திருநெல்வேலியில் பல மாற்றங்கள். நெல்லை எக்ஸ்பிரஸில் ஒன்றிரண்டுக்கு பதில் பத்து ஏஸி கம்ப்பார்ட்மெண்டுகள். டிஜிட்டல் டிஸ்ப்ளே, எஸ்கலேட்டர், இந்தப் பக்கம் தாழையூத்து வரையும் அந்தப் பக்கம் பேட்டை வரை கல் பதித்த பிளாட்பாரங்கள், கோடையோ குளிரோ மழையோ சென்னைக்கும் நெல்லைக்கும் 35 பெட்டிகளிலும் பயணிக்கிறார்கள்.
ஸ்டேஷனில் இறங்கி பொடி நடையாக பஸ் ஸ்டாண்டுக்கு வந்து பஸ் பிடித்தது மாறி, ஸ்டேஷனிலேயே காத்திருக்கும் இன்னோவா, ஸைலோ கார்களில் பறக்கிறார்கள்.
த.மு.பில்டிங்கில் அதே பனியன் ஜட்டி வியாபாரம், மஸ்கோத் அல்வா.
பரபரப்பான பழைய பஸ் ஸ்டாண்டை இடித்து சுற்றிலும் தடுப்புத் தகரங்கள் அமைத்து பெட்டி போல் கட்டிடம் எழும்புகிறது. ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் பிள்ளையார் எம்எல்ஏ கைகளால் கும்பாபிஷேகம் நடத்த புழுதி பட காத்திருக்கிறார்.
ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் லாலா கடைகளில் லாவகமாக கோபுரம் அமைத்து சீனி, கருப்பட்டி மிட்டாய் ஈ மொய்க்க காத்திருக்கும். பிசுக்கேறிய சேரில், வெள்ளை வேட்டி சட்டை அணிந்து போட்டி போட்டுக் கொண்டு காலியான மிக்சர் மரப்பொந்தின் மூடியை டப்டப் என அடித்து ஏதோ ப்ரீயாக கொடுப்பது போல் வாங்க வாங்க என்று அழைப்பார்கள்.
ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் ப்ளூ கலர் போர்டு ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ் இடம் மாறி எதிர்ப்புறம் லட்சுமி லாலா கடை அருகில்... திருவிழா போல் அல்வா வாங்குகிறார்கள்.
மட்டரக அகர்பத்தி, மல்லிகை வாசனையுடன் ஏதோ தினமும் 25 சவாரி இருப்பது போல் காத்திருப்பார்கள் டாக்ஸி டிரைவர்கள்... இப்போது டாக்ஸி ஸ்டாண்டே காணவில்லை.
ஜங்ஷன் அடையாளமே மாறி எங்கெங்கும் அல்வா கடைகள் - இரவு கடை அல்வா, ஜங்ஷன் சாந்தி, நியூ சாந்தி, சாந்தி நியூ, சாந்தி அல்வா என்று புதிதாக வரும் ஏமாளிகளுக்காக காத்திருக்கின்றன, ஓலைப் பெட்டியில் அடைத்த ஏலம் சுக்குப் போட்ட சில்லுக் கருப்பட்டி வாக்குவம் பேக்கில் அடையாளம் மாறி மால்களில் அலங்கார வஸ்துவாக மாறி விட்டது.
குறுக்குத் துறை முருகன் கோவில், இரட்டைப் பாலம், இடைவிடாத டிராபிக் மாறவில்லை. தாமிரபணிக்கு குறுக்கே புதிய பாலம் - எடப்பாடி பாலம்...! நடுவே ஒரு குட்டிச் சுவருடன்...!
அழுது வடியும் வண்ணாரப்பேட்டை புதிய புதிய கடைகளுடன் ஷாப்பிங் ஏரியாவாக மாறி விட்டது. புகழ் பெற்ற டிவிஎஸ் ஸ்டாப்பிங்கே காணோம்.
டவுண் ஏரியா செல்லும் வழியில் தடுக்கி விழுந்தால் சினிமா தியேட்டர்கள்.. இப்போது மண்டபங்களாக மாறி விட்டன.. எல்லா நகைக் கடைகளும் ஷோரூம் வந்து.. கூளக்கடை பஜார் நகைக் கடைகள் பூரா மொபைல் ரிப்பேர்.. ஸ்க்கிராச் கார்டு..
நெல்லையப்பர் கோவில் கடைகளில் எப்போதும் போல் மைதா மாவு குங்குமம், ஸ்டிக்கர் பொட்டு, சவுரி யாவாரம். இருட்டுக் கடையில் பவுச் பேக்கிங் அல்வா. அப்போதெல்லாம் இலை, பின்னர் பட்டர் பேப்பரில் "கட்லாஸில் பொதிஞ்சு" தருவார்கள். சூடாக தட்டில் இருந்து வெட்டி எடுத்து கால் கிலோ போடும் போது இந்த முறையாவது 280 கிராம் விழுந்தால் பிள்ளையாருக்கு தேங்காய் விடல் போட்றேன் என்று நினைப்பதுண்டு. ஆனால் விழும் அல்வா 252-255 கிராம் தாண்டாது.
நெல்லையப்பர் கோவிலில் ஆங்காங்கே தடுப்புக்கள் அமைத்து 40 அடி தூரத்தில் நின்று ஆரத்தி, தட்டில் பணம் கொழிக்கிறது. திடீரென்று குபேர சன்னதி ஒன்று முளைத்து ஜிகுஜிகுவென ஜொலிக்கிறது. ஆளுக்காள் வந்து காப்பு கட்டிக் கொண்டு "இதை பூசைல, யாவார எடத்துல வெச்சிகிடுங்க, வெள்ளி செவ்வா ஊதுவத்தி சூடம் காம்பிங்க"
செழிப்பான பூமி, வற்றாத நீர்வளம் இருந்த நெல்லை இப்போது மாடர்னாக மாறிவிட்டது.
வழக்கம் போல் இம்முறையும் கடைசி நேரத்தில் விடுபட்டுப் போன சிலருக்கு அல்வா மிக்சர், ஜானகிராமில் டிபன் வாங்கிக் கொண்டு நெல்லையைப் பிடிக்க ஒடி வர..
ஸ்டேஷனுக்குள் நவநாகரீக உடையணிந்த பெண்களும், ஜீன்ஸ் டைட் பனியன் அணிந்த யுவதிகளும் டிரையின் ஏற வர.. குழந்தை ஒன்று வேகமாக முன்னே ஒட.. ஜீன்ஸ் ஒன்று "எலே மூதி அவ ஒடுதால.. முதுல ரண்டு சாத்து சாத்துல"...
திருநெல்வேலி மாறவில்லை.. அந்த மண் மணம் மாறாது...
ஒரு நெல்லைக் காரனின் பதிவு
பகிர்வு
No comments:
Post a Comment