Tuesday, May 9, 2023

மூன்று தலைமுறை -37

 *மூன்று தலை முறை-37* 

By N Krishnamurthy 

ஒரு வாரம் கழித்து நல்லூரிலிருந்து சுந்தரேச ஐயர் ஜானகியுடன், பேரனுடன் ஒரு வாரம் இருந்துவிட்டு போக வந்திருந்தார். இரவு சாப்பாடு முடிந்ததும் சுந்தரேசய்யர்   பஞ்சுவை மொட்டை மாடிக்கு அழைத்துக்கொண்டு சென்றார். அவரது கையில் ஒரு மஞ்சள் பை இருந்தது. "நான் கொடுப்பதை நீங்கள் மறுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும்" என்று பீடிகை போட்டார்.அவர் என்ன கொடுக்கப் போகிறார் என்று பஞ்சுவுக்கு புரியவில்லை. கைப்பையில் கையை விட்ட அவர் பையிலிருந்த 100 ரூபாய் நோட்டுகளை எடுத்து பஞ்சுவிடம் கொடுத்தார். 

"இதில் பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது.ஏதோ என்னால் முடிந்தது.

இதை விசுவினுடைய மேல் படிப்புக்கு வைத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

பஞ்சு  அவரைப்பார்த்து "திடீரென்று எப்படி பத்தாயிரம் ரூபாய் சமாளித்தீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர் "என் காலத்துக்குப்பின் நிலமெல்லாம் உங்களுக்கும் விசுவுக்கும் தானே.சமயத்தில் உதவாத நிலமும் பணமும் இருந்தன. இல்லாது போனால் தான் என்ன.

எனவே நான் நிலத்தின் ஒரு பாதியை வித்ததில் கிடச்சதுதான்  இந்த பணம்"என்றார். இதை கேட்ட பஞ்சு முதலில் பணத்தை வாங்க மறுத்தான். "நீங்கள் வாங்கிய தீர வேண்டும்" என்று அவர் வற்புறுத்தியதின் பேரில் அப்பணத்தை வாங்கிக்கொண்ட பஞ்சு மாமனாரின்  இரு கரங்களையும் பிடித்துக்கொண்டு கண்ணில் நீர் மல்க "உங்களுக்கு இதற்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்" என்றான். அதற்கு சுந்தரேச ஐயர் "கிட்டின சொந்தத்துக்கு  போய் யாராவது நன்றி சொல்வார்களா அல்லது கைமாறுதான் செய்வார்களா.விசுவுக்கு செய்வது என் கடமை இல்லையா. யாருக்கு செய்கிறேன்? என் பேரனுக்கு தானே செய்கிறேன். இப்போது இல்லாவிட்டால் அவனுக்கு பின்னால் இது கிடைக்கப்போகிறது.

அதை இப்போதே செய்து விடுகிறேன்" என்றார்.


இதற்கு நாலு நாள் கழித்து  விசுவின் ப்ரொபசர் அவனை கூப்பிட்டு அனுப்பினார். முதல் நாள் இரவில் அவருடைய அண்ணன் மகன் பேசியதாகவும் ப்ரொபசர் டெர்மன் விசுவின் அட்மிஷனை உறுதி செய்திருப்பதாகவும்  கூறினார். அட்மிஷன் லெட்டர் ஏர் மெயிலில் அனுப்பி இருப்பதாகவும், அது எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும் என்றும் சொன்னார்.மேலும் விசு ஏர் டிக்கெட் ஏற்பாடு செய்துவிட்டு அட்மிஷன் லெடர் வந்தவுடன் அதை வைத்துக்கொண்டு விசா அப்ளை செய்ய வேண்டும் என்றும் கூறினார். கிட்டத்தட்ட அந்த வருடம் ஆகஸ்ட் மாத இறுதியில் எம்.ஐ.டி புதுவருட படிப்பிற்காக திறக்கப்படும் என்றும் கூறினார். விசுவுக்கு எண்ணி   ஆறாவது நாள் அட்மிஷன் லெடர் கிடைத்தது. பஞ்சுவும்,விசுவும் ஏர் இண்டியா ஆபீசுக்கு போய் பம்பாயிலிருந்து நியூயார்குக்கு டிக்கட் எடுத்தார்கள்.இன்டியன் ஏர் லைன்ஸில் மெட்ராஸிலிருந்து பம்பாய்க்கான டிக்கட்டை எடுத்தார்கள்.இரண்டு டிக்கட்டும், ஆகஸ்ட் 18 ந் தேதிக்கு எடுக்கப்பட்டது.

டிக்கட்டுடன் எம்.ஐ.டி அட்மிஷன் லெட்டர்,பூர்த்தி செய்த விசா அப்ளிகேஷனை  அமெரிக்கன் எம்பசியில் கொடுத்து விட்டு வந்திருந்தான் விசு. அடுத்த ஒரு வாரத்தில் விசுவுக்கு அமெரிக்கன் எம்பசியிலிருந்து டெலிபோன் வந்தது.

