கி.பி. 14-15-ஆம் நூற்றாண்டில் விஜய நகர அரசர்களால் இந்த கோயில் கட்டப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
* ஸ்தல சிறப்பு...
வைகுண்டத்தில் இருந்து நேரடியாக பெருமாள் இங்கே வந்ததால், வைகுண்ட வாசர் என்று அழைக்கப்படுகிறார். வைகுண்டவாசர் என்று பெயர் பெற்றதால், இத்தலத்தையே வைகுண்டமாக கருதி, சொர்க்க வாசல் அமைக்கப்படவில்லை. பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் இல்லாத அதிசய கோயிலாக இக்கோயில் இருப்பது சிறப்பாகும்.
ஏகாதசியன்று சுவாமி, கருட வாகனத்தில் வலம் வருகிறார். சுவாமி எதிரே கருடாழ்வார் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவரது இறகுகள் விரிந்த நிலையில் இல்லாமல் மூடிய நிலையில் இருப்பதும் சிறப்பாக கருதப்படுகிறது.
பெருமாள் கோயில்களில் ஜெயன், விஜயன் ஆகியோரே துவார பாலர்களாக இருப்பர். ஆனால், இங்கே அவிரட்சகன், அக்னி ஆகியோர் துவார பாலகர்களாக இருக்கிறார்கள். திருக்கச்சிநம்பி, நம்மாழ்வார், ராமானுஜர் மற்றும் விஷ்வக்சேனர் ஆகியோரது சிலைகளும் இங்கே இருக்கிறது.
* ஸ்தல பெருமை...
பெருமாள் கோயில்கள் அனைத்திலும் பெருமாள் சக்கரத்தை நேராக நமக்கு தெரிகிற படி கையில் பிடித்திருப்பார். ஆனால், இங்கே சக்கரத்தை பிரயோகம் செய்வதற்கான நிலையில் வைத்திருந்து காட்சி தருவது இத்தலத்தின் பெருமையாகும். இதுபோன்ற நிலை வேறு எங்கும் கிடையாதது குறிப்பிடத்தக்கது.
* ஸ்தல வரலாறு...
சிவபெருமானின் இருப்பிடமான கைலாயாத்தில், அன்னை பார்வதி தேவி ஒரு முறை, இறைவனின் கண்களை விளையாட்டாக தனது இரு கைகளை கொண்டு மூடியபோது பிரபஞ்சம் அனைத்தும் இருளில் மூழ்கியது. அதனால், உயிர்கள் அனைத்தும் தத்தளித்தன.
தேவலோக கணக்குப்படி சில வினாடிகள் என்பது பூலோக கணக்குப்படி நாள் கணக்கில் வரும் என்பதால் அனைத்து உயிர்களும் இருளில் தவித்தன. அதனால், கடும் கோபமடைந்த சிவபெருமான், தனது நெற்றிக்கண்ணை திறந்து உலகிற்கு வெளிச்சத்தை கொடுத்தார். மேலும், பார்வதி தேவிக்கு தண்டனையாக பூலோகத்தில் பிறக்கும்படி சாபம் கொடுத்தார்.
* திருமணம்...
அதன்படி பூவிலகிற்கு வந்த அன்னை பார்வதி தேவி, தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக, இன்றைய மாங்காட்டில் சிவபெருமானை நினைத்து, இறைவனையே மணம் புரிவதற்காக விரதம் இருந்தார். மேலும், யாரும் தவம் செய்ய முடியாதபடி அக்னி வளர்த்து ஊசி முனையில், ஒற்றைக்காலில் நின்று கடுமையாக தவம் புரிந்தாள்.
இந்நிலையில், அசுரகுருவான சுக்கிராச்சாரியாரும் தான் இழந்த ஒரு கண்ணை திரும்ப பெறுவதற்காக வேண்டி, இதே மாங்காட்டில் சிவபெருமானை நினைத்து தவம் புரிந்து வந்தார்.
அப்போது சிவபெருமான், சுக்கிராச்சாரியாருக்கு முதலில் காட்சி கொடுத்து அவருக்கு இழந்த கண் பார்வையை மீண்டும் வழங்கினார். அதன் பிறகு, அன்னை பார்வதிக்கு காட்சியளித்து, காஞ்சிபுரத்தில் அவரை திருமணம் செய்வதாக வாக்கு கொடுத்ததால், அன்னை இங்கிருந்து உடனடியாக காஞ்சிபுரம் சென்றார்.
