மூன்று தலைமுறை -39
By N Krishnamurthy
அன்று காலையிலிருந்து பஞ்சுவுக்கும் மனது சரியில்லை.ஆனால் அதை வெளிக்காட்டாமல் அவர் இருந்தார். விசுவுக்கும் அதே நிலை. வயிற்றை என்னமோ செய்தது. சாயங்காலம் நாலரை மணிக்கு மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் இருக்க வேண்டும். ஐந்தே முக்கால் மணிக்கு பாம்பேக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் ப்ளைட் இருந்தது.இரவு எட்டரை மணிக்கு அது பாம்பே போய் சேரும்.
இரவு 12 மணிக்கு பாம்பேயிலிருந்து ந்யூயார்க்குக்கு கிளம்பும் ஏர் இந்தியா விமானத்தில்தான் விசுவின் அடுத்த பயணம். யாரும் அதிகமாக ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளவில்லை.வீட்டில் ஒரு அசாதாரணமான அமைதி நிலவியது.
12 மணிக்கு எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்.விசுவுக்கு மிகவும் பிடித்த வெண்டைக்காய் சாம்பாரும், உருளைக்கிழங்கு பொடிமாஸ் கரியும் விசாலி பண்ணியிருந்தாள்.
சாதாரணமாக இவை இரண்டும் இருந்தால் வெளுத்து கட்டும் விசு அன்று அதிகம் சாப்பிடவே இல்லை.
ராமனாத சாஸ்திரிகள் 2:30 மணிக்கு வந்தார்.விசு அவருக்கு நமஸ்காரம் செய்தான்.அவர் அவனிடம்"உனக்கு எல்லாமே தெரியும். நான் சொல்றதுக்கு ஏதுமில்லை.நீ எங்க எப்படி இருந்தாலும் அம்மா,அப்பா உனக்காக பட்ட கஷ்டங்களை ஞாபகம் வச்சிக்கோ.நன்னா படி.சமத்தா இரு' என்றார்.
பின்பு விசு அப்பா,அம்மா,இரண்டு தாத்தா பாட்டி களுக்கும் நமஸ்காரம் செய்தான். சாயங்காலம் மூணு மணிக்கு இரண்டு வாடகை டாக்ஸிகள் ஏற்பாடு பண்ணியிருந்தார் பஞ்சு.விசு புதிதாக தைத்திருந்த பேன்ட் சட்டைக்கு மாறினான். அவனுடைய லக்கேஜ் மொத்தம் எத்தனை இருக்கு என்று எண்ணி அதை அவனிடம் காண்பித்து தயார் பண்ணார் பஞ்சு. பாஸ்போர்ட், அமெரிக்கன் டாலர்,ஏர் டிக்கட் போன்றவற்றை தனியாக ஒரு Folder ல் போட்டுசட்டையின் உள் பாக்கட்டில் வைத்துக்கொண்டான் விசு. ஏர்போர்ட்டுக்கு எல்லோரும் சென்று வரலாம் என்று இருந்தார்கள். விசாலி முதலில் ஏர்போர்ட்டிற்கு போவதாக இல்லை. அங்கு போனால் விசு விட்டு பிரியும்போது மயக்கம் வந்துவிடுமோ என்று பயந்தாள். ஆனால் பஞ்சு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதின் பேரில் அவளும் வர சம்மதித்தாள்.விசுவின் நண்பன் கணேசன் தான் தனியாக ஏர்போர்ட்டுக்கு வந்து விடுதாக சொல்லி இருந்தான்.
ஸ்வாமிக்கு கற்பூரம் ஏத்தி காண்பித்து விட்டு விசாலி விசுவை கற்பூரத்தை கண்ணில் ஒத்திக்கொண்டு ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ணி, வேண்டிக் கொள்ள சொன்னாள். விசு ஸ்வாமிக்கு வேண்டிக்கொள்ளும் போது இரண்டு டாக்ஸிகளும் வீட்டு வாசலில் வந்துவிட்டன. பஞ்சுவும், விசுவும் சாமன்களை ஒரு டாக்ஸியின் பின் புறம் ஏற்றி,சாமான்களின் கவுண்ட்டு சரியாக உள்ளதா என இரண்டு முறை சரி பார்த்தனர்.எல்லோரும் டாக்ஸிகளில் ஏறிய பின்னர் பஞ்சு வீட்டைப் பூட்டி,அதை ஒரு முறை இழுத்துப்பார்த்தார். கிட்டத்தட்ட ஒருமணி நேரத்தில் இரண்டு டாக்ஸிகளும் மீனம்பாக்கம் ஏர்போர்ட்டை அடைந்தன. பத்து நிமிடம் விசு எல்லோரிடம் பேசி கொண்டு இருந்தான்.
கணேசன் உயிர்த்தோழனான விசுவிடம்"உடம்பை பார்த்துக்கொள். முடிந்தால் தபால் போடு" என்று கண் கலங்க கூறினான்.ஐந்து வருட நட்பல்லவா விசாலியை பார்க்கவே சகிக்கவில்லை. பத்து நாள் ஜுரத்தில் இருந்தவள் மாதிரி இருந்தாள். கடைசியாக விசு எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு மேற்கொண்டு பார்மாலிட்டிசை மேற்கொள்ள உள்ளே சென்றான். விசாலிக்கு விசுவை முதல் நாள் பள்ளியில் கொண்டு விட்ட வந்த ஞாபகம் வந்தது.
அவள் கையைப் பிடித்துக்கொண்ட குழந்தை "அம்மா.என்னை விட்டூட்டு போகாதேம்மா" என்று கதறிக்கதறி,தேம்பித்தேம்பி அழுது ஆர்பாட்டம் பண்ணியதை நினைத்தாள். அதே போன்று இப்போது விசு "அம்மா. நான் உன்னை விட்டு விட்டு போக மாட்டேன்" என்று கூறி திரும்பி ஓடிவந்து தன்னை கட்டிக் கொள்வான் என்ற அந்த பைத்தியம் நினைத்தாள். எங்காவது இப்படி நடக்க முடியுமா?
விசு உள்ளே சென்றதும் விசாலி பொங்கி வரும் கண்ணீரை புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டாள். அனைவரும் டாக்சியில் வீடு திரும்பினார்கள்.
No comments:
Post a Comment