மூன்று தலைமுறை -36
By N Krishnamurthy
தன்னுடைய ப்ரொபசரிடம் தான் அமெரிக்கா சென்று மேற்கொண்டு படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளியிட்டான் விசு. அவர் அமெரிக்காவில் கேம்பிரிட்ஜில் இருக்கும் எம்.ஐ.டி(M.I.T) யில் தனது அண்ணன் மகன் படிப்பதாகவும் அவனிடம் கேட்டு விவரங்களை தெரிந்து கொண்டு சொல்வதாகவும் கூறினார்.அவரது குடும்பத்தோடு சில வருடங்களாக அமெரிக்காவில் இருந்து வந்தார். இரண்டு நாள் கழிந்ததும் விசு அவரை சந்தித்தான்.தனது அண்ணன் மகன் எம்.ஐ. டி யில், விசுவுக்காக. P.G க்கான அப்ளிகேஷன் பார்மை வாங்கி அனுப்பி இருப்பதாகவும் அது வந்தவுடன் பூர்த்திசெய்து திரும்ப அனுப்ப வேண்டும் என்று கூறினார்.அது விஷயமாக அவனுடைய ப்ரொபசர் டெர்மனிடம் பேசி இருக்கிறான் என்றும் கூறினார். அவனும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்டிகிரி படித்துக் கொண்டிருந்தான் .10 நாட்களில் அப்ளிகேஷன் ஃபார்ம் வந்து அதை ப்ரொபசர் விசுவிடம் தந்தார். அதை பூர்த்தி, செய்து அதற்கு வேண்டிய சான்றிதழ்களையும் அட்டாச் செய்தான் விசு. பிரின்சிபாலிடம் ஒரு ரெகமெண்டேஷன் லெட்டர் வாங்கி அதனுடன் இணைத்திருந்தான்.
மெட்ராஸ் யுனிவர்சிடி அவனுக்கு கொடுத்த முதல் ரேங்க் சர்டிபிகேட் காபியையும் மறக்காமல் அதனுடன் சேர்த்திருந்தான். மவுண்ட் ரோடில் உள்ள ஹெட் போஸ்ட் ஆபீஸ் சென்று அங்கு ஏர் மெயில் மூலம் ப்ரொபசர் டெர்மனுக்கு அனுப்பி வைத்தான். இதற்கிடையில் அவன் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை
செய்தான். பாஸ்போர்ட் கிடைப்பது மிகவும் காலதாமதம் ஆகும் என்று கேள்விப்பட்டு இருந்தான். ஒருநாள் ராமநாத சாஸ்திரிகள் வழக்கம் போல காபி சாப்பிட வந்திருந்தபோது,இது பற்றி பஞ்சும்,விசுவும் பேசிக்கொண்டிருந்தார்கள். அதைக்கேட்டு சாஸ்திரிகள் "என்னப்பா. பாஸ்போர்ட் ப்ராப்ளமா கவலையை விடுங்கோ. நான் ஏற்பாடு செய்றேன்" என்றார்.
அவர் உபாத்யாயத்திற்கு செல்லும் பாலக்காடு ராமசேஷன் பாஸ்போர்ட் ஆபீசில் உதவி பாஸ்போர்ட் ஆபிசராக பணிபுரிந்து கொண்டிருந்தார்.அவரிடம் விசுவின் பாஸ்போர்ட் விஷயத்தை சொன்னார்.கிட்டத்தட்ட 10 நாட்களுக்குள் விசுவிற்கு பாஸ்போர்ட் கிடைத்தது.போலீஸ் வெரிஃபிகேஷனையும் ராமசேஷனே ஏற்பாடு செய்திருந்தார். பஞ்சுவுக்கு வீட்டிற்கு ஒரு டெலிபோன் இருந்தால் மிகவும் சௌகரியமாக இருக்குமே என்ற எண்ணம் எழுந்தது.
