Monday, September 19, 2022

வானமுட்டி பெருமாள் கோவில்

 கோடிஹத்தி வானமுட்டி பெருமாள் கோவில்

கோடிஹத்தி என்ற சிற்றூர் மருவி தற்காலத்தில் கோழிகுத்தி என்று அழைக்கப்படுகிறது. கோடிஹத்தி என்றால் கொடிய பாபங்களையும் நிவர்த்தி செய்பவர் என்று அர்த்தம். பிப்பல மஹரிஷி இங்கு நெடுங்காலம் தவம் செய்ததாக வரலாறு கூறுகிறது. அவருக்கிருந்த தோல் நோயைப் போக்கி அவருக்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் ஒரு அத்தி மரத்தில் திவ்ய தரிசனம் கொடுத்ததாக ஐதீகம். பிற்காலத்தில் சரபோஜி மன்னர் தன் யுத்த தோஷத்தை நிவர்த்தி செய்ய பகவானிடம் வேண்டினார். பகவான் திவ்ய தரிசனம் கொடுத்ததாகவும் அவருடைய தோஷத்தைப் போக்கினதாகவும்

கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. மிகவும் சந்தோஷமடைந்த மன்னர் தற்போதுள்ள கோவிலைக் கட்டினதாகவும் குறிப்புகள் உணர்த்துகின்றன.

சுமார் முப்பது வருஷங்களாகக் கோவில் நன்றாகப் பராமரிக்கப்படுகிறது.

ஸ்ரீநிவாசப்பெருமாள் ஒரே அத்தி மரத்தால் செய்யப்பட்டவர். 14 அடி உயரத்தில் சதுர் புஜங்களுடன், அபய கரத்துடன் காட்சியளிக்கிறார். தாயார் தயாலக்ஷ்மி. ஆஞ்சநேயர் ஐந்து அடி உயரத்தில் சேவை சாதிக்கிறார். இவரை சப்த ஸ்வர ஆஞ்சநேயர் என்று அழைக்கிறார்கள். ஆலய வளாகத்தில் விஸ்வக்சேனர், கருடாழ்வார் மற்றும் ராமானுஜர் உப சன்னதிகளில் அருள்பாளிக்கின்றனர். ஆஞ்சனேயரிடம் தட்டினால் சப்த ஸ்வரங்களும் வெளிப்படுகிறது.

திருவையாறு – மயிலாடுதுறை சாலையில் மயிலாடுதுறைக்கு முன்பாக  ஏழு கிலோமீட்டரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் பயணித்தால் மூவலூர் மார்க்கசஹாயேஸ்வரர் ஆலயத்திலிருந்து ஒரு குறுக்கு சாலையில் இரண்டு கிலோமீட்டர் பயணிக்கவேண்டும்.

சமீபத்தில் தான் இக்கோவிலுக்கு புனருத்ராரணம் செய்யப்பட்டுக் கும்பாபிஷேஹம் விமரிசையாக நடந்தேறியது. ஸ்வாமி அத்தி மரத்தால் செய்யப்பட்டுள்ளதால் அபிஷேகம் கிடையாது. தைலக்காப்பு மட்டுமே. நாம் நம்மை அறியாமல் செய்யும் பாபங்களை நிவர்த்தி செய்யும் ஸ்ரீநிவாசர். மிக அருமையான சிரேஷ்டமான காவிரிக்கரை ஆலயம்.

---அடியேன் ஸி.எஸ்.நாகராஜன்

No comments:

Post a Comment