எப்பது வேண்டுமானாலும் இண்டர்வ்யூவுக்கு வரலாம்,

ஆனால் முன் கூட்டியே அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்கள்.விசு மறு நாளே வருவதாக கூறினான். அடுத்த நாள் காலையில் விசு வேண்டிய சர்டிபிகேட்டுக்களுடன் அமெரிக்கன் எம்பசியை அடைந்தான்.ஒரு அமெரிக்கன் லேடீ ஆபிசரும், ஸ்ரீகாந்த் என்ற இன்னுமொரு ஆபிசரும்  இண்டர்வ்யூ செய்தார்கள்.( இந்த ஸ்ரீகாந்த்

தான்  சில வருஷங்களுக்குப்பின் வெண்ணிற ஆடை படத்தில் நடித்தவரும்,சமீபத்தில் காலம் சென்றவருமாவார்). விசுவின் அகடிமெக் ரிகார்டுகளை  பார்த்து அசந்துபோன ஸ்ரீகாந்த் அவனை  கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தார்.

இடை இடையே லேடி ஆபிசரும் சில கேள்விகளை கேட்டாள்.

"நீ படிப்பு முடிந்ததும் அங்கேயே வேலை பார்த்து செட்டில் ஆக மாட்டாயா?" என்றார்.

அதற்கு விசு தன் பெற்றோர்களுக்கு தான் ஒரே பையன் என்றும்,படிப்புக்காக மட்டும் அமெரிக்கா செல்ல விரும்புவதாகவும்,படிப்பு முடிந்ததும் தாயகம் திரும்பி வந்து பெற்றோர்களை கவனித்துகொள்வது தன் கடமை என்றும் சொன்னான்.ஸ்காலர்ஷிப் கிடைக்காவிட்டால் என்ன செய்வாய் என்ற கேள்விக்கு அது போல நேர்ந்தால் தன் தந்தை அவரது சொத்துக்கள விற்று தன்னை படிக்க வைப்பார் என்றான்.

இது போன்ற கேள்விகள் வழக்கமாக எழுப்பப்படும் என்று அவனது ப்ரொபசர் முன் கூட்டியே கூறியிருந்ததால் பஞ்சு இது குறித்து அமெரிக்கன் எம்பசிக்கு எழுதிய Undertaking  கடிதத்தை காண்பித்தான்.

"இந்த பையன் நல்ல Ground work செய்திருக்கிறான்,

மேலும் படிப்பில் மிகச்சிறந்து விளங்கி இருக்கிறான்"என்ற காரணங்களால் விசா வழங்க வேண்டும் என்று மனதுக்குள் தீர்மானித்த ஸ்ரீகாந்த் அவனை கடைசியாக ஒரு கேள்வி கேட்டார்.

"நாங்கள் உனக்கு விசா வழங்காது போனால் நீ என்ன செய்வாய்"என்பதே அது.அதற்கு விசு "படிப்பை மேற்கொண்டு I.I.T யில் தொடருவேன்" என்பான் என ஸ்ரீகாந்த் நினைத்தார்.மாறாக விசு

சார்.எலக்ட்ரானிக்ஸ் துறை மிக துரிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.இதற்கு யுனிவர்சிடிகள் முக்கிய பங்காற்றுகின்றன.M.I.T யில் படிக்க வேண்டுமென்பது ஒவ்வொரு இந்திய மாணவனின்  கனவு.

கடவுள் அருளால் எனக்கு அந்த பாக்யம் கிடைத்துள்ளது.விசா கிடைக்காவிட்டால் அது என் துர்பாக்யமாக எடுத்துக்கொள்வேன்"என்றான்.கடைசியில் T 20 கடைசி ஓவரில் சிக்ஸ் அடிப்பது போல விசு ஸ்ரீகாந்தை பார்த்து சொன்ன வார்த்தைகள் அவனது சுய நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருந்தது.விசு கடைசியில் கூறியதாவது,

"சார்.அப்படி எனக்கு விசா கிடைக்க வில்லை என்ற செய்தி கிடைத்தவுடன் உங்கள் பர்மிஷனுடன் உங்களை வந்து சந்தித்து எனக்கு விசா கிடைக்காத காரணத்தை தெரிந்து கொண்டு என்னை தயார் படுத்தி கொண்டு மீண்டும் விசாவுக்கு விண்ணப்பிப்பேன்.அப்போதும் கிடைக்காவிட்டால் M.I.T  படித்து சாதிக்க வேண்டும் என்ற வெறி கொண்ட இந்திய மாணவனை M.I.T இழந்து விட்டதே என பரிதாபப்படுவேன் "

ஸ்ரீகாந்த் இந்த பதிலால் நேற்றைய T20 இந்தியா பாகிஸ்தான் மேட்சில் முதல் பாலில் விக்கட்டை பறி கொடுத்த ரோகித் ஷர்மா மாதிரி ஆகி விட்டார்.

பின்பு சுதாரித்த ஸ்ரீகாந்த் அவனுடன் கரம் குலுக்கி"நீ  மிகவும் தன்னம்பிக்கை உள்ளவன்.பிற்காலத்தில் வாழ்வில் மிகச்சிறந்த நிலைக்கு செல்வாய்.ஆல் தி பெஸ்ட்" என்றார்.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடந்த விசா இண்டர்வ்யூ முடிவுக்கு வந்தது. விசுவுக்கு விசா கிடைக்குமா? அல்லது அவன் மேல்படிப்பு I.I.T யிலே தொடருமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்

No comments:

Post a Comment