Saturday, October 29, 2022

ஈஸி இட்லி சாம்பார்

 ஈஸி இட்லி சாம்பார் செய்வது எப்படி? 

தனிச்சுவையுடன் கூடிய இட்லி சாம்பாரை எளிதில் செய்ய வேண்டும் என்றால் ஒரு சுலபமான வழி உண்டு. 

அது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம். 

#தேவையான #பொருள்கள் : 

துவரம்பருப்பு - 25 கிராம் 
பாசிப்பருப்பு - 25 கிராம் 
கடலைப்பருப்பு - 25 கிராம் 
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 4
சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
கொத்தமல்லி - சிறிது 
உப்பு - தேவையான அளவு

#தாளிக்க : 

எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
கடுகு - 1/2 தேக்கரண்டி 
உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
சின்ன வெங்காயம் - 4
கறிவேப்பிலை - சிறிது 

#செய்முறை :

1-அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு மூன்றையும் போட்டு நன்கு வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பிறகு மிக்ஸ்சியில் பொடி செய்து கொள்ளவும். தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும். 

2-தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.  

3-கடாயை அடுப்பில் வைத்து 2 மேஜைக் கரண்டி எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். 

4-வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். 

5-தக்காளி நன்கு வதங்கியதும் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும்.  

6-பிறகு உப்பு, தண்ணீர் சேர்த்து மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும். 

7-அடுத்து அதில் அரைத்து வைத்த பருப்பு பொடியை சேர்த்து கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும்.

8-அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி குழம்பில் ஊற்றி நன்றாக கலக்கி இறக்கவும். 

சுவையான இட்லி சாம்பார் தயார்.

#குறிப்பு: மூன்று வகையான பருப்புகளை சம அளவு எடுத்து வறுத்து மிக்ஸ்சியில் திரித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது உபயோகப் படுத்தலாம்.

No comments:

Post a Comment