Sunday, May 14, 2023

மூன்று தலைமுறை - 41

 மூன்று தலைமுறை -41

By N Krishnamurthy 

இருவரும் ஏர்போர்ட்டை விட்டு வெளியில் வந்தவுடன் விசு ராமைப் பார்த்து "டெலிபோன் பூத் அருகில் இருக்கிறதா" என்றான்.

அதற்கு ராம்'Oh.யூ வாண்டு கால் யூர் ஃபேமிலி' என்றான். "ஆம்" என்றான் விசு. "கவலைப்படாதே.நாம் இப்போது இங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்து நியூயார்க் பஸ் ஸ்டேஷன் சென்றுவிடலாம். அங்கு டெலிபோன் பூத்துக்கள் இருக்கின்றன. அங்கிருந்து உன் பேமிலியை கூப்பிடலாம். பின்பு ஏதாவது சாப்பிடலாம். அடுத்த பஸ்ஸில் நாம் கேம்பிரிட்ஜ் போகலாம்" என்று கூறினான். வெளியில் வந்து டாக்ஸியில் ஏறி அமர்ந்து பஸ் ஸ்டேஷனை அடைந்தார்கள்.விசு அங்கிருந்து வீட்டிற்கு டெலிபோன் செய்தான்.  பஞ்சுவும், விசாலியும் டெலிபோன் அருகிலேயே தவமிருந்தார்கள்.போன் மணி அடித்தவுடன் பஞ்சு டக்கென்று போனை எடுத்து "ஹலோ" என்றார். மறுமுனையில் விசு "ஹலோ அப்பா.

நான் ந்யூயார்க் போய் சேந்தூட்டேன்.ப்ரொபசரின்  அண்ணா பையன் ராமலிங்கம் ஏர்போர்ட்டுக்கு வந்து என்னை பிக்கப் பண்ணின்டூட்டான்.

இப்போ அவன் கூட தான் இருக்கேன். கொஞ்ச நேரத்தில் கேம்பிரிட்ஜுக்கு பஸ்சை பிடிக்கப் போறோம். அம்மா எப்படி இருக்கா.நீதான் அவளை சமாதானப்படுத்தணம்.தாத்தா,பாட்டிகளுக்கு என் நமஸ்காரத்தை சொல்லு.அம்மா அருகில் இருக்காளா" என்று கேட்டான். "இருக்காடா விசு" என்ற  பஞ்சு விசாலியிடம் போனை கொடுத்தார்.விசு"அம்மா" என்றான். விசாலிக்கு நா தழுதழுத்தது.  "செல்லமே. எப்படி போய் சேர்ந்தே. பிளேனில் பிளேன்ல சாப்பிட கொடுத்தாளா? குளிர் அதிகமா இருக்கா.உடம்ப பாத்துக்கடா ராஜா" என்றாள்.

"நான்  பாத்துக்குறேன் அம்மா. நீ என்ன பத்தி கவலை படாதே. உன்னை நினைச்சா தான் எனக்கு விசனமா இருக்கு. அஞ்சு வருஷம் கண்ணை மூடி தொறப்பதுக்கு முன்  அஞ்சு நிமிஷமா  ஓடி போயிடும். நீ கவலைப்படக் கூடாது.அப்படி நீ கவலப்படுவது 

நேக்கு தெரிஞ்சா நேக்கு  படிப்பு ஓடாது" என்றான். சுதாரித்துக்கொண்ட விசாலி "இல்லடா கண்ணா.நான் கவலைப்பட மாட்டேன்.நீ நன்னாப்படிக்கணம். சனிக்கிழமை விடாத எண்ண தேச்சுக்கோ.அதிகம் வெளியில அலையாத" என்றாள்.

"சரிம்மா. போனை வச்சூட்ரேன்.அப்புறமா பேசறேன்"என்று சொன்ன விசு போனை வைத்துவிட்டான். இருவரும் காபி அருந்தினார்கள். டாக்சிக்கும் காபிக்கும் ராமே பணம் கொடுத்தான்.விசு அதை தர முயன்ற போது  வாங்க மறுத்து விட்டான் ராம். "கார்த்திகேயன். கவலைப்பட வேண்டாம். இதற்கெல்லாம் சேர்த்து அசலும் வட்டியுமாக  உங்களிடம் வாங்கி விடுவேன்" என்று சிரித்தபடியே கூறினான். விசு அவனிடம்  "கார்த்திகேயன் என்பது என்னுடைய அபிஷியல் நேம்.என்னை வீட்டில் விசு என்றே கூப்பிடுவார்கள். என்னை விசு என்று நீங்கள் கூப்பிடலாம்" என்றான்.

"விசு.வாட் எ நைஸ், ஷார்ட் அண்ட் ஸ்வீட் நேம்" என்றான் ராம். இருவரும் கேம்பிரிட்ஜ் செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தார்கள். கேம்பிரிட்ஜ் கிட்டத்தட்ட நான்கரை மணி நேர பயணமாக இருந்தது. பயணத்தின் போது ராம் மெலிதாக ஒரு தூக்கம் போட்டான். விசு ஒரளவுக்கு ப்ளைட்டில் துங்கியிருந்ததால் இப்போது தூக்கமே வரவில்லை.ஜன்னலோர சீட்டில் அமர்ந்திருந்ததால் விசு வெளியில் இருப்பதையெல்லாம் வேடிக்கை பார்க்க முடிந்தது. கேம்பிரிட்ஜ் வந்தவுடன் ஒரு டாக்ஸி பிடித்து ராம் விசுவை கூப்பிட்டுக் கொண்டு அவன் வீட்டுக்கு சென்றான்.

No comments:

Post a Comment