ஏகாதசிஸ்பெஷல் !
ஏகாதசி அம்மா! துவாதசி அப்பா!
பெரியவரைத் தரிசிக்க தஞ்சாவூரில் இருந்து காஞ்சி மடத்திற்கு 65 வயது முதியவரும், அவரது மனைவியும் வந்தனர். பெரியவரிடம் மூதாட்டி "பெரியவா.... எங்களுக்கு இரு பிள்ளைகள். மூத்தவன் டில்லியில வேலை பாக்குறான். இளையவன் கான்பூரில நல்ல வேலையில இருக்கான். மருமகள்களும், குழந்தைகளும் எங்கள் மீது பாசமா இருக்காங்க. எங்களையும், அங்கே வரச் சொல்லி கூப்பிட்டாலும், இவர் பிடிவாதம் பிடிக்கிறார். கோபக்காரரான இவருக்கு முன்னால, நான் சுமங்கலியா போய்ச் சேர்ந்துடணும். இவரும் எந்த கஷ்டமும் பட்டுடக் கூடாது'' என்று சொல்லி வருந்தினார்
விஷயம் கேட்ட காஞ்சிப் பெரியவர், "நீ போயிட்டா இந்த கோபக்காரரை யார் பார்த்துப்பா'' என்று கேட்டார்.
மவுனமாக நின்ற இருவரிடமும், "ஒற்றுமையா இருங்கோ'' என்று சொல்லி பிரசாதமும் கொடுத்து வழியனுப்பினார்.
இருவரும் காமாட்சியம்மனை தரிசித்து விட்டு திரும்பினர். சிலநாட்கள் கழிந்ததும், முதியவர் பிள்ளைகளின் ஊருக்குச் சென்று தங்க சம்மதம் தெரிவித்தார். அதன்படி டில்லியிலுள்ள மூத்த பிள்ளை வீட்டுக்குப் புறப்பட்டனர். மருமகள், பேரன், பேத்திகளின் பாச மழையில் பொழுது இனிமையாக கழிந்தது. ஆறு மாதமாகி விட்டது.
ஒருநாள் இரவு முதியவரின் மனைவிக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. அந்த நாள் ஏகாதசியாக இருந்தது. நண்பர்கள், உறவினர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது. மனைவியைப் பிரிந்த சோகத்தில் முதியவரும் கவலையில் ஆழ்ந்தார்.
என்ன ஆச்சரியம்.... மறுநாள் துவாதசி திதியன்று காலையில் முதியவரும் இறந்து விட்டார். கடமைகள் அனைத்தும் முறையாக நடத்தப்பட்டன.
இரு ஆண்டு கழித்து, மூத்தமகன் காஞ்சிபுரம் மடத்திற்கு பெரியவரைத் தரிசிக்க வந்தார்.
அப்போது "பெரியவர், உன் அம்மாவின் ஆசை நிறைவேறிருச்சு. இறப்பில் கூட பிரியவில்லை. ஏகாதசியன்று போன அவள், மறுநாளான துவாதசியில் கோபக்காரரான உன் அப்பாவையும் அழைச்சுண்டு போயிட்டா பாத்தியா...பிதுர்கடமையை விடாம செய்து வா. உனக்கு ஆசியளிப்பா,'' என்றார்.
"ஏகாதசியன்று அம்மாவும், துவாதசியன்று அப்பாவும் காலமான விஷயம் பெரியவருக்கு எப்படி தெரிந்தது?" என்று வியந்த மூத்தமகன். "முக்காலமும் அறிந்த ஞானி காஞ்சிப்பெரியவர்" என்பதை அறிந்தார். அவரது திருவடியில் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.
ஹர ஹர சங்கர !
ஜெய ஜெய சங்கர !
No comments:
Post a Comment