அந்த காலத்தில் டெலிபோன் கனக்ஷன் கிடைக்க பல வருடங்கள் ஆகும். டெலிபோன் கனக்ஷன் அப்ளை செய்வது அல்லது ஏதாவது ஒரு வியாஜ்யத்தை வைத்துக் கொண்டு வழக்கு தொடர்வது என்று இருந்தால் வழக்கு கூட சீக்கிரம் முடியுமே தவிர போன் கனக்ஷன் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. இதற்கும் ராமனாத சாஸ்திரி அவர்கள் ஆபத்பாந்தவனாக உதவி செய்தார். அவரது மூணாவது வீட்டில் இருக்கும் சுப்ரமணியம் டெலிபோன் இலாகாவில் ஒரு முக்கிய பதவியில் இருந்தார். அவரிடம்
ராமனாத சாஸ்திரிகள் எடுத்துக் கூறியதால் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில் போன் கனக்ஷன் கிடைத்தது.
( நமக்கெல்லாம் இவ்வாறு உதவி செய்ய ஒரு ராமனாத சாஸ்திரிகள் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!)
விசாலி ஒரு நாள் பஞ்சுவிடம்"ஏன்னா.
விசு அமெரிக்கா போவதற்கு முன் நாம் எல்லோரும் ஒருமுறை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று குலதெய்வத்தை வழிபட்டு வந்தால் என்ன. அப்படியே நம்மூறுக்கும் போய்விட்டு, முடிந்தால் நல்லூருக்கும் சென்று இரண்டு நாள் இருந்தூட்டு வரலாமா"என்று கேட்டாள். பஞ்சுவுக்கும் இப்படி ஒரு ஐடியா இருந்தது. ஆபிசுக்கு டூரிஸ்ட் கார் ஏற்பாடு செய்யும் ஒரு கம்பெனி வழியாக ஒரு அம்பாசிடர் காரை ஏற்பாடு செய்து கொண்டு அனைவரும் வைதீஸ்வரன் கோவில் சென்று ஸ்வாமி கும்பிட்டார்கள். அர்ச்சனையும், அபிஷேகமும் செய்தார்கள். விசாலி மனதிற்குள் "ஈச்வரா.என்னப்பனே.
என் குழந்தையை நீ தான் காப்பாத்தணம் .அவனை விட்டு பிரிந்து இருக்க எனக்கு மன தைரியத்தை கொடப்பா. ஐந்து வருஷம் அங்கு நன்னா இருந்து உசந்த படிப்பு படிச்சூட்டு திரும்பி என்னுடனே இருக்க இந்தியா வரதுக்கு நீதான் அருள் புரியணம்" என்று மனமுருகி வேண்டிக்கொண்டாள். இவளது வேண்டுதலை எல்லாம் ஈஸ்வரன் நிறைவேற்றிக் கொடுப்பாரா என்று தெரியவில்லை. பின்பு சொந்த ஊருக்கு சென்று இரண்டு நாள் இருந்துவிட்டு, நல்லூருக்கு வந்து இரண்டு நாள் இருந்தார்கள்.
நல்லூரில் கல்யாண சுந்தரேஸ்வர் மற்றும் கிரி சுந்தரிக்கும் அபிஷேகம் செய்தார்கள். கிரிசுந்தரி அம்பாளிடம் வைத்தீஸ்வரன் கோவிலில் வேண்டிய மாதிரியே விசாலி வேண்டினாள்.
அஷ்ட புஜ காளியிடமும் விசாலி வேண்டிக்கொண்டாள்.விசாலி இது குறித்து வேண்டாத தெய்வமில்லை.
( விசாலியின் மன நிலையை விவரிக்க எனக்கு தமிழில் வார்த்தைகள் போதவில்லை.இப்படியும் பிள்ளை மேல் அதீத பாசம் வைக்கும் தாயை பற்றி என்னால் எழுத முடியவில்லை.அவள் தாய் பாசத்தை விவரிக்க விவரிக்க எனக்கு கண் கலங்குகிறது)
பின்பு சென்னை திரும்பினார்கள்.
No comments:
Post a Comment