இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தயாரித்து விற்கப்படும் ஒரு ஸ்வீட் மைசூர்ப்பாகு.
இதற்கும் மைசூருக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்ற கேள்விக்கு, பலரின் பதில் இல்லை ' என்பதாகவே இருக்கும்.
ஆனால், இந்த ஸ்வீட் பிறந்த இடம் மைசூர் மன்னரின் அரண்மனை என்றளவில் மிக நெருங்கிய சம்பந்தமிருக்கிறது. |
1884 முதல் 1940 வரையிலான கால கட்டத்தில் வாழ்ந்த மைசூர் மகாராஜா, கிருஷ்ணராஜா உடையார் தேர்ந்த ரசிகர்.
இசை, நடனம், இலக்கியம் போன்ற வற்றில் இருப்பது போலவே நல்ல உணவின் ரசிகர்.
அம்பா விலாஸ் அரண்மனையில் பூஜைகளுக்கு நைவேத்தியம், பிரசாதம் தயாரிக்கத் தனிச் சமையல் அறை, ஐரோப்பிய நண்பர்களுக்கு விருந்து தயாரிக்கத் தனிச் சமையல் அறை, மன்னரின் ராஜபோஜனம் தயாரிக்கத் தனி அறை என்று ஒரு சமையல் வளாகமே இருந்திருக்கிறது.
ஒரு நாள் மன்னர் முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் மதிய உணவுக்கு வந்து விட்டார். அவருக்குத் தினமும் உணவின் கடைசி அயிட்டம் அன்று செய்த சூடான ஸ்வீட்டாக இருக்க வேண்டும்.
அரண்மனையின் தலைமைச் சமையல்காரரான காக்கசுரா மடப்பா, அன்று அவசர அவசரமாக ராஜாவுக்கான மதிய உணவைத் தயாரித்துக் கொண்டிருந்த போது, திட்டமிடாததால் ஸ்வீட் என்ன செய்வது எனத் திணறிக்கொண்டிருந்தார்.
ராஜா சாப்பிட்டு முடிப்பதற்குள், ஸ்வீட்டைத் தயாரித்தாக வேண்டும் என்ற நிலை.
அப்போது கையில் கிடைத்த கடலை மாவு, நெய் மற்றும் சர்க்கரையை வைத்துச் சூடான ஒரு கலவையைத் தயாரித்தார் மடப்பா.
மைசூர் மகாராஜா உணவைச் சாப்பிட்டு முடிப்பதற்குள், இனிப்பு பரிமாறப்பட்டது. அந்த இனிப்பைச் சாப்பிட்டு மெய்மறந்து போனார் மைசூர் மகாராஜா.
"இதற்கு என்ன பெயர்?" என்று மடப்பாவிடம் ராஜா கேட்டபோது, உடனடியாக ஒரு பெயரைச் சொல்லவேண்டுமே என்ற பதற்றத்தில் - இனிப்புப் பாகில் செய்யப்பட்ட பண்டம் என்பதாலும், மைசூரில் செய்யப்பட்டது என்பதாலும், இரண்டையும் சேர்த்து, 'மைசூர் பா' என்று சொல்லி விட்டார்.
மன்னருக்கு மிகவும் பிடித்து விட்டதால் அது எல்லோருக்கும் பிடித்துவிட்டது. பெயரும் நிலைத்துவிட்டது.
ராஜா விரும்பிச் சாப்பிடும் ராயல் ஸ்வீட் என்பதால் அதை மக்களும் சாப்பிட விரும்பியதால் அரண்மனைக்கு எதிரே கடை அமைத்து மைசூர்ப்பாகு தயாரித்து விற்க காக்கசுரா மடப்பாவை அனுமதித்திருக்கிறார் மன்னர்.
அந்தக் கடைதான், மைசூர் சயாஜி சாலையிலிருக்கும் குரு ஸ்வீட்ஸ்.
இப்போது ஐந்தாவது தலைமுறையான மடப்பாவின் கொள்ளுப்பேரன் நட்ராஜன் மற்றும் அவரது சகோதரர்களும் இந்தப் பிரபலக் கடையின் உரிமை யாளர்கள்.
தாத்தாவின் சமையல் திறனைப் பாராட்டி மன்னர் கொடுத்த 12 அறை கள் கொண்ட வீட்டில்தான் இவர்களுடைய 30 பேர் கொண்ட கூட்டுக் குடும்பம் இன்னும் வசிக்கிறது.
