🙏திருவரங்கனின் அருள்பெற்றவர்🙏
மகான் சட்டை முனி சித்தர்
நல்ல மனம் படைத்தவர்களுக்குதான் துன்பங்கள் துரத்தி கொண்டே வரும். அப்படி ஒரு துன்பம் சட்டை முனி சித்தரையும் துரத்தியது. அது என்ன?
சட்டைமுனி ஊர் ஊராகச் சென்று எண்ணற்ற ஆலயங்களைத் தரிசித்தார்.
இப்படி ஒவ்வாரு ஊரில் இருக்கும் ஆலயங்களை தரிசித்து வந்து கொண்டு இருக்கும் போது, வெகு தூரத்தில் திருவரங்கம் கோயில் கலசத்தைக் கண்டார்.
“அட அரங்கனைத் தரிசிக்க வேண்டுமே” என்ற ஆவலில் திருவரங்கப் பெருமாளைத் தரிசிக்க தன்னுடைய நடையில் வேகத்தைச் செலுத்தினார்.
இருந்தாலும் நள்ளிரவு பூஜை முடிந்துவிட்டது. ஆலயத்தின் கதவு சாத்தபட்டது. ஆலயக் கதவு சாத்தி இருப்பதைக் கண்ட சட்டைமுனி மனம் வருந்தினார்.
“அரங்கா உன்னைக் காண விரைந்தோடி வந்தும், என்னால் உன்னைத் தரிசிக்க முடியவில்லையே” என்று வருந்தினார்.
இந்த வார்த்தை கேட்ட அடுத்த நொடியே ஆலயத்தின் கதவுகள் சலசலவென மணி ஓசையுடன் திறந்தது.
ஆலயமே முழுவதும் தீப வெளிச்சம் சட்டை முனி சித்தரை வரவேற்றது. அதை கண்ட சட்டைமுனி மகிழ்ச்சியடைந்து அரங்கனின் கருவரைக்குள் சென்று அமைதியாகத் தியானத்தில் அமர்ந்தார்.
திருவரங்க ஆலயக் கதவு திறப்பதின் ஒசை கேட்ட அக்கம் பக்கத்தினரும் ஊர்மக்களும் அரங்கன் ஆலயத்தில் திரண்டார்கள்.
ஆலயத்தின் கதவு திறந்திருப்பதையும், கருவரைக்குள் யாரோ ஒருவர் அரங்கனின் உடலில் இருந்த நகைகளை தன் உடலில் அணிந்திருப்பதையும் கண்டு,
“கள்வன் ஒருவன் கோயிலுக்குள் நுழைந்து நகையைத் திருடிவிட்டான். மாட்டிக் கொள்வோமோ என்று பயந்து தவத்தில் இருப்பது போல நடிக்கிறான்.”
என்று கூறி சட்டை முனி சித்தரை அடி அடி என்று அடித்துவிட்டார்கள் ஊர்மக்கள். அத்துடன் அரசரிடம் இழுத்து சென்றார்கள்.
கம்பளிச் சட்டை முனி “நீ யார்? எந்த ஊர்?” என்றார் அரசர்.
“நான் சட்டை முனி“ என்றார் சித்தர். “நீ சட்டைமுனியா?
நிச்சயமாக இருக்க முடியாது. அவரை பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். சிவபெருமானின் சிறந்த பக்தர் அவர். மாபெரும் சித்தர்.
கயிலாய மலையின் குளிர் தாங்காமல் இருந்தபோது ஈசனால் கம்பளிச் சட்டை தரப்பட்டது. அவர் எங்கு சென்றாலும் கயிலாயநாதர் தந்த கம்பளி சட்டையுடன் செல்லும் வழக்கம் கொண்டவர்.
அதனால் அவருக்குக் கயிலாயக் கம்பளிச்சட்டை முனி என்ற பெயரும் உண்டு அத்துடன் தவத்தின் பேரில் கயிலைக்குப் பறந்து செல்லும் ஆற்றல் படைத்தவர் எனக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படி உயர்ந்த ஒருவரின் பெயரை சொல்லித் தப்பிக்கவா பார்க்கிறாய்?“ என்று கோபம் கொண்டார் அரசர்.
“அரசரே ஆத்திரம் வேண்டாம். புத்தியை மறைக்கும் கோபத்தால் எடுக்கும் முடிவும் பாதகமாகும் என்பதை நீ அறியாதவன் அல்ல” என்று அமைதியாகப் புன்னகையுடன் கூறினார் சித்தர்.
