வெங்காயம், தக்காளி, தேங்காய் எதுவும் சேர்க்காமல் இரண்டே நிமிடத்தில் எப்படி சுவையான சட்னி அரைப்பது என்று தெரியுமா?
என்னடா சட்னி அரைப்பது? என்று தினமும் யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்த சட்னி ஒரு சிறந்த மாற்றாக இருக்கும். வெங்காயம், தக்காளி, தேங்காய் என்று எதுவும் தேடாமல், சட்டுன்னு இரண்டு நிமிடத்தில் செய்து விடக் கூடிய இந்த சுவையான சட்னிக்கு ஈடு இணை இல்லை என்று கூறலாம். ரொம்பவே அற்புதமாக இருக்கக் கூடிய இந்த கடலை சட்னி எப்படி எளிதாக தயாரிக்க போகிறோம்? என்பதை இனி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், பூண்டு – ஐந்து பற்கள், கறிவேப்பிலை – ஒரு கொத்து, காஷ்மீரி மிளகாய் – ஐந்து அல்லது வரமிளகாய் – 3, வறுத்த வேர்க்கடலை – 3 டேபிள்ஸ்பூன், பொட்டுக் கடலை – 3 டேபிள்ஸ்பூன், புளி – சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், வர மிளகாய் – ஒன்று, கருவேப்பிலை – ஒரு கொத்து.
கடலை சட்னி செய்முறை விளக்கம்:
கடலை சட்னி செய்வதற்கு முதலில் வேர்க்கடலை பச்சையாக இருந்தால் அதை லேசாக வாணலியில் போட்டு வறுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் தோல் உரித்து எடுத்து வைத்துள்ள d பற்களை போட்டு லேசாக வறுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் காஷ்மீரி மிளகாய் அல்லது வர மிளகாய் உங்களிடம் இருப்பதை சேர்த்துக் கொள்ளுங்கள். காஷ்மீரி மிளகாய் நல்ல நிறம் கொடுக்கும். வரமிளகாய் எடுத்தால் ஒன்றிரண்டு மிளகாய்களை கம்மியாக சேர்த்துக் கொள்ளுங்கள். இவை லேசாக வறுபட்டதும் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் வறுத்து வைத்துள்ள இந்த பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதனுடன் வறுத்த வேர்கடலை மற்றும் பொட்டுக் கடலை அதே அளவிற்கு சேர்க்க வேண்டும். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். புளிப்பு சுவைக்கு கொஞ்சம் போல் புளியை விதைகள், நார் எல்லாம் நீக்கி இதனுடன் சேர்த்து நைசாக சட்னி போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த சூப்பரான சட்னியுடன் ஒரு சிறு தாளிப்பு கொடுத்துக் கொள்ளுங்கள்.
இதற்கு அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி ஒன்றை வையுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும், ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு தாளித்து, ஒரு கொத்து கருவேப்பிலை போட்டு அடுப்பை அணைத்து சட்னியுடன் கொட்டி இறக்கினால் சுவையான, டேஸ்டியான கடலை சட்னி ரெசிபி தயார்! இதே மாதிரி நீங்களும் வெங்காயம், தக்காளி, தேங்காய் எதுவும் சேர்க்காமல் செஞ்சி பாருங்க, ஈசியாக வேலையும் முடியும்.
No comments:
Post a Comment