Saturday, September 24, 2022

கள்ளஹள்ளி பூவராகஸ்வாமி

 Kallahalli Sri Bhoovarahaswamy         

                        Temple.


பெங்களூர் மைசூர் ஹைவேயில் மைசூருக்கு அருகில், பாண்டவபுரா எனும் ஊரிலிருந்து 32கி.மீ தூரத்தில் உள்ளே சென்றால், கள்ளஹள்ளி எனும் கிராமத்தில் , காவிரி நதியின் கிளை நதியான ஹேமாவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள புண்ய க்ஷேத்ரமான ஶ்ரீ பூவராகஸ்வாமி திருக்கோவிலை அடையலாம்.

செழிப்பான பச்சைப்பசேர் என மரங்களும் செடி கொடிகளும் நிறைந்த சோலைகளின் நடுவே கோவில் கொண்டிருக்கிறார் பகவான். பதினைந்தடிக்குமேல் உயரமான வீற்றிருந்த திருக்கோலத்தில் இருக்கும் ஶ்ரீ பூவராகப் பெருமாளைக் காணக் கண்கோடி வேண்டும்.

நான்கு கரங்கள். மேல் கரங்களில் சங்கு, சக்ரம். சிலையின் பின்புறம் முதுகில் சுதர்சனர். கீழ் இரண்டு கைகளில்இடது கையால் மூன்றரை அடி உயரமான ஶ்ரீ பூதேவித் தாயாரை அணைத்தபடி இருக்கிறார். வலது கை அபயஹஸ்தமாக பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறது.

ப்ரம்மாண்ட உருவத்தில் இருக்கும் பகவானை அண்ணாந்துதான் பார்க்கணும். பார்க்கப் பார்க்க அழகோ அழகு. 

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான கோவில். இந்த இடத்தில் யாகம் செய்த கௌதம முனிவரால் ஸ்தாபிக்கப்பட்ட மோனோ லித் எனப்படும் ஒற்றைக்கல்லால் ஆன சாளிக்ராம சிலை. பக் கத்தில் ஓடும் ஹேமாவதி ஆறு, வெள்ளம் வரும்போதெல்லாம் சுவாமியின் காலைத் தழுவி வணங்கிச் செல்வது வழக்கம். நாளடைவில் இச்சிலை பூமிக்கடியில் மறைந்துவிட்டதாம்.

ஹொய்சல மன்னன் பல்லாள தேவா, வேட்டை முடிந்து மரநிழலில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது, அவருடைய நாய் ஒரு முயலைத் துரத்தியதாம். பயந்து ஓடிய முயல் ஓரிடத்தில் சடேரென திரும்பி நாயைத் துரத்தியதாம்.

இதைக்கண்ட பல்லாள தேவா, இந்த இடத்தில் ஏதோ விசேஷம் இருக்கணும் என ஐயப்பட்டு, தோண்டிப் பார்த்தபோது இந்த ப்ரம்மாண்ட விக்ரஹம் கிடைத்ததாம். பிறகு அந்த மன்னரால் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டது இந்தக் கோவில்.

சூப்பர் பவர்ஃபுல் கடவுள் இவர் என்பது அனைவரும் கண்கூடாக அறிந்த உண்மை. நிலம் சம்பந்தப்பட்ட வியாகூலம் உடையவர்கள்,  சொந்த வீடு கட்டும் ஆசை உள்ளவர்கள் இவரை வணங்கினால், அவர்கள் ஆசையை உடனே நிறைவேற்றி வைப்பார்.

இந்தக் கோவிலில் 25 வித மலர்கள், வாசனை சாமான்கள் இன்னும் அனைத்து வித பொருட்களால் செய்யப்படும் அபிஷேகம் மிக விசேஷம். எட்டாத உயரத்தில் இருக்கும் அவருக்கு உச்சிமுதல் அபிஷேகம் செய்ய, பட்டர்கள் உயரமான ஸ்டூல்களில் ஏறி, எம்பி எம்பி அபிஷேக அலங்காரங்கள் செய்வதை இன்றெல்லாம் பார்த்து பரவசமடையலாம்.

பூ தேவியை இறுக அணைத்தபடி இருக்கும் இவரை வணங்கினால் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிணக்குகள் சரியாகி மிக அன்யோன்யமான வாழ்வு கிடைக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை.

மண், செங்கல் போன்ற கட்டிடம் கட்ட தேவையான பொருட்களை பூஜை செய்து, அதை கட்டும் கட்டிடத்துக்கு உபயோகப் படுத்தினால் எந்தத் தடங்கலும் இன்றி அந்தக் காரியம் முடிவடையும். மண் மற்றும்  செங்கல் பூஜை இங்கு மிகச்சிறப்பு.

முதலில் ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னதானம் இருந்தது. இப்போது தினமும் அன்னதானம் இருப்பதாக சொல்கிறார்கள். பக்கத்தில் இருக்கும் ஹேமாவதி நதி, பார்க்கப் பார்க்க எல்லையில்லா ஆனந்தத்தை அளிக்கும். ஜாலியாக  கூடை தெப்பம், தோணி என்றும் சொல்வர், ஏறி சற்றுநேரம் பயணம் செய்யும் வசதி யும் உண்டு. நாங்கள் சென்ற சமயம் அதில் ஏறி நடு ஆறு வந்தவுடன், அந்தபடகோட்டி, தோணியை ஒரு சுற்று சுற்றி, அதில் அமர்ந்திருந்த எங்களை, தோணியுடன் தட்டாமாலை சுற்ற வைத்தது மறக்கமுடியாத இன்ப அனுபவம்.

ஶ்ரீ பூதேவி சமேத ஶ்ரீ பூவராக ஸ்வாமியை வணங்கி, வாழ்வில் நலனத்தும் பெறுவோமாக.

நாராயண மந்த்ரம் அதுவே நாளும் பேரின்பம்.

No comments:

Post a Comment