கும்,அதுவும் நான் சொன்னா எடுபடாது"என்றார்.

அவர் அருகில் வந்து அவர் இரு கைகளையும் பிடித்துக்கொண்ட சுரேஷ் " அப்பா.நீ சொல்றது என் நன்மைக்கேன்னு நேக்கு நண்ணா புரியறது.ஆனா அதை நீ பன்னி பன்னி சொல்லும்போதுதான் கேக்கற்துக்கு கஷ்டமா இருக்கு.நீ இவ்வளவு நாள் மெனகடலைன்னா நான் ஏதாவது கவர்ன்மெண்ட் ஆபிசல குப்ப கொட்டிண்டிருந்திருப்பேன்.நீ எதுக்கும் கவலைப்படாத.நான் எவ்வளவு சீக்கிரம் பி.எச்டீயை முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிச்சூட்டு வந்து, உங்க ரெண்டு பேரையும் தாங்கு தாங்குன்னு தாங்குவேன்"என்றான் உணர்ச்சிவசப்பட்டு. அவன் பார்க்காத போது கண்களில் துளிர்த்த நீரை வெங்கட்ராமன் துடைத்துக்கொண்டதை சாரதா பார்க்க தவறவில்லை.அப்பாவுக்கும் பிள்ளைக்கும் இப்படி ஒரு பாசம் இருப்பது அவளுக்கு புதிய விஷயம் அல்ல.

பிறகு சுரேஷ் தாத்தா படித்திருந்த ரூமுக்குள் சென்றான்."வாடா,செல்லம். நாளைக்கு எத்தன மணிக்கு ப்ளைட்", என்றார் அந்த எழுபத்தி மூணு வயது முதியவர்."ஏழு மணிக்கு வீட்டை விட்டு கெளம்பணம் தாத்தா "என்றான் சுரேஷ்."அப்போ சரி.நான் அதுக்குள்ள வாக்கிங்போய்ட்டு வந்தூடுவேன்" என்றவரிடம் சுரேஷ்" தாத்தா. வாக்கிங் போரச்சே ட்ராபிக் அதிகமில்லாத ரோடு வழியா போங்கோ.ட்ராபிக் இப்பெல்லாம் படு கேவலமா இருக்கு " என்றான்."நான்பாத்து போறேண்டா.நீ ஜாக்ரதையா படிச்சூட்டு சிங்கிளா திரும்பி வா " என்றார்." ஏன் தாத்தா.உங்களுக்கு பேரன் ஆம்படையா வெள்ள காரியா இருந்தா ஆகாதா" என்றான் சிரித்துக்கொண்டே.

"அப்படி ஒரு எண்ணம் இருக்காடா படவா.நம்பளவாள்லே கிளி மாரி பொண்ணு யதேஷ்டம் இருக்கா." என்றார்.

தாத்தாவை கட்டிக்கொண்ட சுரேஷ் "தாத்தா நான் உங்க பேரன். அது மாதிரி தப்பு எல்லாம் பண்ண மாட்டேன்" என்றான். அதற்கு அவர். "தெரியுண்டா குழந்தை. உன்ன பத்தி எனக்கு தெரியாதா என்ன" என்றார். "காலைல பாக்கலாம்" என்றவன் தாத்தா ரூமை விட்டு வெளியே வந்தான்.

மறு நாள் காலை 9 மணி லூப்தான்ஸா ப்ளைட்டுக்கு, ஏழு மணிக்கு ஏர்போர்ட்டை அடைந்தனர் நால்வரும்(தாத்தா உட்பட).

அவன் அவர்களுடன் பதினைந்து நிமிடம் பேசி விட்டு டெர்மினல் உள்ளே செல்ல ஆரம்பித்தான்.வெங்கட்ராமன் மீண்டும் ஒரு முறை " எல்லாம் ஜாக்ரதைடா சுரேஷ்.போய்சேர்ந்ததும் போன் பண்ணு " என்றார்.திரும்பி வீட்டிற்கு போகயில் இருவர் மனமும் இருக்கமாக இருந்ததால்  வெங்காட்ராமனும்,சாரதாவும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை.

இதற்கு முதல் நாள் க்ரோம்பேட் ராதா நகரில்,மூன்றாவது குறுக்குத்தெருவில் இருந்த சிவஜோதி அப்பார்ட்மெண்ட், க்ரவுண்ட் ப்ளோர், நான்காம் நெம்பர் வீட்டிலும் இதேபோல ஒரு அமர்களம் நடந்து கொண்டிருந்தது.ராம மூர்த்தி, கமலா தம்பதிகளின் ஓரே புத்ரியான மாலினி எம்.ஐ.டி யில் கம்ப்யூடர் என்ஜினியரிங் டிகிரி முடித்து போஸ்ட் கிராஜுவேஷனை அமரிக்காவில் தொடர மறு நாள் அமரிக்கா கிளம்புகிறாள்.கமலா புலம்பி தீர்க்கிறாள்.

"ஏன்டீ மாலு.நம்பூர்ல இல்லாத படிப்பாடி? பொண்ணா புறந்தூட்டு இப்படி தனியா அமரிக்கா போக எப்படி டீ தைர்யம் வந்தது"என்றாள்.

"என்னாம்மா இவ்வளவு பத்தாம்பசலியா இருக்க.இந்த அழகுல அந்த காலத்து ஹோம் சயின்ஸ் கிராஜுவேட் வேற.பாட்டி பார்.அறுபத்தெட்டு வயசலேயும் எவ்ளவு தைர்யம்பார்.நான்மேல் படிப்புக்கு ஃபாரின் போரேன்னு சொன்னதுமே,என்ன உச்சி மோந்து நண்ணாபடிச்சூட்டு வாடின்னு சொன்னா" என்றாள் மாலினி. பாட்டி அங்கே இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட கமலா

"உங்க பாட்டிக்கு என்ன.வாழ்க்கைல எல்லாத்தையும் பாத்து, அனுபவிச்சூட்டா. நான் அஞ்ஞானியா இருக்கேன்",என்றாள்.

"அம்மா.ஆரம்பிச்சுடாதே.நான் நல்ல படியா படிச்சூட்டு திரும்பி வந்தூடுவேன். வெள்ளகாரனை கூப்டுண்டு வர மாட்டேன்.வந்தவுடனே நீ சொல்றவனுக்கு கழுத்த நீட்டறேன். போறுமா" என்றாள்.இந்த ட்ராமாவையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராமமூர்த்தி பெண்ணை நினைத்து பெருமிதம் அடைந்தார்.

" எல்லாத்தையும் எடுத்துண்டூட்டயான்னு ஒரு தரம் செக் பண்ணிக்கோ மாலு" என்றார். "சரிப்பா"என்றாள் மாலினி.காலை ஐந்து மணிக்கு எழுந்து ராமமூர்த்தி, கமலா, மாலினி மூவரும் குமரன் குன்றம் சென்று முருகனை தரிசித்து வந்தனர்.ஏர்போர்ட்டுக்கு ஏழரைக்கு வந்ததும்,மாலினி அப்பா,அம்மா பாட்டியிடம் விடை பெற்று உள்ளே நடந்தாள்

சுரேஷ்  செல்லும் அதே ப்ளைட்டில் இருபது வயதுள்ள,அழகான  மாலினியும்  செல்வது விதியின் விளையாட்டா?

தனித்தனியாக சென்ற இருவரும் ஜோடியாக இந்தியா திரும்புவார்களா?

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment