Friday, September 9, 2022

வாழைப்பூ குழம்பு

 வாழைப்பூ குழம்பு

-----------------------------------

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ பாதி அளவு, வெங்காயம் – 2 , தக்காளி – 3, பூண்டு பல் – 10 அல்லது 15, பச்சை மிளகாய் – 2, தனி மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன், தனியா தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டேபிள் ஸ்பூன், சாம்பார் பொடி- 1 டேபிள் ஸ்பூன், சோம்பு பொடி – 1/2 டேபிள் ஸ்பூன், புளி – எலுமிச்சை பழ அளவு.

தாளிக்க: கருவேப்பிலை, நல்லெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், கடுகு – 10 கிராம், வெந்தயம் – 10 கிராம்.

முதலில் புளியை ஒரு கிண்ணத்தில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். வாழைப்பூவை நன்றாக நரம்பு நீக்கி சுத்தம் செய்து அதை மஞ்சள் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி வேக வைக்கும் போது இதில் உள்ள துவர்ப்பு தன்மை நீங்கிவிடும். பிறகு அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு, வெந்தயம் போட்டு நன்றாக கடுகு வெடிக்கும் வரை காத்திருந்து, பின்பு அரிந்து வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு இத்துடன் கறிவேப்பிலை, பூண்டு, பச்சை மிளகாய் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி விடுங்கள்.

பிறகு அரிந்து வைத்துள்ள தக்காளியும் சேர்த்து விடுங்கள். இது ஒரு புறம் வதங்கிக் கொண்டிருக்கட்டும். இதற்கிடையே ஊற வைத்துள்ள புளியை கரைத்து வடிகட்டி எடுத்துக் கொண்டு அத்துடன் மிளகாய் பொடி, தனியா பொடி, சோம்புத் பொடி, சாம்பார் பொடி, உப்பு அனைத்தையும் கலந்து குழம்பு கூட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

தக்காளி நன்றாக வதங்கியவுடன் அதில் வேக வைத்துள்ள வாழைப்பூவை கொட்டி கிளறி விடுங்கள். ஒரு ஐந்து நிமிடம் வெங்காயம் தக்காளி உடன் இந்த வாழைப்பூவும் வதங்கியவுடன் கரைத்து வைத்திருக்கும் இந்த குழம்பு காரைசலை அதில் கொட்டி விடுங்கள். மூடி போட்டு நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். மேலே சிறிது கொத்தமல்லியை தூவி விடுங்கள். வாழைப்பூ  குழம்பு தயார்.

இந்தக் குழம்பு சுவையுடன் இருக்கும். இதை சுடச்சுட சாதத்தில் போட்டு சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். இட்லி, தோசை போன்றவைகளுக்கு கூட இந்த  குழம்பு நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment