Saturday, September 3, 2022

ஓதியிடுதல்

 ஓதியிடுதல்

 கல்யாணம் - காட்சி என்று போகிறோம். உறவுக்குத் தகுந்தார்ப்போல் ஓதியிடுகிறோம். அதாவது பரிசுகளை பணமாகவோ பொருளாகவோ கொடுக்கிறோம். இதிலும் நமக்கு முந்தைய தலைமுறை வரை மரியாதை இருந்தது. தன்னடக்கம் இருந்தது. விளம்பர சாதுர்யம் இல்லை. அப்போதெல்லாம் கூட்டுக் குடும்பமாகக் கல்யாணப் பத்திரிகை, ஸீமந்தப் பத்திரிகை இவையெல்லாம் குடும்பத்தில் மூத்தவருக்கு அவர் பெயரில்தான் கொடுப்பார்கள். பிள்ளைக்கு சஷ்டியப்தபூர்த்தி ஆகியிருக்கலாம் (60 வயது). அவருக்கு 80 வயதில் அப்பா இருந்தால் அவர் பெயருக்குத் தான் பத்திரிகை கொடுப்பார்கள். அல்லது வந்து சேரும். அவருக்கு பத்திரிகை வந்து சேர்ந்தால் அந்த குடும்பத்தில் அனைவரையும் அழைப்பதாக அர்த்தம். அதுதான் உண்மையும் கூட. 

     இப்போதெல்லாம் ஒரே வீட்டில் இருக்கும் தாத்தாவுக்கு அவர் பெயரில் பத்திரிகை வருகிறது. 

(பல சமயம் இப்படியெல்லாம் வருவதில்லை). அவர் பிள்ளைகளுக்கு தனித்தனிப் பெயரில் பத்திரிகை வருகிறது. 

      பரிசுகளை அளிப்பது என்பது (ஓதியிடுதல்) முன்னோர்கள் காலத்தில் குடும்பத்திலுள்ள அப்பா அல்லது தாத்தா பெயரில்தான் நடைபெறும். பரிசை யார் கொடுத்தாலும் சரி, அவர் கொடுப்பதாக அவர் பெயரைச் சொல்லி ' பஞ்சாதி' சொல்லி உறவு முறையைச் சொல்லி ஓதியிடுவார்கள்.. 

      இப்போது தாத்தா உயிருடன் இருக்கும்போதே அவர் பிள்ளை தன் பெயரைச் சொல்லி பரிசுகளை அளிப்பது நடைபெறுகிறது. அப்பா குத்துக்கல்லாக திடகாத்திரத்துடன் இருக்கும் போதே அவருடைய பிள்ளை தன் பெயரால் ஓதியிடுதல் நடைபெறுகிறது. 

கிட்டிய உறவுக்கு இப்படி நடைபெறுகிறது. தாத்தாவோ, அப்பாவோ  பிள்ளைகளை, பெண்களை படிக்க வைத்து வளர்த்து உத்யோகத்தில் அமர்த்தி கல்யாணமும் செய்து வைத்து மஞ்சள் கடிதாசி கொடுக்காத குறையாக வீட்டில் இருப்பார். அவருடைய பிள்ளைகள்,பெண்கள் அவருடைய பெயரைச் சொல்லி பரிசுப் பொருட்களைக் கொடுக்க மாட்டார்கள். தங்களுடைய பெயர்கள்தான் இவற்றில் இருக்கும்.

     இப்படிப் பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டவர்கள் பரிசுப் பொருட்களைக் கொடுத்தவர்கள் வீட்டுக்கு 'விருந்துண்ண' வரும்போது இந்த வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு என்ன மரியாதை கிடைக்கிறது..? ஸேவிக்கக்கூட மாட்டார்கள். 'ஹலோ' சொல்வார்கள். அதுவும் பெரியவர்களை யாராவது அறிமுகப் படுத்தினால்தான்.

       இது சரியல்ல. சரியான வாழ்க்கை முறையல்ல. வீட்டிலுள்ள அப்பா,அம்மா, தாத்தா, பாட்டி, அத்தையை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு முந்தைய தலை முறைகளின் பிரதிபிம்பங்கள் இவர்கள். அவர்களுடைய சொத்துக்கு உரிமை கொண்டாடும்போது குறைந்த பக்ஷம் அந்தச் சொத்துக்களை உழைத்து சம்பாதித்து உங்களுக்கு விட்டுச் செல்லும் அவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். மரியாதை செலுத்தப் பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் செய்வதை உங்கள் பிள்ளைகளும் பெண்களும் கவனித்துப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை உணருங்கள். உங்கள் பெற்றோர்களை நீங்கள் நடத்தும் விதத்தைவிட மோசமானவை உங்களுக்கு உங்கள் பிள்ளைகளிடமிருந்தும், பெண்களிடமிருந்தும் வரக் காத்திருக்கிறது என்பதையாவது உணர்ந்து எச்சரிக்கையாக இருங்கள்.

       உறவினர்களுக்கு ஓதியிடும் போது உங்கள் அப்பா/தாத்தா பெயரைச் சொல்லி ஓதியிடுங்கள். அது உங்களை நீங்களே கெளரவப்படுத்திக் கொள்வது போல ஆகும். உங்கள் சந்ததியினரும் இதைப் போலவே கெளரவப் படுத்துவார்கள். 

இது சின்ன விஷயம்தான். முன்னோர்கள் கடைபிடிக்கப்பட்டு வந்து இப்போது வழக்கத்திலிருந்து மறைந்து கொண்டிருக்கும் விஷயம். 

இதை மறைய விடாதீர்கள்.

No comments:

Post a Comment