Friday, September 9, 2022

அனந்தசயன ராமர்

 வேறெங்கும் காண முடியாத மன நிம்மதி வழங்கி ஆனந்தம் அருளும் அனந்தசயன ராமர்!

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அற்புதமான வைணவத் தலங்களில் ஒன்றான வெங்கட்டாம்பேட்டை திருத்தலம்  கடலூர் மாவட்டம் குறிஞ்சிப் பாடியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது

திரேதா யுகத்தை நினைவுபடுத்தும் வகையில் வெங்கட்டாம்பேட்டை வேணுகோபால சுவாமி 

ஆலயத்தில் அனந்தசயன ராமர் அருள்பாலிக்கிறார்.

இங்கு துவாபர யுகத்தின் அடிப்படையில் வேணுகோபால சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

இறைவனை அமர்ந்த நிலையில் வணங்கி நிற்கும் கருடாழ்வார் கொள்ளை அழகு. 

மேலும் சூரியனும் சந்திரனும் தன் ஒளிக்கதிர்களால் வழிபடும் கோயில் எனும் பெருமையும் இந்தத் தலத்துக்கு உண்டு.

பல புராண புராதனப் பெருமை கொண்டது வெங்கட்டாம்பேட்டை வேணுகோபால சுவாமி திருக்கோயில்.

தல வரலாறு:

கலியுகத்தின் தொடக்கத்தில், சடமர்ஷனர் என்ற மகரிஷி வடநாட்டில் தவமிருந்து வந்தார்.

ஒரு கட்டத்தில் அப்பகுதி முழுவதும் அமைதி குலைந்து, போர்ச்சூழலும் அதர்மமும் தலைதூக்கியது. 

எனவே அந்த மகரிஷி அமைதி வேண்டி தெற்கு திசை நோக்கி வந்தார்.

இப்போதைய விழுப்புரம் அருகில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் பஞ்ச கிருஷ்ண ஆரண்யம் எனும் வனத்துக்கு வந்தார் மகரிஷி. 

அப்போது நீர் வற்றியிருந்த கருட நதியைக் கண்டார். 

நீரின்றி வெப்ப மணல் எதிரொலித்து தகித்துச் சுட்டது. இந்த வெப்பம் தாளாமல் தவித்தார்.

அந்த நேரத்தில் தென்கரை ஓரமாக நீரூற்று தோன்றியது. 

அதில் தன் காலை நனைத்து வெப்பத்தைத் தணித்துக் கொண்டார் சடமர்ஷன மகரிஷி. அதன் பாதையிலேயே பயணத்தைத் தொடர்ந்தார். 

அந்தப் பாதையானது, தில்லைவனத்தின் வடகோடியில் உள்ள தீர்த்தவனம் என்ற இடத்தில் முடிவடைந்தது. 

அங்கே சென்ற மகரிஷிக்கு ஆனந்தமும் அமைதியும் உள்ளே நிலவியது. 

அந்த இடம் எழில் சூழ அமைதியாகக் காட்சி தந்ததால், அங்கேயே அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தார்.

தவத்தால் மகிழ்ந்த திருமால், ஸ்ரீலட்சுமிதேவியோடு மகரிஷிக்கு காட்சி கொடுத்தார். 

அதில் மகிழ்ந்த முனிவர், ‘தாங்கள் உலகைக் காக்க மேற்கொண்ட அனைத்து அவதாரங்களையும் எனக்கு காட்டி அருள வேண்டும்’ என நெடுஞ்சாண்கிடையாக நமஸ்கரித்து வேண்டினார். 

மகரிஷி கேட்டுக்கொண்டபடி மகாவிஷ்ணுவும் அவ்வாறே காட்சி தந்து அருளினார். 

தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு இன்றளவும் அருள்மழை பொழிந்து கொண்டிருக்கிறார்.

பின்னர் மகரிஷி, ‘தாங்கள் இந்த திருத்தலத்தில் நின்ற கோலத்திலும், கிடந்த கோலத்திலும் நிரந்தரமாய் தங்கியிருந்து, பக்தர்களுக்கு கேட்ட வரங்களை அளித்து அருள் செய்ய வேண்டும்’ என்று பணிந்தார். 

அதன்படியே வரமளித்த பெருமாள், இங்குள்ள ஆலயத்தில் ஸ்ரீருக்மிணி- ஸ்ரீசத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபாலராகவும், ஆதிசேஷன் பாம்பணையில் பள்ளி கொண்ட ராமராகவும் காட்சி தருகிறார்.

