ஸ்கந்த புராணம் - பகுதி 1
புராணத்தோற்றம்
==============
எல்லாம் அறிந்த பரமேசுவரன் கூற்றுப்படி திருமால் தனது ஒரு கலையினால் பிரம்மனின் வம்சத்தைச் சார்ந்த பராசர முனிவர்க்கும் மச்சகந்தி என்ற பெண்ணிற்கும் கங்கை ஆற்றின் நடுவில் தோன்றி வாத நாராயணன் என்ற பெயரில் வதருக வனத்தில் இருந்தபோது, எம்பிரான் ஆணையால் வேதங்களை நான்காகப் பிரித்து அதன் மூலம் வேத வியாசர் எனப்பெயர் பெற்றார். அவர் ரிக் வேதத்தைப் பைல முனிவர்க்கும், யஜுர் வேதத்தை வைசம்பாயனர்க்கும், சாம வேதத்தை ஜைமினீ முனிவர்க்கும், அதர்வண வேதத்தை சுமந்து முனிவருக்கும் உபதேசித்தார். அவர் தான் இயற்றிய பதினெண் புராணங்களையும் தன் மகன் சுகப்பிரம்மத்திற்கும் மற்ற சீடர்களுக்கும் போதித்தார்.
நைமிசாரணியத்தில் சனகாதி முனிவர்கள் சத்ர யாகம் புரிந்து வந்தனர். அங்கு சூதமுனிவர் வந்தடைந்தார். வியாசரின் சீடரான அவரிடம் முனிவர்கள் புராண கதைகளை விவரிக்க வேண்டினர். சூதரும் அவர்களுக்குக் கூற ஆரம்பித்தார். கந்தபுராணமும் அவற்றில் ஒன்று. கந்தபுராணத்தில் கீழ்க்கண்டவாறு ஆறு சங்கிதைகள் உள்ளன.
1. சனற்குமார சங்கிதை
2. சூத சங்கிதை
3. பிரம சங்கிதை
4. விஷ்ணு சங்கிதை
5. சங்கர சங்கிதை
6. ஆர சங்கிதை ஆகும்.
அவற்றுள் சங்கர சங்கிதை 7 காண்டங்களை உடையது. அவை
1. சம்பவ காண்டம்
2. அசுர காண்டம்
3. மகேந்திர காண்டம்
4. யுத்த காண்டம்
5. தேவ காண்டம்
6. தட்ச காண்டம்
7. உபதேச காண்டம் என்பவை அவை.
இவற்றுள் முதல் ஆறு காண்டங்கள் காசியப சிவாசாரியாரின் கந்த புராணத்தில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு காண்டமும் பல படலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழில் மூன்று புராணங்கள் சிவபெருமானின் மூன்று கண்களாகக் கருதப்பட்டு வருகின்றன. திருத்தொண்டர் புராணம் (வலது கண்ணாகவும்) திருவிளையாடற்புராணம் (இடது கண்ணாகவும்) கந்த புராணம், (நெற்றிக் கண்ணாகவும்) கருதப்படுகின்றன. இந்தக் கந்தபுராணம் இலங்கையில் அதிகமாகப் பயிலப்பட்டு வருகிறதாக தமிழறிந்த பெரியோர்களால் கூறப்படுகிறது.
தொடரும்...
ஓம் சரவண பவாய நமஹ!
முருகா முருகா ..
அழிகின்ற தேகமதில்
அழியாத ஆன்மாவாய்
ஒளிர்கின்ற உன்னுருவம்
ஒளியாது ஒளிர்ந்திடுவே!
பழிக்கின்ற பாவங்கள்
பண்ணாது படராது
விழியாக வேல்வந்து
வழிகாட்டி நடத்திடுவே!
துளைக்கின்ற துர்எண்ணம்
தோன்றாது தொடராது
தோகைமயில் துணையாகி
தோன்றுபயம் துரத்திடுவே!
செழிக்கின்ற வகையினிலே
செய்தொழில் சிறப்பாகி
சேவற்கொடி செயமாக
செய்த்திட வைத்திடுவே!!!
#முருகாசரணம் #ஷண்முகாசரணம்
No comments:
Post a Comment