Saturday, April 4, 2020

நம்பினார் கெடுவதில்லை

நம்பினார் கெடுவதில்லை

மஹாபாரதப் போர் முடிவடைந்த பின் கிருஷ்ணர் துவாரகைக்குப் புறப்பட்டுச் செல்லும் போது, வழியில் அவர் உத்தங்க முனிவரைச் சந்தித்தார். பிரம்மச்சாரியாய் இருக்கையில் உத்தங்கருக்கு இருந்த ஆழ்ந்த குருபக்தியையும் மற்றும் அவர் செய்த எல்லையற்ற குரு சேவையையும் வெகுவாகப் பாராட்டிய கிருஷ்ணர், “ஏதாவது வரம் கேள்” என்று அவரிடம் சொன்னார். அதற்கு உத்தங்கர், “தங்களுடைய விச்வரூப தரிசனத்தைப் பார்த்த பிறகு எனக்கு வரம் எதுவும் வேண்டாம். அந்தத் தரிசனமே போதும்” என்று பதிலளித்தார். எதை வேண்டுமானாலும் தயங்காமல் கேட்குமாறு மீண்டும் கிருஷ்ணர் அவரை வற்புறுத்தினார். மாயையின் செயல் மிக விசித்தரமானதன்றோ! மோக்ஷத்தையோ அல்லது அவருடைய திருவடிகளில் நிலையான பக்தியையோ உத்தங்கர் கேட்டுப் பெற்றிருக்கலாம். அதற்குப் பதிலாக “தான் சுற்றித் திரியும் பாலைவனப் பகுதிகளில் நீர் நிலைகளுக்குப் பஞ்சமாகையால், தான் விரும்பும் போது தனக்குத் தண்ணீர் கிடைக்க அருள்புரிய வேண்டும்” என்று கேட்டார். இறைவனும் அவருடைய விருப்பத்திற்கிசைந்து “உனக்கு எப்பொழுதெல்லாம் தண்ணீர் தேவைப்படுகிறதோ, அப்பொழுது நீ என்னை நினைத்துக்கொள். உடனே உனக்கு நீர் கிடைக்கும்” என்று கூறியருளினார். பிறகு கிருஷ்ணர் துவாரகைக்குத் தம் பயணத்தைத் தொடர்ந்தார்.

ஒரு நாள் ஒரு பெரும் பாலைவனத்தை அம்முனிவர் கடந்து செல்கையில் மிகக் கடுமையான தாகம் அவருக்கு உண்டாயிற்று. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீர்நிலைகள் ஏதும் அவர் கண்களுக்குத் தென்படவில்லை. ஆகையால், அவர் கிருஷ்ணரை நினைத்துக் கொண்டார். உடனே, நாய்கள் புடைசூழ, அழுக்குப் படிந்த, பயங்கரமான உருவத்துடன் கூடிய ஒரு நிர்வாண வேடுவன் அங்கு வருவதை முனிவர் கண்டார். வேடுவன் கையில் ஒரு தோல்பையில் தண்ணீர் வைத்திருந்தான். அவன் உத்தங்கரைப் பார்த்து புன்னகைபூத்தபடி, “என்னிடமிருந்து தாங்கள் இந்நீரை தயவு செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும். தாங்கள் தாகத்தால் கஷ்டப்படுவதை என்னால் காண முடிகிறது. தங்கள்பால் நான் மிகவும் பரிதாபப்படுகிறேன்” என்று கூறினான்.

உத்தங்கர் அந்நீரைக் குடிக்க மறுத்தார். அழுக்கடைந்த ஒரு வேடன் தரும் நீரைக் குடித்துத் தன் தாகத்தைத் தீர்த்துக் கொள்வதை அவரால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இப்படி ஒரு பலனற்ற வரத்தைக் கொடுத்ததற்காக கிருஷ்ணரை அவர் மனத்தால் தூஷிக்க ஆரம்பித்தார். வேடுவன், திடீரென்று தன் நாய்களோடு அங்கிருந்து மறைந்தான். உத்தங்கருக்கு ஒரே ஆச்சர்யமாயிருந்தது.

சிறிது நேரத்தில் கிருஷ்ணர் அங்கு தோன்றினார். உத்தங்கர் கிருஷ்ணரிடம் “ஒரு வேடுவனின் மூலமாகத் தாங்கள் எனக்கு நீரைக் கொடுத்தது உங்களுக்கு சற்றும் பொருத்தமற்ற செயலாகும்” என்று தன் மனவருத்தத்தை முறையிட்டார்.

கிருஷ்ணர், “உத்தங்கா! உனக்காக நான் இந்திரனிடம் பரிந்து பேசி உனக்கு அமுதத்தைக் கொடுக்கச் சொன்னேன். ஒரு மானிடனுக்கு அமுதத்தைக் கொடுத்து அவனை அமரராக்கிவிட தான் விரும்பவில்லை என்று கூறி இந்திரன் மறுத்துவிட்டான். நான் மீண்டும் மீண்டும் இந்திரனைக் கட்டாயப்படுத்தியதால், கடைசியில், தான் மாறுவேடத்தில் ஒரு வேடுவனாகச் சென்றுதான் அமுதத்தை உனக்குக் கொடுப்பதாக இந்திரன் கூறிவிட்டான். நீ அவனை அலட்சியம் செய்து அமுதத்தைப் பெற மறுத்தால், அப்பொழுது மட்டுமன்றி அதன் பிறகும் உனக்கு அமுதத்தைக் கொடுக்காமல் அவன் மறைந்து விடுவான். அப்படியேதான் நீயும் நடந்து கொண்டிருக்கிறாய்” என்று சொன்னார். மேலும் தொடர்ந்த கிருஷ்ணர், “இனி பிற்காலத்தில் எப்பொழுதாவது தாகத்தைப் போக்கிக்கொள்ள உனக்கு நீர் தேவைப்பட்டால், அப்பொழுது வானத்தில் நீருண்ட மேகங்கள் தோன்றி உனக்கு மழையைப் பொழியும். நீ உன் விருப்பம் போல் அந்நீரைக் குடித்து மகிழலாம். அம்மேகங்களும் இன்றிலிருந்து ‘உத்தங்க மேகங்கள்’ என்றே அழைக்கப்படும்” என்று கூறி அம்முனிவரை ஆசிர்வதித்துவிட்டு அங்கிருந்து மறைந்தார்.

ஒருவன் அதிலும் குறிப்பாக ஓர் ஆன்மிக சாதகன், இறைவன் மற்றும் குருவின் வார்த்தைகளில் பூரண நம்பிக்கையைக் கொண்டிருத்தல் வேண்டும். அவர்களுடைய அறிவையோ அல்லது அவர்களுடைய வார்த்தைகளுக்கு இருக்கும் சக்தியையோ ஒருவன் சந்தேகப்பட்டானென்றால் அவனுடைய இழப்பு மிகப் பெரியதாய் இருக்கும்.



No comments:

Post a Comment