Thursday, September 15, 2022

நந்திபுர விண்ணகரம்

 நந்திபுர விண்ணகரம்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

மத்யமார் முகநூலில் இருந்து பாவனா

"பொன்னியின் செல்வன்" ,  மூன்றாம் பாகம் அத்தியாயம் 41 ல் குறிப்பிடப் படும் ஒரு ஊருக்கு இன்று செல்வோமா.

வானதிக்கு கஜேந்திர மோட்சம் அளிப்பதாக மிரட்டி யானை தன் துதிக்கையால்  அவளைத் தூக்கச் செய்கிறார் அன்பில் அநிருத்த பிரமாராயர். " அந்தப் பெண் என்னை பயங்கர ராட்சதன் என்று எண்ணியிருப்பாள் " என்று பின்னர் குந்தவையிடம் குறிப்பிடுகிறார். உண்மை தானே.. அவரை " பிரம்ம ராட்சதர்" என்று தானே நினைக்கிறாள் வானதி.

அடுத்து குதிரையினின்றும் கீழே விழுந்த அடிபட்ட ( விழ வைத்ததும் அவர் தானே) இளவரசன் மதுராந்தகனைத் தூக்கிக் காப்பாற்றி அவர் கொண்டு செல்லும் இடம் நாதன் கோயில் என்னும் சுந்தர சோழ விண்ணகரம்.

 பல்லவ மன்னன்  நந்தி வர்மனால் கட்டப் பட்ட  அந்தக் கோயிலை , அது பற்றி வந்த பெயரை மாற்றி , அப்போது சக்கரவர்த்தியாக இருந்த சுந்தர சோழர் பெயரில் வழங்கினார்கள் போலும். அந்நாட்களில் திருமாலவன் திருக்கோயில்கள் " விஷ்ணு க்ருஹம் " என்று வடமொழியிலும் எனவே " விண்ணகரம்" என்று தமிழிலும் வழங்கப் பெற்றன.

அந்த ஊர் பெருமாள் கோயிலுக்கு அருகே முதன் மந்திரி அநிருத்தரின் மாளிகை ஒன்று இருந்ததாம். சொல்கிறார் அமரர் கல்கி.  சோழர்களின் இரண்டாம் தலைநகரம் பழையாறை நகரின் ஒரு பகுதியில் திருமாலவன் திருக்கோயிலுக்கு அருகில் தன் மாளிகை இருக்க விழைந்தது அந்தப் பரம வைணவருக்கு இயல்பு தானே.

108 வைணவ திவ்ய தேசங்களில் , சோழ தேசத்தில் அமைந்த நாற்பதில் ஒன்று இந்த நாதன் கோயில்.

மூலவர் ஜகன்னாதர் என்பதால் இது தட்சிண ஜகன்னாதம். பூரியும் , சென்னை அருகிலுள்ள திருமழிசையும் , ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணியும் ஜகன்னாதர் உறையும் பிற தலங்கள்.

கும்பகோணத்தினின்றும் கொருக்கை வழியே நாதன் கோயிலை அடையலாம். மயிலாடுதுறை , குத்தாலம் வழியே வருவோர் , பை பாஸில் இடது புறம் ( தெற்கே) திரும்பி , மன்னார்குடி சாலையில் உள்ள சாக்கோட்டையை அடைந்து , திப்பிராஜபுரத்தில் மீண்டும் வலப்புறம் ( மேற்கே) திரும்பி வளைந்து நெளிந்து செல்லும் சாலை வழியே செல்லலாம். தாராசுரத்திலிருந்து , பட்டீஸ்வரம் ,

முழையூர் ( சமணர்களின் குகைகள் இருந்ததால் அந்தப் பெயர் பெற்றது)  வழியே பம்பைப்படையூர் ( பழையாறை நகரின் வீரர்கள் வாழும் நான்கு படை வீடுகளுள் ஒன்று ) அடைந்து அங்கு வலப்புறம் திரும்பி கீழைப் பழையாறை வழியே நாதன் கோயில் சேரலாம். இந்த ஊர்களின் பெயர்களைக் கேட்கும் போதே வந்தியத்தேவனும் , குந்தவையும் , வானதியும் , ஆழ்வார்க்கடியானும் நினைவுக்கு வந்து விடுகிறார்களே.

சூரிய வம்சமாம் சோழ குலத் தோன்றல் சிபிச் சக்கரவர்த்திக்கும் , நந்தி தேவருக்கும் காட்சி தந்து அருளியவராம் இந்தப் பெருமாள்.

திருமகள் இங்கு தவம் செய்து மாலவனின் இதயத்தினின்றும் நீங்கா இடம் பெற்றாளாம். பெருமாள் மேற்கு நோக்கியும் , தாயார் கிழக்கு நோக்கித் தனி சந்நிதியிலும் ஓருவரையொருவர் நோக்கிய வண்ணம் கல்யாண கோலத்தில் காட்சி தருகின்றனர்.

ஐப்பசி மாத சுக்ல பட்ச வெள்ளிக்கிழமை ஸ்ரீதேவிக்குக் காட்சி தந்தாராம் ஸ்ரீநிவாசன். அந்த மாத வெள்ளிக் கிழமைகளில் தாயாருக்கு செய்விக்கும் திருமஞ்சனம் அன்பர்கள் நினைத்ததை நிறைவேற்றுமாம்.

செண்பக வனத்தில் தவமிருந்ததால் தேவி செண்பக வல்லி எனப் படுகிறாள். நாதன் கோயிலிலிருந்து மன்னார்குடி வரை உள்ள முழுப் பகுதியுமே செண்பக மரங்கள் நிறைந்த செண்பகாரண்யம் என்றே வழங்கப் பட்டதாம். மன்னார்குடியிலும் தாயார் செண்பக வல்லி தானே.

கவி காளமேகத்தின் பிறந்த ஊர் , மன்னர் விஜய ரங்க சொக்கப்ப நாயக்கரின் அன்னையின் பிணி தீர்த்த தலம் , அவர் பல திருப்பணிகள் செயத் கோயில் என்ற பெருமைகள் உடையது இந்தத் திருத்தலம்.

30.01.2020 அன்று இந்தத் திருத்தலத்தில் தரிசனம் செய்யும் நல்லூழ் கிட்டியது. அப்போது எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

பாவனா

(பா. அனந்த நாராயணன்)

15.09.2022

No comments:

Post a Comment