மைசூர்ப்பாகு தயாரிப்பும் அங்கேதான்.
“ஒரு வினாடி தவறினால் கூடத் தயாரிக்கப்படும் பாகின் நிலை மாறி மைசூர்ப்பாகின் சுவை மாறிவிடும்'' என்று சொல்லும் இவரது தாயார்தான் இன்றும் இந்த மைசூர்ப்பாகிற்குத் தேவையான பாகைத் தயாரிக்கிறார்.
மருமகள்கள் உதவி செய்வதால் ரெசிபியின் சீக்ரெட் அடுத்த தலைமுறைக்கும் சென்று கொண்டிருக்கிறது. ''எங்கள் தயாரிப்பு மூன்று வாரங்கள் வரை சுவை குறை யாமல் இருக்கும். ஃப்ரிட்ஜில் வைக்கத் தேவை இல்லை” என்று சொல்லும் நட்ராஜ்,
"திருமணங்கள், பார்ட்டிகள் போன்ற ஆர்டர்களை நாங்கள் ஏற்பதில்லை' என்கிறார்.
“பணம் கிடைக்கலாம். ஆனால் தரம் குறையும் வாய்ப்பு இருக்கிறதல்லவா?” என்கிறார்.
தினசரி தயாரிப்பும் விற்பனையும், தினசரி கடையின் முன் குவியும் கூட்டமும் இவர்களது தரத்தைச் சொல்லுபவை.
கடையில் மற்ற ஸ்வீட்களும் இருக்கின்றன. ஆனால், எல்லோரும் முதலில் ஆர்டர் செய்வது மைசூர்ப்பாகுதான். அங்கேயே வாங்கிச் சாப்பிடுபவர்களுக்கு இலையில் கொடுக்கிறார்கள். கையில் ஒட்டிக் கொள்ளும் நெய்யைத் துடைக்க டிஷ்யூ கேட்டால், “அதெல்லாம் இல்லை ” என்கிறார்கள்.
கடை ஆரம்பித்த புதிதில் மைசூர்ப்பாகு இப்போது இருப்பது போல் இல்லாமல் செங்கல் சைஸில் கால் கிலோ அளவில் ஒரே கட்டி யாகத்தான் விற்றிருக்கிறார்கள்.
அப்போது கிலோ மூன்று ரூபாய். அந்த விலையில் எல்லோராலும் வாங்க முடியாததால் சிறுதுண்டுகளாக விற்கும் வழக்கம் தொடங்கியிருக்கிறது என்பதும் இன்னும் சில கர்நாடகக் கிராமங்களில் செங்கல் சைஸ் மைசூர்ப்பாகு விற்பனை தொடர்கிறது என்பதும் இந்தக் கடையினரிடமிருந்து அறிந்துகொண்ட செய்தி. -
“இன்று மைசூர் பா என்ற பெயரில் முற்றிலும் வெவ்வேறு வகைகளில் நாடு முழுவதும் மைசூர் பா தயாரித்து விற்கப்படுகிறது. ஆனால் நல்ல நெய் மணத்தோடு கலவையில் கொதிக்கும் போது உண்டான குமிழ்களின் சிறு சிறு துவாரங்கள் அழியாமல் ஒருவிதமான மொறு மொறுப்போடு வாயில் போட்டவுடன் கரைவதை உணர்ந்தால் தான் அது ஒரிஜினல் மைசூர் பாகு.
மற்றதெல்லாம் மைசூர் பா என்ற பெயரில் ஒரு ஸ்வீட் அவ்வளவுதான்” என்கிறார் நட்ராஜ்.
இதைத் தவிர்க்க, மைசூர்ப்பாகு என்பது மைசூர் நகருக்குச் சொந்தமான தயாரிப்பு என்பதை நிறுவி மைசூர்பாகின் புவிசார் குறியீட்டிற்கு உரிமை கோரி, காக்கசுரா மடப்பாவிற்கு மன்னர் கொடுத்த சர்டிஃபி கேட், அரண்மனை தசரா விழாவில் அளிக்கப்பட்ட கௌரவம் போன்ற ஆவணங்களைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்க இருப்பதாகச் சொல்லுகிறார், குரு ஸ்வீட்ஸ் நட்ராஜ்.
பகிர்வு
No comments:
Post a Comment