இறைவனை திருமணம் செய்திட வேண்டும் என்ற ஆவலில், அன்னை தான் தவம் செய்த அக்னியை அணைக்காமல் சென்றபடியால், இந்த இடம் யாரும் வசிக்க முடியாதபடி அனலால் தகித்தது.
அதனால், அந்த வெப்பத்தை சிவபெருமானின் அவதாரமாக கருதப்படுகிற ஆதி சங்கரர் இங்கே வருகை புரிந்து அந்த வெப்பத்தை அணைத்ததாக வரலாறு கூறுகிறது.
* தங்கைக்காக...
இந்நிலையில், சிவபெருமானை தவம் புரிந்து திருமணம் செய்வதற்காக வந்த தங்கையைத் தேடி, சீதனத்துடன் பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேரடியாக புறப்பட்டு வந்தார். பூலோகம் வந்த மகாவிஷ்ணு, மாங்காட்டில் தங்கையைக் காணாமல் தவித்தபோது, மார்க்கண்டேய மகரிஷி அவரைக் கண்டு நடந்த சம்பவத்தைக் கூறினார்.
மேலும், இத்தலத்திலேயே வைகுண்டவாசர் என்ற பெயரில் தங்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்பேரில், பெருமாளும் வைகுண்டப் பெருமாளாக இங்கேயே எழுந்தருளி காட்சியளித்தார்.
அதனால், பெருமாளுக்கு அருகிலேயே மார்க்கண்டேயர் தவம் செய்தபடி இருக்கிறார்.
தங்கைக்கு திருமணச்சீர் கொடுப்பதற்காக, பெருமாள் கொண்டு வந்த மோதிரம் அவரது வலது உள்ளகையில் இருப்பதை பார்க்கலாம்.
தங்கைக்கு சீர் கொண்டு வந்த பெருமாள் என்பதால், இவரை சீதன பெருமாள் என்றும் அழைக்கிறார்கள்.
* கற்றளி கோயில்...
கருவறையில் பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். நான்கு திருக்கைகளில் பின் வலதில் பிரயோகச் சக்கரமும், பின் இடதில் சங்கும் ஏந்தியுள்ளார். வலது முன்கை கணையாழியை வைத்துள்ளது. கோயில் வாயிலில் மூன்று கால் உடைய முனிவர் ஒருவர் அமர்ந்துள்ளார். முக மண்டபத்தில் ஆழ்வார் சிற்பங்கள் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றன.
இக்கோயிலில் பெருமாளுக்குரிய அஷ்டதிக்கு காவலர்கள் சிற்பம் இருந்திருக்கலாம் என்ற நிலையில், தற்போது ஒரே ஒரு சிற்பம் மட்டுமே உள்ளது. அது வருணனாய் இருக்க கூடும் என்று தெரிய வருகிறது.
பல்லவர், சோழர் கால இடைக்காலத்தில் அமைக்கப்பட்ட கற்றளி கோயிலாக இருக்ககூடும் என்று ஸ்தல வரலாறு கூறுகிறது.
* திருவிழா...
வைகுண்ட ஏகாதசி, தை மாதம் நடைபெறுகிற தெப்பத்திருவிழா போன்றவை இங்கு சிறப்பாக கொண்டாடப் படுகிறது.
* கோயில் விவரங்கள்...
• நடை திறக்கும் நேரம் :
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
• செல்லும்வழி :
சென்னை கோயம்பேட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவில், பூந்தமல்லி செல்லும் பாதையில், குமணன் சாவடியில் இருந்து பிரிந்து மாங்காடு போகும் வழியில் இக்கோயில் அமைந்துள்ளது. தாம்பரம், பூந்தமல்லி போன்ற இடங்களில் இருந்து நேரடியாக பேருந்து வசதி உள்ளது. மேலும், சென்னையின் அனைத்து பகுதியில் இருந்தும் மாங்காட்டிற்கு போக்குவரத்து வசதி இருப்பதால் எளிதில் கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசிக்கலாம்.
* தங்கும் வசதி...
சென்னையின் பல்வேறு பகுதிகளில் உங்கள் பட்ஜெட்டிற்கு தகுந்தாற்போல், குடும்பத்துடன் தங்கி வைகுண்டப் பெருமாளை தரிசனம் செய்யலாம். மேலும் அருகில் உள்ள, மாங்காடு காமாட்சி அம்மன் கோயில், வெள்ளீஸ்வரர் கோயில், பூந்தமல்லி வைத்தியநாதர் கோயில் மற்றும் வரதராஜர் கோயில்களுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்யலாம்.
🙏🙏🙏
No comments:
Post a Comment