த(க)ண்ணீர்
========
மத்யமார் முகநூல் பதிவு
~~உண்மை சம்பவம்~~
"நாராயணா கோபாலா கோவிந்தா".
நான் நாலாவது படிச்சப்போ நீங்க யாராவது என்னோட தெருவுல இருந்து இருந்தீங்கன்னா புரட்டாசி முதல் சனிக்கிழமை உங்க வீட்டு வாசல்ல என்னோட அந்த குரல் கேட்டு இருக்கும்.
புரட்டாசி மாசம் தலு போடுற அன்னைக்கி, வருஷம் தவறாம என் கைலதான் சொம்பு குடுத்து அனுப்புவாங்க என்னோட அம்மா, கண்டீஷன்ஸ் அப்ளையோட.
கண்டீஷன்ஸ்:
1. தெருவுல இருக்க ஏதாவது மூணு வீட்டுக்கு போகணும்.
2. அந்த வீட்டுக்குள்ளயும் போகக்கூடாது, காலிங்பெல்லையும் அடிக்கக்கூடாது.
3. வெளிலயே நின்னு, "நாராயணா கோபாலா கோவிந்தா" ன்னு சத்தமா கத்தி, உள்ள இருக்கவங்கள கூப்பிடனும்.
4. கைல இருக்க சொம்புல அவுங்ககிட்ட இருந்து ஒரு கைப்பிடி அரிசி வாங்கிட்டு வரணும் சாமிக்கு தலு வைக்க.
எப்பவும் நான் தான் சிக்குவேன் இந்த டாஸ்க்குக்கு. என்னோட தம்பி, அம்மா கைல சொம்பு எடுத்த உடனே சைக்கிள்ல எங்கயாவது எஸ்கேப் ஆயிடுவான்.
புரட்டாசி முதல் சனி எங்க ஊர்ல, மூணாவது சனி என்னோட பாட்டி ஊர், சென்னைல. ரெண்டு இடத்துலயும் நானேதான் சொம்பு தூக்கணும்.
முதல் வாரம் முடிஞ்சிடுச்சி. மூணாவது வாரம் நாலு நாள் லீவ்ல பாட்டி வீட்டுக்கு ஜாலியா கிளம்பிட்டோம். ஒரே வருத்தம் என்னன்னா அந்த நாலு நாள், கூட படிக்கிற சங்கீதாவையும், லலிதாவையும் மிஸ் பண்ணனும் அவ்வளவுதான்.
போயாச்சு சென்னைக்கு.
சொம்பும் கைக்கு வந்துடுச்சி.
அதே கண்டீஷன்ஸ் தான். ஒரு சின்ன மாறுதலோட.
சென்னைல நாங்க இருந்தது போலீஸ் கோட்ரஸ்ல.
அங்க வீட்டுக்கு வெளில நின்னு காட்டுக்கத்து கத்துனாலும் உள்ள இருக்கவங்களுக்கு கேக்காது. So, காலிங்பெல் அடிச்சிக்கலாம். உள்ள இருக்கவங்க வெளில வந்ததும் "நாராயணா கோபாலா கோவிந்தா" சொல்லிதான் அரிசி வாங்கணும்.
மூணு வீடு, வருஷா வருஷம் போற அதே வீடுங்கள கவர் பண்ணிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.
தலு போட்டு சாமிய குளிரவச்சாச்சி.
எனக்கு சாப்பிட்ட உடனே தூக்கம் வரும். இதுல வேலை வேற செஞ்சி இருக்கேன்.
வருமா இல்லையா...
டைட்டா தூங்கி நைட் எட்டு மணிக்குதான் முழிச்சேன்.
இதுக்காகவே காத்துகிட்டு இருக்காங்க பாட்டி, கைல ஒரு பிளாஸ்டிக் குடத்தோட.
ஒரு வேலை மட்டும் பண்ணுடான்னு சொல்லிகிட்டே குடத்தோட என்கிட்டே வர்றாங்க.
அய்யய்யோ, போன வருஷம் வரைக்கும் சொம்பு மட்டும்தான. இந்த வருஷத்துல இருந்து குடத்துல வேற அரிசி கலெக்ட் பண்ணணுமான்னு எனக்கு தூக்கிவாரி போடுது.
But அது இல்லை.
டேய், கோட்ரஸ் பம்ப்புல ஒரு குடம் தண்ணி புடிச்சுகிட்டு வா.
முதல் அதிர்ச்சிக்கு இது எவ்வளவோ பரவாயில்லைன்னு குடத்தோட கிளம்பிட்டேன்.
போலீஸ் கோட்ரஸ்க்கு பொதுவான ஒரு இடத்துல அடி பம்பு இருக்கும்.