“ஒரு திருடன் நீ, எனக்கே உபதேசம் செய்கிறாயா? அதுவும் அரங்கனின் ஆலயத்தில் திருடிவிட்டு எதுவும் அறியாதவனாக இருக்கிறாயே? என்ன நெஞ்சழுத்தம்?” என்றார் அரசர்.
“அரசனே அமைதியாக இரு. வேண்டும் என்றால் என்னுடன் வா. அரங்கனிடமே கேள் நான் கள்வனா என்று” என்றார் சட்டை முனி.
“சரி அதையும்தான் பார்க்கிறேன்.” என்று கூறிய அரசர், சட்டை முனியை எல்லோரும் பார்க்கும் படியாக ஒரு திருடனை அழைத்துச் செல்வது போல் இரும்பு சங்கலியால் கட்டி கோயிலுக்கு இழுத்து வந்தார்கள் காவலர்கள்.
திருவரங்கம் ஆலயத்தின் முன் நிறுத்தப்பட்டார் சித்தர். “அரங்கா… நீ எனக்கு அணிவித்த நகையை நான் திருடி அணிந்துக்கொண்டேனாம். என்னைக் கள்வன் என்கிறார்கள்.
இரங்கநாதா, திருவரங்கப்பெருமானே! காவிரி சூழ் நாயகனே! இந்தப் பாழும் மனிதர்களின் சந்தேகத்தைத் தீர்த்து வை.
இந்த மனிதகுலம் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் என்பதற்காக, அவர்களுக்குப் புரியும் பாஷையிலே, பல குறிப்புகளை எழுதி வைத்தேனே!
அப்படிப்பட்ட எனக்கு, இவர்கள் தந்திருக்கும் பரிசைப் பார்! என்னைத் திருடன் என்கிறார்கள். நானா திருடன்.
சிவபெருமான் அளித்த கம்பளிச் சட்டையைத் தவிர வேறெந்த ஆடம்பரமும் இல்லாத நானா உன் அணிகலன்களுக்கு ஆசைப்படுவேன்!
நீயே இவர்களிடம் உண்மையை நிரூபி, அரங்கா.. அரங்கா.. அரங்கா…”
என்று மூன்று முறை அரங்கனை அழைத்தார் சட்டை முனி.
அர்த்தஜாம பூஜைக்குப் பின் சாத்தியிருந்த ரங்கநாதர் கோயில் கதவுகள் தானாகவே திறந்தன.சட்டை முனி மீது குற்றம் சாட்டியிருந்தவர்க ளெல்லாம் பதறிப் போனார்கள்.
அப்போது கோயிலுக்குள் இருந்து மணியோசை ஒலித்தது. மேளதாளங்கள் ஒலித்தது
. கருவரையில் அரங்கன் அணிந்திருந்த நகைகள் தானாகக் கருவரைக்குள் இருந்து வெளியேறி, கோயிலின் வாசல் வழியாக வெளியே வந்து சட்டை முனி சித்தரின் கழுத்தில் விழுந்தது.
அரங்கனின் நகைகள் சட்டை முனி சித்தரை அலங்கரித்தது. அப்போது திருவரங்கநாதன் சட்டைமுனி அருகில் காட்சி தந்தார்.
இந்த அற்புத காட்சியை கண்ட அரசரும் ஊர்மக்களும் மெய்சிலிர்த்துப் போனார்கள். உண்மையை உணர்ந்தார்கள்.
மன்னன் தலை குனிந்தான். சரியாக விசாரிக்காமலும், இந்த சித்தரின் மேன்மை புரியாமலும் சந்தேகப் பட்டு விட்டோமே என மனம் வருந்தினான்.
“உன் அருமை தெரியாதவர்களின் அருகில் கூட நிற்க வேண்டாம். இனி நீ என்னுடனும் சிவபெருமானுடனும் இருப்பதே நல்லது.”
என்று எண்ணினாரோ என்னவோ, சட்டைமுனிவர் இறைவனுடன் ஒளிவடிவமாக இரண்டறக் கலந்தார்.
பிறவி இல்லா வரத்தை பெற்றார். இறைவனை நம்பினால் ஆபத்தில் இருந்தாலும் அவனே முன் வந்து காப்பார். .
விளையாடுவதும் அவன்தான், நம்மை ஆட்டுவிப்பதும் அவன்தான். இறைவனை நம்பி எடுக்கும் முயற்சி யாவும் வெற்றியாக அமையும்.
👣சரணம் சரணம் ஸ்ரீரங்கா
திருவடி சரணம் ஸ்ரீரங்கா👣
No comments:
Post a Comment