தீபாவளி அன்று காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு அளவில்லாமல் பலகாரங்களை உண்பதால் தொண்டைப் பிரச்னை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு இம்சை செய்யும். மேலும் பட்டாசுப் புகையினாலும் சிலருக்கு சளி பிடிக்கும். இதனைத் தவிர்க்கத்தான் தீபாவளி மருந்து அல்லது லேகியம் தயாரிக்கப்படுகிறது.
இந்த லேகியத்தை குளித்து விட்டு வந்து ஒரு உருண்டை வாயில் போட்டுக் கொள்வதால் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்கிறார்கள்.
தீபாவளி லேகியம் தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்:
* சுக்கு – 1 துண்டு
* சீரகம் – 2 1/2 அரை மேஜைக் கரண்டி
* மிளகு - 2 மேஜைக்கரண்டி
* தனியா(மல்லி) - 2 1/2 அரை மேஜைக்கரண்டி
* ஓமம் – சுமார் 25 கிராம்
* கிராம்பு - 2
* ஏலக்காய் – 2
* சித்தரத்தை - 10 கிராம்
* நெய் – ஒரு கப்
* வெல்லம் – 100 கிராம் (அரைத்த விழுதின் அளவிற்கு சமமாக வெல்லத்தைப் போட்டால் நன்றாக இருக்கும்)
செய்முறை:
இந்தப் பொருட்களையெல்லாம் நன்றாக இடித்து நொறுக்கி பொடி செய்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். ஊறிய பின் அம்மியில் வைத்து, அந்தத் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாகத் தெளித்து, நைசாக மாவு போல் அரைத்து எடுத்துக் கொண்டு போதிய அளவு கப் தண்ணீர் சேர்த்து குழம்பு போல் கரைத்துக் கொண்டு, மண் சட்டியில் வைத்து, கரண்டியால் அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
தண்ணீர் சுண்டி கெட்டியாக வந்தபின், வெல்லத்தூளை போட்டுக் கிளறி நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாகச் சுண்ட வேண்டும். சுண்டக்காய்ச்சிய பிறகு இறக்கவும்.
இனி தீபாவளி மருந்தோடு வயிறும், மனமும் திருப்தி அடையும் வரை தீபாவளி பலகாரங்களை தைரியமாகச் சாப்பிடலாம். முடிந்தால் உங்கள் பலகார வகைகளோடு சேர்த்து இந்த மருந்தையும் மற்றவர்களுக்கு கொடுத்து தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்வோம்!
No comments:
Post a Comment