அதுல கோட்ரஸ்க்கு வெளில, குடிசைங்கள்ல இருக்க அயன் பண்றவங்க, ரிக்க்ஷா ஓட்றவங்களும் தண்ணி அடிச்சிக்குவாங்க.
இங்கயும் கண்டீஷன்ஸ் இருக்கு.
கோட்ரஸ்ல இருக்க எங்களுக்குதான் அங்க priority. நாங்க எத்தனை பேரு இருந்தாலும் நாங்க எல்லாரும் அடிச்சி முடிச்ச அப்புறம்தான் அவுங்க அடிக்கணும்.
நான் குடத்தோட போறேன், அங்க ஏற்கனவே ஒரு ஐம்பது வயசுல இருக்க ஒருத்தர் தண்ணி அடிச்சிக்கிட்டு இருக்காரு.
அவரைப்பார்த்ததும் தெரிஞ்சிடுச்சி கோட்ரஸ்க்கு வெளில இருக்கவருன்னு.
பாதி குடம் அடிச்சிட்டாரு.
சரி அவரு மீதி குடமும் அடிச்சிக்கட்டும்ன்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.
(usual rule என்னன்னா, அவுங்க பாதி குடம் அடிச்சி இருந்தாலும், அவுங்க குடத்தை எடுத்துடனும். நாங்க அடிச்ச அப்புறம்தான் மீதியை அடிக்கணும்)
திடீர்ன்னு எனக்கு பின்னால இருந்து ஒரு லேடி சத்தமா திட்டிகிட்டே வராங்க. யாருன்னு திரும்பி பார்த்தா, எங்க வீட்டுக்கு பக்கத்து பிளாக்ல இருக்க இன்ஸ்பெக்டரோட wife.
அவுங்களுக்கு, என்னை நிக்க வச்சிட்டு அவரு தண்ணி புடிச்சுகிட்டு இருக்கிறதை பார்த்ததும் செம்ம கோவம் வந்துடுச்சி.
இவங்க சத்தம் போட்டதும் கூட அவரு எதுவுமே சொல்லாம தண்ணி புடிச்சுகிட்டு இருந்தாரு.
அடுத்தது இன்னும் சத்தமா கோவத்தோட சொன்னாங்க, "எடுடா குடத்தை!!" ன்னு அவ்வளவு பெரியவரை.
எனக்கு பக்குன்னு ஆயிடுச்சி.
ஆனா அவரு கோவமே படாம, "இன்னும் கொஞ்சம்தாம்மா", புடிச்சுகிட்டு போய்டறேன்னு பவ்யமா சொல்றாரு.
இவங்க மறுபடி அவரை ஒருமைல திட்டிகிட்டே பம்ப்பு பக்கத்துல போறாங்க.
அவரு மறுபடி மறுபடி கெஞ்சிறாரு.
நேரா போனாங்க, அவரோட பாதி நெறஞ்ச குடத்தை தண்ணியோட தூரமா தூக்கி போட்டுட்டு, இவங்களோட குடத்தை வச்சி தண்ணி அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.
அவ்வளவு நேரம் பொறுமையா இருந்தவரு, ஒரே ஒரு வாக்கியம் மட்டும் கோவமா சொன்னாரு.
"புடிச்சிக்கம்மா, நீ புடிக்கிற தண்ணிய நீ நல்லதுக்கே எடுத்துக்கிட்டு போகலம்மா" ன்னு சொல்லிட்டு ஒடஞ்ச குடத்தை எடுத்துக்கிட்டு போய்ட்டாரு.
தண்ணிய புடிச்சுகிட்டு அவுங்களும் கிளம்பிட்டாங்க. நானும் வீட்டுக்கு வந்துட்டேன்.
மறுநாள் காலைல நான் தூங்கி முழிச்சி கேட்ட முதல் விஷயம்,
அந்த பக்கத்து பிளாக் இன்ஸ்பெக்டர் நேத்து நைட் ஹார்ட் அட்டாக் வந்து செத்துட்டாருன்னு!!
அந்த பெரியவர் சொன்னது போலவே, பிடித்துக்கொண்டு போன தண்ணீர் நல்ல காரியத்திற்கு பயன்படப்போவதில்லை!!
பின்குறிப்பு:
நம் அனைவருக்கும் தெரிந்ததுதான், மீண்டும் ஊர்ஜிதம் ஆனவை இரண்டு.
1. உயிர்களுக்குள் பேதம் பார்ப்பது பாவம்.
2. ஓருயிரை காயப்படுத்தினால் கட்டாயம் நமக்கு திரும்பவந்து சேரும்.
ஆக்கம்,
அசோக் மு.
No comments:
Post a Comment