கலியுகத்தின் அடிப்படையில் மோகினி அவதார சிலை அமைந்துள்ளது.

திரேதா யுகத்தில் ராமபிரான் இலங்கை சென்று

அனுமன் அகம் மகிழ,
அமர்வீரர் அகம் மகிழ
அணுகின அத்தனையும், 
அனந்த ராமன் ஆனதே!
அணுப் பொழுதில்  இராகவன்
அணுவுக்குள் அணுவாகி 
ஒன்றாகி நின்றனன்!
அங்கு-காணினும் ராகவா, 
இங்கு-காணினும் ராகவா
எங்கெங்கு காணினும் 
என் ராகவா ராகவா!!!

என்று வீரமாகப் போரிட்டு வெற்றியுடன் சீதாதேவியை மீட்டு .  திரும்பும்போது ராமேஸ்வரத்தில் சிவபூஜை முடித்துவிட்டு சித்ரகூடம் (சிதம்பரம்) வழியாக வந்துகொண்டிருந்தார். 

சீதாதேவியை இராவணன் கடத்திச் சென்றது முதலே ராமபிரானுக்கு ஓய்வு உறக்கமில்லை. 

அதன் முடிவில் இராவணனுடன் கடும்போரும் செய்தார். 

இவையெல்லாம் அவரிடம் களைப்பை ஏற்படுத்தியிருந்த காரணத்தால் சற்று இளைப்பாற எண்ணி தரையில் படுக்கச்  சென்றார். 

இதைக் கண்டு மனம் பதைத்த லட்சுமணன் தன் முந்தைய வடிவான ஆதிசேஷன் உருவமெடுத்து, உடலை மெத்தையாகவும் சிரசை குடையாகவும் விரித்துப் படுக்க, அதன்மீது ராமபிரான் மேற்கு- கிழக்காக பள்ளி கொண்டார். சீதாதேவி அருகே இருந்து அவர் கால்களைப் பிடித்துவிட்டாள்.

அதே நேரத்தில் அயோத்தியிலிருந்த பரதன், குறித்த நேரத்தில் அண்ணன் வந்து சேரவில்லையே என மனம் வெதும்பி, தீ வளர்த்து அதற்குள் இறங்கி உயிர்விட ஆயத்தமானான். 

களைப்பால் சற்று கண்ணயர்ந்த போதும் தன் உள்ளுணர்வால் இதையறிந்த ராமபிரான் உடனே கண்விழித்து, தான் சீதையுடன் வந்து கொண்டிருக்கும் செய்தியை பரதனிடம் காற்றினும் கடிது சென்று தெரிவிக்குமாறு அனுமனிடம் ஆணையிட்டார். 

அவ்வாறே சென்று அனுமனும் பரதனின் உயிரைக் காத்தான்.

இந்த நிகழ்வினை உறுதிபடுத்தும் வகையில் இங்கு புறப்பட யத்தனிக்கும் தோரணையில் அனுமன் சிலை அமைந்துள்ளது 

இந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் அமைந்துள்ள ஸ்ரீராமனின் சயனக் கோலம். ஆதிசேஷன்மீது ஸ்ரீராமன் படுத்திருக்க, கால்பகுதியில் சீதை இருக்க, புறப்பட யத்தனிக்கும் தோரணையில் அனுமனும் உள்ளது அற்புதமான காட்சி. 

இந்த சந்நிதி வேணுகோபால சுவாமி சந்நிதிக்கு வடக்கே அமைந்துள்ளது.

கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஆலயம் அமைக்க திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

கோவிலுக்கு மேற்கேயுள்ள ஒரு பகுதியில் அனந்தசயன ராமர் உள்ளிட்ட சிற்பங்கள் செய்யப்பட்டன. 

செய்து முடித்து அவற்றை ஆலயத்துக்குக் கொண்டுவரும் வழியில் ராமரின் விக்ரகம் மட்டும் பூமியில் புதைந்துவிட்டதாம். 

எனவே திருப்பணிகள் அப்படியே நின்றுவிட்டன.

