உப்புமா இந்த பெயரை கேட்டாலே தல தெரிக்க ஓடுறவங்க கூட, இன்னும் கொஞ்சம் கிடைக்குமா என்று கேட்கிற அளவுக்கு செம்மையா ஒரு ரவை உப்புமா செஞ்சு அசத்தலாம் வாங்க. கூடவே இந்த சின்ன சின்ன டிப்ஸையும் தெரிஞ்சுக்கோங்க.
இந்த சிற்றுண்டி வகைகளிலே பெயரைக் கேட்டவுடனே ஓடி விடுவார்கள் என்றால் அது கண்டிப்பாக உப்புமாவாக தான் இருக்கும். அது ஏனோ பலருக்கும் உப்புமா என்றாலே பிடிப்பதில்லை. அது செய்யும் முறையில் செய்தால் உப்புமாவை போல் ஒரு அருமையான சிற்றுண்டி இருக்குமா என்று தெரியவில்லை. ஹோட்டல்களில் எல்லாம் பார்த்திருப்போம் அதை எடுத்து வாயில் வைப்பதும் தெரியாது தொண்டைக்குள் இறங்குவதும் தெரியாது அத்தனை சாப்டாக அவ்வளவு ருசியாகவும் செய்திருப்பார்கள். ஆனால் அதையே நாம் வீட்டில் செய்யும் போது செய்ததுஅப்படியே இருக்கும் யாரும் அதை திரும்பி கூட பார்க்க மாட்டார்கள். உப்புமா செய்தால் இது போல தான் செய்ய வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு அருமையான ஒரு உப்புமா ரெசிபியை எப்படி சுவையாக செய்வது என்று இந்த பதிவு தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்: ரவை – கப், முந்திரி – 10, பெரிய சைஸ் வெங்காயம் -1(பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது), பூண்டு – 4 பல் (பொடியாக நறுக்கியது), இஞ்சி – 1துண்டு (பொடியாக நறுக்கியது) கடலைப்பருப்பு – 2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன், கடுகு – 1ஸ்பூன், நெய் -1 டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை -1 கொத்து, தக்காளி -1( விதை சாறு நீக்கியது) பெருங்காயம் -1 சிட்டிகை, கொத்துமல்லி -சிறிதளவு.
முதலில் ரவையை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ரவை வறுக்கும் பதம் மிக மிக அவசியம் ரவை அதிகம் சிவந்து விடவே கூடாது. அடுப்பை பற்ற வைத்து பிறகு ஒரு பேனை வைத்து அதில் ரவையை சேர்த்த பிறகு சற்று நேரம் வரை கைவிடாமல் கிண்ட வேண்டும்.அப்போது தான் எல்லா பக்கமும் ரவை ஒரே மாதிரி வறுப்பட்டு இருக்கும் ரவை வறுக்கும்போது எண்ணெய்யோ, நெய்யோ எதுவும் ஊற்ற வேண்டாம். வெறும் ரவையை மட்டும் லேசாக வாசம் வரும் வரை வறுத்துக் கொண்டாலே போதும் இது முக்கியம். வறுத்த ரவையை ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்து விடுங்கள். ஏனென்றால் உப்புமா செய்ய ரவை பயன்படுத்தும் போது ரவை நன்றாக ஆறிய பிறகுதான் சேர்க்க வேண்டும்.
அடுத்து அடுப்பை பற்ற வைத்து ஒரு பேனை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். மற்ற எண்ணெய்களை விட தேங்காய் எண்ணெய் உப்புமாவுக்கு மிகவும் அருமையாக இருக்கும் அது மட்டும் இன்றி உப்புமாவிற்கு கொஞ்சம் எண்ணெய் அதிகமாக சேர்த்தால் தான் நன்றாக இருக்கும். தேங்காய் எண்ணெய் அதிகமாக சேர்ப்பதனால் எந்த பாதிப்பும் கிடையாது. இப்படி தேங்காய் எண்ணெயில் உப்புமா செய்யும் போது சுவையுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
இப்போது எண்ணெய் காய்ந்து சூடானவுடன் கடுகு போட்டு பொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி எண்ணெயில் சேர்த்து இஞ்சி நன்றாக வதங்க வேண்டும். அதன் பிறகு கடலைப் பருப்பும், உளுத்தம் பருப்பும் சேர்த்த பிறகு முந்திரி சேர்த்து அது சிவந்த பிறகு பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்குங்கள். அதன் பிறகு வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் லேசாக சிவந்து வந்தால் போதும் அதிகமாக வதங்க வேண்டாம்.
இப்போது இந்த உப்புமாவிற்கு தண்ணீரின் பதமும் மிக மிக அவசியம். உங்களுக்கு ஹோட்டலில் கிடைப்பதை போல உப்புமா வாயில் வைத்ததும் கரைந்து போகும் அளவிற்கு சாப்ட் ஆக இருக்க வேண்டும் என்றால் ஒரு டம்ளர் ரவைக்கு 3 1/4 டம்ளர் அல்லது 3 டம்ளர் தண்ணி ஆவது நீங்கள் வைக்க வேண்டும். அப்போது தான் ரவை நன்றாக வெந்து சாப்பிடும் போது மிகவும் மெதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.
வெங்காயம் வதங்கிய பிறகு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதித்த பிறகு அடுப்பை ஒரு மீடியம் ஃபிளேமில் வைத்து ஆறிய ரவையை இப்போது இதில் சேர்க்க வேண்டும் ரவையை கொட்டும் போது நீங்கள் கைகளால் கிண்டி கொண்டே இருக்க வேண்டும் அப்போது தான் ரவை கெட்டிபடாமல் இருக்கும். அதன் பிறகு தக்காளியை சேர்க்க வேண்டும் இந்த தக்காளியை நீங்கள் பொடியாக நறுக்கி அதில் உள்ள சாறு விதை எல்லாம் எடுத்த பிறகு மேலே தூவி விட்டால் மட்டும் போதும் போட்ட பிறகு அடுப்பை மூடி ஒரு நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள் கலரி கொடுக்க வேண்டாம்.
ஒரு நிமிடம் கழித்த பிறகு ரவை நன்றாக வெந்திருக்கும். இப்போது ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி உப்மாவை லேசாக கிண்டி விடுங்கள் தக்காளி ரவையுடன் கலந்து நிறமும் மாறாது அதே சமயம் ஆங்காங்கே ஒன்று இரண்டு தக்காளி இருந்து பார்க்கவும் அழகாக இருக்கும் லேசான இந்த தக்காளி சுவையும் சேரும்போது உப்புமாவின் சுவையும் அட்டகாசமாக இருக்கும்.
இப்போது கடைசியாக கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை பொடியாக நறுக்கி மேலே தூவி மூடி போட்டு இறக்கி வைத்து விடுங்கள். அவ்வளவு தான் சுட சுட இந்த உப்புமாவிற்கு தேங்காய் சட்னி அருமையான ஒரு காம்பினேஷன். இப்படி செய்து கொடுத்து பாருங்கள் இனி உப்புமா வேண்டாம் என்று யாரும் சொல்லவே மாட்டார்கள்.
No comments:
Post a Comment