பல ஆண்டுகள் கடந்தபின் சிற்றரசர் ஒருவர் தன் மகள் வேங்கடம்மாவுக்கு சீதனமாக வழங்கிய இந்த பகுதியில்  இளவரசி நின்றுபோன கோவில் திருப்பணிகளை மீண்டும் தொடங்கி நிறைவேற்றி முடித்தாள். 

மூலவராக வேணுகோபால சுவாமி, தாயார், ஆண்டாள், ஆழ்வார்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.

இதே காலகட்டத்தில் ஊருக்கு மேற்கே விவசாயி ஒருவர் தன் நிலத்தை உழுது கொண்டிருந்தார். 

அப்போது கலப்பை எதிலோ சிக்க, காளைகள் அப்படியே  நின்றுவிட்டன. 

உடனே அந்த விவசாயி மண்ணை அகழ்ந்து பார்க்க, அங்கே சயனகோலத்தில் ராமர் விக்ரகம் இருப்பதைக் கண்டார். 

பின்னர் ஊர் மக்கள் ஒத்துழைப்யோடு சயனகோலத்தில் உள்ள ராமர் ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை  செய்யப்பட்டார்.

கலியுக வரலாற்றின்படி, ஐயப்பன் அவதாரத்தின் பொருட்டு மோகினி வடிவம் எடுத்தார் மகாவிஷ்ணு. 

அதைக் குறிக்கும் வண்ணம் ஆலயத்துக்கு அருகே, பாச்சாபாளையம் பெருமாள் கோவிலில் மோகினி அவதார விக்ரகம் உள்ளது.

முற்காலத்தில் இந்த ஊர் திருவேங்கடத்தின் நினைவாக வேங்கடபுரி என்னும் பெயரில் விளங்கியது. 

பின்னர் ஆலயத் திருப்பணி செய்த வேங்கடம்மாளின் நினைவாக வேங்கடம்மாள்பேட்டை என்று அழைக்கப்பட்டு, தற்போது வெங்கட்டாம் பேட்டை என மருவி வழங்குகிறது.

""இங்குள்ள ராமபிரான் சயனக் கோலத் திருவடிவத்தை வேறெங்கும் காண்பது அரிது. 

இவரை தரிசிக்கும்போது மன நிம்மதி உண்டாவதை நாம் அனுபவப்பூர்வமாக உணரலாம். 

பிரச்சினைகளில் சிக்கித் தவிப்போர், மன சஞ்சலத்தில் உள்ளோர் இவரை தரிசித்தால், மனதில் ஒரு தெளிவு தோன்றி புத்துணர்ச்சி உண்டாகும். 

காரணம், இலங்கைப் போரை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வந்து ராமபிரான் ஓய்வெடுத்த இடம் இது. 

"சீதையை மீட்டுவிட்டோம்; இராவணன் என்ற அரக்கனை அழித்துவிட்டோம்; இனி அனைவருக்கும் நிம்மதி' என்ற எண்ணத்தோடு  ராமபிரான் துயில் மேற்கொண்டதால்,  ராமபிரானுக்கு ஏற்பட்ட அந்த மகிழ்ச்சியும்  மனநிறைவும் அவரை தரிசிப்போரர் அனைவருக்கும் கிட்டுகிறது''     

பொதுவாக பெருமாளை நின்ற கோலம், அமர்ந்த கோலம், கிடந்த கோலம் ஒரு சில ஆலயங்களில் கண்டு தரிசித்திருப்பீர்கள்.

ராமபிரானின் சயன கோலத்தை மிக அரிதாகவே தரிசிக்கலாம்.(திருப்புல்லாணியில் தர்ப்பை புல்லின் மீது பள்ளிகொண்ட ராமபிரானின் சயன கோல விக்கிரகம் அமைந்துள்ளது.)

அந்த அற்புத தரிசனம் இங்கே கிடைப்பது நாம் பெற்ற பேறு. 

இங்கு வந்து வழிபடுவோருக்கு எல்லா பாக்கியங்களும் கிட்டும்.

மன நிம்மதி, வழக்குகளில் வெற்றி, திருமணப் பேறு, பிள்ளைப் பேறு போன்ற எல்லாமே சித்திக்கும்'' .

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!

சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!!

ஆபாதாம் பஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம்
ராமாய ராமபத்ராய ராமச்சந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய: பதயே நம

காண்பதற்கு அரிதான இந்த சயனகோல ராமனை நேரில் பார்ப்பது போன்ற காணொளிக்காட்சி 🙏👆

No comments:

Post a Comment